கண்ணே கலைமானே

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

ராமலக்ஷ்மி


பெற்றவள்
விற்றா விட்டாள்
சரியாகத் தெரியவில்லை
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடி-கிளியே
கேள்விக் குறியாக நீ!

***

நோட்டுக்களாலே தொட்டில் கட்டி
நோட்டமிட்டு உனைக் கவர்ந்து
நோகாமல் கையாள
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!

***

தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் தடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பலிடம்
தத்தளித்திடும் தளிரே உண்மையிலே
தத்து அளித்திடவா
தரப் பட்டாய் நீ ?

***

கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!

***

கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ ?

***

மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!

***

காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்தாய் ஒரு வழியாய்
நிம்மதி நெஞ்சோடு
நிறைவாய் ஒரு வாக்கியம்
இனியேனும் இனிதாக
வாழ்வாங்கு வாழ்க நீ!

***
( செய்தி: பெங்களூரில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட வந்த கும்பல் காவலர் திறமையால் சுற்றி வளைப்பு. குழந்தை மீட்பு.) படம்: 29 Jul 03 Times Of India-விலிருந்து.
***

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி