எஸ். ஜெயலட்சுமி
நமது புராணங்கள், காப்பியங்கள்,
கதைகளில் சாபமிடுவதையும், பின் சாப விமோசனம் ஏற்பட்டு பழைய உருவோடு சாபமிடப்பட்டவர்கள் மீள் வதையும் பார்க்கிறோம். இந்த சாபத்திற்கு தேவர்களும் விலக்கல்ல கந்தர்வர்களும் விலக்கல்ல.
ராவணன் பெரிய வீரன், சிவபக்தன் ’முப்பத்து முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந் தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படாய்’ என்ற வரமும் கொண்டவன், என்றாலும் வேதவதி என்ற பெண் ‘விரும்பாத பெண்ணைத் தொட்டால் உன் தலை வெடிக்கும்’ என்று சாபம் கொடுக்கிறாள். நந்தி தேவர், ‘ஒரு குரங்கால் உன் ஊர் அழியும்’ என்று சாபம் கொடுக்கிறார். அந்த சாபம் பலிக்கிறது என்று பார்க்கிறோம்.
வாலியும் மிகுந்த பலசாலி தான்.
எதிர்த்து வருபவர்களுடைய தேக பலம் வரபலம் இரண் டிலும் சரிபாதி அவனுக்குச் சேர்ந்து விடும். ஆனால் அவனுக்கும் ஒரு சாபம் இருந்தது. ருச்யமுக பர்வதம் என்ற குன்றுக்கு வந்தால் அவன் தலை வெடிக்கும்
என்று சாபம். அதனால்தான் சுக்கிரீவன் அந்த மலையில் தங்கியிருக்கிறான்.
ஏதாவது தவறு செய்யும் போது முனிவர்கள், பெண்கள், தேவர்கள், குருமார்கள் சாபம் கொடுத்து விடுவார்கள். தவறு செய்தவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோறும் போது அவர்கள் மனமிரங்கிச் சாபவிமோசனம் பருளிகிறார்கள். ஆனால் சாப விமோசனம் பெற, காலம் வரும் வரை காத்தி ருக்க வேண்டும், சில சாபங்களில் விமோசனம் பெற யுக யுகமாய்க் காத்திருக்க வேண்டும்.
இராம காதையிலே வரும் சிறு சிறு பாத்திரங்களையும் சுவாரசியமாகப் படைத்துக் காட்டுகிறான் கம்பன். ராமன் பெருமைகளை அவர்கள் வாயிலாகப் பேச வைக்கிறான்.
ஆரண்யகாண்டத்தின் ஆரம்பத் தில் நாம் பார்க்கும் விராதனும் காண்ட முடிவில் நாம் பார்க்கும் விராதனும் சாப விமோசனம் பெற்று ராம னைத் தோத்திரம் செய்கிறார்கள். அரக்கர்களா யிருந்து கந்தர்வனாக சாப விமோசனம் பெறுகிறார்கள். ராமன் பாத தூளி பட்டவுடனே கல்லாயிருந்த அகலிகை சாப விமோசனம் பெற்று முன்னைய வடிவ மாகிறாள். ராமன் அருளால் விராதனும் கவந்தனும் அரக்க உருவி
லிருந்து கந்தர்வர்களாக மாறி ராமனைத் தோத்திரம் செய்கிறார்கள்.
ராம இலக்குவர்கள் சீதா தேவியோடு காட்டில் நுழைகிறார்கள் நடு நிசியில். காரிருளில் வானமே வழிகாட்டக் கைவிளக்கு எடுத்தது போல் சந்திரன் உதயஞ்செய்கிறான். கலிகாலம் கங்குல் என்ற கரியைப் பூசி வந்தது போல விராதன் வருகி றான். பூதங்கள் அத்தனையும் ஒரு வடிவமாக வந்தது போல் தோன்றுகிறது.
புண் துளங்கியன கண்கள் கனல்
பொங்க மழை சூழ்
விண் துளங்கிட, விலங்கல்
குலுங்க வெயிலும்
கண்டு, உளம் கதிர் குறைந்திட
நெடுங்கடல் கலாம்
மண் துளங்க, வய அந்தகன்
மனம் தளரவே
கண்களில் நெருப்புப் பொறி பறக்க, வானம் நடுங்க, மலைகள் குலுங்க, கதிரவனும் ஒளி குறைய, கடல் சூழ்ந்த நிலம் நடுங்க வலிமை யான யமனும் தளர்ந்து போகும் படி விராதன் வருகிறான்.
வந்தவன் இராம இலக்குவர்களை
“நில்லு, நில்லு” என்று வழிமறித்து ஒரு கையில் சீதையைத் தூக்கிக் கொண்டு வானத்தில் செல்கிறான்.
இதைக் கண்ட இருவரும் “எங்கடா செல்கிறாய்? என்று அதட்ட விராதன், “இவளை என்னிடம் விட்டுச் செல் லுங்கள்” என்கிறான் இதைக் கேட்ட ராமன் போர் தொடுக்கிறான். உடனே விராதன் சீதையை விட்டு விட்டு சூலப் படையை ஏவுகிறான்.
இதைக் கண்ட ராமன் எரிகணை
விடுகிறான். மலையிலிருந்து அருவி கொட்டுவது போல் விராதனுடைய உடலிலிருந்து இரத்தம் பெருக வீழ்கிறான். உடனே இராம இலக்குவர்கள் விராதனின் கைகளை வெட்டுவதற்காக அவன் உடல் மீது ஏறு கிறார்கள். ஆனால் விராதனோ அவர்கள் இருவரையும் தன் தோளில் சுமந்து விரைகிறான். உடனே ராமன் வேகமாகக் காலால் உதைக்கவே விராதன் கீழே விழு கிறான். அவன் உடலைப் புதைக்கக் குழி தோண்டு கிறார்கள். விராதன் உடலை ராமன் தன் திருவடியால் உதைத்துத் தள்ளுகிறான். இராமன் திருவடி தீண்டப் பெற்றதால் விராதனைப் பற்றியிருந்த தீவினைகள் நீங்க, பழவினைகள் நீங்க, ஞானம் கைகூட இராமனைப் பரம்பொருள் என்று உணர்ந்து துதிக்க ஆரம்பிக்கிறான்.
பாதங்கள் இவை யென்னில்:
”வேதங்கள் சொல்லும் எல்லா உலகங்களிலும் விரிந்து பரந்துள்ள உன்னுடைய திரு
வடிகள் இப்போது சிறியனவாகத் தோன்றிய போதிலும், அவை உண்மையில் உலகங்களெல்லாம் பரவி விரிந்தி ருக்கின்றன.பாதங்களே இப்படிப் பரவியிருந்தால் முழுத் திருமேனியும் எப்படியிருக்குமோ?
வேதங்கள் அறைகின்ற
உலகெங்கும் விரிந்தன நின்
பாதங்கள் இவை என்னின்
படிவங்கள் எப்படியோ?
என்று பிரமிக்கிறான்.
ஆதிமூலம்.
ஒரு யானையின் துன்பத்தைப் போக்குவதற்காக ஓடிவந்த கருணையைப் போற்றுகி றான் விராதன். குளத்திலிருந்த முதலை, பூப்பறிக்க
வந்த கஜேந்திரனின் காலைப் பற்ற கஜேந்திரன் தன் துதிக்கையை மேலே தூக்கி, ’ஆதிமூலமே!’ என்று குர
லெடுத்துக் கூப்பிட நீ தானே ஓடிச் சென்று அதைக் காப்பாற்றினாய்?
கடுத்த கராம் கதுவ நிமிர்கை
எடுத்த மெய் கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று
ஒலி கொள்ள உறுதுயரால்
அடுத்த பெருந்தனி மூலத்து
அம்பரமே! பரமே! என்று
எடுத்து ஒரு வாரனம் அழைப்ப நீயோ அன்று ஏன்? என்றாய்
பரம்பொருள் எல்லாப் பொருள் களிலும் பரவி நின்று, அறங்காத்து அருள் செய்கிறது. அது மேலும் இறத்தல், பிறத்தல் என்னும் திரு விளை யாட்டிலும் ஈடுபடுகிறது. படைத்தல் தொழிலில் ஓய் வில்லாமல் ஈடுபடும் பிரமன் முதலாக மற்ற உயிர்க ளுக்கும் நீயே முதன் முதலில் தோன்றிய தந்தையும்
தாயும். நீயல்லால் வேறு யார்?
நீயே எல்லா உலகங்களுக் கும் மேலான முதன்மையான கடவுள். எல்லா உலகங் களும் உனக்கு உரியன. ஆனால் நீ ஏன் மறைந்திருக்கி றாய்? எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படை யாகத் தோன்றினால் என்ன தீமை உண்டாகும்? இந்த மாய விளையாட்டு எதற்காக?
