வ.ந.கிரிதரன்
சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்!
– வ.ந.கிரிதரன் –
நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது என்னிடமில்லை. இருந்தாலும் என் எழுத்து வாழ்க்கையில் அவற்றுக்கும் முக்கியமானதோரிடம் என்னைப் பொறுத்தவரையிலுண்டு என்பதால் அவற்றின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எந்தவிதத்திலும் குறைந்து விடப்போவதில்லை. என் பால்யகாலத்தில் தமிழகத்தின் வெகுஜனசஞ்சிகைகள், பத்திரிகைகளால் நிறைந்திருந்த வீட்டுச் சூழலே அந்தவயதில் என் எழுத்தார்வத்தைத் தூண்டிவிட்ட முக்கியமான காரணிகளிலொன்று. இதனால்தான் என்னைப் பொறுத்தவரையில் எப்போதுமே இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளும் ஏதோ ஒரு வகையில், பல்வேறு காரணங்களால், பல்வேறு காலகட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக, தேவையாக இருக்கின்றன. நான் அடிக்கடி கூறுவதுபோல் ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே எழுந்து நின்று நடக்கத் தொடங்குவதில்லை. உருண்டு, தவழ்ந்து பின்னரே பலவேறு முயற்சிகளுக்குப் பின்னர் எழுந்து நின்று சிரிக்கத் தொடங்குகிறது. எழுந்த எடுப்பிலேயே எல்லோரும் ஞானசம்பந்தரைப் போல் மூன்று வயதிலேயே உமையம்மையின் முலைப்பாலுண்டு ஞானம்பெற்று கவி புனையத் தொடங்கிவிடுவதில்லை. ஒரு படைப்பாளியோ அல்லது இலக்கிய ஆர்வலரோ படிப்படியாகத்தான் வளர்ச்சி பெற்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் அல்லது பத்திரிகைகளின் பாலர் மலர்களில் தொடங்கிப் பின்னர் படிப்படியாக வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகளினூடு வளர்ந்து பின்னர் மெல்ல மெல்ல தி.ஜா. , புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ராமகிருஷ்ணன் என்று தங்களது இலக்கியப் படைப்புகளினூடான வளர்ச்சியைப் படிப்படியாக அடைகின்றார்கள். அதனால்தான் என்னைப்பொறுத்தவரையில் இத்தகைய வெகுசனப் படைப்புகளும் இலக்கியத்தின் முக்கியமானதோர் பகுதியாக விளங்குகின்றன. எல்லாப் பிரபலமான, தரமான படைப்பாளிகள் எல்லோருமே தததமது வாழ்க்கையில் வெகுசன இலக்கியப் படைப்புகளினூடுதான் வளர்ந்து வந்திருப்பார்கள். அவர்கள் பலரின் நினைவுக் குறிப்புகள் மற்றும் சுயசரிதைகள் பலவற்றின் வாசிப்பு இதனைத்தான் உறுதி செய்கின்றன. ஒரு இலக்கிய ஆர்வலரின் அல்லது படைப்பாளியின் வாசிப்பானது பலவேறு படிகளினூடாகப் பரிணாம வளர்ச்சிபெற்று வருவதுதான் இயற்கை. அது அம்மா அம்புலிமாமா காட்டி பற்சோறு ஊட்டுவதிலிருந்து தொடங்கி, பாலர் கதைகள், வெகுசன இலக்கியப் படைப்புகளென்று தொடங்கிப் பின்னர் படிப்படியாக காப்கா, உம்பத்தே ஈகோவென்று விரிவடைகின்றது. அதற்காக எல்லோருடைய வாசிப்புமே இவ்விதமாக முழுமையாக பரிணாம வளச்சியடைந்து விடுகின்றது என்பதில்லை. ஆனாலும் பலவேறு தரப்பினரின் வாசித்தலுக்கும் ஏதோவொரு வகையான இலக்கியப் போக்கின் தேவை எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றது.
ஹா! ஹா! ஹா!
என் பாலயப் பருவத்தில் என் அப்பாவும் அம்மாவும் அவ்வப்போது ஆனந்தவிகடனில் வெளிவந்த ஜெயகாந்தன் படைப்புகளைப் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொள்வார்கள். குறிப்பாக ஆனந்தவிகடனில் அன்றைய காலகட்டத்தில் ஜெயகாந்தனின் பல சிறுகதைகள், முழுநாவல்கள் முத்திரைக் கதைகளாக வெளிவந்துகொண்டிருந்தன. ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’, ‘கோகிலா என்ன செயுது விட்டாள்?’, ‘யாருகாக அழுதான்?’, ‘உன்னைபோல் ஒருவன்’, ‘அக்கினிப் பிரவேசம்’ இவ்விதம் பல படைப்புகள அன்றைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற நாவல்களை விகடனும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற நாவல்களைத் தினமணிக் கதிரும் வெளியிட்டிருந்த காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் அதுவரையில் மூன்று பாகங்களுடன் வெளியாகிக் கொண்டிருந்த தொடர்கதைகளின் நீளம் ஓரளவுக்குக் குறைந்திருந்தது. அறுபதுகளில் வெளியாகும் பெரும்பாலான வெகுசன சஞ்சிகைகளில் நிச்சயமாக மூன்று பாகங்களுக்குக் குறையாமல் தொடர்கதைகள் வெளியாவதில்லை. நான் கூறவந்ததென்னவென்றால் இவ்விதமாக வெகுசன சஞ்சிகைகளும், படைப்புகளும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டமொன்றில்தான் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்; எழுதத் தொடங்கியிருந்தேன். வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை வாராவாரம் காத்திருந்து மக்கள் வாசித்தார்கள். ஓவ்வொரு சஞ்சிகையும் போட்டி போட்டுக் கொண்டு பிரபல எழுத்தாளர்களின் தொடர்கதைகளைப் பாகங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலகட்டமது. நா.பா, ஜெகசிற்பியன், அகிலன், சாண்டிலயன் போன்றோரது தொடர்கதைகள் பெரும்பாலும் மூன்று பாகங்களில் வெளியான காலமது. அவ்விதமானதொரு சூழலின் பாதிப்பால் அன்றைய காலகட்டத்தில் என் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களில் பல தொடர்கதைகளை எழுதிக் குவித்தேன். அவற்றிலொன்று ‘மறக்க முடியுமா?’. அதைவிட இன்னும் பல குறுநாவல்கள். அவற்றிலொன்று: ‘மழைப் பெய்து ஓய்ந்தது’. இவற்றின் முழுக் கதையும் தற்போது ஞாபகத்திலில்லை. இருந்தாலும் ‘மழை பெய்து ஓய்ந்தது’. என்னுக் கதையின் ஆரம்பமும், முடிவும் மட்டும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அந்தக் கதையின் ஆரம்பத்தில் கதாநாயகன் மிகவும் பலமாக ‘ஹா ஹா ஹா’வென்று குரலெடுத்துச் சிரிப்பான். ம்ழை பெய்யத் தொடங்கியிருக்கும். அதுவொரு மர்மக் கதை. கதையின் இறுதியில் சிக்கல் அவிழ்ந்து, மழையும் பெய்து ஓய்ந்திருக்கும். கதாநாயகன் மீண்டும் பலமாகக் ‘ஹா ஹா ஹா’வென்று சிரிப்பதுடன் கதை முடிந்திருக்கும். அதனைப் படித்துவிட்டு அப்பா பலமாகக் ‘ஹா ஹா’வென்றுச் சிரித்தார். அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அடுத்தவீட்டு மாமியும் அன்றைய என் வாசகர்களிலொருவர். என் கதைகளை வாசித்துவிட்டுக் குறிப்பாக அந்த ‘மழை பெய்து ஓய்ந்தது’ கதையினைப் படித்துவிட்டு பலமாகக் ‘ஹா ஹா’வென்று சிரித்தபடியே வந்து பாராட்டுத் தெரிவித்தார். நல்லவேளை, அந்த ‘மழை பெய்து ஓய்ந்தது’ கதை தற்போது என்னிடமில்லை. இருந்திருந்தால் அதனைப் படித்துவிட்டு நீங்களனைவரும்கூடக் ‘ஹா ஹா ஹா’வென்று கல்கியின் ரவிதாசன் பாணியில் சிரித்துச் சிரித்தே வயிறுகள் புண்ணாகியிருப்பீர்கள். நல்லவேளை தப்பித்தீர்கள்.
