தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

ந. திருப்பதி சாமி


கடந்த 9-7-2004, வெள்ளிக் கிழமை, மாலை 6-30 மணி அளவில், சென்னையில் தேவ நேயப் பாவணர் நூலகத்தின் சிற்றரங்கில், தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் நடை பெற்றது. சோதிப் பிரகாசம் எழுதிய ‘திரவிடர் வரலாறு ‘ மற்றும் புலவர் சுந்தரராசன் எழுதிய ‘தமிழர் தேசிய அடையாளம் ‘ ஆகிய இரு நூல்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.

ப. வேணுகோபாலின் வரவேற்புக்குப் பின்னர், முன்னாள் சட்ட மன்ற மேலவை உறுப்பினர் புலவர் அறிவுடை நம்பி தலைமை உரை ஆற்றினார்.

நந்தனம் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு. முத்து வேலு, சோதிப் பிரகாசத்தின் ‘திரவிடர் வரலாறு ‘ தகுந்த காலத்தே வந்த நூல் என்று குறிப்பிட்டார்.

‘எந்த ஓர் ஆய்வு நூலுக்கும் இரண்டு தகுதிகள் வேண்டும். ஒன்று: முந்திய ஆய்வுகளை அது தொகுத்துத் தர வேண்டும். இரண்டு: சொந்த ஆய்வுகளையும் முடிவுகளையும் அது நிலை நிறுத்த வேண்டும். இந்த இரண்டு தகுதிகளும் இந்த நூலுக்கு உண்டு. பண்டைத் திரவிடர்களின் நாகரிகம்தான் பண்டைய உலகத்தின் நாகரிகம் என்பதை சோதிப் பிரகாசம் இந்த நூலில் நிறுவுகிறார். ‘

புலவர் சுந்தரராசனின் ‘தமிழர் தேசிய அடையாளம் ‘ பற்றிப் பேசிய வைணவக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இலக்குமி நாராயணன், தங்கள் அடையாளத்தைத் தமிழர்கள் இழந்து விடக் கூடாது என்றும் தமிழ் மொழிதான் தமிழர்களின் முதல் அடையாளம் என்றும் புலவர் சுந்தரராசன் தெளிவு படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டு, என்ன வரம் வேண்டும் என்று இறைவன் கேட்டால், மீண்டும் பிறப்பதாக இருந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று இறைவனிடம் நான் வரம் கேட்பேன் என்றும் பேசினார்.

‘திரவிடர் வரலாறு ‘, ‘ஆரியர் வரலாறு ‘ மற்றும் பல நூல்களை வெளியிட்டு உள்ள வழக்கறிஞர் ச. சுரேந்திர பாபு அவர்களைப் பாராட்டி, புலவர் அறிவுடை நம்பி

அவருக்கு நூலாடை போர்த்தினார்.

ஏற்புரை ஆற்ற வந்த சோதிப் பிரகாசம் பேசியதாவது:

‘தமிழ் மொழியினால் தமிழர்கள் அடையாளப் படுத்தப் படலாம். ஆனால், தமிழர்கள் வளராமல் தமிழ் வளர்ந்து விட முடியாது. திரு. சின்னப்பா அவர்கள் ‘சின்னப்பா தமிழர் ‘ என்று தமது பெயரை வைத்து இருக்கிறார். தம்மைத் தவிர வேறு யாரும் தமிழர்களே இல்லை என்று அவர் சொல்வது போல் இருக்கிறது. உண்மையும் அதுதான்.

இங்கே எனக்கு ஒரு சாதி; உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சாதி! ஒரு தமிழனின் வாயில் இன்னொரு தமிழன் மலத்தைத் திணிக்கிறான்! தமிழ் இனம் என்னும் ஒருமைப் பாடு உருவாகிட வேண்டும் என்றால், முதலில் சாதியை நாம் ஒழித்தாக வேண்டும்; ஒரு சாதி ஒழிப்புக் களமாகத் தமிழ்க் களம் மாறி ஆக வேண்டும்.

என்ன வரம் வேண்டும் என்று என்னிடம் வந்து இறைவன் கேட்டால், இறைவா, தமிழர்களைப் பணக்காரர்களாக்கு, முதலாளிகளாக்கு, என்று நான் கேட்பேன். ஏனென்றால், தமிழ் முதலாளிகளிடம் இருந்துதான் வலிமையான தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றிட முடியும். ‘

இறுதியில், சின்னப்பா தமிழர் நன்றி கூறக் கூட்டம் கலைந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும் பான்மையினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

nthiruppathisamy@yahoo.com

Series Navigation

ந. திருப்பதி சாமி

ந. திருப்பதி சாமி