கோடிமணி நிலை

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

மாலதி


—-

கோடி மணி நிலை ஒன்று
அசையுமென்று பார்த்திருந்தேன்.
கதவு திறந்தபின்பு
அழகுப் பொன்மணிகளிலே
அசையவென்று நாக்கில்லை.

ரஜபுதனப் பச்சையில் வைரப்புள்ளி
ராஜாங்கச்சிவப்போடு ஊதாப்பட்டு
மஞ்சள் சோளிக்கொரு மயிலாங்கி
பாக்தாத் நகர்வீதிக் கடையோரம்
கண்டெடுத்தேன்.
பார்த்தால் அது பதனீடு புராதனமில்லை.

முழு ஆயுள் ஆராய்ச்சி முடிவு
தெரிந்தபின்பு
தேவையில்லை என்றறிந்தேன்.

கனவுப் பிராயங்களின் கிராமத்துக்
கோயில் பிரை
கையடக்க ரத்தினத்தைக்
காப்பாற்றிப் பொதிந்த பிரை
வழிமாறி வெகுதூரம் வகை மறந்து
நெடுங்காலம்…
குகை ஒரு நாள் நகர்ந்துவந்து
கோயில் பிரை திறந்து
செருகு அறை மரை கழன்று
நினைவு விரல் துழாவிற்று.
ஸ்பரிஸம் பதை பதைத்துமேனி
இந்திரக்கண்கள் விரித்து
இரத்தக் கண்ணீர் வடித்து
மாணிக்கமில்லை சொல்லி
மனசைப்பிளந்து கொண்டு
அண்டமே விண்டது போல்
அடிவிம்மல் புறப்பட்டு
ஆளில்லாப் பெரும்பாலை
மணற்குவியல் புதையலெனப்
புதைந்து புதைந்து போயிற்று.

பெரிய சிறை விட்டுப்புறாச்
சிறகுபரவவிட்டு
ஊருக்குள் வந்து நின்றேன்.
உலகெல்லாம் வெறுமை
மனித விதை இல்லாமல்
மனசோரம் பாழ்படிந்து
ஒடிந்து முடிந்தது.

நீலக் குழல் விளக்கு
நிழல் மாளிகை மிதப்பு
சாலைப் பளிங்கு பரல்
சாளரங்கள் நீள் திரைகள்
பூட்டிவைத்த பெரும்சொத்து
போகவழி தெரிந்தபின்பு
சாவி இழந்துவிட்டுச்
சாகமுடியாமல் நின்றேன்.

ஆறாத காயமென்று
ஆற்றாமல் விட்டிருந்து
களிம்பு கிடைத்தபின்பு
காய்த்த இடம் புடைத்தது.

உலோகக்குழம்பென்று
உருக்கு அரக்கென்று
நிறம்பூசிக்கொள்ள வந்தேன்.
கொதிநிலைகள் எதிர்பார்த்து
பெண்வாசம் நெடியாகி
சாயத்தொட்டிக்குள்ளே
சாயமும் ஒட்டாமல்
சில்லிட்டுச்சிலிர்த்துவிட்டேன்.

தொலைந்தவனைப் பிடித்துவிட்டேன்.
காதலனைச்சந்தித்தேன்
காதலைத்தான் தொலைத்து விட்டேன்.

தணல் கொடிப்பூக்கள் [2001]தொகுப்பில்
மாலதி

====
Malathi

Series Navigation

மாலதி

மாலதி