பாவண்ணன்
எப்போதும் உற்சாகத்துடன் பேசுகிற நண்பர் வாசுதேவராவ். ஒருமுறை அவருக்குக் கடுமையான பணநெருக்கடி ஏற்பட்டது. தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வில் அவர் மகன் வெற்றி பெற்றிருந்தான். கல்லுாரிச் சேர்க்கைக்கான நேர்காணலுக்கு வரும்படி தேதி குறிப்பிட்டு கடிதமும் வந்துவிட்டிருந்தது. அவன் விரும்பிய கல்லுாரியிலேயே இடமும் கிடைத்துவிடும்போல இருந்தது. ஆறாயிரத்துக்குப் பக்கமாக அவருக்கு உடனடியாக பணம் தேவைப்பட்டது. அலுவலகத்தில் யாரிடமும் கடன் வாங்கும் நிலையில் இல்லை அவர். அவர் தன்னிடம் பேசவந்தாலே எங்கே கடனுக்கு அடிபோட்டுவிடுவாரோ என்று நண்பர்கள் ஒதுங்கிப் போய்விடும் நிலை. அடகு வைத்து வாங்கும் அளவுக்கு அவர் மனைவியிடமும் எந்தப் பெரிய நகைகளும் இல்லை.
பெல்லாரியில் அவருடைய உறவினர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் சென்று கேட்டுவருவதாகச் சொல்லிவிட்டு அலுவலகத்துக்கு விடுப்பெடுத்துக்கொண்டு சென்றார். நேர்காணலுக்குப் பெங்க்ளுருக்குச் செல்ல இன்னும் ஒருநாள்தான் கால அவசகாசம் இருந்தது என்கிற நிலையில் அவர் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு உதவ முடியாத நிலையில் இருந்த என் நிலையை எண்ணி எனக்கும் வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதேனும் உதவிகள் கிடைக்கும் என்று தைரியப்படுத்தி ரயிலில் உட்கார வைத்துவிட்டுத் திரும்பினேன்.
அன்று மாலை வந்து சந்திப்பதாகச் சொன்னவர் வரவில்லை. மறுநாளும் எதிர்பார்த்தேன். வரவில்லை. அவருடைய அலுவலகத்துக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச முயன்றேன். விடுப்பில் சென்றவர் இன்னும் திரும்பவில்லை என்றார்கள். அவர் வீட்டில் தொலைபேசி இல்லாததால் பேச வாய்ப்பில்லாமல் போனது. அடுத்த நாள் வரக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். அன்றும் வரவில்லை. என் மனத்தில் ஒருவித கலவரமும் பயமும் அரித்தன. மாலையில் அலுலவகத்திலிருந்து திரும்பியதும் அவருடைய வீட்டுக்குச் சென்றேன். வாசலில் முறத்தில் அரிசியில் கல் பொறுக்கியபடி அவர் மனைவி மட்டும் உட்கார்ந்திருந்தார். போன வேகத்தில் நான் அவரைப்பற்றி விசாரித்தேன். அவர் மகனோடு பெங்க்ளுருக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார். எங்கோ பணஉதவி அவருக்குக் கிடைத்திருப்பதை நினைத்து மனம் ஆறுதல் கொண்டது. அவருடைய உறவினர்கள் அவரைக் கைவிடாததை நினைத்து நிச்சயம் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கக் கூடும் என்று தோன்றியது. ஊரிலிருந்து திரும்பியதும் வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுத் திரும்பினேன்.
மறுநாள் மாலையில் அவர் வீட்டுக்கு வந்தார். முகத்தில் மகிழ்ச்சிக்களை காணப்பட்டது. அதே சமயத்தில் நுட்பமான ஒரு கவலைக் குறியும் தென்பட்டது. அவசரமாக தேநீரைப் பருகிவிட்டு, ஆற்றங்கரையை நோக்கிச் சென்றோம். வழக்கமாக உட்காரக்கூடிய கற்களைத் தேடி உட்கார்ந்தோம். சிறிது நேரம் ஓடுகிற நதியையே பார்த்திருந்தவர் தனக்குத் தானே ஏதோ முடிவெடுத்தவர் போல தலையை அசைத்துக்கொண்டார். பிறகு என்னைப் பார்த்து ஒரு ரகசியமான விஷயத்தைச் சொல்லப்போகிறேன். உங்களிடம் சொன்னால்தான் என்மனப்பாரம் அடங்கும் என்றார். பிறகு மெதுவான குரலில் எல்லாவற்றையும் சொல்லத்தொடங்கினார்.
விஷயம் இதுதான். பெல்லாரியில் அவர் சந்திக்கச் சென்ற எல்லா உறவினர்களும் அவர் கோரிக்கையைக் கேட்டு கைவிரித்துவிட்டார்கள். நெல் அரவை ஆலையை நடத்துகிற ஓர் உறவினர் படிப்பெல்லாம் வீணான வேலை என்றும் தன்னுடைய ஆலையை வந்து கவனத்துக்கொண்டால் மாதம் இரண்டாயிரம் தருவதாகவும் சொன்னாராம். ஆனால் யாரிடமும் உதவி என்று மட்டும் கைநீட்டக்கூடாது என்றும் சொல்லியனுப்பினாராம்.
ஏமாற்றத்துடன் பெல்லாரியிலிருந்து மாலை ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தாராம். மனம் நிறைய வழிந்தபடியிருந்த துக்கத்தால் மகன் முகத்தில் எப்படி விழிப்பது என்ற ஆற்றாமையில் ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூடத் தோன்றியதாம். குமுறத்தொடங்கிய அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு பயணம் செய்தாராம். வழியில் பல நிறுத்தங்கள். பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று கவனிக்கக் கூடிய மனநிலையே இல்லை. ஜன்னல் வழியாக இருள் படரத்தொடங்கிய வானத்தைப் பார்த்தபடி வந்தாராம்.
பெங்களூர் நிலையத்தை அடைந்தபோது சோர்வின் உச்சத்தில் இருந்ததாம் மனம். எல்லாரும் இறங்கிச் சென்றபிறகும் இறங்கத் தோன்றாமல் உட்கார்ந்தபடியே இருந்தாராம். ஆளில்லாத அப்பெட்டிக்குள் இரண்டு மூன்று தரம் சில கூலிக்காரர்களும் கசங்கிய மேலாடை அணிந்த சில சிறுவர்களும் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்களாம். நேரம் கழிவதைப் பொறுக்க முடியாமல் புறப்பட எழுந்த தருணத்தில் இருக்கைக்கடியில் நகர்ந்துபோய்விட்ட காலணிகளுக்காக குனிந்தபோது காலடியில் ஒரு பை தெரிந்ததாம். ஒருநாள் பயணத்துக்குரிய தோலாலான தோள்பை. ஒருநொடி அவருக்குள் அச்சம் கவிந்தது. நெஞ்சு வேகவேகமாக அடித்துக்கொண்டது. அவசரம் அவசரமாக அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அப்பையை இழுத்தாராம். எடுத்துக்கொள்வதா, விட்டுச்செல்வதா என்று பெரும் மனப்போராட்டம் அவருக்குள் எழுந்ததாம். பிறகு ஏதோ முடிவுக்கு வந்ததைப்போல பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று ரயிலிலிருந்து இறங்கினாராம். நிலையத்தை விட்டு பத்துநிமிட துாரம் நடந்து வந்து ஒரு விடுதிக்குள் தேநீர் குடிப்பதற்காக நுழைந்தாராம். பிறகு, வெகுஇயல்பாக அப்பையைத் திறந்து பார்த்தாராம். குழந்தைகளுக்கான ஒருசில ஆடைகள். சில புதிய காலணிகள். வண்ணக் காலுறைகள். ஒரு பொம்மை. சில ஆப்பிள்கள். கொய்யாப்பழங்கள். இவற்றுக்கிடையே கைக்குட்டையால் கட்டப்பட்ட நுாறு ரூபாய்க் கட்டொன்றும் இருந்ததாம். யாரிடமிருந்தோ கைப்பற்றிக்கொண்டு ஓடோடி வந்ததைப்போன்ற எண்ணங்களும் பின்னாலேயே யாராரோ துரத்திக்கொண்டு வருவதைப்போன்ற எண்ணங்களும் ஒருசில நொடிகளுக்கு மனத்தை அழுத்தினவாம். சட்டென பையைக்கொண்டுபோய் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. கூடவே மகன் நேர்காணலுக்காக பெங்களூர் செல்லவேண்டிய விஷயமும் நினைவில் படர்ந்திருக்கிறது. இப்படியும் அப்படியுமான ஆலோசனைகளுடன் சூடான தேநீரைப் பருகினாராம். கோப்பையைக் கீழே வைக்கும்போது அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்.
