பருவகால கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

புகழேந்தி


(வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2/177 சிவதாபுரம், சேலம் 636007: விலை ரூ 15)

‘சார் ‘
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
‘சார் ‘
உடனே மற்றொருவன்
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்.
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.

**

கெட்ட வார்த்தை
பேசினான் என்று
அடித்தேன் அவனை.
அழுதுகொண்டே கேட்டான்
‘அது கெட்ட வார்த்தையா சார்.
அப்படான்னா அர்த்தம் என்னா ? ‘
உறைத்தது எனக்கு.
நான் சொல்லவில்லையென்றாலும்
அச்சமாயிருந்தது
வேறு யாரிடமிருந்தாவது
அறிந்து கொள்வானோ
அர்த்தத்தை.
****

சீருடை அழுக்கென்று சினந்தேன்
மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தான்.
உடம்புச் சூட்டில்
உலர்ந்துவிடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா.
காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈர விழியில் நனைந்த ஓருடை.

*******
பிள்ளைகளே
பாடமாகிறார்கள் சிலபோது.
பக்கமிருப்பவன் மேல்
வெறுப்பு மேலிட்டால்
வேரறுப்பதில்லை.
காய் விடுவதோடு
நின்று விடுகிறார்கள்
பழம் விடுவதற்கு வசதியாய்!
****

(நன்றி தீம்தரிகிட சூன் 2002)

Series Navigation

புகழேந்தி

புகழேந்தி