நீ ஆதி பரம்பரம்
நின்னவே உலகங்கள்
ஆயாத சமயமும் நின் அடியவே
அயல் இல்லை
தீயாரின் ஒளித்தியால்! வெளி
நின்றால் தீங்கு உண்டோ?
வீயாத பெருமாய
விளையாட்டு வேண்டுமோ?
ஐயனே! கிட்ட முடியாத அரியவ னான நீ, எளியவனாக வரும் கருணை உடையவன். தன் தாயைத் தெரியாத கன்று இல்லை. அதுபோலவே தாய்ப்பசுவும் தன் கன்றை அறிந்து கொள்ளும். நீயே எல்லா உலகங்களுக்கும் தாய். அதனால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய். ஆனால் அப்பொருள் களோ உன் தன்மையை அறியாமல் உள்ளன. இதன் மாயம் என்ன? என்னால் அறிய முடியவில்லை.
தாய் தன்னை அறியாத கன்று
இல்லை, தன் கன்றை
ஆயும் அறியும், உலகின் தாய்
ஆகின் ஐய!
நீ யறிதி எப்பொருளும், அவை
உன்னை நிலை அறியா
மாயை இது என்கொலோ?
வாராதே வரவல்லாய்!
”ஐயனே! நீ படைத்த உயிர்கள் நீயே பரம்பொருள் என்ற உண்மையை ஓரளவு தெரிந்து நற்கதி யடைய முடியாதா? அவை அப்படி நற்கதி அடைந்தால் உனக்கு என்ன குறை ஏற்படும்? அன்னப் பறவையாகி நீதானே பிரமனுக்கு வேதங்களை அருளி னாய்? அந்த வேதங்களை உனக்குக் கற்பித்தவர் யார்? அடியேன் செய்த அருந்தவப் பயனால், திருப்பாற்கடலை
விட்டு நீ காட்சியளிக்க வந்துள்ளாய். உன்னால் என் இழி பிறப்பை ஒழித்தேன். இனி பிறவி இல்லை. என் நல்வினை தீவினைகளைப் பவளம் போன்ற உன் திரு வடிகளால் போக்கி அருள் புரிந்தாய்” என்று தோத்திரம் செய்கிறான்.
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா!
முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன்
அருந்தவத்தால் அணுகுதலாலும்
இப்பிறவிக் கடல் கடந்தேன், இனிப்
பிறவேன்; இருவினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால்
துடைத்தாய் நீ.
சாபம் வந்த காரணம்.
சாபம் நீங்கப் பெற்ற விராதன்
தன் சாபம் ஏற்பட்ட வரலாற்றைச் சொல்கிறான்.
”என் பெயர் தும்புரு. குபேரன் ஆட்சிக்கு உட்பட்டவன். காமம் என் அறிவை மறைத்த தால் உண்டான குற்றத்தால் அரக்கனாகும் படி சபித் தான். அதனால் அரக்கனானேன்.எனது சாபம் எப்போது
நீங்கும் என்று கேட்டபோது (இராமனின்) உன் திருவடி பட்ட மாத்திரத்தில் சாப விமோசனம் கிட்டும் என்று தெரிவித்தான்.
அன்று மூலம் ஆதியாய்!
இன்று காறும் ஏழையாய்
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன்.
காமநோயால் அறிவிழந்து,
உயிர்க்கொலை புரிந்து தீமையானவற்றையே தேடிக் கொண்டேனே தவிர நல்லவற்றை நாடவில்லை. ஆனால் இன்று உன் திருவடிப் பேற்றால் சாபம் நீங்கப் பெற்றேன். என் மூடத்தனத்தால் நான் செய்த தீமைக ளைப் பொறுத்தருள்வாய். என்று தன் பழைய கந்தர்வ வடிவில் வானுலகு செல்கிறான்.
கவந்தன்.
இராம இலக்குவர்கள் சீதையைத் தேடிய வண்ணம் வருகிறார்கள். திடீரென்று தாங்கள் எங்கோ சிக்கிக் கொண்டதை உணருகிறார்கள். கவந்தன் என்ற அசுரனின் கைகளுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
கவந்தனுக்குக் தலை கிடையாது.
வயிற்றிலே வாய். இந்திரனின் வஜ்ராயுதம் தாக்கியதால் தலை வயிற்றுக்குள் போய் விட்டதால் வயிற்றிலே வாய்! இவன் கைகள் ஒரு யோசனை தூரம் நீளும் தன்மை கொண்டவை. தன் கைகளுக்குள் உட்பட்ட எதையும் கவர்ந்து வயிற்றுக்குள் திணித்து உணவாய்க் கொள்வது இவன் வழக்கம். யானை முதல் எறும்பு ஈறாக இவனால் நிலை குலைந்து சாய்கின்றன. காட் டாறுகள் நிலை கலங்கித் திசை எல்லைகளை அடை கின்றன. மேகங்கள் சுருண்டு நிலத்திலே விழுகின்றன. கவந்தனின் கைகள் இயங்கிவதால் இயற்கையே சலித்துப் போகின்றன.
மந்தர மலையைச் சுற்றிய வாசுகியோ அல்லது அது போன்ற ஒரு பெரிய பாம்பு தான் தன்னுடைய வாலோடு தலையையும் வளைத்துப் பற்றிக் கொண்டதோ என்று நினைக்கிறார்கள் இராம இலக்குவர்கள். இலக்குவன் கவந்தனது இயல்பைத் தெரிந்து கொள்கிறான். “இது ஒரு பூதம் இதை என்ன செய்யலாம்?” என்கிறான்.
“இலக்குவா, , நான் பழி சுமந்து வாழ விரும்பவில்லை. தந்தை, ஜடாயு, சீதை எல்லோ ரையும் இழந்த பின் நான் உயிர் வாழ வேண்டுமா?
உங்கள் மகள் அரக்கன் வீட்டில் இருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் மலை போன்ற வில்லையும் அம்பறாத் தூணியையும் சுமந்து கொண்டு மிதிலை மன்னனிடம் போவேனோ? அதைவிட நான் இந்த பூதத்துக்கு இரையாவதே மேல்” என்கிறான். “நீ தப்பிச் செல்” என்கிறான்.
”உன்னை இறக்கும் படி விட்டு விட்டு நான் மட்டும் தப்பிச் செல்வேனா? கானகம் கிளம்பிய அன்று அன்னை என்ன சொன்னாள்? உன் தமையன் ஏவிய வேலைகளை யெல்லாம் செய்வாய்.
துன்பம் வந்தால் அதற்காகப் பின் வாங்காமல் நீ அதை ஏற்க வேண்டும். இராமனுக்கு ஏதாவது ஆபத்து வரு
மானால் அந்த ஆபத்தை நீ ஏற்று அவனுக்கு முன்னால் இறக்க வேண்டும்” என்றாள். “என் தாயின் சொல்லை நான் பொய்யாக்கலாமா?”
’’உன் முன் ஏவிய யாவும்
இசை, இன்னல்
பின்றாது எய்தி, பேர்
இசையாளற்கு அழிவு உண்டேல்
பொன்றா முன்னம் பொன்றுதி”
என்றாள்; உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது
வாய்மை நிலை அம்மா?
”அண்ணா! இடர் தன்னை வென் றார் அன்றோ வீரர்கள் ஆவர்? இந்தப் பூதத்தை வாளால் துணிப்போம்” என்கிறான். இவர்களை விழுங்க வந்த கவந்தனை இராம இலக்குவர்கள் அவன் கைகளை வெட்டி வீழ்த்துகிறார்கள்.
என்ன ஆச்சர்யம்! ஒரு பறவை போல விண்ணிலே தோன்றுகிறான் கவந்தன். இராம னைத் தோத்திரம் செய்ய ஆரம்பிக்கிறான்.
“எல்லாப் பொருட்களையும் படைத்தவன் நீ தானோ? நல்லறத்தின் சாட்சியோ? மூன்று பிரிவாக்க் கிளைத்து எழுந்த (பிரும்மா விஷ்ணு,
சிவன்) மூலப் பரம்பொருள் நீதானோ?
’ஈன்றவனோ எப்பொருளும்? எல்லை
தீர் நல்லறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின்
தனிப் பயனோ?
மூன்று கவடாய் முளைத்து
எழுந்த மூலமோ?
தோன்றி அருவினையேன் சாபத்
துயர் துடைத்தாய்!
நீயே ஊழிக் காலத்தில் எல்லா
உலகங்கலையும் உன் வயிற்றில் மறைத்து வைக்கி றாய். ஊழியின் முடிவில் அவற்றை மீண்டும் வெளியே கொண்டு வருகிறாய். நீ ஆணா? பெண்ணா? அல்லது இரண்டுக்கும் வேறான அலியா? உன்னை எப்படி அறி
வது?
ஆதிப் பிரமனும் நீ!
ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால்
உண்டாகிலும் நீ!
அண்டமாகிய பெரிய கோவில் முழுவதற்கும் சூரிய, சந்திர, நட்சத்திரம் என்ற அழகிய மூன்று மண்டலங்க
ளுக்கும் மேலாக, மலராத தாமரை அரும்பின் கொட்டையே உனது இருப்பிடமாகும்
அண்டப் பெருங் கோயிற்கு
எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின் மேல்
என்றும் மலராத
புண்டரிக மொட்டின் பொகுட்டே
புரை அம்மா!
பரமேஷ்டி, ஓமத் தீயில் உயர்ந்த அவியுணவை உண்ப வனும் நீயே. அந்த அவியுணவை ஊட்டுவோனும் நீயே. இந்த இரண்டு நிலைகளும் உன்னிடம் ஒன்றியிருக்கும் இப்பண்பை யாரால் அறிய முடியும்?
எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ
இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்?
பகராய் பரமேட்டி!
பரம்பரனே! உன்னால் உருவாக்கப்பட்ட அண்டங்கள்
ஊழிக் கடலில் தோன்றி மீண்டும் அக்கடலிலேயே
ஒடுங்கி விடுகிறது.
நிற்கும் நெடு நீத்த
நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண்
இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து உன்னுளே
தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு
எளிதோ? பரம்பரனே!
”எம்பெருமானே! இப்பிறப்பில் நான் எந்த விதமான நல்ல காரியத்தையும் செய்ய வில்லை. என்றாலும் என் அஞ்ஞானத்தைப் போக்கி ஞானம் அடைவதற்கான வழியைக் காட்டினாய். துன்பக் கடலிலிருந்து என்னக் கரை சேர்த்தாய். இதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரிய வில்லையே!
நாயினும் கடைப்பட்ட என்னை ஆண்டருளிய உன் கருணையை என்னென்று சொல்வேன்?” என்று பலவாறு துதிக்கிறான்.
ஆகாயத்தில் வேறொரு ஒளி வடிவம் கொண்டு நிற்பவனை ஆச்சரியத்துடன் “நீ யார்?” என்று வினவுகிறான் இலக்குவன்.
”வீரனே! நான் தனு என்னும் கந்தர்வன். தூலசிரசு என்னும் முனிவரின் வடிவத்தை எள்ளி நகையாடினேன். அவருடைய சாபத்தால் கவந்தன் ஆனேன். உங்களுடைய மலர்க்கைகள் தீண்டி
யதால் சாபம் நீங்கி பழைய வடிவை அடைந்தேன்.” என்று தன் வரலாற்றை சொல்கிறான்.
பின் சபரி இருக்குமிடம் செல்வதற்கும் வழி சொல்கிறான். சுக்கிரீவனைச் சென்ற டைந்தால் சீதையைத் தேட அவன் உதவி கிடைக்கும் என்று வழி காட்டுகிறான்.
இராமனைப் பரம் பொருளாகத் தோத்திரம் செய்ய இந்த இரண்டு இடங்களையும் கம்பன் நன்கு பயன் படுத்திக் கொள்கிறான்.
********************************************************
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்
- விஸ்வரூபம் தொடர் பற்றி
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை
- சமஸ்கிருதம் கற்போம் பற்றியது
- கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்
- கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?
- சாப விமோசனம்
- பேரழிவுப் போராயுதம் !
- பெண்
- சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)
- இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா
- இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
- பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்
- செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
- மொழியின் துல்லிய உலகம்
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
- தொலைதல்
- திண்ணை ஆசிரியருக்கு
- கால்டுவெல் – வல்லுறவு குறித்து
- RIG VEDA UPAKARMA
- காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா
- Monthly screening of Documentaries and Short films
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
- முள்பாதை 41
- பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்
- பெண்ணிடம் ரகசியம்
- முள்ளிவாய்க்கால்!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7
- மனிதர் உபயோகம்
- கருவண்டு
- வண்டுகள் மொய்க்கும் பூ
- கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
- பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!
- அமைதிப் பயணம்
- வேதவனம் விருட்சம் 98
- உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2
- ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5
- உன் கனவு வருமெனில்…
- பொன் நிறப் பருந்து
- அவளின் பிரம்மன்
- இது சாயங்காலம் ….!