கொஞ்சம் தள்ளிப்போனால்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன் நம்பி


சிட்டுக்குருவிகள் புணர்வதை
பார்த்திருக்கக்கூடும் நீங்கள்
அணில்கள் போகம் செய்வதும்
கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது
பூனைகள் கூடுவது
கொஞ்சம் பகிரங்கமானது
ஜீவராசிகள் சேர்வது
சாலவும் இயல்பானது
பின்னே எப்படி
நவீனகவிதையில் இல்லாமல் போயிற்று

கடைதிறப்பு படிக்காது
கவிதை எழுதுகிறார்கள்
ஆண்டாள் பாசுரம் அறியாது
பாலியல் பேசுகிறார்கள்
சங்கம் தெரியாது
இலக்கியம் செய்கிறார்கள்

என்னேடா என்னேடா
இலண்டனும் பாரிஸ்உமா
தமிழ்க்கலைஞன் லட்சியம்
மானஸரோவர் இருக்கிறது
தேக்கடி இருக்கிறது
மைசூர் காடுகள்
முக்கடல் சங்கமம்
இன்னும் நிறையவே

இவைதெரியாது
என்ன எழுதுவாய்

கண்டதும் கொஞ்சம்
கேட்டதும் குறைவு
கற்றதும் சிறிது
கவனிப்பதும் அபூர்வம்
பின்னே எப்படி
எழுத வரும்

ஸ்தலபுராணக்கதைகள் அளவுக்குக்கூட
சொல்லமுடியாது நவீன இலக்கியத்தை
சொலவடைகளின் கவித்துவத்துக்கு
கிட்டேவராது இன்றைய கவிதை
தென்னாட்டுப் பழங்கதைகளே தேவலை
நவீன சிறுகதைகளைக் காட்டிலும்
தினத்தந்தியில் காணும் தமிழ்வாழ்வுகூட
சமகால எழுத்தில் இல்லாமல் போனதேன்

கொஞ்சமாய் விளைந்து
கொட்டாரம் நிறையாது
கணிசமாய் இருப்பதுதான்
கருவூலம்
சித்தத்தைக் கடந்தவன்தான்
சித்தன்
எழுத்தை ஆள்பவனே
எழுத்தாளன்

சும்மாசும்மா பிலுக்காமல் சீரியதாய்
செய்யப் பாருங்கள் நண்பர்களே

****************************************************

Series Navigation

விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி