மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
கனமான லெதர் ஜாக்கெட்டில் ஒட்டிய பனியைத் தட்டி விட்டபடி, காசிப்பாட்டி முக்காடு போல் தலைக்கு மேலே கவிந்த தலைக் கவசத்தைப் பின்னால் தள்ளிக்கொண்டு பாக்கிஸ்தானி ரெஸ்தாரண்டில் மாடிப்படி ஏறுகிறேன்.
காதைப் பிளக்கும் பஞ்சாபி பங்க்ரா இசை. உள்ளே நுழைந்ததும் கட்டியணைத்து வரவேற்கிற ஓட்டல் முதலாளியும், உணவு பரிமாறும் பெயரர்களும் நிஜமான சிநேகிதத்தோடு வரவேற்கிறார்கள். நாங்கள் எதிரி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அரசியல் சொல்கிறது.
பங்க்ராவை நிறுத்திவிட்டு, எனக்காக முகம்மத் ரஃபி காசெட்டைப் போடுகிறார்கள்.
‘சவுத்வீ கா சாந்த் ஹை ‘
பஹாடி ராகத்தைச் சாறு பிழிந்து மூன்று நிமிஷப் பாட்டாகத் தர ரஃபியால் மட்டும்தான் முடியும்.
‘இன்னிக்கும் லேட்டா ? ‘ எதிர் மேஜையில் ஜார்ஜ் விசாரிக்கிறார். அந்த வயோதிக வெள்ளைக்காரருக்கும் அவர் மனைவிக்கும் அப்படி என்னமோ இந்திய உணவில் ஒரு லயிப்பு. வாரத்தில் நாலு நாளாவது மதராஸ் கறியும் தந்தூரி ரொட்டியும் சாப்பிட இங்கே ஆஜராகி விடுகிறார்கள்.
அவர்களிடம் அன்பான விசாரிப்புகளோடு கோட் ஸ்டாண்டில் லெதர் ஜாக்கெட்டைக் கழற்றி மாட்டும்போதுதான் கவனிக்கிறேன். நீண்ட வெள்ளைத்தாடியும், கழுத்தில் புரளும் நரைத்த தலைமுடியுமாக ஒரு வெள்ளைக்காரர் ஓரமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
வழக்கம்போல் பப்படம், தொட்டுக்கொள்ள பச்சடி, சாஸ் நிறைத்த ‘டிப் ‘ கிண்ணங்களோடு வருகிறது. கழுத்து டையைத் தளர்த்திக் கொண்டு, ஒரு விள்ளல் அப்பளத்தை எடுத்து பச்சடியில் தொடும்போது அந்த வெள்ளைக்காரரைப் பார்க்கிறேன்.
என்னைப் பார்த்தபடியே, மடியில் வைத்த வெள்ளைக் காகிதத்தில் கலர் பென்சிலால் கோடு வரைந்து கொண்டிருக்கிறார்.
‘உங்க படம் தான் ‘
பெஷாவரி நானும் பிண்டி பாஜியுமாக என் மேஜையில் வைத்துவிட்டு பெயரர் அகம்மத் சஃபர் என் காதில் கிசுகிசுக்கிறான்.
திடுக்கிட்டுப் போகிறது.
வரையட்டும். ஆனால் முடித்துவிட்டுப் பேப்பரை நீட்டி, ‘ஆயிரம் பவுண்ட் கொடு ‘ என்று கேட்டால் எங்கே போகிறது ?
கையில் இருபது பவுண்ட் இருக்கிறது. ஏடிஎம் கார்டு இருக்கிறது தான். பக்கத்தில் தெருவில் ஏடிஎம் கூட உண்டு. ஆனால் ஒரு லட்சம் ரூபாய், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி மாட்டி வைக்க என் படத்தில் என்ன இருக்கிறது ?
ஓவியர் மெல்லச் சிரிக்கிறார். எனக்குச் சிரிப்பு வரவில்லை. பெஷாவரி னானை மென்று கொண்டு அவரைப் பார்க்கத் திரும்பச் சிரித்து என்னையும் முகத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும்படி ஜாடை காட்டுகிறார். சாப்பிட்டபடி எப்படி சந்தோஷப்படுவது ? அதுவும் இவருக்கு எவ்வளவு தட்சணை தரவேண்டும் என்று மிரண்டு போய் இருக்கும்போது..