‘அந்தப் பயணமே யாரையாவது பார்த்துப் பணத்தைப் புரட்டி எடுத்துக்கொண்டு வருவதற்காகத்தான். பத்துப்பேரைப் பார்த்தோம். பார்க்காத அந்தப் பதினோராவது ஆள் தாமாகவே முன்வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளலாமே ‘ என்று பதறும் தன் மனத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாராம். வீட்டுக்கு வந்ததும் அறையை மூடிக்கொண்டு பணத்தை எண்ணியிருக்கிறார். பத்தாயிரம் ரூபாய். அப்போதே மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று கல்லுாரியில் சேர்த்துவிட்டு விடுதிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு வந்தாராம். திரும்பிவரப் பேருந்துக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை அங்கேயே ஒரு வங்கியில் மகனுடைய பெயரில் போட்டுவிட்டாராம்.
எல்லாவற்றையும் சொல்லிமுடித்துவிட்டுத் தான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை என் முன்னால் வைத்தார். நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எழவில்லை. சரி என்கிற பதிலையே அவர் ஒரு பக்கம் முன்வைத்துக்கொண்டு தவறுதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து அவர் வாதங்களை அவரே நொறுக்கும்படி சரிதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களையும் அடுக்கினார். அவர் முகமும் அவர் வாதங்களும் என் மனத்தில் நீங்காத சித்திரங்களாகப் படிந்துவிட்டன. அந்த முகம் கரிச்சான் குஞ்சு தன் சிறுகதையொன்றில் வரைந்து காட்டிய முகமொன்றை நினைவூட்டியபடியே இருந்தது.
ஆசிரியர் பயிற்சிக்கல்லுாரியில் சேர்வதற்குச் செல்ல உள்ள மகளின் கல்லுாரிக்கட்டணத்தைப் புரட்டும் முயற்சியில் கடனுக்காக ஊரெங்கும் அலைகிற அப்பாவின் சித்திரத்துடன் கதை தொடங்குகிறது. காலையிலிருந்து வேறு நினைவே ஏல்லாமல் பணத்துக்காக அலைந்துகொண்டிருக்கிறார். கல்லுாரிக்கட்டணமாக அறுநுாறு ரூபாய் கட்டவேண்டும். பிரயாணச்செலவுக்கும் மற்றதுக்கும் ஐந்நுாறாவது வேண்டும். வைக்கக்கூடாததை வைத்து விற்கக் கூடாததை விற்றும் இருநுாறுக்கும் மேலாகப் புரட்டமுடியவில்லை அவரால். எங்கெங்கெல்லாமோ போய்ச் சுற்றிவிட்டு, அலுத்துச் சலித்துக் காரியம் ஆகாமல் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஞாபகத்தில் வேறொரு தெருவுக்குள் புகுந்து விடுகிறார். அங்கே கல்யாண வீட்டைப் பார்த்ததும்தான் அன்று அவசியமாகக் காலையில் பங்கெடுத்துக்கொண்டிருக்கவேண்டிய திருமணத்தைத் தவறவிட்ட தவறு புரிகிறது. குழப்பத்தில் வாசலருகே நின்றிருக்கும்போதே உள்ளேயிருந்து ராமய்யர் வந்து வரவேற்கிறார். சாப்பிடக் கூப்பிடுகிறார். அலைந்த விஷயத்தைச் சொல்கிறார் அப்பா.
கூடத்தில் சீட்டாட்டம் நடந்துகொண்டிருக்கும் திசையில் அப்பாவின் பார்வை செல்கிறது. ஆடிக்கொண்டிருப்பவர்கள் அவரைக் கேட்காமலேயே அவருக்கும் ஒரு கை போடுகிறார்கள். ஆட்டத்துக்கு நுாறு ரூபாய். இருக்கிற இருநுாறு ரூபாய்களை வைத்துக்கொண்டு எப்படியும் மறுநாள் புறப்பட முடியாதென்பதால் அதை மூலதனமாக வைத்து ஆடிப்பார்க்க அவர் மனம் சபலப்படுகிறது. வந்தால் தேவையான பாக்கி நுாறுகள் வரட்டும், போனால் இருக்கும் நுாறுகள் போகட்டும் என்று துணிந்து களத்தில் இறங்குகிறார். ஆட்டத்தில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருகிறது.
