ரவி நடராஜன்
கடந்த 20 ஆண்டுகளாக இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா பயணம் நிச்சயம். தென்/மேற்கு பகுதிகளிலேயே அதிகம் நேரம் செலவிடுவது வழக்கம். 90 களின் ஆரம்பத்தில், ரொம்பவும் அழுது வடிந்தது உண்மை. அதற்கு பிறகு படிப்படியாக வளர்ந்து/தேய்ந்து வந்த இந்தியாவை அங்கு வசிப்பவர்களை விட 700 நாட்களுக்கு ஒரு முறை வரும் எனக்கு நன்றாகவே தெரிந்தது. பிதுங்கும் ஜனத்தொகையும், பெட்ரோல் வண்டித் தொகையும் அங்கிருப்பவர்களைவிட எனக்கு பூதக் கண்ணாடியில் பார்ப்பது போல தோன்றியது. அதே போல சரியும் நகர வாழ்க்கைத்தரமும் எனக்கு பெரிதாக தெரிந்தது. எதை பார்த்தும் பார்க்க முடியாமல் போனதோ, உணர்ந்தும் உணராமல் போனதோ, அது 700 நாள் கழித்து பார்க்கும் எனக்கு சுள்ளென பட்டது.
ஆரம்ப நாட்களில் (90 களில்) கட்டிய போக்குவரத்து மேம்பாலங்கள் சாதாரணமாக பட்டது. என் பார்வையில், அவை எந்த வகை மாற்றமும் உண்மையில் போக்குவரத்துக்கு செய்ததாக தெரியவில்லை. அதிகம் ஊர்த்திகள் மேலும் ஊறத் தொடங்கியதே பெரிதாக தெரிந்த்து. 10 கி.மீ. செல்ல 30 நிமிடத்திலிருந்து ஏன் 1 மணி நேரமாயிற்று? மேம்பாலங்கள் அதை 15 நிமிடமாக மாற்ற வேண்டாமா? எதற்கு இதை எல்லாம் சொல்லி நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும்? தொலைக்காட்சி புரட்சி ஆரம்ப நாட்களில் இந்தியா வரும் என்னைப் போன்றவர்களை மிகவும் ஆச்சரியப் படுத்தும். அதெப்படி, 100 ரூபாய்க்கு இத்தனை சானல்கள் சாத்தியம்? அதெப்படி, மின் மற்றும் தந்தி கம்பிகளோடு தொலைக்காட்சி கேபிள்கள் போட்டியிட முடியும்? ஏன் இந்தியர்கள் அமெரிக்க அரசியலைப் பற்றி அமெரிக்கர்களைவிட அதிகம் கவலைப் பட வேண்டும்? இப்படி பல கேள்விகள் தோன்றும்.
2000 களின் ஆரம்பத்தில் அப்படி ஒரு அதி வேக முன்னேற்றம் தெரியத் தொடங்கியது. இந்தியா வரும் பொழுது, சில முன்னேற்றங்கள் இந்தியர்களுக்கு மிக பெரிதாக பட்டது. அதாவது, கணினி மென்பொருளில் அப்படி என்ன அமெரிக்கா கிழித்துவிட்டது? எல்லோரும் இந்தியா வந்து நம் திறமையை கண்டு வியக்கிறார்கள் என்று எனக்கு பாடம் புகட்டப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் உலகில் எங்குமில்லை என்று அலோசனை வேறு கேட்காமலே வழங்கப்பட்டது. கூடவே, திரும்பி இந்தியா வந்த நண்பர்கள் பற்றியும் அதிகம் பேச்சு அடிபடும். இந்த சமயத்தில் செல்பேசிகள் வரத் தொடங்கின. பீறிட்டு கிளம்பிய செல்பேசி தொழில் நகரங்களை மிக அதிகமாக தழுவிக் கொண்டன. சிறிய செய்திகளை நோக்கியாவில் எஸ் எம் எஸ் செய்வதில் உள்ள சூட்சுமங்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே. அதுதான் இல்லை. பேந்த பேந்த விழித்த்துதான் மிச்சம். திடீரென்று கற்காலத்திற்கு மாறிவிட்டது போல தோன்றியது. ஒரு ஃபாக்ஸ் அனுப்ப பல மைல்கள் பயணம் மேற்கொண்ட இந்தியாவா இது?
