ஊழ்

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ப.மதியழகன்,


ககனவெளில் யோகதண்டம்
அந்தகாரத்தில் பேயுருவம்
தையல் மகளிர் குரலோசை
ஏகாந்தத்தில் நிறைவு கொள்ளல்
துகிலிகை எழுதா பாடுபொருள்
சல்லியம் துளைத்த பிதாமகர்
சன்னமான புல்லாங்குழலிசை
திலகமில்லாத பெண்டிரின் துக்கம்
தீக்ஷண்யமில்லாத அரசன்
அசூயை கொள்ளும் துணைவி
உபாயமற்ற சமாதானம்
துடுப்பில்லாத பரிசல் சவாரி
நுகத்தடியான குடும்பச்சுமை
விக்கினம் கொடுக்கும் சுற்றம்
துகிலில்லாத வறுமை
குவலயம் குப்பை மேடுகளாகும் விந்தை
காலாதீதம் உணர்த்தும் பருந்தின் வேட்டை
குழாமற்ற கல்யாண ஊர்வலம்
குயுக்தி கொண்ட அரசபரிபாலனம்
துயில் கொள்ளாத நீண்ட இரவு
தயை இல்லாத குருமார்கள்
கோடாங்கி வராத வைகறைப் பொழுது
ஊழ் வழியே உலக வாழ்வு.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ஊழ்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


காலை பத்து மணி. அதற்குள் நெருப்பு வெய்யில். மருதானைச் சந்தி போக்குவரத்து நெரிசலில் கார் இஞ்சி கூட நகர முடியாமல் கியரில் ஐந்து நிமிடங்களாக நின்று கொண்டிருந்தது. முன்னாலும் பின்னாலும் தொட்டுக் கொண்டபடி வாகன வரிசை. சுற்றிலும் இனம் புரியாத அவசர ஓட்டத்தில் நகன்று கொண்டிருக்கும் வியர்வை மக்கள். வெக்கையின் பிசுபிசுப்பு. அந்தோனிக்கு கழுத்துக் குழியில் வியர்வை முத்து வழிந்தது. ஏசியைப் போட்டான். இரண்டு ஆட்டோ வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இருந்த இடைவெளிக்குள் நுழைந்து முன்னேறி சிவப்பு விளக்கிற்கு முன்னால் வந்து நின்றன. மணியைப் பார்த்தான்.

இன்னும் முக்கால் மணி நேரத்திற்குள் எயர்போர்ட்டில் நிற்க வேண்டும். பத்தேமுக்காலுக்கு சென்னை விமானம் இறங்கி விடும். கொஞ்சம் வெள்ளனையோடு புறப்பட்டிருக்கலாம். ஐயா வெளியே வந்து பார்த்துவிட்டு கோபித்தாலும் கோபிப்பார்.

கதவுக் கண்ணாடியில் யாரோ நிகத்தால் தட்டினார்கள். கொழும்பில் என்னை யாருக்குத் தெரியும்.!

“நீ எங்கடா இங்க” .. .. கதவைத் திறந்து விட சீலன் ஊத்தையான சிறிய போக்குவரத்துப் பையுடன் ஏறினான். கொழும்பு வெய்யிலில் அலைந்து கறுத்துப் போய் வியர்வை வெள்ளமாயிருந்தான். நேற்று மாலையிலிருந்து இதுவரை அந்நிய உணர்வுடன் கொழும்புடன் ஒட்டமுடியாமல் இருந்த அந்தோனிக்கு எதிர்பாராமல் நண்பனைக் கண்டதும் சொந்த ஊர் சகஜம் திடாரெனச் சேர்ந்து கொண்டது.

சீலனும் ஏற மஞ்சள் விளக்கும் எரிய அந்தோனி மிரிக்கத் தயாரானான். வாகன நெரிசலிலிருந்து மீளும் வரை சீலன் எதுவும் பேசவில்லை. அவனுக்குத் தெரியும் அந்தோனியின் குணம். பேச்சில் கவனம் பிசகி காருக்குப் பிரச்னை வருவதை அவன் பொறுக்க மாட்டான். நெரிசல் சற்றுக் குறைந்த நீர்கொழும்பு தெருவில் கார் போகும் போது அந்தோனி கேட்டான். “எங்க இந்தப் பக்கம்”

“அதையேன் மச்சான் கேட்கிறாய் .. .. கப்பலில் ஏற றெடியா வா என்று ஏஜென்சிகாரன் சொன்னான். வந்து நாலு நாள் ஆச்சு. இந்தா ரெலக்ஸ் வருது அந்தா பக்ஸ் வருது என்று அலைக்கலைச்சுப் போட்டு இப்ப சொல்றான் அடுத்த கிழமை வரட்டாம்.”

“எவ்வளவு குடுத்தாய் ? ”

“ஐயாயிரம்”

“ஐயாயிரம் போதுமா கப்பல் ஏற ? ”

“அதுக்கு மேல குடுக்க நான் எங்க போறது – இதுக்கே என்னை அடகு வைக்காத குறை.”

“எப்ப ஊருக்குப் போகிறாய் ? ”

“நாளைக்குக் காலமை பஸ் எடுக்கலாம் என்று இருக்கிறேன்.”

“நான் இப்ப எயர்போர்ட் போகிறேன். ஐயா சென்னையிலிருந்து வருகிறார். நீ எங்கே இறங்கப் போகிறாய் ? ”

“இதில இறங்கட்டா ? ”

கார் மெதுவாகியது. அவன் கேள்வி கேட்காமல் உடனே இறங்கத் தயாரானதைப் பார்க்க அந்தோனிக்கு மனம் கேட்கவில்லை.

“உன் உடுப்பெல்லாம் எங்கே ? ”

“எல்லாமே இதுதான்.” .. .. பையைக் காட்டினான்.

“பொறு .. .. நிலைமையைப் பார்த்து ஐயாவிடம் கேட்டுப் பாக்கிறேன். ஓம் என்றால் எங்களோடு நீயும் வா .. .. இல்லாவிட்டால் பஸ்ஸில் போ என்ன ? ”

“ஏதோ பார்த்துச் செய் மச்சான் .. .. உன்னோடு வந்தால் பஸ் காசு ஐம்பது ரூபா மிச்சம். நாளைக்குக் கறி புளி வாங்கலாம்.”

“ஏன்;டா பஞ்சம் கொட்டிறாய்.”

“இல்லை மச்சான் அந்தந்த மாசச் சம்பளத்தை நம்பித்தான் சீவியம் போகுது.”

வழியோரக் கடைகளில் செவ்விளனீர் குலைகள் கண்ணைப் பறித்தன. சீலன் கேட்டான் – “ஒரு செவ்விளனி குடிப்பமா ? ”

“இப்பவே நேரமாயிற்றுது – ஐயா வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தால் நல்லாயில்லை.”

“ஓம். அது சரி. இந்தக் கார் என்ன மச்சான் ஜப்பானா ? ”

“கடிலாக் கார். .. திருகோணமலையில ஐயாவிடம் மட்டுந்தான் இருக்குது.”

“அன்றைக்கு வேறு கார் ஓட்டிக் கொண்டு போனாய்!”

“அதுவும் ஐயாவிடதான். எல்லாமாக 3 கார் 2 லொறி நிக்குது.”

“என்ன பிசினஸ் மச்சான் ? ”

“எத்தனையோ பிசினஸ். இப்ப கூட சென்னைக்கு பிசினஸ் விசயமாகத்தான் போயிற்று வாறார். ”

“பெரிய லட்சாதிபதியென்று சொல்லு.”

“லட்சாதிபதியா ? இந்தக் காலத்தில லட்சத்திற்கு என்னடாப்பா மதிப்பு. இப்ப உள்ள காசு மதிப்புக்கு கணக்குப் பாத்தால் ஐயாவின் காணிகள் மட்டுமே 2 கோடி பெறும்.”

“அம்மாடி. உனக்கு என்ன சம்பளம் ? ”

“நாலாயிரம். பட்டா எல்லாம் சேர்த்து ஐயாயிரம் வரும்.”

“முதலாளி எப்படி மச்சான் நல்ல ஆளா ?”

“சும்மா சொல்லக் கூடாது நல்ல ஆள் மச்சான். கொஞ்சம் முன் கோபந்தான். அடுத்த நிமிசம் மறந்திருவார். நிறைய கதைக்க மாட்டார். ஆனா இளகின மனம். போன கிறிஸ்மசுக்கு பிள்ளைகளுக்கு சட்டை துணி தைக்க பெருநாள் காசு மூவாயிரம் ரூபா தந்தவர். என்னில் நல்ல நம்பிக்கை. நானும் அப்படித்தான். நேர்மையாக வேலை செய்யிறன்.”

“நீ குடுத்து வைச்சவன் மச்சான்.”

“ஏன்டாப்பா உன் பாடு என்ன ? ”

“நேவி வேலையில என்ன மச்சான் வெட்டெல்லாம் போக மிச்சம் இரண்டரை வரும். மூன்று பிள்ளைகளோடு எப்பிடிச் சமாளிக்கிறது. அதுதான் கப்பலில் கொஞ்ச நாள் வேலை செய்யலாம் என்று பாக்கிறேன்.”

கொழும்பு விமான நிலைய பெரிய பெயர்ப் பலகை எதிரே வரவேற்க அந்தோனி சொன்னான்.

“நீ இதில் இறங்கி நின்று கொள். நான் ஐயாவிடம் கேட்டுப் பார்க்கிறேன். எங்கேயும் போயிடாதே. சரி வராவிட்டால் பஸ்ஸில் போ.”

“சரி மச்சான் ஏதோ முடிந்த அளவிற்குப் பார் மச்சான்.”

“சரி சரி இப்ப வந்திருவன்.”

சீலன் இறங்கினான். தேநீர்க்கடை மணிக்கூட்டை எட்டிப் பார்த்தான். காசைப் பார்த்தான். நூறு ரூபாய் நோட்டொன்றும் கொஞ்சம் சில்லறையும் இருந்தன. காரில போகக் கிடைத்தால் பயமில்லாமல் மஸ்கட் சாப்பிடலாம். செவ்விளனி குடிக்கலாம்.

கால் கடுக்க நின்றதில் இடுப்பு உளைந்தது. மீண்டும் கடைக்குள் எட்டி மணி பார்த்தான். கண்ணாடிப் பெட்டிக்குள் தெரிந்த முட்டையும் தக்காளித்துண்டும் வைத்த பணிஸ் அவனைக் கவர்ந்து அழைத்தது. ஐம்பது ரூபாய்த்தாளை பையிலிருந்து எடுத்துப் பார்த்தான். கடைக்குள் போய் ஒரு பணிசைக் கடித்தான். அந்தோனி நல்லவன் எப்படியும் முதலாளியிடம் கதைத்து என்னையும் கூட்டிக் கொண்டு போவான் என்ற நம்பிக்கை துளிர்க்க மஸ்கட்டிலும் கை வைத்தான். கிழங்கு ரொட்டியின் அரைக் கருகல் அர்த்தமுள்ளதாயிருக்க அதுவும் கணக்கில் சேர்ந்து கொண்டது. நன்றாகச் சீனி போட்ட பாலற்ற தேநீரோடு எல்லாமாக இருபத்தெட்டு ரூபா வந்தது. ஒரு சிகரட் பற்றிக் கொண்டான். ஏற்றிக் கொண்டு போகாவிட்டால் இன்றைய சாப்பாடு இவ்வளவுதான்.

கடை வாசலில் காடிலக் கார் நிற்க அரைவாசி பற்றிய சிகரட்டை நூர்த்து பைக்கட்டில் போட்டபடி ஓடி வந்து வாயைத் துடைத்துக் கொண்டு பணிவாக நின்றான். அந்தோனி முன்னுக்கு ஏறும்படி சைகை காட்ட சீலன் ஏறிக் கொண்டான். காரின் உள்ளே ஏசியின் குளிர் மழையில் நனைந்தது போல இதமாக இருந்தது. பின்னால் ஐயா இருந்தார். அவரை முன்னரே அவனுக்குத் தெரியும். கதைத்ததில்லை. வறக்காபொல வரும்வரைக்கும் யாரும் எதுவும் கதைக்கவில்லை. அந்தோனிக்கு பசி வயிற்றைப் பிரட்டி எடுத்தது. குருநாகல் கடந்து கொண்டிருக்க ஐயா சொன்னார்.

“அந்தக் கடையில் நிப்பாட்டு அந்தோனி. நீங்க ரெண்டு பேரும் போய்ச் சாப்பிட்டு வாங்க” .. .. 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

“ஐயாவுக்கு ? ” .. .. இறங்கியபடியே கேட்டான் சீலன்.

“நான் பிரயாணத்தில் எதுவும் சாப்பிடுவதில்லை. இனி வீட்டுக்குப் போய்த்தான்;.”

நான் கிழங்கு ரொட்டி சாப்பிட்டனான் மச்சான் என்று சொன்னான் சீலன். அது இவ்வளவிற்கும் செமிச்சிருக்கும் இந்தக் கடையில இடியப்பம் சொதி சோக்காயிருக்கும் வா என்றான் அந்தோனி. உண்மையில் கிழங்கு ரொட்டியெல்லாம் செமித்து வெகு நேரமாகி விட்டது சீலனுக்கு. இடியப்பமும் சொதியும் சுதி சேர வேறு சில சிறிய ரகங்களிலும் கை வைத்தார்கள். இறுதியாக கருப்பட்டி வட்டிலப்பம் ஆளுக்கொன்றாக உள்ளே போக ஒரு தம்மும் அடித்து விட்டுத் திரும்பினார்கள். மிச்சக் காசை அந்தோனி ஐயாவிடம் நீட்டினான். இருக்கட்டும் என்றார் அவர்.

கார் போய்க் கொண்டிருந்தது. குருநாகலில் அன்னாசிப் பழக் குவியல் வழி நெடுகத் தெரிந்தது. ஐயா நிற்பாட்டச் சொன்னார். அன்னாசி பத்து முற்றினதா வாங்கு. வீட்டுக்கு என்றார்.

சொல்லி விட்டு ஐயா பக்கத்திலிருக்கும் கடைக்குள் இறங்கிப் போனார். அவர் வருவதற்குள் வெட்டி வைத்திருந்த துண்டுகளில் உப்பும் தூளும் போட்டு அந்தோனியும் சீலனும் சாப்பிட்டார்கள். அன்னாசிப் பழங்களை டிக்கியில் போட்டதும் ஐயாவும் வந்தார். கார் புறப்பட்டது.

சந்தியில் தரித்த போது பெட்டிக் கடையில் இரண்டு புளி மாங்காய் வாங்கிக் கடித்துக் கொண்டார்கள். கச்சான் பைக்கற்றும் வாங்கிக் கொண்டார்கள்.

சீலன் சொன்னான். “பெரிய மனுசன் பெரிய மனுசன் தான்டா. பாத்தியா. இவ்வளவு நேரத்திற்கு ஏதாவது வாயில் வைச்சாரா. நாங்கள் காய்ந்த மாடு கம்பில் விழுந்த மாதிரி.”

வீடு வந்தது. சீலன் நன்றியோடு ஐயாவைப் பார்த்தான். வளைந்து நின்று போயிற்று வாறன் ஐயா என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஐயா இறங்கினார். மனைவி வாசலில் வரவேற்றாள்.

“குளிச்சுப் போட்டு சாப்பிட வாங்க.”

அவளுக்குத் தெரியும். அவர் வழியில் எதுவும் தொட மாட்டார் என்று. அவர் குளித்து விட்டு திருநீறு ப+சி சுவாமி கும்பிட்டுவிட்டு அறைக்குள் போனார். மனைவி கையில் இன்சுலின் ஊசியோடு காத்திருந்தாள். அவர் வலது கையை நீட்ட நல்ல அனுபவமுள்ள நர்ஸ் போல எதுவித பதட்டமும் இல்லாமல் நரம்பு பார்த்து ஊசியை ஏற்றினாள் அவள். புழகி விட்டதால் வலியே தெரியாமல் அவர் சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர்ந்தார்.

பளிச்சென்ற தேக்கு மர மேசையில் வெள்ளித்தட்டில் குரக்கன் றொட்டியும் அவித்த மரக்கறியும் பாகற்காய் சூப்பும் அவருக்கென்று வழமை போலப் பரிமாறப்பட்டிருந்தன.

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்