இல்லாத ஒன்றுக்கு…

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

ஹேமா(சுவிஸ்)


***********************************
உதறிவிட்ட கைகளில்
திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஒற்றை இறகோடு இலையான் ஒன்று
தோலைத் துளைக்க மறந்ததோ
இல்லை இயலாமையோ
இருக்கிறது அசையாமல்.

குப்பையாய்
கூட்டி அள்ளிய சொற்கூட்டம்
இலக்கியங்கள்
வல்லின மெல்லினங்கள்
யாப்பு தொகை தொடையென்று
கண்சிமிட்டியபடி
ஒற்றை இறக்கையாலேயே
கோர்த்து அடுக்கத் தொடங்க…

தலையணையோடு
சொட்டிக் காய்ந்த இரத்தக் கறை
உயர்த்திக் காட்டிய ஊனக்கைகளோடு
விளங்காமலே விழிக்கிறேன்
தலைமாட்டிலும் கொழுவியிருக்கிறது
யாரோ பரிசளித்த வீணையொன்று
கை இருக்குமிடத்திலோ
மொட்டுப்போல் ஒரு மழுங்கல்.

இறக்கை அசைத்து
படபட வென வட்டமிட்ட அது
தன் ஒற்றை இறகையும் உலர்த்தித் தர
பலமாய் சிரிக்கத் தொடங்கினார்கள்
வால் இல்லாக் கோணங்கிகள்!!!

Series Navigation

ஹேமா(சுவிஸ்)

ஹேமா(சுவிஸ்)