2005 க்கு பிறகு பலரும் இரவு நேர வேலை செய்பவர்களாக பட்டார்கள். இந்தியர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை முறை அத்துப்படி என்பது புரிந்தது. அதில் அவர்களுக்கு பெருமை என்பதும் பேச்சிலிருந்து தெளிவாகியது. பிஸ்ஸா உண்பது, பர்கர் கொரிப்பது நாகரீகமாக பேசப்பட்டது. பல வகை இறக்குமதி கார்கள் பள பளத்தாலும் சாலைகள் போட்டியில் தோற்றது போலவே காட்சியளித்தன. ஆட்டோக்கள் முன்பைவிட அதிகம் குலுக்குவது போல பட்டது. ஆட்டோவில் சென்றால் கண்கள் கலப்பட எரிபொறுளால் எறிந்ததுதான் மிச்சம். சென்னையில் பல ஃப்ளாட்கள் மின்சார ரத்தையும் மீறி ஏஸி பெட்டிக்கு இடம் கொடுக்கத் தொடங்கின. கார்களுக்கு ஓட்டுனர்கள் வைத்துக் கொண்டு வழியில் கான்ஃபரன்ஸ் காலில் பேசுவதை பெருமையாக பேசினார்கள். அதி வேக இணையத் தொடர்புகள் வரத் தொடங்கின. நாகரங்களில் கூட்டம் அதிகமாவதும், ஃப்ளாட்கள் சிறியதாவது பற்றி பேசினால் இந்தியர்களுக்கு பிடிக்காது என்று தவிர்ப்பேன். மின்னணு சில்லை தயாரிப்பாளர்கள் இங்கு வந்து பார்த்தால் தேவலாம் என்றுகூட தோன்றும். அவர்களுக்கும் சிலிக்கான் ரியல் எஸ்டேட் பிரச்னை பாவம்! அட, சொல்ல மறந்து விட்டேனே – ஏதாவது செயற்கைகோள் ஐ.எஸ்.ஆர்.ஓ உபயத்தில் வின்வெளிக்கு சென்று இந்தியர்கள் தங்களின் முன்னேற்றத்தைப் பற்றி அலட்டிக் கொள்ள வாய்ப்பளிக்கும். அதிகம் குடிசைகளே இல்லாத நகரங்களில் திடீரென்று குடிசை குடியேற்பு புரட்சியே கண்ணில் அடிபடும். சொன்னால் கோபித்துக் கொள்வார்கள் என்று மெளனமாகி விடுவேன். விடுமுறையில் வரும்போது எல்லாம் சுபிட்சமாய் இருப்பது போல நடிப்பது அவசியம்! ஆனால் ‘ஆதார்’ போன்ற ராட்சச ப்ராஜக்டுகளைப் பற்றி வியக்காமலும் இருக்க முடிவதில்லை.
கடைசி 5 ஆண்டுகளாக எல்லா பெரிய நகரங்களிலும் சிலபல மேம்பாலங்கள் கட்டோ கட்டு என்று கட்டித் தள்ளுகிறார்கள். அதே 10 கி.மீ செல்ல 1.5 மணி நேரமாகிறது. அதி வேக இணையம், ராத்திரி கணினி மையங்கள், பின அலுவலக வேலை மையங்கள் என்று ஒரு தனி உலகம் ஒரு புறம். அதிவேக நகர ஏழ்மை ஒரு புறம். எத்தனை கோடி வரிப்பணம் கட்டினாலும் முன்னேறாத மும்பய் மின் ரயில்கள். ஏதாவது புதிய அரசியல் ஊழல்.
ஒரு புறம் இளைஞர்களால் முன்னேறத் துடிக்கும் இரவு இந்தியா. மற்றொரு புறம் இந்தியாவை பின்தள்ளும் பகலில் ஊறும் பழம் அரசியல் பெருச்சாளிகள். ’என்னதான் நடக்கிறது இந்த நாட்டில்’ என்று பல முறை தோன்றும். இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனக்கே இப்படித் தோன்றும்போது, வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்களை குறை சொல்லி புண்ணியமில்லை. இந்தியா விஜயம் செய்யும் அவர்கள் மேலெழுந்தவாரியாக இந்திய முன்னேற்றம் பற்றி காது குளிர பேசிவிட்டு தங்களின் இந்திய தொழிலுக்கு (120 கோடி மக்கள் உள்ள சந்தை!) இந்தியர் ஒருவரை பொறுப்பேற்கச் சொல்லிவிட்டு இணையம் மூலம் விற்பனை அளவை கணக்கிட்டு கொண்டு அவர்கள் ஊருக்கு சொன்றுவிடுகிறார்கள்.
