இந்த வாரம் இப்படி, ஏப்ரல் 14, 2002 (ஹ்யூகோ சாவெஸ் பதவி இறக்கம், மீண்டும் ஏற்பு, நாயுடுவும் பாஜகவும், ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள்

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

மஞ்சுளா நவநீதன்


ஹ்யூகோ சாவெஸ் அதிரடி பதவி இறக்கம்

ஆலண்டே போல ஒரு அதிரடி ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா வெனிசூவெலாவில் நடத்துவதாக சிலர் பேசுகிறார்கள்.

வெனிசூவெலா ஜனாதிபதி அமெரிக்காவுக்குப் பிடிக்காத எல்லா உலகத்தலைவர்களுக்கும் நெருங்கிய நண்பர். லிபியாவின் கடாபி, க்யூபாவின் காஸ்ட்ரோ, ஈராக்கின் சதாம் என்று இவர் நண்பர்கள் வரிசை நீளும்.

ஓபெக் என்ற உலக பெட்ரோல் உற்பத்தி கூட்டமைப்பில் ஏராளமான மத்தியக்கிழக்கு தேசங்களும், வெனிசூவெலா, நைஜீரியா போன்ற தேசங்க்களும் இருக்கின்றன. வெனிசூவெலாவின் முன்னாள் ஜனாதிபதி ஓபெக் கட்டுப்பாட்டை எல்லாம் கண்டுகொள்ளாமல், பெட்ரோல் உற்பத்தி செய்து பெட்ரோல் விலையை குறைக்க உதவி வந்தார்.

ஹ்யூகோ சாவெஸ் ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் உற்பத்தியை இந்த ஓபெக் கூட்டமைப்பு சொன்னக்கட்டுப்பாட்டின் கீழேயே உற்பத்தி செய்ய ஆணையிட்டார்.

இஸ்ரேலைக் குறிவைத்து, இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் கஷ்டப்பட வேண்டும் என்ற வெளிப்படையான ஆசையை வெளியிட்டு, சமீபத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹ்யூசென் ஒரு மாத காலம் பெட்ரோல் உற்பத்தி செய்யப்போவதில்லை என்று அறிவித்தார்.

இதில் முக்கியமான விளைவு என்னவென்றால், இந்த பாதிப்பு, பெட்ரோலை வெளியிலிருந்து இறக்கு மதி செய்யும் ஆசிய நாடுகளான இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் வெகுவாக பாதிக்கப்படும் என்பதுதான். ஈராக் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியதால், கச்சா எண்ணெய் விலை சுமார் 2 டாலர் அதிகரித்தது. இதனால், உபயோக பெட்ரோல் எண்ணெய் விலை சுமார் 50 சதவீதம் ஏறிவிட்டது. முன்பு சுமார் 50 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய பெட்ரோல் விலை இன்று 75 ரூபாய். இதனால், இந்தியாவின் பெட்ரோல் இறக்குமதிக்கு ஒதுக்கப்படும் பணம் சுமார் 50 சதவீதம் வரைக்கும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எந்தவித குறுகிய காலப்பிரச்னையும் கிடையாது. உலக சக்தி ஏஜென்ஸி (இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்ஸி) என்ற அமைப்பை 1970களில் மத்தியக்கிழக்கு நாடுகள் பெட்ரோல் உற்பத்தியை நிறுத்தி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை பயமுறுத்தியபோது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏற்கெனவே சுமார் 5 பில்லியன் டன் பெட்ரோலை வாங்கிப் பதுக்கி வைத்திருக்கிறது. ஆகவே, இந்த பெட்ரோலை இன்றைய வேகத்தில் உபயோகப்படுத்தினாலும், அவர்களுக்கு சுமார் 5 வருடங்கள் தாக்குப்பிடிக்கலாம்.

இந்தியாவுக்கோ அல்லது தமிழ்நாட்டுக்கோ அப்படிப்பட்ட பாதுகாப்பு ஏதும் கிடையாது. ஒவ்வொரு ரூபாய் பெட்ரோல் விலை ஏறுவதற்கும், ஒரு நிறுவனம் நஷ்டக்கணக்கு ஏறுவதற்கும், இத்தனை பேர் வேலை இழப்பதற்கும் வெகுவான தொடர்பு இருக்கிறது.

ஈராக்கின் நண்பரான சாவெஸ் அவர்களும் இவ்வாறு விலை ஏற்றத்துக்கு உதவுவார் என்று கருதி அமெரிக்கா இவரைக் கவிழ்த்திருப்பதாகப் பேசப்படுகிறது.

ராணுவம் ஒரு பெரிய முதலாளியை ஜனாதிபதியாக நியமனம் செய்தது. சாவெசுக்கு ஆதரவாக நடந்த பெரும் போராட்டத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், அந்த புது ஜனாதிபதி பதவி விலகினார். மீண்டும் சாவெஸை ஜனாதிபதியாக ராணுவம் நியமித்துவிட்டது.

மக்கள் போராட்டத்தின் மூலம் மீண்டும் பதவி ஏற்ற சாவெஸ், தன்னுடைய ஈராக், லிபியா, ஓபெக் சார்ந்த நிலைப்பாட்டை தொடர்வார் என்றே கருத இடமிருக்கிறது. ஆகவே, இந்தியாவில் பெட்ரோல் விலையை தொடமுடியாத உச்சத்தில் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஓபெக் என்ற பெட்ரோல் கார்டல் பற்றி நேரம் கிடைத்தால் எழுத முயற்சிக்கிறேன்.

***

நாயுடுவும் பாஜகவும்

நாயுடு வெகு விரைவில் குஜராத்தின் மோடியைப் பதவி இறக்காததன் காரணமாக தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் பாஜக பகுஜன் சமாஜ் கட்சியின் கான்ஷிராமுக்கும் மாயாவதிக்கும் கூட்டணி வலையை விரித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

நாயுடு பாஜக ஆதரவை விலக்கிக்கொள்ள அவருக்கு உறுதியான காரணங்கள் இருக்கலாம். விலகுவதன் மூலம் பாஜகவை இன்னும் தீவிரவாதக்கும்பலுக்குள் தள்ளிவிடும் முயற்சியாகப் போய்விடக் கூடாது என்பது என் விருப்பம். நாயுடு போன்றவர்களது தேவையினால்தான் இந்துத்வா சக்திகள் பல கட்டுக்குள் இருக்கின்றன என்பது என் அபிப்ராயம்.

என்ன நடக்கும் பார்ப்போம்.

***

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முஸ்லீம் மக்களை மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப அனுமதி அளித்திருக்கிறார்கள். இதனால், தங்கள் சொந்த நிலங்களிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக ஒடிய சுமார் ஒரு லட்சம் முஸ்லீம் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் செல்ல வழி நடந்திருக்கிறது.

சுமுக வாழ்க்கைக்கு முஸ்லீம் மக்களும் மற்ற யாழ்ப்பாண மக்களும் திரும்புவதற்கு இது முதல் படியாக இருக்கலாம்.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்