நாகரத்தினம் கிருஷ்ணா
‘யாருப்பா இங்கே சதாசிவம் ‘ உள்ளே போ ‘சாமி ‘ கூப்பிடுது.
‘சதாசிவம் ‘ என்று அழைக்கப்பட்டவன் மெள்ள எழுந்தான். சுற்றிலும் பார்த்துக் கொண்டான். கும்பல் கும்பலாய்த் தலைகள், அத்தலைகளுக்குச் சொந்தமான முகங்களின் எதிர்பார்ப்புகள் – சோர்வுகள்.
ஓட்டலில் ரூம் போட்டு, விடிவதற்குமுன் இட்டலி கடப்பா சாப்பிட்டு, விடிந்தபின் வெந்நீர் கேட்டுக் குளித்து, மடிப்புக் கலையாத மஞ்சள் ஆடைகளில்:மனைவியை தலைநிறைய மல்லிகையும் குங்குமாய் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு, ‘இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டால் வியாபாரம் சூடுபிடிக்குமா ? ‘ என்கின்ற விஐபி கேள்விகளுடனும், ஸ்பெஷல் டோக்கனுடனும் காத்திருப்பவர்கள். ‘கிணறு தோண்டணும், ‘நல்ல ஊற்று கிடைக்குமா ? ‘உச்சி வேளையிலே கொல்லையிலே ஒதுங்கி, பேயறைஞ்சு படுத்தப் படுக்கையாயிருக்கும் பொண்ணு தேறுவாளா ? ‘ என்பது போன்ற டாசல் வண்டிக் காலத்துக் கேள்விகளோடு, புளித்த வாயும் அழுக்கும் வியர்வையுமாக உட்கார்ந்தும் உட்காராமலும் காத்திருப்பவர்கள். அடுத்த மந்திரிசபை விஸ்த்தரிப்பில் இடம் தேடிக் காத்திருப்பவர்களென.. ‘சாமி ‘ – பெரியசாமியின் அருள் வாக்குக்காக, வாழ்க்கையில் ஏதோவொன்றிர்க்காக எப்போதும் காத்திருக்கப் பழகி, காத்திருப்பவர்கள்.
சதாசிவம் எழுந்தான். அழுக்கேறிய மஞ்சளாடை. அளவான உயரம். முன் வழுக்கை. இருந்த கொஞ்ச நஞ்சமும், பிரசவித்திருந்த யானைக் குட்டிக் கேசமாகச் சிலிர்த்து இறைந்து கிடந்தது. கரம்பாய்க் கிடந்த சவரம் காணா முகவாய். நீலம்பாரித்து வெளுத்த உதடுகள். உள்வாங்கிய கண்கள். தீனியைத் தேடும் கோழியாய்த் தலையை வஞ்சனையில்லாமல் திருப்பித் திருப்திப்பட்டவன், வலது கைப்பிடியை நம்பியிருந்த காதறுந்த பையிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கிய தேங்காய் – புஷ்பம் – குங்குமமிட்ட எலுமிச்சை வகையறாக்களை மீண்டும் சரிபார்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
நுழைந்த இடம் கூடமா, மண்டபமா எனக்கொள்ள முடியாமலிருந்தது. பெரிய ஒற்றைச் ஜன்னல். பழுத்த வெள்ளை சுவர்கள். சுவர்களில் ஆணியடித்துத் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பெண் தேவதைகளையும் கண்ணாடிச் சட்டங்களில் அடக்கி, சந்தண குங்குமமிட்டு, கூடுதலாக மல்லிகைச்சரம் தொங்க விட்டிருந்தது. வலதுபுறச் சுவற்றின் மத்தியில் கீழே, பக்த கோடிகளின் பயப்பார்வையின் தரிசனத்துக்காக சுயம்புக் கற்சிலை. கண்கள், காதுகள், மூக்கு, நெற்றியென முடிந்த இடங்களில் தங்கம் வேயப்பட்டு, அருகிலேயே கிராமத்துக் காவற் தெய்வங்களை ஞாபகப் படுத்திக்கொண்டு யாளிமுக வெள்ளிச் சிம்மாசனத்தில் சாமி. பெரிய சாமி.
பெரியசாமி என்கின்ற ‘சாமி ‘யின் அருள்வாக்கு உழைப்பை நம்பாத மனிதர்களிடை மிகவும் பிரசித்தம். அனைத்திற்கு அவரிடம் ‘தீர்வு ‘ இருந்தது. திருமணம் விவாகரத்து, பகை நட்பு, வெற்றி தோல்வி, இலாபம் நஷ்டம், கணவன் மனைவி, நண்பன் எதிரி… அனைத்திற்கும், அனைவருக்கும் அவரவர் எதிர்பார்ப்புக்கேற்ற, வசதிக்கேற்ற அருள்வாக்கிருந்தது. ஒரு நாளைக்கு இருபத்தைந்து நபருக்கு மேல ‘சாமி ‘ யின் அருள்வாக்குச் சொல்லபடுதில்லை. சோதனையாக சில நாள்களில், விவிஐபிக்களின் எதிர்பாராவித பிரவேசத்தினால்- அந்த இருபத்தைந்துக்கும் பங்கம் வந்துவிடும்.
கூடத்தில் நுழைந்து தயக்கத்துடன் நின்றவனை ‘சாமி ‘ – பெரியசாமி பார்த்தார். உள்ளே ‘வா.. என்ன பேரு ? சதாசிவ….. ? ‘ பெரியசாமி கேள்வியை முடிக்கவில்லை.
‘ஆமாம் சாமி! ‘.. கையிலிருந்த தட்டை, ஒர் அவசர செயற்பாட்டில் கீழே குனிந்து வைத்துவிட்டு, தோளிலிருந்த துண்டை இடையில் அவசரமாக முடிச்சிட்டு, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தான். இப்போது அவன் உடலில் தேவையின்றி நடுக்கம் சேர்ந்துக் கொண்டது.
‘சாமி! மறுபடியும் உங்களை பார்க்க முடியும்னு நெனைக்கலை. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி வந்தேன் ‘.
வார்த்தைகள் தடுமாறி வந்தன. ஒவ்வொரு வார்த்தைக்கும் தேவைக்கும் அதிகமாகவே இடைவெளி. அடித் தொண்டையில் பேசினான். விழுந்த வார்த்தைகள் கரையில் எறிந்த மீன்களாய் பெரியசாமியின் கண்ணெதிரே துடித்துச் சோர்ந்தன. ‘சாமி ‘ -பெரியசாமிக்குப் புரிந்தது.
‘ம்.. இப்பத் தேவலாமா ? இப்படி வா.. எதிர்த்தாப்பல வந்து நில்லு ‘
‘ஆமாம் சாமி ஏதோ ஆத்தா புண்ணியத்துல பொழுதன்னிக்கும் காடு கரம்பு, பொழுது சாஞ்சா குடிசைன்னு நாளு நல்லாவே போச்சுங்க. எல்லாம் உங்க தயவு. ‘
‘இங்க பாரு.. என்னைச் சொல்லாதே. அங்க பாரு. எல்லாம் அவ தயவு. ‘
‘சத்தியமுங்க.. மறுக்கலை ஆனா, நான் உங்கக்கிட்ட வராமப் போயிருந்தா, இந்நேரம் நான் செத்த இடத்துல புல்லு முளைச்சிருக்குமுங்க… ‘
‘அதை விடு. இப்ப எதுக்கு வந்த ? ‘
சாம்பசிவம் யோசித்தான். உதறும் உதடுகைளை ஒட்ட வைக்க முயற்சித்தான். வெகுநேரம் மீண்டும் குழப்பத்தில் நின்றான்.