சித்தி வீட்டில் கொண்டாடிய சித்திரையும், ஈழநாடும்……
அவ்விதமாக ஆரம்பத்தில் கவிதைகள் சிலவற்றை எழுதிய நான் அதன் பின்னர் கவிதைகள் சில எழுதுவதில் ஆர்வத்தைச் செலுத்தினேன். தமிழகச் சஞ்சிகைகளில் வெளியான தீபாவளிக் கவிதைகளின் பாதிப்பில் ஓர் அறுசீர் விருத்தமொன்றினை அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் சித்திரைச் சிறப்பிதழுக்காக என் அப்பாவின் பெயரில் எழுதி அனுப்பினேன். அன்றைய காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. இருந்தாலும் அப்பாணியில் அமைந்திருந்த ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்த கவிதைளின் பாணியில் எழுதி அனுப்பியிருந்தேன். சித்தி வீட்டுக்குச் சித்திரைத் திருநாளன்று செல்வது பற்றி எழுதியிருந்தது ஞாபகத்திலுள்ளது. அதனை ஈழநாடும் நான் எதிர்பார்க்காமலேயே பிரசுரித்தும் விட்டது. அப்பாவும் மகிழ்ச்சியடையக் கூடுமென்று அதனைக் காட்டி அப்பாவிடமிருந்து திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். அதே சமயம் ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் கவிதைகள், கட்டுரைகளென அவ்வப்போது எழுதத் தொடங்கியிருந்தேன். ‘ஆசிரியர்’, ‘வான்மதி’ போன்ற கவிதைகள் சில ஈழநாடு வாரமலரின் மாணவர் மலரில் வெளியாகியிருந்தன. உண்மையில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலர் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதோர் விடயம். என் ஆரம்பகால எழுத்துலகின் பல்வேறு காலகட்டங்களில் ஈழநாடு களமமைத்துக் கொடுத்து ஊக்குவித்திருந்தது மிகவும் மிகவும் முக்கியமானதொரு விடயம். ஆரம்ப்த்தில் மாணவர் மலரில் என் படைப்புகளைப் பிரசுரித்த ஈழநாடு பின்னர் எனது பதினமப் பிராயத்தில் சிறுகதைகள் சிலவற்றையும் பிரசுரித்து ஊக்குவித்திருந்தது. ‘மணல் வீடுகள்’, ‘இப்படியும் ஒரு பெண்’, ‘அஞ்சலை என்னை மன்னித்துவிடு’… போன்ற சிறுகதைகள் சில திரு. பெருமாளை வாரமலர் ஆசிர்யராகக் கொண்டு வெளிவந்த ஈழநாடு வாரமலர் பிரசுரித்திருந்தது. (தினகரனிலும் ‘ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்’ என்னுமொரு எனது இச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது இச்சமயத்தில் நினைவு கூர்கின்றேன்.) பின்னர் எனது பல்கலைக்கழகக் காலகட்டத்தில் ‘நல்லூர் இராஜதானி’, மற்றும் யாழ்நகரில் காணப்பட்ட பழமையின் சின்னங்கள் பலவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நான் எழுதிய சில கட்டுரைகளையும் பிரசுரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுடன் ஒரு சில நாட்கள் யாழ்நகர முழுவது மேற்படி சின்னங்களைப் பார்க்கத் திரிந்தது ஞாபகத்திற்கு வருகின்றது. எந்நேரமும் வாய்க்கு வாய் ‘ராசா’ , ‘தம்பி’ என்று அழைத்து உரையாடலினைத் தொடர்வது அன்றைய காலத்தில் அவரது வழக்கமாயிருந்தது. இந்த வகையில் அப்பொழுது யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரம்’ பற்றி ‘பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் பற்றிய’ எனது ஈழநாடுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அக்கட்டுரை வெளிவந்து சிறிது காலத்திலேயே அந்தக் ‘கங்கா சத்திரம்’ யாழ் மாநகர சபை நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல வருடங்கலின் பின்னர் கவிஞர் ஜெயபாலனை தொராண்டோவில் சந்தித்தபொழுது அதனை மறக்காமல் குறிப்பிட்டபோது ஆச்சரியமடைந்தேன். இன்னும் அக்காலகட்டத்தை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாரே என்பதை எண்ணுகையில் மகிழ்ச்சியாகவிருந்தது.
நான் ஈழநாடு பத்திரிகையினூடு வளர்ந்த எழுத்தாளனென்று கூறிகொள்வதில் மகிழ்ச்சியைடைகின்றேன். அண்மையில் மல்லிகையின் 43வது மலரில் ஈழத்தின் பிரபல நாவலாசிரியர்களிலொருவரான செங்கை ஆழியான் ஈழநாட்டுக் கதைகள் பற்றி எழுதியிருந்த ஆய்வுக கட்டுரையில் ஈழநாட்டுப் பத்திரிகையின் படைப்பாளிகளை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாகப் பிரித்து என்னை ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகளொருவராகக் குறிப்பிட்டு எனது கதைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தன. யாருமே ஈழநாட்டுப் படைப்புகளை மறந்துவிடவில்லையென்பது ஒரு வித ஆறுதலைத் தந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழநாடு பத்திரிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகையென்ற பெருமையும் அதற்குண்டு. அதன் காரணமாகவே பல தடவைகள் அந்நிறுவனம் எரிக்கப்பட்டதும் மறந்துவிடக்கூடிய சம்பவங்களிலொன்றல்ல.
சிரித்திரன் பெற்றுத் தந்த வாசகி….
எனது பதின்ம வயதுப் பருவத்தில் என்னை ஊக்குவித்த இன்னுமொரு சஞ்சிகை சிரித்திரன். சிரித்திரனில்தான் எனது முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. ‘சலனங்கள்’ என்னும் அச்சிறுகதை சிரித்திரன் சஞ்சிகை நடாத்திய அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினச் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்ற கதைகளிலொன்றாக வெளியாகியிருந்தது. அந்தக் கதை மூலம் எனக்குச் சிரித்திரன் ஆசிரியரின் தொடர்பு கிட்டியது. சிரித்திரன் ஆசிரியரின் மகனான ஜீவகன் அப்பொழுது யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிந்தார். என்னிலும் சில வயதுகள் மூத்தவர். அவர் மூலம்தான் நான் தான் அச்சிறுகதையினை எழுத்தியவனென்ற விடயம் சிரித்திரன் ஆசிரியருக்குத் தெரிந்தது. அதன் பிறகு நான் இலங்கையில் இருந்த காலம் வரையில் பல, தடவைகள் சிரித்திரன் ஆசிரியரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மேற்படி சிறுகதை எனக்கு இன்னுமொரு வாசகரையும் அறிமுகப்படுத்தி வைத்தது. உண்மையில் அவர் ஒரு வாசகி. அவர்தான் பிரபல யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முதல்வராகவிருந்த செல்வி இராமநாதன். அவர் என் அம்மாவின் பாட்சாலைத் தோழிகளிலொருவர். அச்சிறுகதை மூலம் என் வாசகர்களொலொருவராக மாறியவர். அன்றிலிருந்து பல தடவைகள் என் எழுத்து முயற்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து ஊக்கியவர். என் அம்மாவுடன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அவர் ஈழநாடு, சிரித்திரனில் வெளிவந்த ஒரு சில படைப்புகளைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி ஊக்குவித்தவர். ஒரு முறை நானும் , என் நண்பர்களிலொருவனான அநபாயனும் அவரைச் சென்று அவரது விட்டிலேயே சந்தித்திருந்தோம். அப்பொழுதும் அவர் என் எழுத்து முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். வயதில் முதிர்ந்தவரான அவர் அன்று பாடசாலை மாணவனாக்விருந்த என் ஆரம்பகாலத்துப் படைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாராட்டியது உண்மையில் எவ்வளவு ஆரோக்கியமானவிடயமென்பது இப்பொழுது விளங்குகின்றது.
மனையடி சாத்திரமும் , மண்ணின் மாண்பும்!
சிரித்திரன் ஆசிரியரைப் பொறுத்தவரையில் இறுதியாக நான் சந்தித்தது கே.கே.எஸ். வீதியில் அவர் புது வீடு கட்டிய காலகட்டத்தில். அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக கழகத்தின் கட்டடக்கலை மாணவனாக இருந்த சமயம். ஒரு காலத்தில் கட்டடக்கலை மாணவனாகயிருந்தவர் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள். அன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலிருந்த வீட்டினைச் சுற்றிக் காட்டிய ஆசிரியர் , வீட்டின் அமைப்பு தன் துணைவியாரின் தூண்டுதலில் மனையடி சாத்திரத்திற்கேற்ப பல மாறுதல்களை அடையவேண்டியிருந்தது பற்றிச் சிரித்தவாறே கூறியதும் தற்போது ஞாபகத்திற்கு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ‘மண்ணின் மாண்பு’ என்னுமொரு நாவலை எழுதிச் சிரித்திரன் ஆசிரியரிடம் கொடுத்திருந்தேன். அது கிழக்கிலங்கையின் கடற்கரைக்கிராமமொன்று எவ்விதம் உல்லாசப் பிரயாணிகளின் வருகையால் சீரழிகின்றது என்பது பற்றியது. அவ்விதமாக அங்குள்ள உல்லாசப் பயணிகளின் விடுதியொன்றில் பணியாற்றும் உள்ளூர்ப் பெண்ணொருத்தி எவ்விதம் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தவறுகின்றாள் என்பது பற்றியும், பின்னர் எவ்விதம் அவளது கணவனை அவளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றானென்பது பற்றியும் கூறும் நாவலது. அக்கடற்கரைக் கிராமத்து மக்களின் அமைதியான வாழ்வினை எவ்விதம் உல்லாசப்பயணிகளின் வரவும், அவர்களின் தன்னிச்சையான வாழ்வும் பாதிக்கின்றன் என்பது பற்றிய நாவல். அந்த நாவலை வாசிக்கக் கொடுத்திருந்தேன். ஆனால் அது சிரித்திரனிலும் பிரசுரமாகவில்லை. அதன் மூலப்பிரதி மீண்டும் எனக்குக் கிடைக்கவுமில்லை. பல மாதங்களின் பின்னர் அப்பிரதி தொலைந்து விட்டதாக ஆசிரியர் கூறினார்.
