தலைப்புகளற்ற மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

மண்ணாந்தை


I

காலத்தின் மண்வெளியில்
உன் நெருப்பு கால்தடங்கள்
தலைமுறைகளுக்கு
எழுச்சி தீபங்களை ஏற்றும்.

சிதறி விழுந்த உலோகத் துண்டுகள்
எங்கள் ஊரின் பிஞ்சு மனங்களில்
அக்னி சிறகுகளாக
பிறப்பெடுக்கும்.

இது சாவில்லை.
நாளை பிரபஞ்ச வெளியை
வெற்றி கொள்ளும்
உன் தாய் மண்ணின் சகோதரிகளுள்
வாழ்வாய் நீ பிழம்பாக.

II
பகடையாடும் சடையோனெங்கே
என்றே தேடித் திரிவான் சிறுவன்
அவன் கையில் இருக்குது
இருப்பில்லா பூனை.

பூனையின் சத்தம் கேட்கும் தருணம்
புதியதோர் பிரபஞ்சம் எங்கோ பிறக்கும்.
பகடையாடும் சடையோனெங்கே
என்றே தேடித் திரிவான் சிறுவன்

நொடிகளும் கல்பங்களும் இடம் மாறும்
காலத்தின் அம்போ பாம்பாய் நெளியும்
ஊழியும் சிருஷ்டியும் தழுவிக் கொள்ளும்.
பூனையுடன் சிறுவனின் தேடல் தொடரும்

சமன்பாடுகளுடன் அர்ச்சனை கீதம்
கவிதைகளுடன் ஓவியங்களும் கொண்டு
அலையும் சிறுவனின் தேடல் தொடரும்

சடையோன் ஆடும் பகடை வீழ்கையில்
மற்றொரு புள்ளியாய் தொடரும் தேடல்.

III

போன வார மழையின்
ஈரம் கொண்டு
தெருவின் தார் விரிசலிடையே
முளைத்த செடியின்
அந்த மொட்டு
காலையில் பள்ளி மாணவர்களின்
சைக்கிள் டயர்களில்
நசுக்கப்படுவதற்கு முன்பே
மலர்ந்து,
வண்டுகளை கவர்ந்து
மகரந்த சேர்க்கையை நிறைவேற்றிவிடுமா
என்றேன்.
கவலையில்லை.
காலையில் பள்ளி மாணவர்கள்
சைக்கிளில் வருவதற்கு முன்பே
மலர்ந்து,
வண்டுகளை கவர்ந்து
மகரந்த சேர்க்கையை நிறைவேற்றிவிடும்
தகவமைப்பினை அச்செடிகள் அடைந்துவிடும்
என்றாய். நன்றி.
ஆனாலும் ஓரத்தில் ஒரு சிறிய ஐயம்.
அதெப்படி அத்தனை உறுதியாய் ?
பூ பூப்பதென்ன கடிகாரத்தின்
இயந்திர இயக்கமா ?

***

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை