கடிதம் ஆகஸ்ட் 5,2004 – பரமார்த்த குருவும் சீடர்களும்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

கோச்சா ( எ ) கோவிந்


—-

படித்திருப்போம், பரமார்த்த குரு கதையை.

தன் சீடர்களுடன் ஆற்றைக் கடக்க அது தூங்கிருக்கா என்று பார்க்க தீ தாங்கிய கம்பால் ஆற்றைத் தொட்டுப் பார்த்ததும் , சுர்ர்ர் எனும் சத்தத்தில் அது விழித்திருக்கிறது என்றும் பின் மறுபடி தொட்டுப்பார்த்தையில் சத்தமில்லாததால் அது தூங்கி விட்டது என்று கரை கடந்து போனது பற்றியும் படித்தோம்.

அது போல் தான் தற்போதைய கும்பகோணம் சம்பவம்.

பரமார்த்த குருவாய், அனைத்து அரசியல் – அதிகார வர்க்கம்.

சீடர்களாய் மக்கள்.

கும்பகோண சம்பவம் தொடர்பாக அங்கங்கே பல உள்ளங்கள் நிதி தருவதும், கும்பலாகவும், இண்டர்நெட் புண்ணியத்தில் உலகலாவிய விதத்தில் கூடிப்பேசுவதமாக இருக்கிறார்கள்.

எழுதத் தெரிந்த வித்தகர், எப்படியெல்லாம் பாதுகாப்பாக பள்ளி நடத்தலாம் என எங்கோ இருந்தபடி தமிழகத்திற்கு தீர்வு தருவதும், மற்றொருவர் தமிழகத் தெருக்களில் பாதுகாப்பு பற்றி கூட்டங்கள் நடத்துவது பற்றியும் எழுதுகிறார்கள்.

பணக்கார உறவினரின் வீட்டிற்கு விருந்தாடியாகவோ இல்லை வாக்கப்பட்டோ போய் அவனது சுகங்களை அனுபவித்ததும் பிறந்த வீட்டின் யதார்த்தத்தை மறந்தவன் போல் இவர்கள் அடிப்படையில் ஒன்று மறக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவனின் பக்கத்து வீட்டுக்காரனும், கூடப் பிறந்தவனும் அடுத்த நாள் அடைக்கப்பட்ட ரிக்ஷாவிலும், திணிக்கப்பட்ட பஸ்ஸில் தொங்கிய படியும் மரணத்தின் விழும்பில் பள்ளி செல்வதை.

மரணத்தின் விழும்பில் இவன் வாழ்க்கையின் வசந்தத்தைத் தேடுவது காலத்தின் கட்டாயம். அரசியல் வாதிகளும் ஆள்பவர்களும் மக்களைச் சிந்தித்து செயல்படாததன் காரணம்.

அவர்கள், அப்படி ஆகிப் போனதன் காரணம் என்ன… ?

நிறைய பணம் சம்பாரிக்க வேண்டும் – வசதியான வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அடிப்படையான வாழ்க்கைக்கும் தான் என்ற சுழல்.

அதனால் படிக்க வேண்டும்.

BE, MBBS படிக்க வேண்டும் எனும் துடிப்புடன்.

ஒன்று அதிகமான BE, MBBS கல்லூரிகளை அரசு திறக்க வகை செய்ய வேண்டும்,

தவிர, கதைக்காமல் ஏழைகளும் படிக்கும் வகையில் பள்ளி கல்லூரி அமைப்புகள் வர வேண்டும்.

அழிவின் தீவிரம் உணர்ந்தும் அடுத்த நாளே தங்கள் குழந்தைகளை மரணத்தின் விளிம்பு என்று தெரிந்தும் மக்கள் அனுப்புவது நாளை விரக்தியான மனநிலையை கொண்டு வரும். அது மிகப் பெரிய சமுதாய அழிவிற்கு கட்டியம் கூறும்.

மேலாக, மக்கள் தங்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் வாக்குச் சீட்டை ஒழுங்காக பயன் படுத்தாதன் விளைவே இது.

