நெப்போலியன்
அன்புள்ள அம்மாவிற்கு….
எப்படிம்மா இருக்க உடம்புக்கு ஒன்ணும் இல்லையே அக்கா வந்துச்சா. மச்சான்
வேலைக்கு ஏதும் போகுதா இல்ல மறுபடியும் குடிச்சுப்புட்டு அலையுதா. தங்கச்சி
எப்படிம்மா இருக்கா. இந்த வருஷம் கவர்மெண்ட் பரீட்சையில்ல கவனமாய்
படிக்கச் சொல்லு. ஏதோ டியூஷன் படிக்கனும்னு போன தடவ போன் பண்ணும்போது
கேட்டிருந்துச்சே… நம்ம உண்டியல் பார்ட்டி ஜாகீருக்கிட்ட பணம் சேர்த்து
கொடுத்து விட்டிருக்கேன் அத டியூஷன் படிச்சு நெறய மார்க் எடுக்கச் சொல்லு.
தம்பி என்ன பண்றான் உடம்புல ஏதோ அக்கி மாதிரி வந்து போன மாசம்
டாக்டருகிட்ட கூட்டிட்டுப் போனதா சொன்னீயே என்னாச்சு ? இங்கே என்னோட
வேலை பாக்குற சீனன் ஒருத்தன் அவுக ஊரு மருந்து ஒன்ணு
கொடுத்திருக்கான். அத தண்ணீயில கலந்து சூடாய் தேச்சுவிட்டுக் குளிச்சா
ஒரே வாரத்தில உதிர்ந்திடும்ணு ஸ்வீ…ஸ்வீன்னு சொல்றான் அப்படின்னா
ரொம்ப நல்லதுன்னு அர்த்தம்மா. அதையும் ஜாகீர்கிட்ட கொடுத்து விடுறேன்.
மூத்தவரு என்ன பண்றாரு இன்னமும் கட்சிக்கொடிய தூக்கிக்கிட்டு வெட்டித்தனமா
சுத்துறாப்லயா…போன தடவை தேர்தல் நேரத்தில சைக்கிள் பேரணின்னு
சொல்லி தார் ரோட்டுல சறுக்கி விழுந்து மண்டையில எட்டுத் தையல் போட்டத
மறக்க வேண்டாம்னு சொல்லு…தலைவா தலைவன்னு அவுக தலைவரு உடைஞ்சு போன
அண்னன் மண்டையத்தான் ஆஸ்பத்திரியில வந்து பாக்கல உடஞ்சு போன
சைக்கிளுக்காவது காசு
கொடுத்தாரா…அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு உருப்படியா ஒழுங்கா ஒரு
வேலையப் பார்க்கச் சொல்லு…அரசியல் கிரசியல்னு சுத்தாம…இப்படி
திண்னை டாயும் போஸ்டர் ஒட்டின பசை நாத்தமுமா திரியச் சொல்லாத.
நம்ம அப்பா ஒருத்தருக்குத்தான் பயந்தாப்ல அவரு போய்ச் சேர்ந்ததுக்கப்புறம்
தாறுமாறாய் திரியுறாரு.
அண்ணிதான் பாவம்… இந்த ஆளை காதலிச்சு கல்யாணம் பண்ண பாவத்துக்கு மூணு
வாண்டுகதான் மிச்சம். அண்ணியையும் குழந்தைகளையும்
மிகவும் கேட்டதாய் சொல்லு. ஊருக்கு வரும்போது சித்தப்பா ஏரோப்ளேன்
வாங்கிட்டு வருவேன்னு சொல்லு.வீடு ஒழுகுதுன்ணு சொன்னியேம்மா…
ஜாகீர்கிட்ட அடுத்த மாசம் பணம் கொடுத்து விடுறேன். இந்த மாசம்
ஓவர்டைம்மே இல்லம்மா…அம்மா இங்க சிங்கப்பூர்ல வீடெல்லாம் சூப்பர்மா…
நீ இங்க வந்து பாத்தேன்னா உயர உயரமாய் வீடுகளப் பாக்குறதுக்குள்ள உனக்கு
கழுத்து சுளுக்கிக்கும். கண்ணாடியையும் பளிங்கையும் கூடச் சேர்த்து குழைச்ச
மாதிரி அம்புட்டு அழகு அவ்வளவு சுத்தம்.
