நஞ்சுண்டன் கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

நஞ்சுண்டன்


1. வினயம்

ஒவ்வொருவரிடமும்
நாம் வினயமாய் நடந்து கொள்ள வேண்டும்
குறைந்த பட்சம்
சமயத்துக்குத் தகுந்தாற்போலவேனும்…

காட்டு வழியில் எதிர்வரும் வேளை
யானையிடம்.

கோவில் மதில் மீதிருந்தோ
மரக்கிளையிலிருந்தோ
இறங்கி வந்து கை நீட்டும் போது
குரங்கிடம்.

அங்கே இங்கே உட்கார்ந்து
திருப்தியடையாமல்
படிக்கவென்று மேஜை மீது திறந்து வைத்த
புத்தகத்தில் உட்காருகையில்
வண்ணத்துப் பூச்சியிடம்.

இப்படி இப்படி …

ஆனால் ஒரு குழந்தையிடம் சதா சர்வகாலமும்…

இல்லாது போனால்
(எக்கணம் எனச் சொல்ல முடியாமல்)
ஓர் ஆனந்தக் காட்சியை
இஇழக்கக் கூடும்.

******

2. பட்டம்

திருட்டுப் பூனை என்கிறீர்கள்.
மெத்தென்ற நடையில் உங்களுக்குத் தெரியாமல்
பாலைக் குடித்துச் செல்வதால்.
நீங்கள் பார்த்திருக்கப் பால் குடிக்கவே
அதற்கும் ஆசை.
நீங்கள் விட்டால் தானே!
பூனையுலகின் பீனல் கோட் அறிவீர்களா ?
மறைந்து வந்து பாலருந்துவது அதன்
நியதியாயிருக்கலாம்.
தம்முலகை விளக்க அவை எத்தனை முயன்றாலும்
நீங்கள் சட்டையே செய்வதில்லை.
உடல் சுத்தம் ஓம்புவதில்
பூனையை உதாரணிக்கிறீர்கள்.
குழந்தை முதலில் சொல்வது
அம்மா.. அப்பா .. பின் மியாவ்.
இப்படியிருக்க
எப்படிச் சொல்லலாம்
திருட்டுப் பூனையென்று.

**************
வீடு

பல முறை பார்த்திருந்தாலும்
அன்றிரவு நிலவொளியில்
சற்று வித்தியாசமாய்த் தெரிந்தது
அந்த வீடு.
எப்படியோ என்னுள் அந்தக் கேள்வி.
அது ஆண்பாலா பெண்பாலா ?
வெயில் காற்று குளிர் மழை
எல்லாவற்றிலிருந்தும் எல்லோரையும்
பேதம் பார்க்காமல் காக்கிறது.
துக்கம் தாளாத தனிமைப் புலம்பலைக்
குறைந்தபட்சம் தன் சுவர்களிலேனும்
பதிந்து கொள்கிறது.
எங்கே சுற்றினாலும்
கடைசியில் அங்கே வந்தாக வேண்டும்.
அதன் நினைவின்றி வாழ்வதரிது.
தாய்க்குச் சமம்.

********
(தொகுப்பு : மாற்றம் : வெளியீடு : சேலம் ஓவியர் எழுத்தாளர் மன்றம்.விலை 30)

Series Navigation

நஞ்சுண்டன்

நஞ்சுண்டன்