அது விட்டு, சில அறிவு ஜீவிகள், கூரை பள்ளிக்கூடம் தான் இதற்குக் காரணம் என குரங்குகள் போல் ஊரெங்கும் கூரைகளைப் பிரித்துப் போட்டு அந்த இளம் சிரார்கள் வெயிலின் வெப்பத்தில் நொந்து போக வைத்தார்கள்.

இதே கும்பகோணத்தில் தான் கூரைப் பள்ளிக்கூடங்களில் இருந்து கணித மேதை இராமானுஜம் வந்தது மறந்தனர்.

கூரைகளே கூடாது என்றால், திண்டிவனத்தில் குழந்தைகள் கொத்தாக பள்ளி செல்லும் வழியில் இறந்தது ஏன்.. ?

சென்னையில் கம்யூட்டர் கல்விக்குச் சென்ற பெண், தண்ணி லாரியில் தலை நசுங்கி இறந்தது ஏன்… ?

பல பள்ளிகளில் வாத்தியார்களே பாலியல் பலாத்காரத்தில் பல மாணவர்களை நாசம் செய்கிறார்களே ஏன்.. ?

பள்ளிகளின் பாதுகாப்பு பற்றி பெற்றோர்கள் அக்கறைப் படாததால்.

மேலும்,

கலிபோர்னியாவில் பூகம்பத்தால் அழிய கூடும் என்று தெரிந்தும் அங்கு மக்கள் உலக கணணி புரட்சிக்கு காரணமாகவும் அதிக தமிழர் வாழும் பகுதியாகவும் இருப்பது ஏன்… ?

இல்லை, தீவிரவாதிகளால் பல ஆயிரம் பேர்கள் இறந்த WTC சம்பவக் கட்டிடம் என்ன கூரை கட்டிடமா… ?

அடப் பைத்தியக்காரர்களா.. ?

அழிவுக்குக் காரணம் இயற்கையோ கூரைக் கட்டிடமோ அல்ல..

குறுகிய படியும் , ஆபத்தில் அதில் வரக்கூடிய மாணவர் எண்ணிக்கையை விட அதிக மாணவர் மாடியில் இருந்ததும் அதற்கும் மேலாக அப் படியின் வாசல் கதவை பூட்டி இருந்ததும் தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் பணி ஆற்றுபவர்கள் இடம் காண அறிதாகிப் போன தனி மனித ஒழுக்கமும், சேவை மனப்பான்மையும் அதற்கும் மேலாக, பொது மக்கள் வாக்கு சீட்டுக்கு தரும் மரியாதையும் தான் காரணம்.

தன் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என்ற அடிப்படை அக்கறையில்லா மனிதர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்தமாக கூரையைப் பிரிக்கும் குரங்காக மாறாதீர்கள்.

உங்கள் பலரை விட ‘தியாகு ‘-விற்கு மனித சமுதாய மேம்பாட்டின் மேல் அக்கறை ஊண்டு. அவர் நடத்தி வரும் பள்ளியின் கூரையை அதிகாரிகள் அகற்ற சொன்னதும் ஆனால், பெற்றோர்கள் கூடாது என்றும் முடியாமல் போய் ஆலமரத்தடியில் இன்று பள்ளி நடக்கிறது.

தமிழ் சமுதாய மாற்றத்திற்காக தன் வாழ்க்கையைத் தொலைத்த தியாகு சேவையாக இன்று பள்ளி நடத்துகிறார்.

கும்போணத்தில் நடந்த தீ விபத்தின் மிகப் பெரிய சோகம் இதோ சென்னை புறநகரில் இப்பள்ளி குழந்தைகள் வெய்யிலில் காய்ந்து கொண்டு, வாழ்க்கையின் நாளைய வசந்தத்திற்காய்.

( 08/08/04 ஜீனியர் விகடன் ஞாநி கட்டுரை படியுங்கள். மேலும் இது பற்றி அறிய. )

குழப்பம் கூரைகளிடம் அல்ல, குரங்கு கும்பலிடம் தான். அதைப் புரிந்து கொண்டு முட்டாள்த்தனமான கூரையினால் பள்ளிக் கட்டிடங்கள் கூடாது எனும் சட்டத்தை வாபஸ் வாங்குங்கள்.

— கோச்சா ( எ ) கோவிந்

gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா ( எ ) கோவிந்

கோச்சா ( எ ) கோவிந்