உப்புமா – செய்யாதது

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



கிருஷ்ணனும் , கல்யாணியும் மகளின் வீட்டுக்கு பெங்களூர் வந்திருந்தனர். அவர்கள் மகள் ப்ரியாவுக்குக் கல்யாணமாகி இந்த ஆறு மாததில் இப்போது தான் அவர்கள் முதன்முதலில் மகள் வீட்டிற்கு வருகிறார்கள்.மகளின் மலர்ந்த முகமும் , மாப்பிள்ளையின் உபசரிப்பும் அவர்கள் இனிய வாழ்க்கையை பறைசாற்ற கல்யாணிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.வீடு சிறியதாக இருந்தாலும் ரசனையோடு அலங்கரிக்கப் பட்டிருப்பதை திருப்தியோடு பார்த்தாள் கல்யாணி. மாப்பிள்ளை இவர்களை ஸ்டேஷனிலிருந்து அழைத்து வந்ததும் கிச்சனுக்குள் புகுந்தவர்தான் வெளியில் வரவேயில்லை. ப்ரியாதான் அம்மா , அப்பாவின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்த கல்யாணி “என்னடி , டிஃபன் ரெடி பண்ண வேண்டாமா? நீ பாட்டுக்கு உக்காந்து பேசிக்கிட்டிருக்கே? நான் வேணும்னா குளிச்சிட்டு உனக்கு ஹெல்ப் பண்ணவா? ” என்றாள்.அதற்கு ப்ரியா “நீ ஹெல்ப் பண்றதாவது , இன்னிக்கு காலையில டிஃபன் உங்க மாப்பிள்ளயோட பொறுப்புன்னு அவரே சொல்லிட்டாரு, அதனால நீ எங்கூட உக்காந்து பேசிக்கிட்டிரு சரியா? வரிஞ்சி கட்டிக்கிட்டு கிச்சனுக்குள்ள போகாதே “என்று பதிலளித்தாள். அவள் பதிலால் அயர்ந்து போன கிருஷ்ணன் “ஏம்மா ! அவர் தான் சொன்னாருன்னா நீயும் பேசாம இருந்துட்டே? கூடமாட போய் ஒத்தாசயாவது பண்ணும்மா , பாவம் அவருக்கு கிச்சன்ல எந்த சாமான் எங்கயிருக்குன்னு என்ன தெரியும்?”என்று மகளைக் கடிந்து கொண்டார்.அதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த மாப்பிள்ளை “என்ன மாமா நீங்க என்னை சாதாரணமா நெனெச்சுட்டீங்க ,கல்யணத்துக்கு முன்னாடி வரையில நான் தானே சமச்சுக்கிட்டேன் , அதனால எல்லா சாப்பாடும் சுமாரா நல்லவே செய்வேன்”என்றார்.அவரைத் தொடர்ந்து ப்ரியாவும் “ஆமாம்பா வாரத்துல அஞ்சு நாள் தான் என் சமையல் , சனி , ஞாயிறு ரெண்டு நாளும் இவரோட கைவண்ணம்தான்” என்றாள் சிரித்தபடி. மாப்பிள்ளையும் “ஆமா !அத்தே! நீங்க உங்க வீட்டுலயும் இதே மாதிரி செஞ்சு பாருங்களேன்! , மாமாதான் இன்னும் ரெண்டு மாசத்துல ரிடயர் ஆகிடுவார்ல அப்போ மூணு நாள் மாமா சமயல் , நாலு நாள் அத்தைன்னு பிரிச்சுக்கோங்க”என்றார் . கேட்டுக்கொண்டிருந்த கல்யாணிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. “கடவுளே உங்க மாமாவாவது சமையல் செய்வதாவது? வெந்நீர் போடக்கூடத் தெரியாதே?”என்றாள் கல்யாணி சிரித்தபடி. “சும்மா சொல்லாதே கல்யாணி , நான் ஒரு தடவை ரவா உப்புமா செஞ்சேனே?ஞாபகம் இருக்கா?” என்று கிருஷ்ணன் கேட்டதும் கல்யாணியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவள் சிரிப்பதைப் பார்த்து விட்டு மாப்பிள்ளை “என்னவோ விஷயம் இருக்கு அத்தே! நீங்க சிரிக்கிறதப் பாத்தா ஜாலியான நிகழ்ச்சி போலிருக்கு ! ப்ளீஸ் சொல்லுங்களேன்”என்று கேட்க ப்ரியாவும் பிடித்துக் கொண்டாள் “அம்மா சொல்லும்மா! அப்படி என்ன உப்புமா செஞ்சாரு அப்பா? விவரமா சொல்லும்மா”என்று கெஞ்சினாள். கல்யாணியும் கிருஷ்ணனைக் கடைக்கண்ணால் பார்த்தபடி சொல்லத் துவங்கினாள்.

