கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

சேஷாத்ரி ராஜகோபாலன்,


கபீர் ஒரு ‘முஸ்லிம்’ என்று எண்ணும் சிலருக்காக, செய்தி ஒன்றைக் கூற விரும்பு கிறேன்.

சந்த் ‘கபீர்’ எங்கும் எதிலும் ‘ஹரி’யைத்தான் கண்டார். ‘ஹரி’ எனும் சொல், ‘ஹர்’ என்ற வேர்ச் சொல்லிருந்து வந்தது. ‘ஹர்’, என்றால் “ஒவ்வொன்றிலும்” என்று பொருள். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றிலும் நிறைந்த பரம்பொருளான இறைவன் எங்கும் எதிலும், நீக்கமற நிறைந்துள்ளான் எனும் கருத்தை உள்ளடக்கிய ஒலிதான், பிரபஞ்ச ஒலியாக “ஓம்” என்பதாக விளைந்தது. பிரபஞ்ச ஒலி ‘ஓம்’ – அ, உ, ம்- என்ற மூன்று ஒலிக்களின் சேர்க்கையே. இரண்டாம் பகுதி இறுதியில்** பிரபஞ்ச ஒலி ‘ஓம்’ பற்றி, மேலும் ஒரு சிறு பயிற்சியும் உள்ளது.
“ஓம்” என்பது ஹிந்துக்கள் மாத்திரம் சொல்வதில்லை. இதை மற்ற மதங்களில் மாற்றிச் சொல்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதன் மூலம் ‘சனாதன தர்ம’த்திலிருந்து தான் உலகமே அறிய முடிந்தது என்பதை அடித்துக் கூற முடியும், ஏனெனில், ‘சனாதன தர்மம்’ ஆதி மூலமானது. அதை ‘ஆமென்’ என்று கிருஸ்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, அல்லது ஹிந்துக்களிடமிருந்து மாற்றி அமைக்க வேண்டுமென அந்நாளிலிருந்து மாற்றிச் சொல்கிறார்கள். இதையே, கிருஸ்தவர் களுக்குப் பின் வந்த இஸ்லாமியர், ‘ஆமீன்’ என கிருஸ்தவர்களிடமிருந்து கவர்ந்து, சொல்கிறார் கள். ஆனால் ஹந்து மதம் அநாதியானது; அதுவே ஆரம்பம் என்பதை மட்டும் எல்லோரும் புரிந்து கொண்டால் சரி. இதை ஏற்கும் மனப் பாக்குவம் ஏனைய மதத்தவர்களுக்கு உண்டா என்பதும் ஒரு கேள்விக்குறி!!

மற்றொன்று: கபீர் ஒரு முஸ்லிமாக இருந்து, இஸ்லாமை என்றாவது, எப்போதாவது மனதின் ஒரு கோடியிலாவதுத் தழுவி இருந்தால்கூட, அந்த ‘அல்லாஹ்’வை எங்காவது, எதிலாவது, எப்படியாவது, மறந்தாவது, நுழைத்திருக்கலாமல்லவா? எங்கும் எதிலும் ஹரியையே கண்டார். இதற்கும் ஒரு குறுக்குக் கருத்தைக் கூற முடியாது. இக்கட்டுரையை எழுதிய நானும் அனேக முஸ்லிம்கள் மத்தியில் அனேக, ஆம்! அனேக (30) ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியவன் தான். அவர்களை நன்கு அறிந்தவன் என்பதால், எனக்குகந்த, பல சோதனைகளுக்குட்பட்ட, என் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய, நல்வழியில் செல்கிறேன். ஆக, முஸ்லிம்களைப் பற்றியும் அவர்கள் புனித நூல்களைப் பற்றியும் என் கையின் மறுபுறமென நன்கறிவேன். (‘தக்கியா’ ‘ஜியாத்’ ஆகியவைகளைச் சேர்த்து தான்).
கபீர் இயற்றிய அனேக கவிதைகளில் ஒன்றிலாவது ‘அல்லாஹ்’ எனும் சப்தம் ஒலிக்கவில்லையே. “யா இல்லலாஹ் இர்ரஹமான் இர்ரஹீம்” அல்லது “அலிஃப், லாம், மீ;ம்”, அல்லது “தா, ஸீம், மீம்”. என்று கபீர் மனதில் இல்லாத ஒன்றை, இல்லாத இடந்தனில் தேடி ஏன் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்பதே என் வேண்டுகோள். இதிலும் அவர்களைப் போன்று, நான் உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. பிறகு உங்கள் விருப்பம்.

இது போன்ற இடங்களில் காளிதாஸர் கூறும் ஒழுங்கு முறை (சட்டம் = rule): – சாகுந்தல(சம்ஸ்கிருத) காவ்யத்தில்,
“”सतां हि सन्देह पदेषु वस्तुषु प्रमाणं अन्त:करणप्रवृत्तय:””
“”சதாம் ஹி சந்தேக பதேஷு வஸ்துஷு ப்ரமாணம் அந்தக்கரணப் பிரவ்ருத்தய:”” என்கிறார்.

“”ஆன்றோர்களின் மனதில் எழும் (தீர்க்க முடியாத) சந்தேகங்களுக்கு, இயல்பார்ந்ததும், செயலாற்றத்தூண்டத் தூண்டுகோலாக இருப்பது மனசாட்சி (எனும் தராசு) ஒன்றுதான். அது எது சொல்கிறதோ அதுவே பிரமாணம்””. என காளிதாஸர் கருத்து. இதற்கு மேல் என்னால் இன்னும் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
இனி,

இந்த இரண்டாவது பகுதியில், ஈரடிகள் (தோஹாக்கள்) தொடர்கின்றன

13. தோஹா (ஈரடி)
जब मैं था तब हरी नहीं, अब हरी है मैं नाहिं
सब अंधियारा मिटी गया, जब दीपक देख्या मांहिं
எழுத்துப் பெயர்ப்பு:
ஜப் மை தா தப் ஹரீ நஹீன், அப் ஹேரி ஹை மைன் நாஹி
சப் அந்தியாரா மிடீ கயா, ஜப் தீபக் தேக்யா மான்ஹி

தமிழாக்கம்:
எதுவரை, “நான்” “என்” என்று (அகந்தை என்னுள்) இருந்ததோ, “ஹரி” அங்கு வரவில்லை, எப்போது “ஹரி” அங்கு வந்துவிட்டாரோ, அப்போது, “நான்” “என்” என்று என்னுள் இருந்த அகந்தையைக் காண முடியவில்லை. ஆங்கே என்னுள் (மனதில்) எழில் ஞான விளக்கான சுடரொளியைக் கண்டு கொண்டேன்.

13. உட்கருத்து: “ஹரி” என்பது “ஹர்” ஒவ்வொன்றிலும் உள்ள இறையையே குறிக்கும். இது தான் ‘ஹரியின்’ “ஓம்” எனும் பிரஞ்ச ஒலி. எதுவரை தன் நல வேட்கை வெறி மனதில் உள்ளதோ, அதுவரை ‘பிரபஞ்ச ஒலியான ‘ஓம்’ எனும் ஒலியை கேட்க இயலாது. அதாவது இவ்வுலக வாழ்க்கைக்குரியவைகளில் (mundane) நம் கவனம் உள்ளதோ, அதுவரை நாம் எங்கும் நிறை இறையின், தனி இயல்புகளை நம் விழிப்புள்ள மன நிலையில் உணர முடியாது. எங்கு இருட்டுள்ளதோ, அங்கு ஒளி இல்லை எனப் பொருள், ஒளி வந்த பின் இருளுக்கங்கு என வேலை?

இதைத்தான் ‘குரு நானக்ஜி’ தன் “ஜபுஜி சாஹேப்’ 5 இல், இவ்வாறு கூறினார்.
குரன் ஏக் தேஹ் புஜ்ஹாய்
சப்னா ஜியான் கா ஏகோ தாதா
ஸோ மைன் விசர் நா ஜாயீ
என பாடினார்.

14. தோஹா (ஈரடி)
एक कहूं तो है नहिं, दो कहूं तो गारी
है जैसा तैसा रहे, कहे कबीर बिचारी
எழுத்துப்பெயர்ப்பு:
ஏக் கஹூன் தோ ஹை நஹீன், தோ கஹூன் தோ காரீ
ஹை ஜைஸா தைஸா ரஹே, கஹே கபீர் பிசாரீ

தமிழாக்கம்:
கபீரான நான் மிக ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன்: நான் அது ஒன்றெனச் சொன்னால், அது இல்லை (தவறாகிப் போகும்), நான் இரண்டு எனச் சொன்னாலும் அதுவும் நிந்தனையாகப் போகும், அது எப்போதும் எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும். என தன்னை ஒரு ‘பிசாரி’ என கபீர் சொல்லிக்கொள்கிறார். ‘பிசாரி என்றால், “ஐயோ, பாவம்” என சிலரைச் சொல்வோமல்லவா? அதுபோல. இதற்கு, பரிதாபமானவன், குற்றமொன்றில்லாதவன், யதார்த்தமானவன், நிரபராதி, எனவும் கொள்ளலாம்.

14. உட்கருத்து: இந்த ஈரடி அன்று முதலில் கேட்டவுடன் ‘இந்த ஈரடி என்ன சொல்ல வருகிறது என’ எனக்குத் தலைகால் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது, இது “ஜென்” (Zen) எனும் ஜப்பானிய பௌத்த மஹாயான தத்துஞானியின் அடிப்படைத் தத்துவமென அறிந்தேன். இந்த சொல் “ஜென்” (Zen) ஒரு சமஸ்கிருதச் சொல் “த்யானம்” என்பதிலிருந்து வந்தென ‘ஆசான்; சொன்னார். பௌத்தமதமும் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்றது தானே. இதன் “ஜென்” (Zen) என்பதன் பொருள், ஒரு பொருளின் மீது முழு சிந்தனையுடன் மூழ்கிவிடுவதென்பதாகும். இதைத்தான் சீனர்கள் ‘Chán’ எனச் சொல்கின்றனர்.
கபீர் நினைப்பது:
அது ‘ஒன்றென’ச் சொன்னால், அது இல்லை – எல்லாமே முடிவில் ஒன்றென்பது ‘அத்வைத’க்கருத்து; இரண்டென்றால், கடவுள் வேறு, தொண்டன்’ வேறு என்பது ’த்வைத’க் கருத்து. இரண்டு தத்துவங்களிலும் கபீருக்கு உடன்பாடில்லை. கடைசியாக அவர் சொல்ல விழைவது, கடவுளை ஒரு ‘எல்லை’க்குள், கடவுளை ஒரு எண்ணத்தில் சொல்வதென்பதும் பொருள் விளக்கிச் சொல்லவும் அவரால் ஏற்க முடியவில்லை. கடவுள் எந்த எண்ணத்திற்கும், சொல்லுக்கும் அப்பாற்பட்டவர் என்பது மட்டும் அவருக்குப் புரிகிறது. ஆக, கடவுளைப் பற்ற அவர் கண்ட வழி, அவர் தாளில் சரணடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அந்த கடவுளை ஒரு வரையறையில் இட்டு பொருள் கூற முடியாது; அதே நேரத்தில், கடவுளை அறிவது மாத்திரம் மிக முக்கியம் எனவும் அறிகிறார். (இறுதியில், வைணவக் கருத்துக்கு கபீருடைய எண்ணம், செல்தடமாக இருக்கலாமோ? ஒரு விகடத்திற்குச் சொன்னால், சாட்சிக்காரர்கள் – மதக் கூற்றுகள் கூறுவதைக் கேட்பதைக் (காலில் விழுவதைக்) காட்டிலும், அந்த கடவுள் காலிலே வீழ்ந்து கேட்பதே சரியான முறை என) இதற்குப் பின் தான், கடவுள் என்பது யார் என்ன என ‘தனக்குத்தானே’ கண்டுபிடித்துவிடுவது என முடிவு செய்து, தன்னுள்ளேயே தேடிக்கொண்டு அலைகிறார். ஆங்கே மிக முயற்சி செய்து, கடவுளை இறுதியில் பிடித்தும் விட்டார். கடவுள் தத்வம் என்னவென்று தனக்குத் தானே புரிந்துவிட்ட பின்னர், உலகில் சொல்லப்படும் மற்ற எந்த தத்துவமானாலும் அவைகள் எல்லாமே பெயரால் மனதில் கருத்தாய்வு செய்யத் தேவையில்லை என அவர் தீர்மானமான முடிவு. இக்கருத்தைத் தான் கபீர் அவர்கள் மிகத் தெளிவாக ஒரு முற்றுப்புள்ளியுடன் முடிக்கிறார்.
இங்கே ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும். இப்படி கடவுளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேராக ஆய்ந்து அறியும் இந்துமத தத்துவங்கள் எங்கே?, ‘நான் சொல்வதைக் கேள், இல்லையேல் நீ கொல்லப்பட வேண்டியவன்’ எனும் ஒரு விபரீத வழிபாடு இயக்கமெங்கே, (quixotic cult)? மிக உயர்ந்த பரந்த வெள்ளைப் பனி மலைகளுக்கும், ஓர் குறுகிய மடுவுக்குக் கீழிருக்கும் ஒரு சிறு பொந்துபோன்று, விபரீத வித்தியாசமாகத் தெரியவில்லை? ஒரு ஒப்புக்குக் கூட எடுத்துக்கொள்ளத் தகுதி படைத்ததா?

15. தோஹா (ஈரடி)

पहले अगन बिरहा की, पाछे प्रेम की प्यास
कहे कबीर तब जाणिये, नाम मिलन की आस

எழுத்துப்பெயர்ப்பு:
பஹலே அகன் பிரஹா கீ, பாச்சே ப்ரேம் கீ ப்யாஸ்
கஹே கபீர் தப் ஜாணீயே, நாம் மிலன் கீ ஆஸ்
தமிழாக்கம்:
முதன் முதல், தனிமையில் (அப்பரம் பொருளைப்) பிரிந்திருத்தலால் இருக்கும் மன உலைவு (விரகம்), பின்னர், அவரை நினைந்து தணிக்க முடியாத காதல் தாகம், இவைகளுக்கு முடிவாக கபீர் சொல்வதை அறிந்து கொள்ளுங்கள்: காதலானன பரம் பொருளிடம் கலந்து எப்போதுமே கூடவே இருப்பது தான். (முதலில் தாபம், அடுத்து தாகம், கடைசியில் ஏகம்)

15. உட்கருத்து: முதலில் இறையை அடையும் மன வேட்கை உண்டாக வேண்டும், அதனால் அவரை அடைய மனதில் விரக தாபம் ஏற்பட்டுவிடும். ஆதலால் அவரையடைய மனதால் விருப்பம் அதிகமாக ஏற்படும், பின் முழ்யற்சியால் அவரைச் சிக்கெனப் பற்றியவுடன் தான் மனம் ஒரு நிலையில் உண்டாகும். இதைத்தான் வைணவத்தில், ஸ்ரீமத் ராமானுஜர் (தன் கத்யத்ரயத்தில்) “ ஞான, தர்சன, பிரப்தி “ என சொல்கிறாரோ?! மிகச்சிறந்த ஆன்மீக தத்துவங்களில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா?
16. தோஹா: (ஈரடி)
जब तू आया जगत में, लोग हंसे तू रोए
ऎसी करनी न करी, पाछे हंसे सब कोए
எழுத்துப்பெயர்ப்பு:
ஜப் தூ ஆயா ஜகத் மேன், ஹஸே தூ ரோஏ
ஐஸீ கர்னீ ந கரீ, பாசே ஹஸே ஸப் கோஏ
தமிழாககம்:
உலகில் நீ பிறக்கும் போது, நீ அழுவதைப் பார்த்து, மக்கள், சிரித்து மகிழ்ந்தனர். நீ இறந்த பின்னர், அதே உலகம், உன்னைப்பற்றிப் பற்றி, (வேறு விதமாக) சிரிப்பாய்ச் சிரிக்கும்படி ஏதாவது (கெட்டது) செய்து விட்டுச் சென்று விடாதே!

16. உட்பொருள்: எந்தக் குழந்தை பிறந்தவுடன் அழும். அக்குழந்தை அழுகை சத்தத்தைக் கேட்ட மக்கள் சந்தோஷப் பட்டு சிரித்து மகிழ்வார்கள். கொண்டாடுவார். ஆனால் நீ இறந்த பின்னால், அதே போல, மக்கள் மீண்டும் உன்னைப்பற்றிச் சிரிக்க வைத்து, வேறு விதமாக ‘தொலைந்தான் பாவி” என நீ செய்த குளறுபடி காரியத்தைப் பார்த்து உலகம் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி செய்து விட்டுச் சென்று விடாதே!
பிரபல பஜனை, கஸல், பாடகர், ‘அனூப் ஜலோடா’ என்பவர் தன் “பஜன் கங்கா” எனும் பஜனைத் தொகுப்பில் (இரண்டாவது வரியை) சற்று மாற்றிப் பாடினார். இந்த சிறு மாற்றமைப்பும் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. மற்றொரு விதத்தில் இரண்டாவது அடியை சற்று மாற்றி அமைத்தால்,
ஐஸீ கர்னீ தூ கரீ, பாசே லோக் ரோஏ, தூ ஹஸே,
நீ நல்லவைகளைச் செய்து, மன நிம்மதியுடன் சிரித்துக்கொண்டே போய்ச் சேர், அதனால் நீ இறந்து விட்டதற்கு உலகம் அழட்டும், இப்பேற்பட்ட நல்லவரை உலகம் இழந்துவிட்டதே, இனி அவர் போல் நல்லவரைக் நாம் காணமுடியாதே! என நினைக்கும் படி, பல நல்ல காரியங்களைச் செய்து முடித்துச் செல்!!

17. தோஹா: (ஈரடி)
कवीरा किया कुछ न होते है, अनकिया सब होए
जो किया कुछ होते है, करता और कोए
எழுத்துப்பெயர்ப்பு:
கவீரா கியா குச் ந ஹோதே ஹை, அன்கியா ஸப் ஹோஎ
ஜோ கியா குச் ஹோதே ஹை, கர்தா ஔர் கோஎ

தமிழாக்கம்: கபீர் சொல்லிவிட்டதால் ஏதும் ஏற்பட்டு விடப் போவதில்லை. மேலாக நான் சொல்லாதவைகளே பெரும்பாலும், நடை பெறுகிறது. ஏதாவது அப்படி (ஒரு பேச்சுக்காக) நான் செய்ததுபோல நடந்தாலும், அது மற்றோருவனால் தான் செய்யப்பட்டது!

17. உட்கருத்து: எதுவும் கடவுளின் சித்தத்தால் தான் நடக்கிறைது. மனிதனுக்கு, வசதியும் குறைவு, திறமையும் ஒரு எல்லைக்குட்பட்டது. மனிதனால் மற்றொருவரைச் சாராமல் ஒன்றுமே செய்ய இயலாது. யாராவது ஒருவன் அவனே தானாகவே செய்ததாகச் சொன்னால், அது அகந்தையால் சொல்லப்பட்ட கூற்று. இப்படி சொல்பவைத் தவிர்த்து விடு. எல்லாமே ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவருடைய கணிசமான பங்களிப்பால் தான் எந்த காரியமும் நிறைவேறி இருக்க முடியும். உன்னால் மட்டுமே என் சம்பாத்தியத்தால தான் நடந்தது நடக்கிறது, எனச் சொன்னால் அது அபத்தம்.

உதாரணத்திற்கு, உணவை எடுத்துக்கொள்ளுங்கள். நாமெல்லோரும் உணவு உண்கிறோம். இவ்வுணவும் ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டி தான் உங்களுக்குக் கடைசியில்தான் உண்ணக் கிடைக்கிறது. நீங்களா உணவை நேராக வேண்டும்போது சிருஷ்டிக்க முடிந்தது? உழவன் விதை விதைக்கிறான், அதை கடைசிவரை பராமரித்து, பயிராக அறுவடை செய்கிறான். பின்னர் அது சந்தையில் விற்கப்படுகிறது. அதுவும் நேராக நமக்குக் கிடைக்காமல், அதை மொத்தவியாபாரி இயந்திரத்திற்கு அனுப்பிவைத்து, உண்ணத் தக்கவாறு, உமி அகற்றப்பட்டு, தானியமாக ஆக்கப்படுகிறது. பின், சில்லறை வியாபாரியால் கடையில் விற்கப்படுகிறது. அதை உங்க்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து போட, ஒரு வண்டியும், வண்டி ஓட்டியும் தேவைப்படுகிறது. உங்கள் மனைவி சமைத்துப் போடுகிறார். நீங்கள் மட்டும், உங்கள் வயிறு முட்ட சப்பிட்டு சாப்பிடுகிறீர்கள். அவ்வளவே தான். எவ்வவு கட்டம் தாண்டி உங்களுக்கு உணவு கிடைக்கிறது என சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணம் ‘எப்படி வந்தது என மறுபடியும் ஒரு சுற்று சுற்றிச் சொல்லத் தேவையில்லை. அது உங்களுக்கே தெரியும்!!

இந்த தோஹாவால், கபீர் நமக்குச் சொல்லும் செய்தி: ஒவ்வொருவரும் தனக்குள் பணிவுடைமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். ‘நான்’ ‘என்னால்’ தான் என்பதைக் கூறவே கூடாது. வீம்புரையையும், தற்பெருமையையும் விட்டுவிட வேண்டும் என நமக்கு நல்லுரை வழங்குகிறார்.

18. தோஹா: (ஈரடி)

कवीरा गर्व न कीजिये, कल गहे कर केस
ना जाने कित मारे है, क्या देश क्या परदेश
எழுத்துப்பெயர்ப்பு:
கவீரா கர்வ் ந கீஜியே, கால் கஹே கர் கேஸ்,
நா ஜானே கித் மாரே ஹை, க்யா தேஸ் க்யா பர்தேஸ்
தமிழாக்கம்:
கபீர் சொல்வது: கவீரா!! (தன்னை) ஏன் செருக்குடனும், வீண் ஜம்பத்துடன் இருக்கிறீர்கள்; இருளிலோ அல்லது வெளிச்சத்திலோ, சொந்த வீட்டினுள்ளோ, அல்லது வெளி நாட்டிலோ, அல்லது எந்த நேரத்தில், யார் எங்கு இறந்து விடப் போகிறார்கள் என உறுதியுடன் சொல்லமுடியும்? எனவே எப்போதுமே நல்லவனாக இருக்க முயற்சி செய்.

18. உட்கருத்து: கர்வம், இறுமாப்பு, வீண் தற்பெருமை, ஆகிய இவைகளெல்லாம், தன்நல வேட்கை வெறிக்குத் தொடர்புடையவை. இறப்பு யாரும் தவிர்க்க இயலாதது. மறுக்க முடியாதது, ஒன்றை நினைவில் கொள்ளவும். அறுதியிட்டுச் சொல்வதானால், அது சாவு ஒன்றுதான் என (தவிர்க்க முடியாதது) எனச்சொல்லலாம். இந்த உண்மையை வாஸ்தவத்தில் உணர்ந்தவர் எவரும் அடக்கமாகவும், கருணை உள்ளத்துடனும், எல்லோருக்கும் உதவும் இயல்புடையவராக இருப்பார்கள்;

இங்கே ஒரு சிறு நிகழ்ச்சியைக் கூறவிரும்புகிறேன். இந்து மரபு முறையாக வளர்க்கப்பட்ட ஒரு இளைஞனிடம், அவன் தாய், அந்த ஊருக்கு வந்துள்ள ஒரு (குருஜி) மகானைப்பற்றி சிறப்பாக, மிக மரியாதையுடன் பேசிக்கொண்டிருந்தார். அம்மகான் சொல்வதெல்லாம் பலிக்கிறது எனவும் கூடுதலாகச் சொல்லி வைத்தார். அவரிடம் தன் மகனை அத்தாய் அனுப்பிவைத்தார். அவனும் குருவை வணங்கி, பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.