‘என்ன பேரு சொன்ன ?… சாம்பசிவம். நான் என்ன நினைக்கிறேன்னா, உங்கிட்ட மறுபடியும் ஏதோ தொந்தரவு இருக்குது. கிட்டவா.. எதன்னாலும் ஆத்தாகிட்ட மறைக்காமச் சொல்லு. என்ன சேதி ?. இன்னும் நெறைய பேர் எனக்காகக் காத்திருக்காங்க பாரு. ‘
‘என்னத்தை சொல்றது சாமி. போனமுறை ‘கன்னிமாரு ‘ தொரத்துதுன்னு வந்தேன். .. ‘
‘அதற்குத்தான் ஆத்தா பரிகாரம் சொல்லிச்சே. அந்தப்படி செஞ்சியா ? ‘
‘செஞ்சேன சாமி. உருமத்துல -ஊர் குளத்துல முங்கி – சந்தியில நிண்ணு – வெடை சேவலைக் காவு கொடுத்து, இரத்தச் சோறு விட்டெறிஞ்சி, திரும்பிப் பாக்காம – சுறுக்கா குடிசைக்குத் திரும்பி.. ஆத்தா அருள்வாக்குல சொன்னதை, பிசகாம செஞ்சிருக்கேன். ‘
‘அப்பால என்ன பிரச்சினை. ஏதோ இக்கு வைக்கிற… ‘
‘வாஸ்த்தவம்ங்க.. இப்ப மறுபடியும் இரண்டொரு மாசமா தொல்லைங்க ‘
‘எச்சரிக்கையா இருக்கணும்யா. கன்னிமாருங்கறது சங்கிலி கருப்பன், சுடலையாண்டி ரகமில்லை. மாயாமருளு, மோகினி ரகம். என்ன செய்யுது ? மறுபடியும் வலிப்பா ? ராத்திரியானா வியர்த்துக் கொட்டி, படுக்கையில ஸ்கலிதமாகுதா ? ‘
‘தப்பு தப்புங்க. அப்படிச் சொல்லிடாதீங்க. சாமி குத்தமாயிடுமுங்க. இது எம்மாமன் மவ லச்சுமிங்க. அவதான் எந்த நேரமும் எங்கண்ணுமுன்னால நிண்ணுகிட்டு போக்குக்காட்டுறா ‘
‘லட்சுமி ? ‘
‘நம்ம லச்சுமி சாமி.. உங்க மண்டபத்தைக் கூட்டி பெருக்கறதுக்குண்ணு, போன பங்குனிக்குக் கூத்தபாக்கத்திலிருந்து வந்து தங்கினவ, வாயும் வயிறுமா, திடார்னு ஒரு நாள் தூக்கு மாட்டிக்கிட்டாளே அந்தப் பொண்ணுங்க. கிட்ட இருந்து எல்லாக் காரியத்துக்கும் ஒத்தாசை பண்ணீங்களே ? மறந்து போச்சுங்களா ?
‘ம்…. ‘
‘அவதான்..இப்ப ராத்திரி பகலா என்னை விடாம தொரத்துறா. கன்னிமாரு இல்ல. உங்கைளைக் குத்தம் சொல்றா சாமி. நம்ப முடியுதுங்களா ? ‘
‘சாமி ‘ -பெரிய சாமி முதன் முறையாக கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். இதயத்தில் வலிப்பதாகப் பிரமை. நெற்றியில் வியர்த்தது. பக்கத்திலிருந்த மின் விசிறியைக் கூடுதலாகச் சுழலவிட்டார். பின்புறம் தொங்கிக் கொண்டிருந்த தேங்காய்ப்பூத் துவாலையால் வியர்வையை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிதானத்திற்கு வந்தார்.
‘என்னயா உளர்ற ? ? ‘
‘சாமி.. சத்தியமா உண்மைங்க. நான் சொல்றது நிஜமுங்க. நீங்க திடு திப்புண்ணு, வேட்டியக் கிழித்துக் கொண்டு ஓடறதும், இரத்தமும் குடலுமா சிதறிக் கிடக்கிறதும் எங்கண்ணு முன்னால அடிக்கடி நடக்குதுங்க. பாவிமக கைக்கொட்டிச் சிரிக்குறா. முடிஞ்சா ஆத்தா உங்கைளைக் காப்பாத்தட்டும்னு சொல்லிச் சவால் விடறா. ‘ சொல்லவந்ததைக் கடகடவென்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கிக் கொள்கிறான். பிறகு தனக்குத்தானே காரணமின்றிச் சிரிக்கிறான்.
‘சாமி ‘ – பெரியசாமிக்கு எரிச்சலேற்பட்டது. இப்ப எதுக்கு சிரிக்கிற ?
‘நானில்லைங்க. அந்தச் சிறுக்கி. அவதான் சிரிக்கிறா. கருநாக்குக்குகாரி சொன்னாப் பலிக்குமுங்க ‘.
‘என்னய்யா பயமுறுத்தறையா ? ‘
‘சாமி உங்க இஷ்டம். நான் சொல்றதச் சொல்லிபுட்டன். என்னக் கூட்டி வந்ததே அவதான். இப்பகூட எம்பக்கத்துல நிக்கிறா. மீண்டும் சிரிக்கிறா பாருங்க. ‘
‘போதும்யா நிறுத்து. இடத்தைக் காலிபண்ணு.. ‘
‘இப்ப போறங்க சாமி. மறுபடி மறுபடி வருவேன். உங்களுக்கு நல்லது செய்யவேண்டி வந்தேன். லச்சுமி புறப்படு. நாம கிளம்புவோம். சாமி நம்பமாட்டுது பாரு. ‘
‘ஏம்பா வெளியிலே யாரு ? உள்ளே வாங்க.. இந்தப் பைத்தியத்தைக் கொஞ்சம் துரத்துங்க.. ‘
‘சாமி ‘ – பெரியசாமியின் குரல்கேட்டு திடு திடுவென்று இரண்டொரு ஆட்கள்.
‘என்ன ஆச்சுங்க ? யாரு ? ‘
‘அதோ அவந்தான்.. நழுவறான் பாரு. ‘ வெற்றிடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்.
‘யாரைச் சொல்றீங்க ? இங்க யாரும் இல்லீங்களே ? ‘
‘என்னய்யா நொள்ளை ?. உங்க கண்ணு முன்னால நக்கற் சிரிப்போடு போறான் ‘. ‘ஏய் நில்லு… உன்னையும் மிதிச்சு உத்திரத்துல தொங்க விடறேன்.. ‘ விருட்டென்று எழுந்துகொண்டார்..
‘சாமி ‘- பெரியசாமி எழுந்து யாரையோ துரத்துவதுபோல ஓடத்தொடங்க, அவர் பின்னே அவரைச் சார்ந்தவர்கள் ஓட. காத்திருந்த கூட்டமும் ஆர்வத்தோடு தொடர்ந்து ஓடியது.
இப்படி எப்போதும் ஓடியவரல்ல. ஏகத்துக்கும் மூச்சுவாங்கியது. ‘அங்கே சாலையின் மறுபக்கத்தில் மஞ்சட்பையும் ஊத்தை வேட்டியுமாக பஸ்ஸில் ஏறிக்கொண்டிருப்பது அவன்தான். அந்தப் பைத்தியக்காரந்தான். ‘ மீண்டும் அவரை ஆவேசம் பற்றிக்கொண்டது. பின்னாலிருந்து யாரோ பிடரியில் அடித்து ‘ஓடு ‘ என்றார்கள். பஸ் புறப்படுத்துவதற்குள் அவனைப் பிடித்துவிடவேண்டும்,.என்கின்ற வெறி… ‘அவனை
நிறுத்துங்கப்பா ‘…சாலையைத் தாவி கடக்க முற்பட்டார். வலதுபுறம் அசுரவேகத்தில் லாரியொன்று வந்துகொண்டிருந்தது, அதன் நெற்றியில் பெரிய எழுத்தில் ‘லட்சுமி லாரி சர்வீஸ் ‘ என்றிருந்தது.
Na.Krishna@wanadoo.fr
- மரம்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- காபூல் திராட்சை
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- என் இனிய சிநேகிதனே !
- கடத்தப்பட்ட நகரங்கள்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- அறியும்
- அகதி
- ஆயிரம் தீவுகள்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- உலக சுகாதார தினம்
- சிகரட்டில் புகை
- பைத்தியம்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- ஏன் ?
- குப்பைகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- விடியும்! நாவல் – (10)
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- கடிதங்கள்
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- சாமி- பெரிய சாமி
- வைரமுத்துக்களின் வானம்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- நீ வருவாயென…
- தேடுகிறேன்…
- இயற்கையே இன்பம்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- ஒரு விரல்
- பெயர் தெரியாத கவிதை! ?
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]