தன்னேய்ப்பு

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

வைதீஸ்வரன்


—————-
ஒவ்வொரு சந்திப்பிலும்
மூளை அஜீரணமாகி விடுகிறது.
ஒவ்வாத சதை வார்த்தைகள்
மூளையிடுக்குகளில் ஒட்டிக் கொண்டு
விடுபடாமல் வலிக்கின்றன
பிடிவாதமாய் உள் அழுகிப் போய்
நினைவெங்கும் துர்நாற்றம் – வெளியில்
துப்ப முடியாத துயரம் பல நாட்கள்
பூத்த மலர்களில் ரத்தம் துளித்து
சந்திப்பின் ஒவ்வொரு குரூரமும்
ஆறாத பச்சை ரணமாகிறது
மூளைத் தசையில்.
ஏன் மனிதர்கள்
வார்த்தைகளைக் கத்தி யுறைகளாக்கினார்கள் ?
ஏன் மனிதர்கள்
தம் உடலை ஆயுதக் கிடங்காக
மாற்றிக் கொண்டார்கள் ?
ஏன் மனிதரகள்
ஒருவருக் கொருவர் குத்திக் கொண்டு
கதறும் ஓலங்களையே
கவிதையின் வெற்றியென்று
தோள் தட்டிக் கொள்கிறார்கள் ?
ஏன் ? ஏன் ?..என் ?…
இதிலென்ன இறுமாப்பு,
வெறும் தன்னேய்ப்புத் தவிர ?

————-
vaidhees@satyam.net.in

Series Navigation

வைதீஸ்வரன்

வைதீஸ்வரன்