பாதி சாப்பிட்டு முடிப்பதற்குள் அவர் படத்தை முடித்து என் பெயரைக் கேட்கிறார். சொல்கிறேன்.
எழுதி, சுருட்டி அடுத்த நிமிடம் படம் என் கையில்.
ஒரு கையால் பிரித்துப் பார்க்க, இத்தனை பெரிய மீசையும், பெரிய கண்ணாடியுமாக ஒரே சீரியஸாக ஓவியத்தில் என்னை முறைக்கிற பிரகிருதி யார் ? நான் தான் என்கிறது கீழே எழுதிய பெயர். ஓரமாக மாரிஸ் என்று ஓவியர் தன் பெயரையும் கிறுக்கித் தேதியும் போட்டிருக்கிறார்.
‘இரண்டு பவுண்ட் தர முடியுமா ?
அவர் பணிவாக விசாரிக்க, நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். சொத்தை எல்லாம் எழுதி வைக்க வேண்டியதில்லை. கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கியதாக யாரும் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்கள். மீசைக்கும் கோட், டைக்கும், கையில் முள்கரண்டியில் குத்தி எடுத்தபடி இருக்கும் ரொட்டிக்கும் வேண்டுமானால் சிரிக்கட்டும்.
மாரிஸ் அடுத்து ஜார்ஜ் பக்கம் நகர்ந்து அவர் படத்தையும், அவர் மனைவி படத்தையும் வரைய ஆரம்பிக்கிறார். ஜார்ஜ் கையில் கண்ணாடிக் கோப்பையில் ஒரு லார்ஜ் பக்கார்டி ரம்.
நான் கம்ரான் ரெஸ்தாரண்டிலிருந்து புறப்படும்போது, மாரிஸ் இன்னும் நாலு பவுண்ட் வருமானம் பெற்று, மொத்தம் ஆறு பவுண்டைக் கவுண்டரில் நீட்டி, ‘டேக் அவே ‘யாக கோழிக்கறியும், சப்பாத்தியும் ஆர்டர் கொடுத்துவிட்டு நாற்காலிக்குத் திரும்பி, ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொள்கிறார்.
ஒரு கலைப்படைப்பை வாங்கிய திருப்தியோடு லெதர்ஜாக்கெட்டை மாட்டிக் கொள்கிறேன். யார் கண்டார்கள் ? இன்னும் இருநூறு வருடம் கழித்து, இந்த ஓவியம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு அடைந்திருக்கலாம் – வரைந்தவர் மூலமாகவோ, வரையப்பட்டவர் மூலமாகவோ.
ஆயிரம்பொன் செல்லுமோ ஆவிநின்ற பின்னர்
காயிதக் குப்பையாய்ப் போகுமோ – வாயோயத்
தின்னும் நிலையில் திடுமென்று ஓவியன்
என்னை வரைந்த படம்.
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
eramurug@yahoo.com
- பேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்
- வீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு
- உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)
- நூலகம்
- மழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை
- கனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா
- இரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்
- எனக்குள் ஒரு….
- ‘மனிதன்! கவிஞன்! முருகன்! ‘
- அறிவியல் துளிகள்-16
- முகம்
- வார்த்தை
- என்னோடு நீ…
- முகம் பார்க்க மாட்டாயா ?
- புத்தி
- இன்றாவது மழை வருமா ?
- என்னை வரைந்த படம் – உரைவெண்பா
- தம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா
- டார்வின் தினம்
- ஜீவி கவிதைகள் இரண்டு
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- மீண்டும் ஒரு காதல் கதை 2
- வாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)
- ஓ…. கல்கத்தா!
- பரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- நினைத்தேன்..சொல்கிறேன்… காமாத்திபுரா பற்றி
- உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்
- கிரிக்கெட் நாகரிகம்
- சூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் ?
- கடிதங்கள்
- முகம்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- அழிவை அழி
- கானல் பறக்கும் காவிரி
- ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்
- காதலே
- என் பிரியமானவளே !
- பாத்திரம் அறிந்து….
- அது ஓர் நிலாக்காலம்
- நீ… ? ? ? ?
- அவர்களும் மனிதர்கள்தாம்!