இயற்கைக் கோலங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சத்தி சக்திதாசன்


பூமியின் மீது இரவு போர்த்தது
இருளெனும் ஒரு பொன்னாடை

ஆந்தைகளுக்கு
அப்போதுதானே விடிந்தது !
இரைந்த உலகில் ஓர்
இனிமையான அமைதி
இருள்தான் கொடுத்தது

கள்வர்களுக்கு
காரிருள்தான்
காலை வேளை
கயவர்களுக்கும் இரவே
காரியமாற்றும் பொழுது – எம்மைக்
கட்டிக்காக்கும்
காவலர்கள் பாவம்
கண்ணயரார் கடமை செய்ய

இரவுகள் அனைத்தையும்
இணைக்கும் நிகழ்வுகள்

ஆதவன் துள்ளி
ஆழ்கடலினின்றும் எழுவான்
அலறியடித்துக் கொண்டே
அழியும் இரவு
அமைதியைக் குலைக்கும்
ஆரவாரம்

ஆமாம் !

பகலெனும் கரம்
பலவந்தமாய் இழுத்திடும்
படர்ந்திருக்கும் இரவெனும் போர்வையை

விழிகளை இமைகள் மூடும்
விழுந்திடும் கனவுலகில் ஆந்தைகள் தாமே
வினைகள் முடித்து
விழிகள் மூடுவர் கள்வரும் , கயவரும்

நாட்டை இரவில் காத்தோர்
வீட்டைப் பகலில் பாதுகாப்பர்

மாலையில் இரவினைத் தழுவிய மலர்கள்
மதி கிறங்கின ஆதவன் ஒளியில்
மரக்கிளைதனில் நிழல் தேடி
மறைந்தன பறவைக் கூட்டம்

இரவும் பகலும் வருவதும் போவதும்
இன்னும் ஏக்கம் தான்
இந்த உலகில் எந்தன் – பொருள்
இல்லாத தோழன் வாழ்வில்

இயற்கையின் கோலங்கள் ஏன் தான்
இல்லாமையை
இல்லாமல் ஆக்கவில்லையோ !

0000

வினா என்னிடம் விடை யாரிடம் ?

சத்தி சக்திதாசன்

இதயமதில் விளைந்த வினாக்களின் விடையறிய எங்கு நோக்குவேன்
இன்றுவரை விளக்கமில்லா திசையற்ற கலம் போல் யான் ஏகினேன்

இவ்வாழ்வில் கொண்டது பிள்ளை மனம் தான் எனினும் அறியாமல்
இன்னல்களை வீசி யெனைத் துயரச் சேற்றினுள் புதைக்கும் செய்கை

இனிமையான சொந்தங்களே யெனக்கு இன்பம் என்றொரு கனவு
இடிந்து விழுந்ததுதான் இவ்வுலகின் நிலையாமோ ? என் சொல்வேன்

இந்த மேதினியில் உண்மை நட்பின் காட்சி யின்றி வாடிய தென் மனமே
இனிமேல் நொந்த உள்ளத்தில் நட்பின் விதைகள் விளையும் வகையாதோ ?

இல்லையிங்கு உண்மைக்கு விலை பொய்மையின் விற்பனையால் வந்த லாபங்கள்
ஈட்டவில்ல ஒரு இன்பம் தூய சிந்த கொண்டதனால் இப்புவியில் அறியாயோ

0000

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்