பாடும் பறவைகளும், உறவு தேடும் உள்ளமும்…
இதன்பின்ன்ர் இன்னுமொரு நாவல் எழுதியிருந்தேன். அதன் பெயர் ‘பறவைகள் பாடுகின்றன’. ஏனோ தெரியவில்லை அன்றைய காலத்து என் நாவல் முயற்சிகள் பலவற்றில் விதவை மறுமணம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி நாவலிலும் ஒரு விதவை மறுமணம் விபரிக்கப்பட்டிருக்கும். அன்றைய காலகட்டத்தில் என் தங்கைமாரின் சிநேகிதிகள் சிலர், என் நண்பர்கள் சிலரென்று பலரின் கைகளுக்கு மேற்படி நாவல் மாறிப் பலரின் கருத்துகளையும் எனக்குப் பெற்றுத் தந்திருந்தது. இவையெல்லாம் நூலுருப் பெறவில்லையாயினும், என்னைப் பொறுத்தவரையில் அன்றைய காலகட்டத்தில் என் எழுத்தார்வததின் வடிகால்களாக விளங்கியவை அவை என்ற முக்கியத்தும் வாய்ந்தவை. இது போல் இன்னொரு நாவலும் எழுதியிருந்தேன். அதன் பிரதி இப்பொழுதும் என்னிடமுள்ளது. ‘உறவு தேடும் உள்ளம்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட குறுநாவல். நாற்பது பக்கங்களுக்குள் அடங்கியது. எண்பதுகளில் முழங்காவில் குடியேற்றத்திட்டத்திற்குச் சென்ற அனுபவத்தின் அடிப்படையில் பூங்குடிக் கிராமமென்ற குடியேற்றத் திட்டக் கிராமமொன்றில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் நாவல். நாவலின் கதாநாயகி எழுத்தார்வம் மிக்கவள். கணவனோ நேர்மையான விவசாயி. அவனை ஆனை அடித்துக் கொன்று விடுகிறது. நகருக்கு மேற்படிப்புக்காகச் செல்லவிருக்கும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமிடையிலான நட்பு பற்றியது நாவல். அத்துடன் குடியேற்றத் திட்ட வாசிகள் எவ்விதம் பலவேறு நபர்களால் சுரண்டப்படுகின்றார்களென்பது பற்றியும் நாவல் விபரிக்கும். முழங்காவில் அனுபவத்தில் எவ்விதம் அப்பாவிகளான அக்கிராமத்து மக்கள் அங்குள்ள சங்கககடை மனேஜர், தபாலதிபர், தொழில்நுட்பத் திட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலராலும் சுரண்டப்படுவதைக் கண்டபோது வேதனையாகவிருநதது. அந்த வேதனையின் விளைவாகவும், தமிழகத்து வெகுசன படைப்புகளின் தாக்குதல்களின் விளைவினாலும் உருவான கலவையாக உருவான நாவலிது. முற்றுப் பெறாத நாவல் பின்னர் வலிந்து முற்றுப் பெற வைக்கப்பட்டுள்ளது.
கணங்களும், குணங்களும் ….