வாலிபன்: ஐயா, ஏன். எதற்காக, என் மனம் ஒரு நிலையில் இல்லாமல், எப்போதுமே எனக்கே விரும்பத்தகாதவைகளில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. அனேக தடவை புறங்கூறும் பழக்கமும் உள்ளது. அதை நிறுத்த ஏதாவது ஒரு உபாயம் சொல்லுங்கள்.
குருஜி: உன் கேள்விக்கு நான் மிக அவசியமாக பதில் கூறவேனண்டும் தான். ஆனால், கூறி என்ன பிரயோசனம். நீதான் இன்னும் 24 மணி நேரம்தான் உயிர் வாழப் போகிறாய். ஆகையால், இதைப்பற்றி இனி நீ கவலைப் படாதே. ஓரிடத்தில் அமைதியுடன் உட்கார். (என முகத்தை வருத்தத்துடன் வைத்துக்கொண்டு சொன்னார்)
வாலிபன்: ஐயா, நான் வீடு செல்கிறேன்.
குருஜி: என்னப்பா, வரும் போது மிகத்துடிப்புடன் வந்தாய். இப்போதோ மிக சோர்ந்து போய் விட்டாய்.
வாலிபன்: தாங்கள் சொல்வதெல்லாம் பலிக்குமென என் அம்மாவும் ஏற்கனவே சொன்னார், ஆகையால் நீங்கள் சொன்னது போலவே பலிக்கத்தான் போகிறது. ஆகவே நான் வீடு சென்று என் உறவினர் எல்லோரையும் கடைசி முறையாக சந்தித்து, விடைபெறவும் வேண்டும். என்னை வீடு செல்ல விடுங்கள்.
குருஜியும் தொண தொண என வந்தவர்களுடன் வாலிபனைக் கூடவே வைத்துக்கொண்டு ஏதோதோ பேசிக் இருந்தாரே தவிர அவ்வாலிபனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை; அவன் பொறுமையை சோதித்துக்கொண்டு மற்றவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தார்.
வாலிபனும் வெட்டியாக உட்கார்ந்து உள்ளுக்குள் பரிதவித்துக் கொண்டிருந்தான். உடனே………………..
வாலிபனும் எதிர்பாராது திடீரென குருஜியிடம் சொல்லிக் கொள்ளாமல் ஒரே ஓட்டத்தில் வீடு சென்றான். இதை பார்த்து, குருஜி மனதுக்குள் முறுவலித்துக் கொண்டார். வீட்டிற்குப் போய் அன்னையிடம் நடந்ததைச் சொல்லி அழுதான். அவரும் தன் பங்கிற்கு ‘ஓ’ எனக் கதறி அழுது ஊரைக் கூட்டி நடந்ததை விவரித்தாள். உறவினர் ஒவ்வொருவராக வந்து அவ்வாலிபன் உயிருடன் இருக்கும் போதே துக்கம் விசாரித்து அவனைக் கட்டி அழுது கொண்டிருந்தனர். இப்படியே நேரம் கழிந்து கொண்டிருந்தது. இன்னும் ஒருமணி நேரம் தான் மிச்சமிருந்து. வாலிபனும் கண்ணை மூடி தரையில் வழக்கம் போல, தெற்கே தலை வைத்து, சாவுக்காகக் காத்திருந்தான்.

அப்போது பார்த்து குருஜியும் அங்குவந்து சேர்ந்தார். அவனை கண் விழிக்கச்செய்து, மிக துயரத்துடன் இன்னும் ஒரு மணி நேரம் தான் பாக்கி உள்ளது. எழுந்திரு. ஏதாவது நல்ல விஷயமான பகவானைப் பற்றியும் பேசலாமே என யோசனை சொன்னார். வாலிபனும் எழுந்து உட்கார்ந்தான். (பிடிக்காமல் தான்!!!)

குருஜி: (சிரித்துக்கொண்டு) உனக்குப் பிடிக்காவிட்டாலும் உன்னிடம் பேசுவதென தீர்மானமாக இருக்கிறேன். கடைசியாக என் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல். ஆமாம், நீ இந்த 23 மணி நேரத்தில் ஏதாவது எவருக்காவது கெட்டதை நினைத்தாயா? அல்லது யாரையாவது திட்டினாயா? யாரிடமாவது எதையாவது திருடினாயா? நீ என்னிடம் முன் கூறியதுபோல கெட்ட எண்ணத்துடன் ஏதாவது நினைத்தாயா?

வாலிபனும் பதிலளித்தான்: என்ன குருஜி, இப்போதுகூட என்னிடம் இம்மாதிரி கேள்விகளைக் கேட்கிறீர்களே?. “யாரை எப்படி நான் திட்ட முடியும்? கெட்ட எண்ணத்துடன் யாரை திட்டவோ, எப்படி புறஞ்சொல்ல முடியும்? இந்நேரம் வரை கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டி ருந்தேன். மேலும் சாவை எதிர் நோக்கியே காத்திருக்கிறேன். மேலும் பயனற்றவைகளைப் பற்றி எண்ணும் மன நிலையில் நான் இல்லவே இல்லை.

குருஜி: (அப்போது மிக சாவதானமாக) உண்மையாகச் சொன்னால், “எனக்கே யார் எப்போது இறந்து போவார்கள் என்பது பற்றி சுத்தமாக ஒன்றுமே தெரியாது. நான் கடவுளல்ல. இப்போது உனக்கும் புரிந்திருக்குமென நினைக்கிறேன். இந்த 24 மணி நேரத்திற்குள் சாவின் முன்னுணர்வு வந்தவுடன் மனிதன் எவ்வாறு நல்லவனாக மாறிவிட்டான் என உனக்கு நிரூபித்து, சுட்டிக்காட்டத் தான் இதுவரை சும்மா இருந்தேன். உன்னை மிகவும் துன்பப்படுத்திவிட்டேன். நீ சாவைப்பற்றி இப்போது 24 மணி நேரத்தில் அறிந்தாய். நானோ சாவைப்பற்றி 24 வருடங்ககளாக அறிந்து இருக்கிறேன். இனியாவது நல்லவனாக இருக்க முயற்சி செய்” என, சொல்லிவிட்டு விருட்டென எழுந்து சென்றுவிட்டார்.
வாலிபன் இப்போது தான் குருஜியின் நல்ல உள்ளத்தையும், ஒரு சீடனிடம் உள்ள அக்கறையையும், தன்னையே உணரவைத்த திட்டத்தையும் அறிந்து மனம் கசிந்து, அவர் சென்ற திசையை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து விழுந்து வணங்கினான். அவ்வாலிபனும் இனி, நல்லவனாக வாழத் தீர்மானமும் செய்துகொண்டான்.

19. தோஹா: (ஈரடி)
ज्यों नैनों में पुतली, त्यों मालिक घट माहिं
मूरख लोग न जान्हिं, बहिर ढूढन् जाहिं
எழுத்துப்பெயர்ப்பு:
ஜ்யோன் நைனோ மே புத்லீ, த்யோன் மாலிக் காட் மாஹீன்
மூரக் லோக் ந ஜான்ஹீன், பாஹர் டூண்டன் ஜாஹீன்

தமிழாக்கம்
கண்ணின் கருவிழி மையத்தில் உள்ளே அமைந்து வெளிச்சத்தை புகவிடும் வட்டவடிவுள்ள பாவைக்குள் (மணிக்குள்) இறைவன் (ஆங்கேதான்) உள்ளான். இதை அறியாமல் எங்கெங்கோ இல்லாத இடந்தனில், மூடர்கள், வெளியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!!

19. உட்கருத்து: இந்த ஈரடியில், கபீர் பொருத்தமான உவமையணி உதவியுடன் (உபமான உபமேயத்தில்) மிக அழகாக, கடவுள் ஒவ்வொருவருள்ளும் உள்ளார் என மெய்ப்பித்துக் காட்டுகிறார். மதிநுட்பமுள்ளோர், இறைவனை உள்ளாய்வு செய்து, தங்கள் அகக்காட்சியில் கண்டு களிக்கிறார்கள்.
கடவுள் எல்லாரையும் போல கண்ணால் காணக் கிடைப்பதில்லை. அவரை ஒரு வரையறைக்குள் இட்டுவிடவும் இயலாது. கடவுளும் எந்த மாறுபாடும் இல்லாதவர். ஆனால், நிரந்தரமானவர்.
ஆனால் மூர்க்கர்கள் அவசியமில்லாத இடங்களில் தேடுகிறார்கள். கண்ணால் காண்பதையெல்லாம், அளக்க முடியும், எண்ணிக்கையில் சொல்லவும் முடியும், அவைகள் தானே இயங்கும், மாறும் இயல்புடையது. ஆனால் கடவுள் மாறும் இயல்பில்லாதவர். அவர் நிரந்தரமானவர்.
பூவைக்காணலாம், எண்ணலாம், திராசில் நிறுத்து அதன் எடையையும் அளந்து கூறலாம். சுருக்கிச் சொன்னல், அழியும் வஸ்துக்களைக் காணலாம், எண்ணிக்கையில் கூறலாம். ஆனால், அதன் வாசனையையும் இவ்வாறே கண்டு, நிறுத்து, அளந்து கூற இயலுமா? வாசனை என்பதே ஒரு இன்பம் தரும், தனி உணர்வு தான்.
இனிப்பை விளக்கிக் கூறு என ஒருவர் ஆணையிட்டால், உங்களால், எப்படி பதில் கூற முடியும்? இனிப்பு இனிப்பாயிருந்தது, நன்றாக இருந்தது, ஸ்வீட்டாக இருந்தது, நாக்கிற்கு இன்பமாக இருந்தது என தான் சொல்லமுடியும். எத்தனை லட்டு சாப்பிட்டாய் என்றால், இரண்டு, நான்கு என சொல்லமுடியும். அவ்வளவே!!
ஹிந்து தர்மப்படி, அஃதேபோல, ஆத்மா என்பதும், கடவுளின் பிரதிநிதித்வமாக–உணர்வு, அறிவு, உயித்துடிப்பு என இவைகள் எல்லாவற்றிலும் ஆண்டவன் நிறைந்திருப்பதை இவ்வழியில் தான் நமக்குப் புலப்படுத்திக் கொள்ள முடியும். ஸ்ரீ ரமணரும் தன் நிலை மறந்து அவ்வாறே அந்நிலையில் நாட்கணக்கில், ஏன் மாதக் கணக்கில் உண்ண உணவின்றி, காற்றையே உண்டு, தன்னுணர்வு இன்றி கிடந்தார். அப்போது அவர் இறையுடன் இருந்து இறை எனும் எண்ண உணர்வில், உண்டு களித்து, மோன மொழியில் மனதாரப் பேசிக் கொண்டிருந்தார் எனலாம். ஆகையால்தான் நாம் இறைவனைக் கண்ணால் காண இயலாது, நேரிடையாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும் முடியாது, அவர் எல்லையற்றவர், சுருக்கமாகக் கூறவும் முடியாதவர். ஆனால் விவரிக்கவும் இயலாதவர். அதனால் தான் அவர் கடவுள். இறைவன் எனக் கூறப்படுகிறார். இறையோ அழியாதவர், அழிக்க முடியாதவர். காண முடியாதவர். அவர் இருப்பதை உணர மட்டுமே முடியும்.

20. தோஹா (ஈரடி)
माला तो में फिरे, जीभ फिरे मुख माहिं
मनुआ तो चहुं दिश फिरे, यह तो सिमिरन नाहीं
எழுத்துப்பெயர்ப்பு:
மாலா தோ மைன் பிஃரே, ஜீப் பிஃரே மாஹீன்
மனுஆ தோ சாஹூன் திஸ் பிஃரே, யஹ் தோ சிமிரன் நாஹீன்
தமிழக்கம்:
கையிலுள்ள ஜபமாலையோ, முறைப்படி தன்னியக்கமாக சுழற்றப்படுகிறது; நாக்கோ உதடைசுழற்றி சுழற்றி மந்திரங்களை உச்சரிப்பதாகச் சொல்கிறார்; ஆனால், மனதோ எங்கெங்கோ மனத்தடுமாற்றமுறுகிறது [[என மட்டும் நன்றாகத்(எனக்குத்) தெரிகிறது]]; இதற்குத்தான் ‘இறையைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை’ எனச் சொல்வதா?
20. உட்கருத்து: இன்றிருக்கும் பல ஆன்மீக வாதிகளைப் போல அன்றும் சிலர் இருந்ததாகத் தெரிகிறது. இதைப்போன்ற போலி ஆன்மீக வாதிகள் மதம் எனும் தோல் போர்த்திக்கொண்டு நல்ல போதனைகளைக் கூறாமல், மற்ற ஏதேதோ சொல்லி மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பொருள் ஈட்டுவதைத்தான் கபீர் கண்டிக்கிறார். எப்போதுமே எந்த நெருக்கடி நேரத்திலும் மன நிறைவுடன் அமைதியை எண்திசையில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டியவர்கள் சிறிதாகக் கூட சினமூட்டி விடும் தூண்டுதல் செயலால், தன் நிலை மறந்து சற்றும் தயங்காது, அதே தானேதான் சற்று முன்பு, ஜப மாலையை உருட்டி, உதட்டை சுழற்றி மந்திரங்களை உச்சரித்தவர், உடனுக்குடன் சூளுரைப்பதும், சபிப்பதுமாகக் காட்சியளிப்பார். ஏனெனில் இவர் மனம் இறை எண்ணத்திலிருந்து வழுவி, வேறெங்கெங்கோ மேய்ந்துத் திரிந்து கொண்டிருக்கிறது. இம்மாதிரி உள்ள நெஞ்சிற்கரவுடையோரை (Hypocrites) வெறுத்து ஒதுக்க வேண்டும். எவர் மனம் அமைதியைக் காக்கவில்லையோ, ஆனால், சடங்குகளில் மட்டுமே உளம் உள்ளதோ, அவர்களுடன் தொடர்பு, அர்த்தமற்றது, ஆக்க வளமில்லாதது.
மனதை ஒரு சீரமைப்பில் கட்டுப்படுத்தி, இறையுடன் மனதால் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைதான் உண்மையான தியானமெனப்படும்.

21. தோஹா
माला फेरत जुग भया, मिटा न मनका फेर
कर का मनका छोड दे, मन का मनका फेर्
எழுத்துப்பெயர்ப்பு:
மாலா பேஃர்தே ஜுக் பயா, மிடா ந மன்கா பேர்.
கர் கா மன்கா சோட் தே, மன் கா மங்கா பேர்.
தமிழாக்கம்:
அனேக சகாப்தங்களாக (eons) ஜப மாலையை உருட்டியது போல (போதும்), இன்னும் மனதை உருட்டாது, இருக்க வேண்டாம். கையால், ஜபமாலையை உருட்டுவதை விட்டு மனதிலுள்ள (மணி) மாலையை உருட்டப் பழகிக் கொள்ளுங்கள்.
21. உட்கருத்து: இந்த ஈரடி 18வது தோஹாவைத் தொடர்ந்தது எனக் கூறலாம். இந்த மன உருட்டலால், மனம் ஒரு நிலையில் நின்று, மன விழிப்புள்ள நிலையில், அமைதி, சாந்தம், மனத் தெளிவு ஆகியவைகள் ஏற்படும். இதனால், எல்லாப் பிரபஞ்ச இறையுடன் ஒன்றெனக் கலக்க முடியும். அதுவே தியானத்தின் நோக்கமாகும்.

இனி, ***உங்களுக்கு ஒரு சிறு தியானப் பயிற்சி:
உங்கள் கண்களை மூடிக்கொண்டு, அகக்கண்ணால், ஓர் சுத்தமான வெண் திரையை பரப்பிக்கொள்ளுங்கள். அதில் ஒரு அழுக்கும் இருக்க வேண்டியதில்லை. வெள்ளை வெளீர் என திரையை சுத்தமாக்க முயலுங்கள். ஆரம்பத்தில், அம்மன வெள்ளைத்திரையில் கரைகள் சற்று திட்டு, திட்டாகத் தென்படும், அதையும் நீக்க முயற்சி எடுத்துக்கொண்டால் அது தன்னால் போய்விடும். இம்மாதிரி நிலையில் தான், அவ்வெள்ளைத் திரையினால், உங்களை ஆகாயத்தின் மேல் உயர்த்திக் கொண்டு, அங்கு சென்று பாருங்கள். திரை நீங்கிவிட்டால், கண்விழித்து மீண்டும் திரையை உருவாக்குங்கள், அப்போது முழு திரை வந்ததும் உங்களுக்குள் அ, உ, ம் என மெதுவாகச்சொல்லி, பின் சேர்த்து, “ஓம்” என்று சில தடவை சொல்லிப்பாருங்கள். சிறிது நேரத்தில், அவ்வமயம் நீங்கள் நீங்களாக இல்லாததை உணர முயன்று பாருங்கள். அப்போது ‘ஓம்’ ஒலி எங்கும் ஒரு பிரபஞ்ச ஒலி ஒலிக்கும். எனக்கு ஒலிக்கிறதைய்யா!! / எனக்கு ஒலிக்கிறதம்மா!! இனி நீங்கள் தான் சொல்லவேண்டும். இதை உலகில், பல்வேறு இடங்களில் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதுவும் ஒருவித ‘தியான’ப் பயிற்சிதான். முயன்று பார்க்கலாம்.

இன்னும் அனேக தோஹாக்கள் (ஈரடிகள்) உண்டு.

(இனி மூன்றாவது பகுதியில், மறை பொருளைப்பற்றிய ரகசியமான ஆழ்ந்த உட்பொருளுள்ள கபீர் இயற்றிய கவிதைகளைப் (mystic poems) பார்க்கலாம்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

சேஷாத்ரி ராஜகோபாலன்


‘கபீர் தாஸர்’ கவிதைககளை அனுபவிப்பது என்பதே பேரின்பம் தரும் திருவருட்பேறு.

சுமார், 35 வருடங்களுக்கு முன், நான் வேலை செய்துக் கொண்டு வாழ்ந்த வட இந்தியாவில், என் நண்பர் வீட்டிற்கு ஒரு பெரியவர் (குருஜி = ஆசான் ) வந்திருந்தார். அவர் எங்களுக்கு சாயங்காலத்தில், உள்ளூர் பள்ளி பொது மண்டபத்தில், யோகாசன வகுப்பு நடத்தும் போது, (ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் என மொழிகளில் விளக்கமளித்து) கபீர் தாஸரின் கவிதைகளை நடு நடுவே சொல்லி எங்களை வியப்பில் ஆழ்த்துவது வழக்கம். அப்போது, ‘கபீர் தாஸரின்’ கவிதைகளை தனி வகுப்பாக நடத்த வேண்டுமென நாங்கள் அவரிடம், வேண்டிக் கொண்டோம். அதற்கு அவரும் இசைந்து பதினைந்து நாட்களுக்கு தனி வகுப்பாக பாடம் நடத்தி, எங்களை ஆன்மீகத்தில் மூழ்கடித்தார். அன்று ‘ஆசான்’ நிகழ்த்திய வகுப்பில், கேட்ட அதி அற்புத உரை விளகங்களை ஒரு சிறு கைக்குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். அதிலிருந்து தொகுத்த இக்கட்டுரையை இங்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொன்றிற்கும் ஒரு ‘வேளை’ வர வேண்டுமென சொல்வதுண்டு. ஆனால், இப்போது தான் அதன் உண்மையை அறிகிறேன். இக்குறிப்பிலுள்ளதையும் தமிழில் எழுத வேண்டுமென ஆர்வம் இருந்த போதிலும் எந்நாள் வரை ஏன் எனக்குத் தோன்றவில்லை. அதுவும் 35 வருடங்களுக்குப்பின், ஏன் என் மனதில் இப்போது, உதிக்க வேண்டும்!!? இதுவும் ஆண்டவனிட்ட பணியா!
மனதை கவர்ந்த பன்னிரண்டு ‘தோஹா’க்களை’ (ஈரடிகளை) மட்டுமே இங்கு கொடுத்திருக்கிறேன். இன்னும் கொடுக்க உண்டு. முடிந்தால் கபீர்தாஸர் இயற்றிய இன்னும் சில (ஈரடிகளையும்) தோஹா’க்களோடு, மேலும் மனித அறிவுக்கெட்டாத பரம் பொருளைப் பற்றி (mystic poems) சிந்தனையைத் தூண்டும் ஆழ்ந்த உட்பொருளுள்ள கவிதைகளையும் இனி வரும் அடுத்த பகுதியில் அளிக்கலாம் என உத்தேசம். இனி ‘அவன்’ செயல்!

கபீர் தாஸர், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் 1440 இல் ‘ப்ரதாப் காம்’ (உத்திரப் பிரதேஷ்) எனும் இடத்தில் அவதரித்து 78 வயது (1518) வரை வாழ்ந்தார். அவர் இயற்றிய கவிதைகள் யாவுமே, அவர் வாழ்ந்த இடத்தில் அன்று கிராமப் பாங்குடன் பேச்சு வழக்கில் இருந்த மொழியில், இயற்றப் பட்டது (அதாவது ஹிந்தி, போஜ்புரி, ப்ரஜ் பாஷா, அவதி, ராஜஸ்தானி ஆகிய மொழிகளின் கலவை). அவர் காலத்தில் தான் வட தேசத்தில் பக்தி இயக்கம் தனிச்சிறப்பு பெற்றது. அவர் முறையாகக் கல்வி பயின்றவரில்லை. அவர் வாழ் நாள் பூராவும் நெசவுத் தொழில் நடத்தி, அவ்வப்போது சந்தைக்குச் சென்று விற்று அதில் வரும் வருமானத்தால் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், அன்று அவர் எழுதிய கவிதைகளுக்காக, இன்று உலகக் கவிஞர் வரிசையில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றவராவார். வட இந்தியாவில் அவர் கவிதைகளை மேற்கோளாகக் காட்டாத ஆன்மீகப் பிரசங்கங்கள் இல்லை எனக் கூட அறுதியிட்டுச்சொல்லலாம். சீக்கியர் மிகப் புனிதமாகப் போற்றும் “குரு க்ரந்த ஸாகிப்”இல், 500 இடங்களுக்கு மேல், கபீரின் கவிதைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. ஆகையால் தான், சீக்கியர்கள், ‘குரு கிரந்த ஸாகிப்’க்கு அளிக்கும் அதே மரியாதையையும், ஏற்றத்தையும், கபீர் தாஸரின் கவிதைகளுக்களிக் கின்றனர்.