எல்லோரிடமும் டிவி இருக்கிறது – மின்சாரம் உதைக்கிறது. எல்லோரிடமும் பெட்ரோல் ஊர்த்தி ஒன்று அவசியம் இருக்கிறது – சாலைகள் உதைக்கிறது. பலரிடம் வீடு இருக்கிறது – அரசாங்க லஞ்சம் விளையாடுகிறது. எல்லோரும் விமானத்தில் பறக்கிறார்கள் – விமான நிலயங்கள் ரயில்வே நிலயம் போல காட்சியளிக்கிறது. அதிவேக இணையத்தில் மேய்ந்துவிட்டு காரில் கான்ஃபரன்ஸ் கால் பேசிக் கொண்டு ஜாக்கிரதையாக திறந்த பாதாள சாக்கடையை சுற்றி பயணிக்கிறார்கள். கழுத்தில் டையுடன் செல்பேசியில் ஏஸியில் பேசும்போது குடிசைகள் கடப்பதை பார்த்தும் பார்க்காமல் பயணிக்கிறார்கள். ஆங்கிலம் அலுவலகத்தைத் தாண்டி, கல்லூரி என்று போக வீட்டில் தமிழை பின்தள்ளி பெருமை பட்டுக் கொள்கிறார்கள். யாரைக் கேட்டாலும் இஞ்சினியர் – கேள்விபடாத கல்லூரியில் படித்து மென்பொருள் அல்லது கால் செண்டர். பல்சரக்கு கடைகளில் நேற்று வெளியான ஆண்ட்ராய்ட் செல்பேசியை பழுது பார்க்க தயார்.
அட, புரிந்துவிட்ட்து. இந்த தேசத்தில் 50 அடிக்கு மேல் உள்ள அனைத்தும் அருமையாக வேலை செய்கிறது. செல்பேசி, கேபிள் டிவி, அதிவேக இணையம், பறக்கும் விமானம், இவை அணைத்தும் (விமானம் தவிர) கடந்த 20 ஆண்டுகளில் வந்த புதிய விஷயங்கள். ஆனால், 50 அடிக்கு கீழே எதுவும் சரியாக வேலை செய்வதில்லை. சாலைகள், மேம்பாலங்கள், சாக்கடைகள், இருப்பிடங்கள், மின்சாரம், குடிநீர், அரசாங்கங்கள், மனித அமைப்புகள் 60 ஆண்டுகளாக கிறீச்சிட்டுக் கொண்டு நின்று விடுவேன் என்று பயமுறுத்துகிறது. இதையே நான் ’இந்தியாவின் ’50 அடி பிளவு’ என்று சொல்ல விரும்புகிறேன்.
சற்று கூர்ந்து கவனிப்போம். 50 அடிக்கு மேல் உள்ள இந்தியா ஒரு முன்னேறிய இந்தியா. இதை ஒரு மேற்கு யூரோப்புடன் ஒப்பிடலாம். அல்லது வட அமெரிக்கா. அங்குள்ள அதே முன்னேற்றம் இங்கும் உண்டு. ஏன், சில விஷயங்களில் மேலே சொன்ன நாடுகளை விட அதிகமாகவே முன்னேற்றம். இங்கிலாந்தில் ஒரு பயணிக்கு இணையத்தில் மின்ன்ஞ்சல் பார்பதற்குள் சிலபல பவுண்டுகளை கறந்து விடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில் சேவை யாருக்கு வேண்டுமானாலும் உண்டு. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பேசி சமாளிக்க முடிவதில்ல. இந்திய நகரங்களில் சில மேற்கத்திய நாடுகளை விட அதிகமாக ஆங்கில அறிவு மற்றும் உலக ஞானம் உள்ளது. டாம் ஃப்ரீட்மேன் சொன்னதுபோல, இந்தியா ’50 ஆண்டுகளாக குலுக்கப்பட்ட ஷாம்பெயின் பாட்டில் – அது திறக்கும்போது அதன் அருகே இருக்காதீர்கள்’. ஆற்று வெள்ளம் போன்ற இளைஞர் சக்தி அதற்கு.