இவ்விதமாக நான் நாவல்கள் சில எழுதிய போதும் அவை எதுவும் எந்தப் பத்திரிகைகளிலோ சஞ்சிகைகளிலோ வெளிவாகவில்லை. முதல்முறையாக பத்திரிகையொன்றில் வெளிவந்த நாவலென்றால் அது ‘கணங்களும் , குணங்களும்’ தான். மணிவாணன் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் வெளிவந்த நாவல். ( அதற்கு முன்னர் மான்ரியாலிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பத்திரிகையான ‘புரட்சிப்பாதை’ சஞ்சிகையில் ‘மண்ணின் குரல்’ வெளிவந்திருந்தாலும் அது கையெழுத்துச் சஞ்சிகையென்பதால் ‘கணங்களும் குணங்களும்’ என்பதையே அச்சு ஊடகமொன்றில் வெளிவந்த முதலாவது நாவலாகக் கருதுகின்றேன்.) நாவலைப் படிப்பவர்கள் உடனேயே எழுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த நாவல்களின் பாதிப்புகள், காண்டேகரின் கதைகளின் பாதிப்புகள் இருப்பதைக் கண்டுகொள்வார்கள். தன் காதலியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திச் சிறைத்தண்டனை பெற்ற நாயகன் , மீண்டும் விடுதலையானதும் அவளைச் சந்தித்துப் பாவமன்னிப்புப் பெற வேண்டி அவளிருக்கும் வவுனியாவுக்குச் செல்லுகின்றான. அவனது, அவனது காதலுக்குரியவள், மற்றும் அங்கு எதிர்ப்ப்டும் இன்னுமொரு பெண் ஆகியோரின் பார்வையில் கூறப்படும் கதையிது. இயற்கை வர்ணனைகள், தத்துவச் சிக்கல்கள் ஆகியன பற்றிய பல்வேறு கோணங்களில் இந்நாவலின் பாத்திரங்கள் சிந்திப்பார்கள். தமிழகத்திலிருந்து வெளிவந்த ‘மண்ணின் குரல்’ நாவல் தொகுப்பில இந்நாவலுமுண்டு. இந்நாவலின் பெயராகக் ‘கணங்களும் குணங்களும்’ என்னும் பெயர் வந்ததற்கும் ஒரு காரணமுண்டு. என்னுடைய பாடசாலை நண்பர்களிலொருவன் கீதானந்தசிவம். மிகவும் ஆன்மிகத் தேடுதல் மிக்கவன். எபொபொழுதும் கேள்விக்குமேல் கேள்வியாகக் கேள்விகளைக் கேட்டே, உரையாடல்களைச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்கவன். ஒரு முறை இவனுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலொன்றில் ‘நல்லது, கெட்டது’ ஆகியனவற்றைப் பற்றிய விவாதமொன்றெழுந்தது. சில கணங்களில் எவ்விதம் நல்லவர்கள் கூடத் தவறுகளைச் செய்து விடுகின்றார்கள் என்பது பற்றியெல்லாம் அவ்வுரையாடலில் அவன் பல்வேறு கருத்துகளை உதிர்த்தான். அப்பொழுது சில கணங்கள் எவ்விதம் சிலரது குணங்களை மாற்றித் தவறிழைக்க வைத்து விடுகிறது என்று எண்ணியதன் விளைவாக உருவானதுதான் ‘கணங்களும், குணங்களும்’ என்னும் தலைப்பு. இந்நாவல் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ (தமிழ்நாடு) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்த ‘மண்ணின் குரல்’ நாவற் தொகுப்பில் அடங்கிய நாவல்களிலொன்று.
பொதுவாக எனக்கு எழுதுவதும், வாசிப்பதும் மூச்சு விடுவதைப் போல. அவையில்லாமல் என்னால் வாழவே முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னால் இவையிரண்டையும் விட்டு விடவே முடிந்ததில்லை. ஆனால் நான் ஒரு போதுமே யாருடைய பாராட்டுதல்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் எழுதுவதில்லை. எனவே எதை எழுதினாலும் அதனை நான் அனுபவித்தே எழுதுவதுண்டு. என் எழுத்தில், படைப்புகளில் பொதுவான அம்சங்களாக என் வாழ்வில் அனுபவங்களிருக்கும் அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடல்கள், இயற்கையின் மீதான என் பற்றுதல் ஆகியன ஆங்காங்கே விரவிக் கிடக்கும். உதாரணமாகக் ‘கணங்களும், குணங்களும்’ நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் கீழுள்ள பத்திகளைக் கவனித்தாலே போதும் மேற்படி கூற்றினை விளங்கப்படுத்த.