அவர் மனம் பணத்துக்காக அன்று அலைந்த அலைச்சல்களை நினைத்துப் பார்த்துக்கொள்கிறது. ரங்கன் என்னும் பணக்கார நண்பனைத்தான் முதலில் பார்க்கப்போனார். அச்சமயத்தில் அங்கே அவன் வேறொரு விஷயத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான். இனிப்பு, காரம், காப்பி என்று எல்லாமே தடபுடலாக இருக்கிறது. மறுக்க மறுக்க அவருக்கும் எல்லாம் வழங்கப்படுகிறது. எதற்காக அந்த விருந்து என்று கேட்டவரிடம் ரங்கன் நேற்று இரவு தன் நுாறாவது தோழியுடன் உறவாடியதன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறான் ஒருவன். அவருக்கு அவமானமாக இருக்கிறது. ஆனாலும் ரங்கனைத் தனியே அழைத்துச் சிரமங்களையும் தேவைகளையும் சொல்லிக் கடன் கேட்கிறான். அவனோ செலவு நெருக்கடிகளில் கடன் தர வழியில்லை என்று கைவிரித்துவிடுகிறான்.
மனம் நொந்த நிலையில் தெருவில் நடந்துவரும் போது, இரண்டு வீடு தள்ளி வாழ்கிற ரங்கனுடைய சகோதரரான சீமா என்பவர் வழிமறித்துப் பேச்சுக்கொடுக்கிறார். பெருமாள் பிரசாதம் சாப்பிடுமாறும் உபசரிக்கிறார். என்ன விசேஷம் என்று கேட்கிறார் அப்பா. சுந்தர காண்டம் நுாறாவது பாராயணம் முடித்த திருநாளைக் கொண்டாடுவதற்காக பிரசாதம் படையலிட்டதாகவும் சொல்கிறார். பிரசதாம் சாப்பிட்ட கையோடு குடும்ப நலன்களையெல்லாம் விசாரித்துவிட்டு பெண்ணின் கல்விச்செலவுக்குப் பணஉதவி கேட்கிறார். சீமா தனக்குள்ள நெருக்கடிகளைப் பட்டியலிட்டுக் காட்டிப் பணஉதவி செய்ய மறுக்கிறார் . போன இடங்களிலெல்லாம் தோல்வி ஏற்பட்ட சோர்வோடுதான் திருமண வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறார் அப்பா.
சிந்தனையைக் கலைத்து ஆட்டத்தில் மும்முரமாக இறங்கி ஆடுகிறார். தொடர்ந்து வெற்றிகளே கிடைக்கின்றன. ராமய்யர் வந்து அவசரமாக அவரைக் கூப்பிட்டு வெளியே அழைத்துச் செல்கிறார். ‘உன் ஜன்மத்திலேயே இன்றைக்குத்தான் ஜெயித்திருக்கிறாய், மணி நாலாகப் போகிறது. போய் உட்கார்ந்து ஒரு நாலு ஆட்டம் சும்மா பேருக்குப் பார்த்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடு ‘ என்று அறிவுரை சொல்கிறார். அதே போலச் செய்துவிட்டுக் கிளம்புகிறார் அப்பா. ‘எங்கேந்து வந்தாறது ? விடிந்ததும் கிளம்பவேண்டுமே. பெண்ணோடு கூடப்போகிற உத்தேசம் உண்டோன்னோ ? ‘ என்கிறாள் மனைவி. விடிந்தும் விட்டது. புறப்பட வேண்டியதுதான் என்று சட்டையைக் கழற்றுகிறார் அப்பா. ஏழெட்டு நுாறுகளுக்கும் மேலான தொகை சிதறியோடுகிறது.