50 அடிக்கு கீழே உள்ள பிரசனைகளைப் பற்றி எழுதத் தொடங்கினால் இது தொடர் கட்டுரையாக வருடக் கணக்கில் வெளி வர வேண்டியது தான். இந்தியர்கள் அவர்களது அரசியலில் இந்த 50 அடி பிளவைப்பற்றி அதிகம் பேசினால்தான் தீர்வு காண முடியும். தவிர்த்தால் முடியாது. 50 அடிக்கு மேலே உள்ள முன்னேற்றங்கள் இந்தியர்களுக்கு பெருமையாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் பெருமைப்பட செய்துள்ளது என்னவோ 50 அடிக்கு மேல் உள்ள முன்னேற்றத்தை உருவாக்கிய 25 வயது இளைஞர்கள் என்றால் மிகையல்ல. ஆனால் 50 அடிக்கு கீழே உள்ள பிரசனைகளை தீர்ப்பது இயலாது என்பதைப் போன்ற ஒரு கருத்தை பல இந்தியர்களும் உருவாக்கத் தொடங்கியுள்ளது கவலையைத் தருகிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது 50 அடிக்கு கீழுள்ள முன்னேற்றத் திட்டங்களை தெளிவாக்காவிட்டால் ஓட்டு போடாதீர்கள். எங்கு புதிய சாலைகள், எங்கு ஆஸ்பத்திரிகள், எங்கு புதிய ரயில்/பஸ் நிலயங்கள், எங்கு மேம்பாலங்கள், எங்கு புதிய தொழில்கள் என்று கேட்க வேண்டும். இல்லையேல் கேபிள் டிவி, மீடியா, சினிமா என்று 50 அடி மேலுள்ள விஷயங்களை வைத்து அரசியல்வாதிகள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவற்றை இந்திய இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
பல வளர்ந்த நாடுகள் 50 அடிக்கு கீழ் உள்ள பிரசனைகளை 1950 முதல் 1960 களில் தீர்த்து விட்டார்கள். அங்கும் அவை சற்று பழுதடைந்து பராமரிப்பு காசில்லாமல் காலம் தள்ளுவது உண்மை. 50/60 களில் சுற்றுப்புற சூழ்நிலை பற்றி அறியாமல் அந்த வசதிகள் மேல்நாடுகளில் செய்யப்பட்டன. இன்று சுற்றுப்புற சூழ்நிலை பற்றிய அறிவு பரவியுள்ளது. 50 அடி க்கு கீழுள்ள வசதிகளை இந்த புதிய அறிவுடன் இந்தியா உருவாக்கினால், அந்த முன்னேற்றம் நமக்கு இன்னும் ஒரு 50 ஆண்டுகள் மேலும் உதவும். ஏனென்றால், வளர்ந்த நாடுகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்படிப்பட்ட முன்னேற்றத்தால், இன்று வளர்ந்த நாடுகளுக்கும் வளரப் போகும் இந்தியாவுக்கும் உள்ள பிளவு இன்னும் பெரிதாக வாய்ப்புள்ளது.
ரவி நடராஜன்
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
- புத்தனின் இரண்டாம்வருகை
- ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு
- நீங்கதான் சாவி..:-
- தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா
- நேற்றைய நள்ளிரவு என்பது..
- அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு
- ராஜநீதி.
- ” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்
- தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்
- உடைகிறக் கோப்பைக்குள்
- கணினி மேகம் Cloud Computing – Part 3
- தொலைந்த நான் …
- கண்ணாமூச்சி
- நட்ட நடு இரவு!
- இருந்து
- பயணி கவனிக்கிறாள்.
- வாழ்வு
- வாழ்க்கைச் சக்கரம்
- பறவைகளைப் போல வாழ்வோம்
- ஒரு குழந்தை மழை.
- ஆனந்தக் கூண்டு
- கேமராவிலிருந்து….
- அவள்..அவன்..அது..
- பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)
- வேண்டுதல்
- விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:
- இந்தியாவின் 50 அடி பிளவு
- சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14
- அந்த முத்துக்களை
- வலியொன்று…!
- நிலவும் அந்த நினைவும் மட்டும்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)
- ராஜா கவிதைகள்
- ஒரு சோகம்…..!