நதி

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

தேவஅபிரா


நான் பிறந்தபோது என்னுள்ளொரு நதியும் பிறந்தது.
பருவங்களின் புத்தம்புதுவூற்றுக்கள்
வெடித்துப்பீறிடும் உணர்வுகளில்
ஆழமும் அகலமும் கொண்டென்நதி
அணைகடந்தது.
வாழ்க்கையும் படிமமாகிச் செறிந்தது – என்னுள்.
கைகளிலும் மனங்களிலும் இரத்தமும்
வார்த்தைகளில் மாய்மாலமும் கொண்ட நாட்டில்
இப்படியொருநதி என்னுள்!
உலகம் தூங்கும் போது கூட அதனுடன் பேசிக்கொண்டிருப்பேன்.
எத்துணை துயரமான காலங்களைக் கடந்தபோதும்
அதுவென்னிதயச் சொற்களைத் தனதாழத்தின் கவிதையாக்கித் தந்தது.
திணறியதென் நண்றியுணர்வு.
எனக்கே தெரியாதவெனதும் உனதும் ஆழத்தை
அழியாவரமாக்கும் என் வாழ்க்கை என்றுரைத்திருந்தேன்.
எமக்கொரு மகன் பிறந்தபோது இதுவுன் குஞ்சுநதியென்றேன்
தனக்குள் ஒரு நதியைக் கொண்டிருக்கிற எவரும்
தலைநிமிர்ந்தே வாழ்வர்
காலத்தின் தடத்தில்
தன்னிதயத்தின் நதி பல்கிப்பெருகுதல் காண்பதே
வாழ்வென்று பாலியாறு சொன்னதே!
ஆனால் என்தேசவெல்லையைக் கடந்தவன்று
என்நதி நடுங்கியதோ ?
விமான இரைச்சலில் இழந்ததுவதன் குரலோ ?
நதியைக் கேட்காது பெயர்ந்த கால்களில்
இலையுதிர் காலத்தின் சருகுகள் மோதிப்போயின
பெயர்ந்து விழுந்தவை போவது காற்றோடுதானா ?
பெரும்பனி வீழும் இப்பெருவெழியில்
தனித்தவென்னுள்
உறைந்துபோனது என்நதி.
என்றாவது ஒருநாள் ிிஎன்னை நீயேன் அகதியாக்கினாய் அப்பாிி
என்றென் மகன் கேட்கையில்
இறந்தேபோகும் என்நதி.

புரட்டாதி 2003

Series Navigation

தேவஅபிரா

தேவஅபிரா