இப்ப நான் வேலை பாக்குற இடம் தோபயான்னு ஒரு இடம்மா. அங்கே குடியிருப்பு
வீடுகளையெல்லாம் அரசாங்கத்துல உடைச்சுப்
புதுப்பிக்குறாக… எங்க கம்பெனி புதுசா பெரிய பெரிய டப்பா டப்பாவா
இருக்கிற சிமெண்டுக் கல்லு ரூமை தூக்கி வச்சு கலவை போட்டு
கான்க்ரீட் போடுற வேலை. வேலை சைட்ல எல்லாம் நம்ம ஊர் அய்யனாரு சிலை
மாதிரி ஆயிரம் மடங்கு உசரமான ராட்சச மெஷினா
நிக்குதும்மா. சிமெண்ட் கான்க்ரீட்டெல்லாம் நம்ம ஊருல மூனு மாசத்துக்கு ஒரு
தடவை வருமே தண்ணீ லாரி அது மாதிரி வண்டியில
வந்துகிட்டே இருக்கும்மா… எனக்கு மேலதிகாரி ஃபோர்மேன் ஒரு சீனரும்மா
இங் லீ சாய்னு பேரு. ரொம்ப நல்லவன்மா. காலையில சில சமயம் காபி
ரொட்டியெல்லாம் வாங்கிக் கொடுப்பாம்மா. அவனுக்கு பத்தாத சட்டை
பேண்ட்டையெல்லாம் என்னைய போட்டுக்கச் சொல்லி கொடுப்பான். கூட வேலை
பாக்குறவுங்க நாலஞ்சு பேரு நம்ம முத்துடையான்பட்டி பக்கம்தான். பெறகு ரெண்டு
சைனாக்காரன் நாலு பங்களாதேஷ்காரனுக அஞ்சாறு தாய்லாந்து ஆளுக என்னோட
சேர்ந்து வேலை பாக்குறாங்க. அவுக எல்லாத்துக்கும் என் கிட்ட வேலை சொல்லி
செய்யச் சொல்வான் என் ஃபோர்மேன். ரொம்ப உயரத்துல எனக்கு
வேலைம்மா…கான்க்ரீட் பம்ப் மூலமா மேல வர்ற சிமெண்ட் கலவைய
சென்ட்ரிங் அடிச்சு கொட்டுற வேலைதாம்மா இப்ப எனக்கு. உச்சியிலேர்ந்து
பார்த்தா பாதி சிங்கப்பூரே தெரியும்மா…அழகா நம்ம நார்தாமலை
உச்சியிலேர்ந்து பாத்தா வயலா தெரியுமே அது மாதிரி… அம்புட்டு
கட்டடம்மா… காருகம்மா.
தவக்கே… அதான் முதலாளிய இங்கே அப்படித்தான் கூப்பிடுவோம். அடுத்த
மாசத்திலேயிருந்து ஒரு வெள்ளி ஏத்துறேன்னு
சொல்லியிருக்காரும்மா…இங்கே பதினைஞ்சு நாளுக்கு ஒரு தடவை வர்ற
சம்பளக்காசை அப்படியே வட்டியோடு சேர்த்து ஏஜெண்ட்டுக்கு கட்டிப்புடுறேன்
தவறாம. அவருதான் ஊர்ல ஒரு பேச்சு இங்க ஒரு பேச்சுன்னு
மாத்திப்புட்டாரும்மா…வேலை, அலுவலகத்தில குப்பை கூட்டுற வேலைன்னு
சொல்லிப்புட்டு இங்கே மண்ணு வெட்டவும் சிமெண்ட் கொட்டவும்
ஏமாத்திப்புட்டாரு. வேலை செய்ய பயப்படலேம்மா…ஊருக்கு வர்ற ஏற்பாடு
பண்ணின காசுக்கு வட்டிக்கு வட்டி போட்டு ரொம்ப ஏத்திப்புட்டாரும்மா…ஊருல
ஒரு பேச்சு இங்க ஒரு பேச்சு… முத தடவை
ஆத்திரமாய்தான் வந்துச்சு… பெறகு நிறைய பேருக்கு இங்கே அதே கதைதான்னு
ஒன்ணும் வெறப்பா பேசிக்கிறதில்லம்மா…தேக்காவுக்குப்
போனோமா காச கட்டுனோம்மா நோட்டுல எழுதி வாங்குனமான்னு திரும்பி
வந்துர்றதும்மா… பயலுக கூட ஞாயிற்றுக்கிழமைன்னா சிராங்கூன்
ரோட்டுக் கடையில தோசையும் சிக்கனும் சாப்பிடுவாங்கே… அதுக்கு வேற
தனியா நாலு வெள்ளின்னு நான் ராத்திரி ரூமுக்கு வந்தே சமைச்சு
சாப்டுக்குறது. இந்த ரெண்டு வருசமும் கடன் கட்டி முடிக்கத்தாம்மா சரியா
இருக்கும்.