‘வாழ்வுதான் எத்தனை விசித்திரமானது. என் வாழ்வின் ஒரு கட்டப் பயணத்தை முடித்துவிட்டுப் புதிய பயணத்தை ஆரம்பித்தவனாக் வந்த என்னை எவ்விதம் இச்சூழல் இன்னுமொரு பயணத்தில் இலாகவகமாகப் பிணைத்து விட்டது. வாழ்வை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்படி எவ்விதம் என்னைக்கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அன்றாட வாழ்வே பிரச்சனையாக ஒவ்வொரு நாளுமே போராட்டமாக வாழ்வும் இந்த மக்கள்…. இவ்வளவு நெருக்கமாக விரிவாக நான் இதுவரை உலகை இன்னுமொரு கோணத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இதுவரையில் நான் எவ்விதம் வெறும் சுயநலக்காரனாக மட்டுமே, என் உணர்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ்ந்து விட்டிருந்தேன்.
சாதாரண ஒரு மத்திய வர்க்கத்து வாழ்க்கை வட்டத்துடனான பரிச்சயமே கொண்டிருந்த என்னை, முதன் முறையாக ஏழ்மையின் அவலங்களைப்பற்றி ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டி விட்டிருந்தது எனது இந்தப் புதிய அனுபவம், … வாழ்வையே பிரச்சனைகளின் போர்க்களமாக எதிர்நோக்கும் இம்மக்களுடன் ஒப்பிடுகையில் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவ்வளவோ அற்பத்தனமானவையாக , அர்த்தமற்றவையாக அல்லவா தெனப்டுகின்றன. சாதாரண குடும்ப உறவுகளே, நிலவும் பொருளாதாரச் சூழலினால் சிதைந்துவிட… வாழ்வையே அதன் பயங்கரங்களையே தனித்து எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களைப் பார்க்கையில் என்னையறியாமலேயே என் நெஞ்சில் ஒருவித பரிவு கலந்த வேதனை இழையோடியது. பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்கிறார்கள். எனக்கு என்னை நினைகையிலேயே ஒரு கணம் வெறுப்பாக வந்தது. இவ்வளவு காலமும் எவ்விதம் நான் என் தனிமனித உணர்வுகளையே பூதாகாராமாக்கி, அதற்காகவே வாழ்ந்து விட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக நான் இழைத்துவிட்ட தவறும், தணடனையும்….’
‘மனது முன்னெப்போதையும்விட , மிக மிக இலேசாக , இன்பமாக, தெளிவாக , உறுதியாக விளங்குகின்றது. நான் வாழும் இந்த உலகம், இந்த ஆகாயம், தொலைவுகளில் கோடு கிழிக்கும் பறவைக் கூட்டங்கள், ஒளிக்கதிர்களை வாரி வழங்கும் ஆதவன், தண்ணென்று ஒளிவீசி வரும் முழுநிலா, வருடிச் செல்லும் வாயுபகவான், இரவுகளில் கண்சிமிட்டிச் சிரிக்கும் நட்சத்திரப் பெண்கள்.. இந்த மரம், மக்கள், மண், … எல்லாமே இன்பமாக என்னில் ஒரு பகுதி போன்று அல்லது அவற்றின் ஒரு பகுதி நான் போன்றதொரு பரவசமாகத் தெரிகிறது.
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)
- ‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)
- சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 1
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 2
- கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2
- அறிவியலும் அரையவியலும் – 3
- ‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்
- காதல் சாத்தானின் முகவரி
- குயிலோசை
- நண்பனின் காதலி
- கையசைப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>
- யதார்த்தங்கள்
- மழைக்காலங்களில்…
- …கதைசொல்லும் தீபாவளி
- பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்
- அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்
- முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3
- அன்பு மகள்
- அன்பு மகள் (தொடர்ச்சி)
- விருதுகளும் அதன் அரசியலும்
- புகழ் எனும் போதை
- வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்
- நிலாச்சோறு!
- பனித்துளிகள்
- படுக்கை குறிப்புகள் – 1
- பதட்டம்
- தீபாவளி 2009
- காவல் நாகம்
- வேத வனம் விருட்சம் -55
- கனவுகள் சுமக்கும் கருவறை
- தினம் தினம் தீபாவளி