கபீர் அநேக ஆன்மீகத் தத்துவக் கவிதைகளை எழுதி வைத்தார். அவர் காட்டிய ஆன்மீகம் இன்றும் நடைமுறைக்கேற்றவாறு, தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், எதையும் நேருக்கு நேராக, எந்த ஒளிவு மறைவின்றி, எல்லா மனித இனத்திற்கும் ஏற்ற அரிய பெரிய தத்துவங்களையும் எவரும் சற்றும் எதிர்பார்க்க முடியாதவாறு, கிராமப் பேச்சு வாக்கில், மிகச் சின்னஞ்சிறு வாக்கியப் பாணியில் சொல்வது அவர் வழக்கம். அன்று அவர் கவிதைகளில் எனக்கு ஏற்பட்ட தனிக் காதல் இன்றும் குறையாது உள்ளது. இவர் கவிதைகள் மிகத் தெளிவாக, சாதாரணமாக, அனுபவ பூர்வமாக இருப்பினும், இவைகளை மற்ற மொழிகளில் மாற்றி அமைப்பதென்பதும் அவ்வளவு சுலபமல்ல. அன்று எனக்கு கபீர் தாஸரை அறிமுகப்படுத்திய ‘ஆசானை’ மனதால் வணங்கி, எங்களுக்கு வகுப்பில் உரைத்த அதே பாணியில் ஆரம்பிக்கிறேன்.

கபீர் தாஸரிடம், ஒரு சமயத்தில், ஒருவர் “கடவுள் என்பவர் யார்? எனக் கேட்டபோது அவர் அளித்த பதில், “நீ சுவாசிக்கும் காற்றுக்குள் இருக்கும் காற்றாக இருப்பவர்தான் கடவுள்” என்றார். அடுத்து அவர் எங்கிருக்கிறார் எனும் போது, “அவர் வெளி இடங்களில் எங்கும் இல்லை, போய்த் தேடவேண்டிய அவசியமும் இல்லை, அவர் உன்னுள்ளே தான் உறைந்துள்ளார். அவரைத் தேடித் தெரிந்து கொள். நன்கு முயற்சி செய்தால் அவர் உனக்கு அகப்படுவார். இது உறுதி” என்றார்.
கபீர் தாஸரின் கவிதைகளை, மூல ‘இந்தி முதலிய-கலவை’ மொழியில் அப்படியே கொடுத்து, அதை எழுத்துப் பெயர்ப்பு செய்து, அதன் தமிழாக்க உரையோடு, உட்பொருளையும் அளிக்க முயற்சி செய்திருக் கிறேன்.

1. “தோஹா” (ஈரடி)
चलति चक्की देखकर, दिया कबीरा रोए
दुई पाटन के बीच में साबुत बचा न कोए
எழுத்துப் பொயர்ப்பு:
சல்தீ சக்கீ தேக் கர் தியா கபீரா ரோயே
துயீ பாடன் கே பீச் மே சாபுத் பசா ந கோயீ

தமிழாக்கம்:
இரு மாவரைக்கும் கற்களின் நடுவில் அகப்பட்ட தானியத்தின் மூல உருவத்தைக் காணாது ஏன் கண் கலங்குகிறாய் கபீர்! இரு கற்களின் நடுவில் அகப்பட்ட அனைத்து தானியங்களின் மூல உருவம் தானியம் என ஒன்று ஆரம்பத்தில் இருந்ததென எவ்வித அடையாளமின்றி, இறுதியில் மாவாகி விடுமே!
இவ்விரு வரிகளில் சொல்லியவாறு: இக்கற்களில் கீழ்க்கல், இடம்பெயராதது, ஆடாதது அசங்காதது, ஸ்திரமாக அடிக்கல்லாக (Fixed) உள்ளது. இன்னொன்று மேல் கல், இது கீழ்கல்லின் மேல் சுற்றிச் சுற்றி (at variable speed) வரும். இக்கற்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பிடிகளின் (கீழ்க்கலில், அக்கல்லை அசைக்க முடியாதவாறு நடுவிலும், மேல்கல்லின் ஓரத்தில் கல்லை சுற்றிச் சுற்றி ஆட்ட உதவும் சற்று நீண்டபிடி) உதவியால், மேலுள்ள கல் கீழ்க்கல்லின் மேல், சுற்றிச் சுற்றி வரும். மேல் கல்லின் நடுவில் உள்ள சிறு குழியில் தானியத்தை இட்டவுடன் அது கீழ்க்கல்லில் பரவி விடுகிறது. அப்படி அசையாக் கல்லின் நடுவில் அகப்பட்ட தானியம், மேல் கல் சுற்றிச் சுற்றி அசைவதால் மாவாகிறது. இந்த ஆட்டுக்கல்லை கிராமங்களில் மக்கள் இன்றும் உபயோகிக்கிறார்கள். இதன் உருவக அணியை – உட்பொருளை இவ்வாறு நாம் விளக்கிக் கொள்ள வேண்டும்.

1. இதன் உட்பொருள்: கீழ்க்கல் நாம் வசிக்கும் பூமி, மேற்கல், ஆகாயம்; ஆகாயத்திற்கும் பூமிக்கும் நடுவில் அகப்பட்ட கடவுளால் உண்டாக்கப்பட்டவை-தானியங்களான — அதாவது, ஆண்-பெண், பகல்-இரவு, பிறப்பு-இறப்பு; மகிழ்ச்சி-துயரம்; ஆகிய இவைகள் எப்போதுமே நிலைமாற்றங்களுடையது, சலனத்துக்குட்பட்டது. இந்த கிடுக்குப்பிடி நடுவில் அகப்பட்ட எல்லாமே மூல உரு அழியக் கண்கூடாகக் காண்கிறோம். உலகில் ஆகாயத்திற்கும், பூமிக்கும் நடுவில் அகப்படதனைத்தும் அநித்தியமே! ஒவ்வொன்றும், விதிக்கப்பட்ட நாளில் அழியும் பொருட்களே! இவைகளை நேரில் பார்த்துத் தெரிந்தும் அழுவதால் என்ன பயன்? ஆக அனைத்துமே அநித்தியம், நிலையற்றவை, அழியும் பொருட்களே; கடவுள் ஒன்றே நித்தியம், அழியாதது, நிரந்தரம்!!

2. “தோஹா” (ஈரடி)
बुरा जो देखण मैं चला, बुरा न मिलया कोई
जो मन खोजा आपणा, तो मुजसे बुरा न कोई
எழுத்துப் பொயர்ப்பு:
புரா ஜோ தேகண் மை சலா, புரா ந மில்யா கோயீ
ஜோ மன் கோஜா ஆப்ணா, தோ முஜ்ஸே புரா ந கோயீ
தமிழாக்கம்:
நான் உலகில் மிகக் கொடிய கயவனைத் தேடித் தேடி அலைந்தேன். அப்படி எந்த கொடியவனையும் நான் காண முடியவில்லை; முடிவில் என்னையே நன்றாக அலசித் தேடிக்கொண்டேன், அப்போது அக் கொடிய கயவன் அகப்பட்டான், அது வேறொருவனுமில்லை. அக் கொடியவன் நானே தான் என கண்டுகொண்டேன்.

2. இதன் உட்பொருள்: இந்த ஈரடி, ஒருவரின் புலனியலால் உணரவல்லவைகளையும், மனப்பாங்குகளையும் பற்றிச் சொல்கிறது. பொதுவாகவே நாம், எப்போதுமே ஏதாவதொரு காரணத்திற்காக பிறர் மீது, அல்லது மற்றவை மீது, குற்றங்குறைகளைச் சாட்டுவதை ஒரு வழக்க மாக்கி வருகிறோம். இதற்குக் காரணம் ”நான்” எனும் தன் முனைப்பான “தன்நல வேட்கை நெறியே”. ‘கபீர்’ சொல்வதெல்லாம்: மற்றவர்கள் மீது பழிதூற்றுவதை விட்டு, நம்மை நாமே, ஆழ்ந்து உள்நோக்கிணால், அப்போது நம் தவறுகளை நாமே உணர்ந்து தெளிவடைய முடியும். இதற்கு “ஆசான்’ கணிதத்தில் “வெக்டார் அனாலிசிஸ்” ‘கூறுபடுத்தி ஆய்தல்’ (vector analysis) முறையில் விளக்கியது, இன்றும் இத்த்னை ஆண்டுகளுக்குப் பிறகும், என் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது. இந்த ‘கூறுபடுத்தி ஆய்தல்’ என்பது, குற்றங்குறையைப் பற்றியது. இதற்காக, உங்கள் வலது கையை நீட்டிக்கொள்ளவும். அதில் ஆட்காட்டி விரலை மட்டும் (முன்பாக) நேராக எதிரில் உள்ளவரிடம் காட்டுவது போலக் காட்டி, அடுத்த, நடுவிரல்-மோதிர விரல்-சுண்டுவிரல் ஆகிய மூன்றையும் உங்களை நோக்கியே (உங்கள் புறமாகத்) திருப்பிக் காட்டிக்கொள்ளவும். கட்டைவிரலை ஆகாயத்தை நோக்கிக் காட்டிக் கொள்ளவும். இதன் உட்பொருள், நாம் புரிந்த குற்றங் குறைகளுக்கு, மற்றவர்தான் பொறுப்பு என நாம் கூறினால், அதில், 20% பிறர் மீது குற்றமென (போனால் போகிறது என ஒரு வாதத்திற்கு) எடுத்துக் கொண்டாலும், ஆனால் பெரும்பான்மையாக 60% தவறுகள் நம்முடையதுதான், மீதி 20% நம்மையும் போய் வேலை மெனக்கட்டு மனிதப் பிறவியாகப் படைத்தாரே அந்த கடவுளிடம் விட்டு விடுங்கள். (ஆக நம் போன்ற குற்றவாளிக்கு, குற்றம் புரியத் தூண்டிய (ABETTOR) கடவுளும் ஒரு குற்றவாளியே!) எனக் கூறி எங்களை சிரிக்கவைத்து அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்தார்.

3. தோஹா (ஈரடி)
दुख में सिमिरन सब करें, सुख में करें न कोई
जो सुख में सिमिरन करें, तो दुख काहे को होई
எழுத்துப் பொயர்ப்பு:
துக் மே சிமிரன் சப் கரேன், சுக் மே கரேன் ந கோயீ
ஜோ சுக் மே சிமிரன் கரேன், தோ துக் காஹே கோ ஹோயீ
தமிழாக்கம்:
பொறுக்க இயலாத மன வேதனையின் போது நாமெல்லோரும் இறையை நாடித் தான் கடைசிப் போக்கிடமாக நினைந்து, மனம் கசிந்து அழுது தொழுகிறோம், சந்தோஷமாக இருக்கும் போது ஆண்டவனை நாம் நினைப்பதில்லை. எவரொருவர், சந்தோஷமாக இருக்கும் தருவாயிலும் கூட, ஆண்டவனை மனதாரத் தொழுதால், இடரோ, கஷ்டமோ, மனத் துயரோ ஏன் எதற்காக எப்படி ஏற்பட்டு விட முடியும்?

3. உட்பொருள்: உங்கள் முன் ஒருவர் தன் கையை திடீரென ஆட்டி அசைத்தால், கண் இமைகளை சிமிட்டுகிறோம். அஃதே போல, நாம் எதிர்பாராது இருக்கும் போது ஏதாவது நடந்தால், “ அட! கடவுளே!!” என விளிக்கிறோம். இது தான் மனிதனின் இயல்பு. நமக்குத் துன்பம் நேர்கையில், உதவியற்ற நிலையில், வானத்தை நோக்கி, நம் மௌன மொழியில் மனதார கடவுளிடம் தொடர்பு கொள்வதாக அவரிடமே அறிவித்து எப்படியாவது காத்தருள வேண்டிக் கொள்கிறோம். நாமே கஷ்டமில்லாது சுகமாக இருக்கும்போது கடவுளை சவுகரியமாக மறந்து விடுகிறோம். கபீர், இந்த ஈரடி மூலம் நமக்குக் கொடுக்கும் வாக்குறுதி: எப்போதுமே, நல்லதிலும் கெடுதலிலும், இந்நேரமானாலும், ஒரே சீராக இறையை நோக்கித் தொழுதால், எப்போதுமே, மன நிம்மதியுடன் வாழலாம்.

4. தோஹா: (ஈரடி)
जैसे तिल में तेल, जैसे चकमक में आग
तेरा साई तुजमें है, तू जाग सके तो जाग

எழுத்துப் பொயர்ப்பு:
ஜைசே தில் மே தேல், ஜைசே சக்மக் மே ஆக்
தேரா சாயீ துஜ்மே ஹை, தூ ஜாக் சகே தோ ஜாக்

தமிழாக்கம்:
எள்ளின் உள்ளில் எண்ணை எப்படி உள்ளதோ, சக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு எப்படி உள்அடங்கி உள்ளதோ, நம் உள்ளேயேயும் இறைவனே (சாயீ) குடி கொண்டுள்ளார்; விழித்துக்கொண்டு (முயற்சி செய்து) அவரை அடையாளங்கண்டு, உணர்ந்து பார்த்துக் கொள்ளலாம். எங்கும் தேடிப் போக வேண்டாம்.

4. இதன் உட்பொருள்: நாம் யாவரும் எதிலும் உண்மையை அறிய ஏங்குகிறோம். அதைப் போல, நாம் கடவுளைப் பற்றி அறிய மனப் பூர்வமாக விரும்புகிறோம். இதற்கு கபீர் மிகச் சுலபமான வழிமுறையை நமக்கு வகுத்தளிக்கிறார். எவ்வாறு எள்ளைக் காணும்போது எண்ணையைக் காண்பதில்லையோ, ஆனால் அந்த எள்ளில், நம் சக்தியை உபயோகித்து எண்ணையை எடுத்து உபயோகித்துக் கொள்கிறோம். சிக்கி முக்கிக் கல்லுள், நெருப்புள்ளது, அதிலும் நம் சக்தியை உபயோகித்து, நெருப்பை நம் உபயோகத்திற்கு உண்டாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு, நாமே முயற்சி எனும் நம் சக்தியை உபயோகித்தால் நம்முள் உறைந்திருக்கும் இறையை அறிய முடியும். இதற்கு முதல் வேலை, நம்முள் உள்ள அறியாமை எனும் இருட்டை அகற்ற, இறை எண்ணம் எனும் அக விளக்கை (எழில் ஞான விளக்கை) ஏற்றிக் கொண்டு மறை பொருளான இறையைத் தேடி, நன்கு உணரலாம்.

ஸ்வாமி விவேகானந்தர் கூறியபடி, “”மானிடர் ஒவ்வொருவரும் ஆற்றல் மிக்க, உள்ளார்ந்த மூல வாய்ப்பு வளம் மிக்கவர்களே. நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள், தெய்வத்தன்மையை கண்டுபிடித்தலே, அதற்குறியவை யாவுமே, உங்களுள் உள்ளது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார்.

ஒருதடவை, ஸ்ரீ ரமண மகரிஷிக்கும் ஒரு பழுத்த முஸ்லிம் பெரியவருக்கும் இடையே கடவுளுக்கு உருவமுண்டா இல்லையா எனும் மிக நேரிடையாக நடந்த, சுவாரசியமான உரையாடலை இங்கு தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன்.
(Based on ‘Ramana Maharshi’ and the path of self-knowledge by Arthur Osborne-Jaico publication – page 121 & 122)
முஸ்லிம்: கடவுளுக்கு உருவமுண்டா?
ரமணர்: அப்படி யார் சொன்னது?
முஸ்லிம்: கடவுளுக்கு உருவமில்லை என்றால், அவரை ஏன் மக்கள் ‘சிலை’ வடிவில் தொழ வேண்டும்?
ரமணர்: (நீங்களே இதற்கு பதில் சொல்லப் போகிறீர்கள் எனப் பொருள்பட, புன் முறுவலுடன்) சரி, அக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். சுலபமான கேள்விகளுடன் முதலில் ஆரம்பிப்போம். உங்களுக்கு உருவமுண்டா? சொல்லுங்கள்.
முஸ்லிம்: (நகைத்து, தன்னிடம் பின்னர் ஏதோ கேட்கப் போகிறார் என்று மட்டும் தீர்மானித்து,
முன் எச்சரிக்கையுடன்; (Anticipating further intricate questions) ஆம். நிச்சயமாக எனக்கு உருவமுண்டு; நீங்களே என்னைப்பர்த்துப் பேசுகிறீர்களே! நானும் உங்களுடன் இவ்வுருவத்துடனே பேசுகிறேனே; ஆனால், நான் கடவுளல்ல.
ரமணர்: ஆக நீங்கள் தான், சதையாலும் எலும்பாலும், ரத்தத்தாலும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கப் பட்ட இந்த உடைக்குள் இருக்கும் உடல், எனச் சொல்கிறீர்கள் இல்லையா?
முஸ்லிம்: ஆம், இதை நான் நிரந்தரமாகக் கூற முடியும். இவ்வுடல் என் உடைமை தான்.
ரமணர்:’நீங்கள்’ என்பவர் சுய உணர்வு இல்லாது ஆழ்ந்து தூங்கும் போதும் கூட ” இந்த உடலில் உள்ள நீங்களே தான் இந்த உடல்” எனத் தீர்மானமாகக் கூறமுடியுமா?
முஸ்லிம்: இதெலென்ன சந்தேகம்! தூங்கும் போது இதே உருவில் தூங்கினேன், தூங்கும் வரை இவ்வுடலில் நான் தான் இருந்தேன் எனவும் நானறிவேன். தூங்கி எழுந்த பின், அதே உடலில் நான் இப்போதும் உள்ளேன் எனவும் எனக்குத் தெரிகிறது. ஆக தூங்கும் போதும் இவ்வுடல் என்னிடம் தானே இருந்திருக்க வேண்டும். எங்கும் போய் விட வில்லையே!
ரமணர்: சரி, ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருக்கிறீர்கள் என இப்போது உங்களால் சொல்ல முடிகிறது. நீங்கள் இறந்த பின்னும் ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருப்பீர்கள் என அப்போதும் உங்களால் சொல்ல முடியுமா?
முஸ்லிம்: (ஒரு கணம் யோசித்து) அச்சமயம் நான் இறந்துவிட்டதாக கருதப்பட்டு, பிணமான என் உடலை மக்கள் புதைக்கப் போகிறார்கள்.
ரமணர்: இவ்வுடல் உங்களுடையது. அதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இது உங்கள் தனிப்பட்ட சொத்து என நீங்கள் சற்று முன் தான் சொன்னீர்கள். இப்படி இருக்கும்போது, உங்கள் உடலைப் புதைப்பதை எதிர்த்து, “ இவ்வுடல் என்னுடையது. நான் உடுத்தி இருக்கும் உடை என்னுடையது, என்னுடன் கூட இருக்கும் குழந்தைகள், என் குழந்தைகள். இவர் என் மனைவி. நான் வாழும் வீடு என் சொந்த செலவில் நானே கட்டியது. நான் இவர்களுடனேயே இங்கேயே இருந்து விடுகிறேன். என் உடலை அப்படியே விட்டு சென்று விடுங்கள், இதை எடுத்துப் புதைக்க வேண்டாம்” எனும் உங்களுக்குள்ள உரிமையை மற்ற நேரங்களில் நிலை நாட்டிக் கொள்வது போல ஏன் இறந்த பின்னும் நிலை நாட்டிக்கொள்ள முடியாதா?”
முஸ்லிம்: (உடல் சார்ந்த அணுகுமுறை தவறு என உணர்ந்து, சற்று திகைத்து, மெதுவாக), என்னைப் புதைக்க வேண்டாம் என, பிணமான நான் எப்படி எதிர்த்துச் சொல்ல முடியும்? ஆக, என்னை இது வரை பேச வைத்தது வேறு: அதாவது, என் உடலை இதுவரை ஆட்டி வைத்துச் சொல்ல வைத்த ஏதோ ஒன்று இறந்த பின்னர், அதைக் காணவில்லை, ஆதலால் தான் பிணமான என்னால் பேச முடியாது. என்னை இதுவரை ஆட்டி ஓட வைத்தது ஏதோ ஓர் உள்-அமைப்பு, எனத் தெரிகிறது. ஆக என் உடல் உரிமையைப் பற்றி, என் எல்லையையும் இப்போது உணர்ந்து கொண்டேன்.
ரமணர்: (புன் முறுவலுடன், இப்போது விளக்கத்தையும் அளிக்கிறார்): இதுவரை உங்கள் உடலை ’நீங்கள்’தான் அது என நினைத்திருந்தீர்கள். அதுதான் உங்களுடைய அடிப்படை அறியாமை. பின்னர் உடல் அமைப்பில் ஏதோ உங்கள் ’உள்’ உள்ளது எனவும் பின்னர் சொன்னீகிறீர்கள். உங்களைப் போல ’உருவ வழிபாடு’ சச்சரவில் ஈடுபடும் எல்லோருடைய கேள்விகளுக்கு, நீங்கள் முன் சொன்ன அறியாமை தான் ஆரம்ப கட்டம். எதுவரை நீங்கள் இந்த அறியாமையை முற்றிலும் அகற்றாத வரை, அதாவது உங்கள் உடலுக்குள் உங்களை ஆட்டி ஓட வைக்கும் ஒரு ’உள்’ அமைப்பு உள்ளது, அது யார்? என்ன? ஏன்? என்பதைப் பற்றி முழுதும் அறியாதவரை அநாவசியமாகப் பகட்டு ஆரவார நூலறிவைக் (pedantry) காட்டுவதில் எந்த பயனுமில்லை. நான் சொன்னதில் பொதிந்த உண்மையைப் புரிந்து கொண்டவுடன், நீங்களே என்னைத் தேடியோ, அல்லது இதைப்பற்றி, மீண்டும் எவரிடமும் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் நிச்சயமாக உங்களுக்கு என்றும் ஏற்படாது. நல்லது உண்டாகட்டும். போய் வாருங்கள்.
என மறை பொருளான கடவுளைப்பற்றி, ரத்தினச் சுருக்கமாக தன் இயல்பான பண்பினால், விளக்கினார். (”Some times, Ramana Maharshi’s answers given were terse and cryptic, sometimes full and explanatory but always adopted to the questioner and always marvelously apt”]]].

5. தோஹா: (ஈரடி)
ऍसी वाणी बोलिए, मन का आप खोए
अपना तन शीतल करें, औरन को सुख होए

எழுத்துப் பொயர்ப்பு:
ஐசீ வாணீ போலியே, மன் கா ஆப் கோயே
அப்னா தன் சீதல் கரேன், ஔரன் கோ சுக் ஹோயே

தமிழாக்கம்:
மனதில் ”நான்” எனும் தன் முனைப்பான “தன்நல வேட்கை நெறி” இன்றி பேசுங்கள்; உடல் பேசும் மொழியையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்; இதனால் கேட்பவர் பார்ப்பவர் மனது குளிர்ந்து போவது போல உங்கள் வாயிலிருந்தும் உடலாலும் உதிர்க்கும் எம்மொழியும் நல்லவைகளாகவே வெளிப்படடும்.

5. இதன் உட்பொருள்: இந்த ஈரடியில், மனித உள நூல், மனோதத்வ நூல்; இந்திய ஆன்மீக அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றையும் விளக்குகிறது. நம் முன்னோர்கள் நமக்காக வேத வழி இலக்கியங்களில், நமது பேச்சு எப்படி இருக்க வேண்டுமென அதில் மிக கவனத்துடன் அழுத்தந்திருத்தமாகக் கூறி இருக்கிறார்கள். பேச்சால் வரும் சப்தமும், பார்க்கும் பார்வையால் உண்டாகும் வலிமையையும் பற்றி, ஒருவருக்கொருவரிடம் பரஸ்பரம் ஏற்படும் அதிர்வுத் துடிப்பைப் (vibrations) ஏற்படுத்தக் கூடியது எனக் கூறி இருக்கிறார்கள். இவைகளில், பேசும் பேச்சு அன்பான வார்த்தைகளோடு கூடி இரக்க உணர்ச்சியுடன், கனிவான பார்வையிலும் இருந்தால், அது மனிதர்களைக் கூட்டிவைக்கும். அதற்கு மாறாக, கடுமையான வார்த்தைகள், கடு கடுவென முகம், கை கால் மூலம் காட்டும் செய்கைகள் வெறுப்பைதான் வளர்க்கும். ஒன்றை நினைவில் கொள்ளவும். பேச்சு ஒன்றுதான் மனிதர்களையும் மிருகங்களையும் வேறாகக் காண்பிக்கிறது. பேச்சே சரியில்லை எனில், அம்மனிதர் மனிதரல்ல; மனிதராகத் தோற்றமளித்தாலும், (உண்மையில்) அம்மனிதருள் மிருகம் தான் மறைந்துள்ளது. ஆக கபீர் நமக்கு உரைப்பது, நட்பை வளர்த்து, அமைதியை உண்டாக்க வல்ல நல்ல மொழியில் இருந்தால் கேட்பவர், பார்ப்பவர் நெஞ்சம் குளிர்ந்து, மகிழ்ச்சியை உண்டாக்கி, மனிதத் தொடர்பில் என்றும் நன்மையையே பயக்கும்.

6. தோஹா: (ஈரடி)
कल करे सो आज कर, आज करे सो अब
पल में परलय होएगी, बहूरि करोगे कब
எழுத்துப் பொயர்ப்பு:
கல் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸொ அப்,
பல் மேன் பரலய (ப்ரளய) ஹோயகீ, பஹூரி கரோகே கப்.
தமிழாக்கம்:
நாளை வேலையை இன்றே செய்; இன்று செய்ய வேண்டிய வேலையை இப்போதே செய்து முடி; எப்போது என்ன நடக்குமெனத் திட்டவட்டமாக எவராலும் கூற இயலாது; மேலாக, தற்கால நல்ல தருணத்தை நழுவவிட்டால் உன்வேலையை யார் செய்து முடிக்கப் போவதாக நீ எண்ணுகிறாய்? ‘ஆசான்’ சொன்னது: உன் வயிற்று வலிக்கு நீயேதான் மருந்து சாப்பிட்டு, அதை குணமாக்கிக் கொள்ள வேண்டுமே அன்றி, உனக்காக உன் மனைவியா அல்லது உன் பிள்ளைகளா மருந்துண்ண முடியுமா?!

6.இதன் உட்பொருள்: இந்த தோஹா தமிழாக்கம் செய்ய மிகவும் கடினமானது. இதற்கு அநேக ஆசிரியர்கள் அநேக வியாக்கியானங்களை அளித்துள்ளனர். “பல் மேன் பரலய (ப்ரளய) ஹோயகீ” என்பதற்கு ஒருவர் மகாப் பிரளயமெனவும், ஆனால் பெரும்பான்மையோர், எதிர்பாராதது எதுவும் நடக்கலாம் எனவே கூறியுள்ளனர்.

இதில் கபீர் தாஸர், கூற இருப்பது, மனித இயல்பான சோம்பேறித்தனமும், எதையும் தள்ளிப் போடும் பழக்கத்தைத் தவிர்க்க அறிவுரை வழங்குகிறார். ஒரு முது மொழி உண்டு: “காலம் தாழ்த்துவதால், காலமே காலனாய் மாறக் கூடும்”. இந்த அசட்டை மனப்பான்மையைத்தான் கபீர் தாஸர் கண்டிக்கிறார். இதைதான் பலர், இப்போதா, அல்லது எக்காலத்திலும்-இல்லையா (now or never) எனக் கூறுகிறார்கள்
7. தோஹா: (ஈரடி)
धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए
मालि सींचे सौ धढा, ऋतु आए फल होए
எழுத்துப் பொயர்ப்பு:
தீரே தீரே ரே மனா, தீரே சப் குச் ஹோஏ
மாலீ சீஞ்ச்சே சௌ கடா, ருது ஆயே பல் ஹோஏ

தமிழாக்கம்:
ஓ! மனமே! மெல்ல மெல்லச் செல், எல்லாமே அதன் வேகத்தில் தான் செல்லும். நீ இதில் அவசரப்பட்டால் ஆவதொன்றுமில்லை. ஒரு தோட்டக்காரன், தன் மரத்திற்கு நூறு குடம் தண்ணீர் கூடுதலாக ஊற்றினாலும், பழம் அதன் பருவத்திற்கு முன்னரே பழுத்து விடுமா என்ன?

7. இதன் உட்பொருள்: இயற்கை எப்போதுமே தன் வேகத்தில் தான் செல்லும். இந்த தோஹாவை இன்றைய மனிதர்களை மனதில் கொண்டு அந்நாளிலேயே எழுதி வைத்தார் போலத் தெரிகிறது. இந்நாளில் எல்லாமே அவசரம்தான். வெற்றிக் கோட்டை அடைய ஒரு பைத்தியக் காரத்தன பாய்ந்தோடும் அவசரம் இன்று எதிலும் உள்ளது. இதனால், மன அழுத்தம், மன அழுத்தத்தால் ரத்தக் கொதிப்பு, களைப்பு, ஏமாற்றம் உண்டாகிறது. எல்லாவற்றையும் விட இது ஒழுங்கீனத்தை வளர்க்கிறது, குரங்கு புத்தியை உண்டாக்குகிறது. பதற்றக்குறைத்தல் என்பதையே மாந்தர் மறந்துவிட்டனர். எப்போதுமே அசட்டையோடு, விழிப்புள்ள நிலை இல்லாததாலும், எல்லாவற்றிலும் அவசரகதியில் காரிய ஈடுபாடு இருப்பதாலும், முன்னரே தேவையான முன்னேற்பட்டை செய்யாத தாலும், எல்லாவற்றையும் பொதுவாக ஒப்புக்கொள்ளும் மனப்பாங்கு இல்லாததால்தான் பதற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவு நாசம் தான். கபீர் தாஸர் நமக்குச் சொல்ல விழைவது, உன்னால் முடிந்தவரை உன் முயற்சியை செய்து கொண்டிரு; ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேரத்தில் தான் நடக்கும். ஏனெனில், இயற்கை உன் விருப்பப்படி விரைவாக எதையும் செய்யவே செய்யாது. அதற்கும் ஆண்டவன் விதித்த கட்டளை உண்டு என்பதையும் அறிந்துகொள்.

8. தோஹா: (ஈரடி)
साई इतना दीगिए, जा में कुटुम्ब समाए
मैं भी भूखा न रहूं, साधू न भूखा जाए
எழுத்துப் பொயர்ப்பு:
ஸாயீ இத்னா தீஜியே, ஜா மைன் குடும்ப சமாயே
மைபீ பூகா ந ரஹூன் சாதூ ந பூகா ஜாயே
தமிழாக்கம்:
ஏ! சாயீ! (கடவுளே!) என் குடும்பத்தையும் பசிக்கொடுமையில் தள்ளாது, வீட்டிற்கு என்னைத் தேடி வரும் அதிதியான சாதுக்களுக்கும் என்னால் உணவளிக்கும் நிலையில் என்னை வைத்துக் காப்பாற்று. வீட்டிற்கு என்னைத் தேடி வந்த அதிதியான சாதுக்களை பசியோடு அனுப்பிவிடும் சங்கடத்தில் என்னை வைத்து விடாதே, சாயீ!

8. இதன் உட்பொருள்: இந்த தோஹா, மிக எளிய நடையில் உள்ளதால், கபீர் தாஸர் சொல்லவந்ததைச் சொல்லாமல் இருக்கமுடியாது. இந்த தோஹாவில் உள்ளபடி, கபீருக்கு போதுமான அளவிற்கு அதிகமான செல்வத்தையோ அல்லது வாழ்க்கைத் தர வசதிகளையும் கடவுளிடம் வேண்டிக்கொள்ள வில்லை. கபீர் தாஸர் ஒரு நெசவாளி, குழந்தை குட்டிகளோடு, குடும்பம் நடத்துபவர். நெசவுத் தொழில் தான் அவர் குடும்பத்திற்கு தேவையானவைகளை அளிக்கிறது. கபீருடைய முதல் கடப்பாடு அவருடைய குடும்பமே. குடும்பத்திற்கு வேண்டியதை அளித்த கையோடு, பேராசையால் மூழ்கிவிடாமல், தன்னை நம்பி வீடு தேடி வரும் அதிதியான சாதுக்களுக்கும் உணவளிப்பதற்கான வசதியையும் தனக்கு அளிக்கக் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார். இந்த தோஹாவில் கபீர் தாஸருடைய மன நிறைவும், (contentment), தியாக குணமும், பிறருக்கு உதவும் கருணையுள்ளமும் தான் வெளிப்படுகிறது. இந்திய வேத நெறியான “அதிதி தேவோ பவ” எனும் கொள்கையைத்தான் இன்னமும் வலியுறுத்துகிறது. இதே மன நிலையை நாமும் உருவாக்கிக் கொள்ளவேண்டுமென கபீரும் விரும்பி, நமக்குச் சொல்கிறார்.

9. தோஹா: (ஈரடி)

बढा हुआ तो क्या हुआ, जैसे पेड खजूर
पंथी को छाया नाहिं, फल लागे अति दूर
எழுத்துப் பொயர்ப்பு:
படா ஹுஆ தோ க்யா ஹுஆ, ஜைசே பேட் கஜூர்
பந்தீ கோ சாயா நாஹீன், பல் லாகே அதி தூர்
தமிழாக்கம்:
பேரீச்சமரமும் பல மரங்களைக் காட்டிலும் மிக உயரமாகத்தான் வளர்ந்துள்ளது; அதன் கீழ், வழிப்போக்கர் எவருக்கும் அதுவும் கால் நடையாகப் போகும் பயணிகளுக்கும், களைப்பாற சிறு நிழலையும் அளிக்க இயலாதது, பேரீச்சம்பழமும் பறிக்க முடியாத உயரத்தில் உள்ளது. யாராவது நமக்காக பிரயாசை எடுத்து இதன் பழத்தை நமக்கு அளித்தால் தான் உண்டு. மேலும், கோடைகாலமானால், அம்மரத்தில் நமக்காக ஏறி, பேரீச்சம் பழத்தைப் பறித்து யார் அளிக்கப் போகிறார்கள்? வேண்டும்போது உதவாத பேரீச்ச மரத்தால், யாருக்கு என்ன பிரயோஜனம்? இல்லாவிடில் களைத்துப் போன ஒருவர் தானே கடும் வெய்யிலில் உயரமான அம்மரத்தின் ஏறத்தான் முடியுமா? கீழே உட்கார்ந்து அதன் நிழலில், இளைப்பாறத்தான் முடியுமா?

9. இதன் உட்பொருள்: இந்த ஈரடியால், வீணான ஜம்பத்தோடு நம்மிடையே உலவும் எப்படியோ, வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ள எத்தனையோ பெரிய மனிதர்களைக் குறி வைத்து சொல்கிறார். இவர்களுக்கு பரிவுணர்ச்சியும் கிடையாது; மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கமும் இம்மியளவும் கிடையாது. இந்த ஈரடியால், நமக்கு கபீர் தாஸர் சொல்வது, நம்மிடம் உள்ள பேராசையையும், சுய நலத்தையும், ஆபத்துக்குள்ளான நம்பத்தகாத போக்கையும் விட்டொழிக்கவும், கூறுகிறார். நாமும் பலரால் மகிழ்ச்சியடைந்து, நம்மால் பிறரையும் மகிழ்வடையச் செய்யும் மனப் பாங்கைக் கொள்ள அறிவுரை வழங்குகிறார்.