போன மாசம் இங்கே செட்டியாருக தண்டபாணி முருகன் கோயில்ல தைப்பூசக்
கொண்டாட்டம் நடந்துச்சு.
நம்ம ஊரு பூசத்துறை மாதிரியே காவடி தூக்கி ஒரே கூட்டம்மா…வேலை
முடிஞ்சு ராத்திரி போய் பார்த்தேம்மா. ராத்திரியான இங்கே எங்க
கன்ட்டெய்னர்ல அதாம்மா தங்குற ரூம்ல வானொலிப் பெட்டிதாம்மா ஒலி
96.8ன்னு நல்ல நல்ல பாட்டா ராத்திரியில போடுவாகம்மா.
ஞாயிற்றுக்கிழமையில மட்டும் பயலுக பத்து பத்து சென்ட்டா போட்டு அறுபது
காசுக்கு தமிழ்முரசு பேப்பர் வாங்கிப் படிச்சுப்புடுவோம்.
நம்ம திருவப்பூர் நியூஸ் வரைக்கும் அம்புட்டும் போட்டுப்புடுறாக.
காலையிலதாம்மா கக்கூசுக்கு குளிக்கன்னு ஒரே கூட்டமாயிடும். வேலைக்கு
ஏத்திட்டுப் போற வண்டி டிரைவர் ஒரு சிடுமூஞ்சி சீனன் அஞ்சு
நிமிசம் லேட்டா வந்தாலும் வண்டிய எடுந்துருவான். வேலைக்கு காரணமில்லாம
லீவு எடுத்தோம்னா இருபது வெள்ளிய வெட்டிடுவாங்கே… இதுக்குன்னே காலைல
நாலரை மணிக்கே கூட்டமில்லாதப்ப எழுந்து குளிச்சுப்புட்டு மறுபடியும் படுத்துக்
கொஞ்சம் கண்னு மூடி ஏழு
மணிக்கெல்லாம் வண்டியில ஏறி சரியா உட்கார்ந்துடுறது. பிறகு வண்டியிலேயே
ஒரு மணி நேரம் தூக்கம்தான். எட்டு மணிக்கெல்லாம் போய் இறங்கி வேலைய
ஆரம்பிச்சிடுவோம். ராத்திரி வச்ச சோத்தையும் குழம்பையும் பேப்பர்ல கட்டி
பொட்டலமாய் கொண்டாந்ததை மதியம்
சாப்பிட்டுக்குவோம். நடுவுல டா காபியெல்லாம் ஃபோர்மேன் வாங்கிக்
கொடுப்பான். அப்படி கிடைக்கும்போது குடிச்சுக்குறது.
நம்ம ஊர்த்திருவிழா வீடியோ கேசட்டை முத்துடையான்பட்டி பசங்க
அங்கேயிருந்து வந்துருக்குன்னு போட்டுப் பாத்தாக… எனக்கு உன் ஞாபகமும் ஊர்
ஞாபகமும் வந்துடுச்சும்மா…உடம்பை பத்திரமா பார்த்துக்கம்மா…இங்கே
எல்லாரும் வெள்ளவெளேர்னு மஞ்சளா இருக்காகம்மா…
நானும். நோ லா…ஓ கே லா…ன்னு இங்கிலீசெல்லாம் பேசக்
கத்துக்கிட்டேன்ல.
