இறைவா நீ என்ன சாதி ?

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

சுடலை மாடன்


மனிதனாய்ப் பிறந்தேன்…
உடையொட்டும் முன்னே
சாதியொட்டிக் கொண்டது !

பள்ளிக்கூடம் சென்றேன்…
பாடம் சொன்னது சாதியில்லையென்று,
படிப்பித்தவர் கேட்டார் நான் என்ன சாதியென்று !

கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்…
படிவம் கேட்டது என்ன சாதியென்று.
கோபம் கொண்டேன் படிவத்தின் மீது !

பின்னால் அறிந்தேன் அது பாவியில்லையென்று.
கோயில் சென்றேன், சொன்னார்கள்
நீதான் படைத்தாய் சாதியையென்று !

மறைந்த பெரியவர்களுக்கும், சாதியை
மறந்த தலைவர்களுக்கும் கூட
அடையாளம் காட்டினார்கள் சாதியுண்டென்று !

பிள்ளைமார் கூடினார்கள் வஊசியைக் கொண்டாட
நாடார்கள் சேர்ந்தார்கள் காமராஜரைப் புகழ்ந்திட
தேவர்கள் குழுமினார்கள் பசும்பொன்னரை வணங்கிட !

முதலியார்கள் உயர்த்திய திருவிகவும்
பிராமணர் உயர்த்திய பாரதியும்
சாதியைய்ச் சாடியதை ஏனோ மறந்தனர் அவர்கள் !

பங்கிட்டனர் மாவட்டங்களை பேருந்துகளை.
படித்தவர் எதிர்த்ததென்னவோ தலித்துகள்
கேட்டுப்போராடிய போது மட்டும் !

பிறந்த நாடுதான் காரணமென்றெண்ணி
பறந்தடைந்தேன் அமெரிக்க நாட்டை
சிறந்து விளங்கினேன் சாதியை மறந்தே !

பாழுமென் நாக்கு பசித்தது தமிழ் பேசாமல்.
தஞ்சம் கொண்டேன் தமிழர் கூட்டங்களில்
தாய்மொழி புசிக்கலாமென்றெண்ணி !

நலமாய்க் கேட்டனர் கேள்விகள்.
புளகாங்கித மடைந்தேன் சாதியில்லையென்று;
பின்னால் உணர்ந்தேன் கேள்வியிலும் சாதியுண்டென்று !

சைவமா அல்லது அசைவமா என்றனர்.
அசைவமென்றால் பிறப்பிலா பழக்கத்திலா ?
ஆடும் கோழியுமா மாடும் சமைப்பேனாவென்று !

கும்பகோணமா கோயம்புத்தூரா ?
திருநெல்வேலியா திருச்சிராப்பள்ளியா ?
புரிந்துகொண்டேன் சாதிக்கூட்டங்கள் பற்றி !

எனக்கு வந்தது கவலை, நான் போற்றத்
தலைவனில்லையென் சாதிக்கு, உடனே சொல்லு
இறைவா உன் சாதியென்னவென்று !

sankarpost@hotmail.com

Series Navigation

சுடலை மாடன்

சுடலை மாடன்