10. தோஹா: (ஈரடி)
कबीरा खडा बाज़ार में, मांगे सबकी खैर,
ना काहू से दोस्ती, ना काहू बैर
எழுத்துப் பெயர்ப்பு:
கவீரா கடா பாஜார் மேன், மாங்கே ஸ்ப்கீ கைர்
நா காஹூ ஸே தொஸ்தீ, நா காஹூ ஸே பைர்
தமிழக்கம்:
கபீர் சந்தையில் நின்றுகொண்டு சொல்வது இது தான்: வியார விஷயத்தில் சினேகமும் வேண்டாம், விரோதமும் வேண்டாம், எப்படி இருப்பினும், வியாபாரத்தில் எல்லோருக்கும் நல்லதையே விரும்ப வேண்டும்.

கபீர் தொழில் முறையில் ஒரு நெசவாளர், இவர் சந்தைக்குச் சென்று தான் நெய்த துணிகள் அனைத்தையும் விற்று அதனால் வரும் வருமானத்தால் குடும்பம் நடத்துபவர். ஆனால் மற்ற வியாபாரிகளோ, போட்டி போட்டுக்கொண்டு, நன்றாக நெசவு செய்யாத கரடுமுரடான துணியையும் நல்ல லாபமான விலையில் விற்று நிறைய பணம் சம்பாதிக்க எவ்வித உபாயங்களையும் கையாளுவதும் வழக்கம். இதற்காக எவ்வித மோசமான வஞ்சகச் செயலிலும் ஈடுபட்டு, அல்லது முறைகேடான ஆதாயத்தை அடைய எவ்வித புரளியையும் எவர் மீதும் கிளப்பி விடுவதுண்டு. இதையெல்லாம் தெரிந்தவர்தான் கபீர் தாஸர். ஆனாலும் அவர் தானாக மேற்கொண்ட நல்வழிகளிலிருந்து வழுவது கிடையாது. எப்படியாவது பணம் பண்ணுவதையே ஒரு குறிக்கோளாகக் கொண்டதும் கிடையாது.

10. இதன் உட்பொருள்: இந்த தோஹாவில் அதிகம் பேசாமல், தன்னுடைய சரி சமமான நிலையை (balanced approach) வெளிப்படுத்துகிறார். அதில் அவர் சொல்வது இதுதான்: வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க எவ்வித சூழ்ச்சியையும் செய்யவேண்டியதில்லை, இதற்காக உணர்ச்சிவசப்பட வேண்டியதும் இல்லை. ஒரு வியாபாரி சந்தையில் எவரிடமும் அதிகமாக ஸ்நேகமாகவோ, அல்லது பகைமை எண்ணத்தைக் கொள்ளவும் வேண்டியது இல்லை. இது வியாபாரிகளுக்கு உகந்த நல்ல அறிவுரை. இது படிப்படியாக முன்னேற விரும்பும் வியாபாரிகளுக்கு இந்நாளில் சொல்லப்படும், ‘செய் அல்லது செய்யாதே’ (Dos and Don’ts) எனும் நற்போதனையாகக் கொள்ள வேண்டும்.

இதையே ஆன்மீக முறையில் ‘பஜார்’ என்றால், ‘உலகம்’ அனைத்தையுமே, எடுத்துக்கொள்ளலாம். இங்கும் மனிதர்களுக்குள், கொடுக்கல் வாங்கலில் வினைத் திட்டத்துடன் காரியத்தில் கண்ணாக இருக்கலாம், ஆனால் அதில் ஒருவித பற்றுதலும், பற்றின்மையுடன் (attachment and detachment) கலந்து இருக்கவேண்டும். பற்றுதலில், காரியத்தில் கண்ணாக இருக்கலாம், அதற்காக, உணர்ச்சிவசப்பட்டு எவ்வித கீழ்த்தர காரியத்திலும் ஈடுபட வேண்டியதில்லை எனவும் கொள்ளலாம். இது வியாபாரிகளுக்கு அறிவுரை என்பது போலத் தோன்றினாலும், இது நம் போன்றோன்ற சாமானியரும், மேற்கொள்ள வேண்டிய நல்ல அறிவுரை அடங்கியுள்ளது.

11. தோஹா (ஈரடி)

मांगन मरण है, मत कोई मांगे भीख
मांगन से मरणा भला, यह सतगुरु की सीख
எழுத்துப்பெயர்ப்பு:
மாங்கன் மரண் ஹை, மத் கோஈ மாங்கே பீக்,
மாங்கன் சே மரணா பலா, யஹ் சத் குரு கீ சீக்
தமிழாக்கம்:
பிச்சை எடுப்பது மரணத்திற்கு சமமானது, எவரும் பிச்சை எடுக்கப் போகக் கூடாது, பிச்சை எடுப்பதைக் காட்டிலும் சாவது மேல். இந்த பாடத்தை சத்குருவிடம் கற்றுக்கொள்.

11. இதன் உட்பொருள்: பிச்சை எடுப்பது இன்று ஒரு தொழிலாகக் கூட சிலருக்கு ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சி செல்வக் கொழிப்பில்லா நாடுகளில் இன்னும் மிகக் கோரமாக உள்ளது. இதே சற்று வளமான சமூகத்திலும், பொது நலத் திட்டங்களாக மாற்று உருவம் கொண்டுள்ளது. இந்த பொது நலத்திட்டங்களுக்கு அரசாங்கமே உடந்தையாகவும் இருக்கிறது. இதனால், மக்களை அரசாங்கத்திடம் எப்போதுமே கை நீட்டிப் பிச்சையெடுக்க வைத்து அதிகாரத்திலிருக்கும் ஆளும் கட்சிக்கு அதனாலும் ஆதாயத்தை அடைய காரியங்களைச் செயல் படுத்துகிறது. பிச்சை எடுப்பதும், பொதுநலத்திட்டங்களின் விளைவுகளுக்கும், வித்தியாசம் அதிகம் கிடையாது. இவ்விரண்டுமே சமூகத்திற்கே நல்லதல்ல. பிச்சை எடுப்பது எனும் கருத்தே சமூகத்தில் உலவும் முறைகேடான அநீதியால் உண்டானது. உண்மையான உழைப்பில்லாமல், ஒருவர் பிழைக்க எண்ணுகிறார். இன்னொருவர், உண்மையான உழைப்பில்லாமல், மற்றவர்களை ஏமாற்றிப்பிழைக்க விழைகிறார். ஆக, ஒன்று நேரிடைப் பிச்சை; மற்றொன்று, மறை முகமான கௌரவப் பிச்சை. வித்தியாசம் அவ்வளவே. ஆகவே இரண்டுமே பிச்சைதான். உண்மையாக எல்லோரும் உழைத்தால் இந்த நிலவரத்தை மாற்ற முடியும். இதற்காக அரசாங்கமே சமூகத்தில் வேலைகளை உண்டாக்கும் அனுகூலத் திட்டங்களை உண்டாக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து, இலவசம் எனும் பிச்சை போடும் திட்டங்களை உருவாக்கவோ, (ஓட்டுக்காக லஞ்சமாகவோ) முதலில் (ஏதோ மக்களுக்கு உதவுவது போல) ஆரம்பிக்க வேண்டாம். கூடவும் கூடாது.

முதன்முதலில் பிச்சை எடுக்கச் செல்பவர் அத் தருணத்தில் பயங்கர அவமானத்தையும், அவமதிப்பையும் அடைந்து, தன்னைத்தானே கொன்று கொண்டுதான், பிச்சை எடுக்கச் செல்கிறார். கபீர் தாஸர் மிக தைரியமாக, மக்கள் மனசாட்சியை கடுமையாக உலுக்குகிறார். கபீர் அதிகம் பேசாமல் கூறுவது, எவரும் உண்மையாக உழைத்து தங்கள் பிழைப்பை நடத்த வேண்டுமென இந்த அறிவுரையால் பொதுமக்கள் அனைவருக்குமே எச்சரிக்கை வழங்குகிறார் என்றே கொள்ளவேண்டும். இதில் அவர் கூறுவதிலும் உண்மை இருப்பதால் எனக்குச் சரியென்றே சொல்லத் தோன்றுகிறது.

12. தோஹா (ஈரடி)
पोथि पड पड जग मुआ, पंडित भयो न कोए
ढाइ आखर प्रेम के, जो पडे सो पंडित होए

எழுத்துப்பெயர்ப்பு:
போதீ பட் பட் ஜ்க் முஆ, பண்டித் பயோ ந கோய்
டாயி ஆகர் ப்ரேம் கே, ஜோ படே ஸோ பண்டித் ஹோய்
தமிழாக்கம்:
உலகிலுள்ள பலரும் புத்தகங்களை நிறையப் படித்தனர் படிக்கிறார்கள்; பின்னர் இறந்து போகிறார்கள். ஆனாலும் எவரும் புத்திசாலியாக ஆகவில்லை. எவரொருவர் அன்பான சொற்களைப் படித்துத் தெளிந்தனரோ, அவர்கள் மட்டுமே தான் விவேகியானார்கள்.

12. உட்பொருள்: இந்த ஈரடியைப் படித்தறிய அதன் உண்மை மனக் காட்சியை, ஒரு அம்சமும் விடாது நன்கு கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். இன்று, நமக்கு எந்தத் தகவல்களும் மிக வேகமாகவும், சடுதியிலும் கிடைக்கிறது. அதனால் அனேகமாக எல்லா விஷயங்களிலும் விவரம் அறிந்து கொள்ள முடிகிறது. எல்லோருக்கும் எல்லாமே தெரிகிறது. இருப்பினும், பொதுவாகவே எதில் விழிப்புணர்வு வேண்டுமோ அதில் இருப்பதாகத் தெரியவில்லை. நமக்கு நிம்மதி இல்லை. எங்கும் எதிலும் ஏமாற்றமும், தோல்வி மனப்பான்மையுமே தலை தூக்கி நிற்கிறது. நம் மனது பதற்றமில்லாமல், அமைதியாக இருக்க இயலவில்லை. ஒரு பேச்சுக்காக ‘அன்பு, அன்பு’ என உதட்டை அசைத்து வார்த்தைகளை உதிர்க்கிறோமே தவிர, அதில் வெளிப்பட வேண்டிய பரிவு, கருணை, இரக்கம், உண்மையில் உதவும் செயல் தடம், மிகக் குறைவு. ஏனெனில், சுயநலம், பேராசை, பயம், வெறுப்பு, ஆக இதைப்போன்ற போக்கு ஏதாவது ஒருவிதத்த்தில், அனேகமாக எல்லா நேரத்திலும், நம்மை கெட்டியாகப் பற்றி ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்த கூற்றை அனேகமாக மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
கபீர் இந்த ஈரடியில் நமக்காக, மிக எளிய, ஆனால் மிக ஆற்றல் வாய்ந்த பாணியில், மனத் துணிச்சலுடன், வழிகாட்டுகிறார். எவ்வளவுதான் படித்து, பல்கலைகழங்களிலிருந்து, பட்டங்கள் வாங்கி இருந்தும், அல்லது சமூக அந்தஸ்து கொண்டு, ‘டாக்டர்’ பட்டங்களைக் கேட்டோ, கேட்கப் படாமலோ கிடைத்திருந்தாலும், இன்னமும், வேண்டிய அளவிற்கு நாம் அறிவாளியாக ஆகவில்லை. உண்மையில் புத்தகத்தைப் படித்து ‘அன்பை’ காட்டுவதில்லை. அன்பு காட்ட பட்டமோ, படிப்போ தேவையில்லை. அது தானாகவே சுரக்கும். சுரக்க வேண்டும். மனம் தெளிந்து இருந்தால்தான், நாம் பிறரிடம் அன்பு செலுத்த இயலும், அப்போது தான் நம்மிடமும் பிறர் அன்பு செலுத்துவர். அன்றுதான் எவரும் உண்மையில் நாம் ‘விவேகி’ எனக் கூறிக்கொள்ளும் உரிமை உண்டாகும். அப்போதுதான் வாழ்க்கை, வாழத் தகுதி பெற முடியும். அதுவரை எல்லோருமே ‘also ran‘ தான்.

(இனி வேண்டுமானால் தொடரலாம்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்