இரண்டு வருஷம் முடிய இன்னும் ரெண்டு மாசம் இருக்கு அதுக்குள்ள சிங்கப்பூர் வர்ற
கட்டுன காசு கடன் பூரா முடிஞ்சிடும்.பிறகு ஒரு வருஷம் ரெனியூவல் கிடைக்கும்னு
நினைக்கிறேன். அதுக்கு இங்கே ஆயிரம் வெள்ளி கட்டி கம்பெனி சம்பளத்துல
புடிச்சுக்குவாக… ஒரு வருஷத்துல எப்படியும் ஓவர்டைம்மெல்லாம் சேர்த்து
எஞ்சாப்பாட்டுச் செலவு போக… ஒரு லட்சமாவது
கொண்டாந்துடுவேம்மா…நம்ம உடைசல் வீட்டை தட்டிப்புட்டு ஓட்டு வீடா
ஆக்கிடுவோம்…உனக்கு சீலையும் தங்கச்சிக்கு ஜிமிக்கியும் தம்பிக்கு
துணிமனியும் எடுத்தாறேன்… உனக்கு ஏதாவது வேணுமுன்னா ஜாகீர் அண்னன்கிட்ட
சொல்லி விடு… கவலைப்படாம இரும்மா…
எனக்கு இங்கே வயசான சிங்கப்பூர்த்தமிழ்கார அம்மாக்களை கோயிலிலேயோ
தேக்காவிலேயோ பார்த்தா எனக்கு உன் ஞாபகம் வந்துடும்மா…உடனே ஊருக்கு
ஓடிப்போயிடுவோமா எல்லாத்தையும் விட்டுட்டுன்ணு தோணும்மா…ராத்திரிதான்
ரெண்டு கையும் காலும் உலக்கைய வச்சு அடிக்கிற
மாதிரி வலியா கொல்லும்மா… ராத்திரி பயலுக ஒருத்தன் காலை ஒருத்தன்
புடிச்சி விட்டுக்குவோம்மா… நான் அடுத்த வருஷம் வரும்போதே திரும்பி
சிங்கப்பூர் வர ஏற்பாடு பண்ணிட்டுத்தாம்மா வருவேன்… அப்புறம் போகப்
போக நம்ம குடும்ப கஷ்டமெல்லாம் விலகி சந்தோஷமாயிடும்மா…
ஜாகீர்கிட்ட மறக்காம நம்ம கோயில் விபூதியும் கோபால் பல்பொடியும்
கொடுத்து விடும்மா.
இப்படிக்கு….
தங்கபாண்டி .
நீங்கள் படித்து முடித்த இந்தக் கடிதம் இதோ… அங்கே ரத்தக்கறைகளுடன்
போர்த்தப்பட்டிருக்கும் தங்கபாண்டியின் சட்டைப்பைக்குள் இன்னமும் அப்படியேதான்
இருக்கின்றது. இன்று மாலை தேக்காவில் உண்டியல் பார்ட்டி ஜாகீரின் மூலம்
அவன் அம்மாவிற்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டிய கடிதம்.
உச்சியில் கான்க்ரீட் போட்டுக் கொண்டிருந்தபோது கால் தவறி தங்கபாண்டி
பன்னிரெண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து அரைமணி
நேரமாகியிருந்தது.
— நெப்போலியன், சிங்கப்பூர் —
- கடிதம் – ஆகஸ்ட் 5 , 2004
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- டயரி
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- மதுரை உயர் நீதிமன்றம்
- முழு சுகாதார திட்டம்
- மெய்மையின் மயக்கம்-11
- Bonjour le Canada
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- பேல் பூரி , கொத்துமல்லி சட்டினி , பேரீச்சம்பழ சட்டினி
- பாலூட்டும் பூச்சிகள்
- ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது.
- நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் : பிரபஞ்சன் பங்கு பெறும் இலக்கிய நிகழ்ச்சி – ஆகஸ்ட் 8,2004
- கடிதம் ஆகஸ்ட் 5,2004
- சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு – டிசம்பர் 11,12
- குறிஞ்சிவேலனுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- கடிதம் ஆகஸ்ட் 5,2004 – பரமார்த்த குருவும் சீடர்களும்
- கடிதம் ஆகஸ்ட் 5, 2004
- தீர்வு ஞானம்
- பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி
- ஸ்பைடர்மேன் தெலுங்கு டப்பிங் படத்தில் சேர்க்கப்பட்ட காட்சி
- மிஷன் இம்பாஸிபிள்
- கிரிஸ்துவ அடிப்படைவாதியின் பத்து அடையாளங்கள்
- ஆட்டோகிராஃப் 12:கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ ?
- இந்து அடிப்படைவாதியை அடையாளம் காண பத்து வழிகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- அவன் ஒரு அகதி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- சிதைந்த கனவுகள்
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- மழை
- இப்படிக்கு தங்கபாண்டி…
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- பார்வைகள்
- காத்திருப்பு
- பெரியபுராணம் – 3
- வறண்டது காவிரி மட்டுமா ?
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- வேடம்
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )
- கவிதைகள்
- திரைகடலோடியும் …
- நேசித்தவன்
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- அப்பா – ஆலமரம்
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- மாலை
- சலனங்கள்
- பாஞ்சாலியின் துயரம்
- நளாயனி
- புணரி
- துப்பாக்கி முனையில்….
- இயற்கைக் காட்சி
- என் ஊர்–அத்தாழநல்லூர்!