1980ஆம் வருடம் கல்யாணிக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை கிருஷ்ணனுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் நல்ல வேலை.அதனால் மாப்பிள்ளைக்கு அப்பா, அம்மா என்று யாருமில்லாவிட்டாலும் கல்யாணத்தை முடித்துவிட்டார் அவள் தகப்பானார்.ஒரே ஒரு தம்பியும் , கிராமத்திலிருந்த பாட்டி ஒருத்தியும் தான் உறவு கிருஷ்ணனுக்கு.சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் பாட்டி வீட்டில் வளர்ந்து பின் ஹாஸ்டல்களில் தங்கிப் படித்தனர் அவர்கள்.பெண்களுடன் பழகும் வாய்ப்போ , சமையலறைப் பக்கம் போகும் சந்தர்ப்பமோ அமையவில்லை இருவருக்கும். அதனால் சமையற்கலையில் அவர்களது ஞானம் சுத்த பூஜ்ஜியம். முதன்முதலில் வீடு வாடகைக்குப் பிடித்து தங்கள் புதுக் குடித்தனத்தைத் துவக்கினர் கல்யாணியும் , கிருஷ்ணனும். கிருஷ்ணனின் தம்பி நாராயணன் இவர்களோடு தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். வீட்டின் சுகத்தை அறியாத அண்ணன் , தம்பிகள் இருவருக்கும் கல்யாணி சுத்தமாக வைத்திருந்த வீடு சொர்க்கமாகத் தோன்றியது. மேலும் வேளாவேளைக்கு இட்லி, தோசை ,பூரி கிழங்கு என வகைவகையாக டிஃபனும் , விதவிதமான மதியச் சாப்பாடும் கல்யாணி செய்து போடவே அவர்கள் கல்யாணியை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

இதுதான் சமயம் என கல்யாணி அவர்களுக்கு சமையலின் அடிப்படை அறிவைப் புகுத்த எண்ணினாள். ஒரு தட்டில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு , உளுத்தம் பருப்பு வகையறாக்களைப் போட்டு எடுத்து வந்தாள். “இதப் பாருங்க இதுதான் துவரம் பருப்பு , இது கடலைப்பருப்பு , வெள்ளையா இருக்கே இது உளுத்தம் பருப்பு” என்று அ , ஆ சொல்லிக் கொடுப்பதைப் போல பாடம் சொல்ல ஆரம்பித்தாள். கற்றுக் கொள்பவர்களுக்கு கொஞ்சமாவது ஆர்வம் இருந்தால் தானே? அன்றைய பாடத்தின் முடிவில் அவர்களுக்கு உளுத்தம் பருப்புத் தெரிந்ததோ இல்லையோ , இவளுக்கு துவரம் பருப்புக்கும் , கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் மறந்து விடும் போலாகி விட்டது.கல்யாணியும் விடாமல் விடுமுறை நாட்களில் கிருஷ்ணனை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஐட்டமாக தயார் செய்வாள். அவளின் இந்த ஏற்பாடு கிருஷ்ணனுக்குப் பிடிக்கவேயில்லை. கல்யாணி “எனக்கே ஒடம்பு முடியல , ஒரு நாள் சாப்பாடு செய்ய முடியலன்னா என்ன செய்வீங்க?”என்று கேட்டால் , அதற்குக் கிருஷ்ணன் “ஆமா !அதுதான் ஹோட்டல் இருக்கே ?ரெண்டு வேளை அதுல வாங்கி சாப்பிட்டா கொறஞ்சா போயிடுவோம்” என்று முணுமுணுப்பான். அதைக் காதில் வாங்காதது போல இருந்து விடுவாள் கல்யாணி. அவனுக்குப் புரிகிறதோ இல்லையோ , செய்முறைகளை வாய் விட்டு சொல்லிக் கொண்டேசெய்து செய்து அதுவே பழகி விட்டது.

கல்யாணி சொன்ன நெருக்கடி இவ்வளவு சீக்கிரம் வரும் என்று அவளே எதிர் பார்க்கவில்லை. ஒரு மழைகாலத்தில் ஜுரத்தில் படுத்து விட்டாள். தலையைத்தூக்கவே முடியாத படி தலைவலி சேர்ந்துகொண்டதால் டாக்டர் தூங்குவதற்கு மாத்திரை கொடுத்திருந்தார்.அந்த இரண்டு நாட்களும் அண்ணனும் , தம்பியும் ஹோட்டலில் வாங்கியே பொழுதைக் கழித்து விட்டனர்.கல்யாணியால் அவர்கள் வாங்கி வைதிருந்த இட்லியை சாப்பிட முடியவில்லை.வெறும் பாலைக் குடித்து விட்டு படுத்து விட்டாள்.மூன்றாம் நாள் கல்யாணிக்குக் கொஞ்சம் பரவாயில்லை போல இருந்தது ஆனால் அன்று சரியான புயல் மழை. அடிக்கும் காற்றிலும் , மழையிலும் எந்த ஹோட்டலைப் போய்த் தேட? தானே எழுந்து ஏதாவது செய்து தருவதாக கூறி எழுந்தவளை கிருஷ்ணன் தடுத்துவிட்டான். ” நீ நல்லா ரெஸ்ட் எடு! நான் பாத்துக்கறேன் , எனக்குதான் எல்லாம் சொல்லிக் குடுத்துருக்கியே !!நாராயணன் வேற இருக்கான் ஒதவிக்கு. நீ கவலைப் படாமத் தூங்கு”என்று சொல்லிவிட்டு நாராயணனை தேடிப் போனான். இவளுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்று சந்தேகமாகவே இருந்தது.

கல்யாணி உள்ளறையில் படுத்திருந்தாலும் கூடத்தில் அவர்கள் பேசுவது நன்றாகக் கேட்கும். கூடத்தில் மட்டுமல்ல சமையலறைலிருந்து பேசினாலும் கேட்கும். விழிப்பு நிலையிலிருந்த கல்யாணி அவர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்ப்போம்! தேவையென்றால் போய் உதவி செய்வோம் எனத் தீர்மானம் செய்து பேசாமல் படுத்திருந்தாள். “டேய் நராயணா உங்க அண்ணிக்கு ஒடம்பு சரியில்ல! இந்தக் காத்துலயும் , மழைலயும் போய் எதுவும் வாங்கிட்டு வர முடியாது அதனால நாமளே எதாவது செஞ்சு சாப்பிட்டு அவளுக்கும் குடுப்போம் என்ன?”என்றான் கிருஷ்ணன். “அண்ணே !என்ன ரொம்ப தைரியமா எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசறே? என்ன செய்யாத் தெரியும் ஒனக்கு?”என்றான் நாராயணன் எடக்காக.”அப்பிடித்தான் நீ நெனச்சுக்கிட்டு இருக்கே! ஒங்க அண்ணி இருக்காளே அவ எனக்கு எல்லாமே கத்து குடுத்துட்டா தெரியுமா? “என்றான் கிருஷ்ணன் காலரைத்தூக்கி விடாத குறையாக. என்ன சாப்படு செய்வது என்ற விவாதம் ஆரம்பமானது. “இட்லி செய்யலாம் , அதுதான் அண்ணிக்கும் நல்லது “. “போடா அதுக்கு மாவு ஆட்டணும்”. “மாவு ஆட்டேன் , உனக்குத்தான் எல்லாம் தெரியுமே” இது நாராயணன். சற்று நேரம் மௌனம் “ஆங்! இட்லி தோசைக்கு மாவு முந்தினனாள் ஆட்டி வெச்சாதான் இன்னிக்கு செய்யமுடியும்டா மடையா”என்றான் கிருஷ்ணன் வெற்றி வீரனாக.”அப்போ பூரி செய்வோம்ணே! ” இது நாராயணந்தான்.(அவனுக்கு பூரி ரொம்பப் பிடிக்கும்)..”அது வேண்டாம்டா! எண்ணெய்! உங்க அண்ணியால சாப்பிட முடியாது” .”ஆமாமா! கரெக்ட்! அப்போ பேசாம சாதம் வெச்சு, பருப்பு வெச்சுடுவோம் அண்ணி பருப்பு சாதம் சாப்பிடட்டும் , நாம தயிர் போட்டு சாப்பிடுவோம் , ஊறுகாய் இருக்கு என்ன சொல்றே?” அது சரியாகப் பட்டது கிருஷ்ணனுக்கு. சாதத்துக்கு போட்டு சாப்பிடும் பருப்பு துவரம் பருப்பா? கடலைப் பருப்பா? அல்லது உளுத்தம் பருப்பா? என்ற பட்டிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாததால் சாதம் வைப்பது என்ற தீர்மானம் நிறைவேறவில்லை. ஒரு வழியாக ரவா உப்புமா செய்யலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றி செயலிலும் இறங்கினார்கள்.

