இப்பொழுதெல்லாம் ….

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

வேதா மஹாலஷ்மி


எழுதும் என்கவிதைகளை
கிழித்தெறிகிறேன்
உன்பிரியத்தை எனக்கல்ல,
என்கவிதைக்கே கொடுத்தாயென்ற
பொறாமையால்….

பொழியும் இசை அமுதை
குரல்வளையோடு நெறிக்கிறேன்
உன் ரசனையை உணர்வுக்கல்ல,
வெறும் என் குரலுக்கே கொடுத்தாயென்ற
அவநம்பிக்கையால்…

திமிறும் என் வளைவுகளை – தனிமையில்
தீயிட்டுக் கொளுத்துகிறேன்
உன் பாசத்தை என் பண்புக்கல்ல,
கேவலம் என் பெண்மைக்கே கொடுத்தாயென்ற
இயலாமையால்…

தனிமையும் வெறுமையும்
தினமும் என் தடம் நிறைக்க,
தாகங்கள் தீர வழியறியாமல்…
தயங்கித் தயங்கியே
உன் விழியோரமாய் பூத்திருக்கிறேன்!

தண்ணீர் தெளிக்க மறந்துபோனாலும்,
மனசெல்லாம் இன்று மரத்துப்போனாலும்,
உன் கண்ணீராவது
கடைசியில் என்னைக் குளிப்பாட்டும்
என்ற ஒரே ஒரு துளி நம்பிக்கையில்!!!

veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலஷ்மி

வேதா மஹாலஷ்மி