ஒரு தேவையையும் சீட்டாட்டத்தையும் அடுத்தடுத்துக் காட்டியதுமே ஆட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து தேவையை நிறைவேற்ற முடியாமல் சங்கடத்துக்கோ அல்லது தீராத பழிக்கோ ஆளாகிறவர்களைப் பற்றிய சித்திரங்கள் கதையுலகில் உண்டு. சீட்டாட்டத்தில் வென்று தேவைகளை நிறைவேற்றுகிற அம்சத்தை முதன்முதலாகக் கரிச்சான்குஞ்சுவின் கதையில்தான் பார்த்தேன். அதனாலேயே இக்கதையை என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
சீட்டாட்டத்தையும் வாழ்க்கையையும் இணைத்துப் பார்த்துக்கொள்ளும்போது கதையின் பரப்பு மேலும் விரிவாகிறது. வாழ்வும் ஒரு சீட்டாட்டம் போலத்தான். வெற்றிக்கான சீட்டு கிடைத்துவிட்டால் ஆட்டத்தில் மகிழ்ச்சி பிறந்துவிடும். ஆனால் அச்சீட்டின் வருகையோ வராமையோ நம் கையில் இல்லை. அட்டைகளின் சுழற்சியில் யாருக்கு அது வருமோ , யாருக்கு அது பொருந்திப்போகுமோ என்பது இறுதிவரை தெரிவதே இல்லை. வாழ்வில் அடைகிற வெற்றிக்கும் இப்படி ஒரு வெற்றிச் சீட்டு தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த வெற்றிச் சீட்டு எந்த முயற்சியும் இல்லாமலேயே கிடைத்துவிடுகிறது. வேண்டாம் என்று உதறித் தள்ளினாலும் காலடிக்கு வந்து சேர்கிறது. வேண்டும் என்ற தவமிருப்பவர்கள் கைகளில் அகப்படுவதே இல்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போது வரும் எப்போது கைநழுவிப்போகும் என்பது தெரிவதும் இல்லை.
எப்போதுமே தோல்வியைத் தழுவுகிறவர்தான் அவர் அப்பா. வாய்ப்பேச்சில் எப்படியாவது வெளியுலகில் காரியங்களைச் சாதிக்க முயல்பவர். கதை நடக்கும் நாளில் வெளியுலகில் தம் காரியத்தில் வெற்றி காண முடியாதபடி பெருந்தோல்விகள் காத்திருக்கின்றன. தன் படுக்கைக்கு நுாறாவது பெண்ணை அழைத்துவந்ததை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் முதலாக சுந்தர காண்டத்தை நுாறாவது முறையாகப் பாராயணம் செய்வதை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் வரை யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக காலமெல்லாம் தோல்வியையே தந்தபடியிருந்த சீட்டாட்டம் வெற்றியைத் தருகிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனிப்பட்ட அர்த்தம் எதுவுமில்லை. அவை வெறும் சொற்குவியல். அந்த உண்மையை நாம் கண்டடையும்போது கதை நம் மனத்தில் இக்கதை ஆழமாக வேரூன்றுகிறது.
*
கு.ப.ரா.வின் எழுத்தின் மீதிருந்த ஈடுபாட்டால் படைப்பு முயற்சிகளில் இறங்கியவர் கரிச்சான் குஞ்சு. தி.ஜா.வும் இவரும் ஒத்த வயதினர். ‘பசித்த மானுடம் ‘ என்னும் நாவலை எழுதியிருக்கிறார். தேவி பிரசாத் சட்டோபாத்தியாய என்னும் வங்கமொழியாசிரியால் எழுதப்பட்ட ‘இந்தியத் தத்துவத்தில் அழிந்ததும் எஞ்சியிருப்பதும் ‘ என்கிற முக்கியமான வரலாற்று நுாலைத் தமிழாக்கம் செய்திருப்பவர். பல கதைகளை எழுதியிருப்பவர். ‘நுாறுகள் ‘ என்னும் சிறுகதை ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட ‘கரிச்சான் குஞ்சு கதைகள் ‘ என்னும் தொகுப்பில் (1981) இடம்பெற்றுள்ளது.
paavannan@hotmail.com
- மரம்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- காபூல் திராட்சை
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- என் இனிய சிநேகிதனே !
- கடத்தப்பட்ட நகரங்கள்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- அறியும்
- அகதி
- ஆயிரம் தீவுகள்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- உலக சுகாதார தினம்
- சிகரட்டில் புகை
- பைத்தியம்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- ஏன் ?
- குப்பைகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- விடியும்! நாவல் – (10)
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- கடிதங்கள்
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- சாமி- பெரிய சாமி
- வைரமுத்துக்களின் வானம்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- நீ வருவாயென…
- தேடுகிறேன்…
- இயற்கையே இன்பம்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- ஒரு விரல்
- பெயர் தெரியாத கவிதை! ?
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]