புயல் , மழையால் மின்சாரம் நின்று போயிருந்தது. வெயில் இருந்தாலே அவர்கள் வீட்டு சமையலறை லேசாக இருட்டடிக்கும் , இந்த லட்சணத்தில் லைட் இல்லாததால் கரு கும்மென்று இருந்தது. ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்து பற்ற வைப்பதில் பத்து நிமிஷம் போனது.வீரர்கள் இருவரும் களத்தில் இறங்கினர்.கிருஷ்ணனின் குரல் ஓங்கி ஒலித்தது.பிரபஞ்ச ரகசியத்தைக் கற்றுக் கொடுக்கும் குருவின் பாவனை அவன் குரலில். “மொதல்ல ஒரு வாணலில எண்ணெய் விட்டுக் கடுகு போடணும் , அப்புறம் அது வெடிக்கும்” . “வெடிக்குமா! ஹிஹி! அது என்ன பட்டாஸா? இல்ல பாஸ்பரஸ்ஸா?” . “இந்தா இந்த நக்கல்லாம் வேணாம்! நீயே பாரேன் எப்பிடி வெடிக்குதுன்னு” என்றான் கிருஷ்ணன். அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சில நிமிடங்களில் வெடித்தது கடுகு. இப்போது நாராயணனின் குரலில் சிஷ்யனுக்குண்டான பணிவு. “எப்பிடிண்ணே இதெல்லாம் ஒனக்குத் தெரிஞ்சது?”என்றான் நாராயணன் கல்யாணி “நான் அவருக்கு குடுத்த டிரெயினிங் வீண் போகலை” என்று தன்னைத் தானே பாராட்டியபடி படுத்திருந்தாள்.கல்யாணி தன் முதுகைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள். “இனிமே அடுத்து தண்ணிய ஊத்தி கொதிக்க வெக்கணும் , கொதிச்சதும் ரவையைப் போட்டு கிண்டவேண்டியது. அவ்வளவு தாண்டா நாராயணா” என்றான் கிருஷ்ணன். “டேய்! டேய்! தண்ணி கொதிச்சாச்சு! ரவையை எடு” இருட்டில் நாராயணனுக்கு ரவை அகப்படவில்லை. தம்பியின் கூறுகெட்டத்தனத்தைப் பற்றி இரண்டு நிமிஷம் பேசிவிட்டு ரவையைத் தேடி எடுத்தான் கிருஷ்ணன். ” சற்று நேரம் பேச்சே இல்லை.”ரவையைப் போட்டாச்சு இல்ல!இனிமே நல்லா கிண்டணும்”. கரண்டி வாணலியில் உராயும் ஓசை.”அண்ணே என்னண்ணே இது?” என்றான் நாராயணன் திகைத்த குரலில். “ஆமாடா! எனக்கும் ஒண்ணும் புரியல! ரவை கரையும்னுதான் சொன்னா கல்யாணி ஆனா இது கரைஞ்சு காணாமப் போகுதே” என்றான் அதே திகைத்த குரலில். கல்யாணிக்கு இருப்புக்கொள்ளவில்லை. “ஒருவேளை பாத்திரம் ஓட்டையோ? இல்லையே அப்படின்னா தண்ணியும் கீழ போயிருக்கணுமே?” இதற்கு மேல் பொறுக்கா முடியாமல் கல்யாணீ எழுந்து சமையலறைக்கு வந்தாள்.இவளைப் பார்த்ததும் அண்ணனும் தம்பியும் அசட்டு முழி முழித்தனர். அவர்களை லட்சியம் செய்யாமல் நேரே அடுப்பைப் பார்த்தவள் தன் கண்களைத் தானே நம்ப முடியாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள்.ஆம்! உண்மையிலேயே ரவையைக் காணவில்லை. “கல்யாணி அது வந்து” என்று ஆரம்பித்தவனை நிறுத்தி விட்டு ரவை பாட்டிலைப் பார்த்தாள் அவள் போட்டு வைத்திருந்த அதே அளவு கொஞ்சம் கூட குறையாமல் இருந்தது.”இவங்க ரவைக்கு பதில் எதப் போட்டாங்க” என்று நினைத்தவள் “ஏங்க நீங்க எந்த பாட்டில்லருந்து போட்டீங்க காட்டுங்க?” என்றாள்.. அவன் காட்டியது சர்க்கரை பாட்டில். , கல்யாணி விழுந்து விழுந்து சிரித்தாள். ” நீங்க ரவைன்னு நெனெச்சு சர்க்கரயப்போட்டுருக்கீங்க அதான் அது கரஞ்சு போயிடிச்சு.” என்று சொன்னவள் விடாமல் சிரித்தாள் அண்ணனும் , தம்பியும் முதலில் திக்கென்று விழித்து பின்னர் அசட்டுச் சிரிப்பு சிரித்து அதுவே பெருஞ்சிரிப்பாக மாறியது .அன்று மூவரும் சிரித்த சிரிப்பில் புயல் மழைச் சத்தம் கூட அமுங்கிப் போய் விட்டது.

பெங்களூரின் மகள் வீட்டு வரவேற்பறையிலும் அந்தச் சிரிப்பு எதிரொலித்தது. ” அப்புறம் என்ன ஆச்சு?” என்றார் மாப்பிள்ளை. “அப்புறமென்ன வாய் விட்டுச் சிரிச்சதால நோய்விட்டுப் போச்சு. நானே அப்புறம் நெஜமான ரவையைப் போட்டு உப்புமா செய்தேன்”என்றாள் கல்யாணி. மீண்டும் சிரிப்பொலி. “அதெல்லாம் இருக்கட்டும் , சிரிச்ச சிரிப்புல எனக்கு பசிக்குது. என்ன செஞ்சுருக்கீங்க?” என்று கேட்டாள் ப்ரியா. மாப்பிள்ளை மௌனமாக இருந்துவிட்டு சத்தமாகச் சொன்னார் “ரவா உப்புமா” என்று.

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்