அசுரன்
படங்கள்: David M Mayum
மணிப்பூரிலும் இப்போது, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடும் சீற்றத்துடனான மக்கள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் பின்னணி வழக்கம்போலவே மிகவும் கொடூரமானதாக உள்ளது.
சூலை 10 ஆம் நாள் நள்ளிரவு. இரவு 12.30 மணி. மணிப்பூரிலுள்ள பமோன் கம்பு மயாய் லேய்காய் என்ற கிராமம். ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகின்றனர் அசாம் துப்பாக்கிப்படையின் 17வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் (! ?). அவர்களுடன் மணிப்புரி மொழிபேசும் சிலரும்.
வீட்டினுள் நுழைந்தவர்கள், ‘மனோரமா எங்கே ? ‘ என்று வினவியவாறு அவ்வீட்டின் படுக்கையறையினுள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த மனோரமா தேவி என்ற பெண்ணை முரட்டுத்தனமாக இழுத்து வெளியே கொண்டுவந்தனர். 32 வயதான அப்பெண்ணை இழுத்துச்செல்வதைத் தடுக்கமுயன்ற குடும்பத்தினர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
பின்னர், குடும்பத்தினரை உள்ளே வைத்து கதவை வெளிப்புறமாகப் பூட்டினர். வெளித் திண்ணையின் ஒரு மூலையில் தள்ளப்பட்ட மனோரமா கடுமையாகத் தாக்கப்பட்டார். முகத்தில் தண்ணீர் தெளித்து தெளித்து அடித்தார்கள். இதனூடே ஒரு படையினன் வீட்டினுள் வந்து சமையலறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்துச்சென்றான். மனோரமாவின் கைகால்கள் கட்டப்பட்டன. இப்படி காலை 3.30 வரை சித்திரவதைகள் அரங்கேறின.
முன்னதாக கைது ஆணையை அவரது வீட்டினரிடம் வழங்கிய இராணுவத்தினர் வேறு சில தாள்களிலும், வீட்டிலிருந்து வேறெதையும் எடுத்துச்செல்லவில்லை என்றும், பெண்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் மிரட்டிக் கையொப்பம் பெற்றுக்கொண்டனர். ஹவில்தார் சுரேஷ்குமார் (இராணுவ எண்: 123355), ற்றி. லோதா (எண்: 123916) ஆகியோரும் சாட்சிக் கையெழுத்திட்டனர். (5,000 ரூபாய் ரொக்கமும் சில தங்க நகைகளும் இவர்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாக பின்னர் குடும்பத்தினர் தெரிவித்தனர்).
‘கவலைப்படாதீர்கள்! காலையில் இரில்பங் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுவோம் ‘ என்று கூறி மனோரமாவை இழுத்துச்சென்றனர்.
உறவினர்கள் கிராம மக்களை அழைத்து தகவலைச் சொல்ல, ஆலோசித்து, அனைவரும் அதிகாலை இரில்பங் காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், காலையிலோ… ஒரு உடல் நிகாரியன் மபோவோ மரிங் கிராமத்தின் சாலையோரம் கிடப்பதாகச் செய்தி கிடைத்தது. சென்று பார்த்தபோது, அங்கே அலங்கோலமாகப் பிணமாகக் கிடந்தவர் மனோரமாவேதான்.
அவரது மார்பில் இரத்தம் கட்டியிருந்தது, உடல் முழுவதும் நகக்கீறல்கள், வலது தொடையில் ஆழமான கத்திக்குத்துக் காயம், உள்தொடையிலும் பெண்குறியிலும்கூட கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. அத்துடன் 7 துப்பாக்கிச்சூட்டுக் காயங்களும் அவரது முதுகுப்புறம் காணப்பட்டன. பின்புறம் புட்டத்தில் பாய்ந்திருந்த ஒரு குண்டு அவரது பெண்குறியைத் துளைத்து வெளியே சென்றிருந்தது. இக்கொடுஞ்செயலால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் சீற்றத்துடன் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்பினர் சேர்ந்து இப்பாதகத்திற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் நீக்கப்படக்கோரியும் முதல்வரிடம் மனு அளித்தனர். நீதித்துறை விசாரணைக்கு ஆணையிடுவதாக வழக்கமான சொற்களில் முதல்வர் சொல்ல, திருப்தியடையாத மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிவிசாரணை என்பது காலங்கடத்தும் உத்தி என்பதும், அதனை நம்பமுடியாது என்பதும் மக்களின் எண்ணம். மணிப்பூரிலுள்ள பல்வேறு தொண்டமைப்புகள், பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட 32 அமைப்புகள் சேர்ந்த போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.
இதனிடையே அறிக்கை வெளியிட்ட அசாம் துப்பாக்கிப்படையினர், சூலை 10 ஆம் நாள் இரவு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த பெண் ஒருவர் பிடிபட்டதாகவும், வாகனத்திலிருந்து தப்பியோட முயன்றபோது அவர் சுடப்பட்டதாகவும் கூறினர். அவரிடமிருந்து ஒரு வானொலியும், ஒரு கையெறிக்குண்டும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாவும் ‘வழக்கம்போல ‘ அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 5ஆம் நாள் முதல் இன்றுவரை மட்டும் இப்படி சந்தேகத்திற்கு இடமானவகையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காவலில் கொல்லப்பட்டுள்ளனர். மனோரமா தேவி படுகொலை இதன் உச்சகட்டமாய் அமைய ஒட்டுமொத்த மணிப்பூரும் கொதித்தெழுந்தது. அரசு ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்றுவருவதால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன. மாணவர்கள், பெண்கள், தொண்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராடிவருகின்றனர். சூலை 14, 24 என இரு நாட்கள் போராட்டக்குழுவால் பொதுவேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு முழுமையாக நடத்தப்பட்டது.
போராட்டத்தின் உச்சகட்டமாக பல நிகழ்வுகள் நடந்தேறின. மணிப்பூர் முற்போக்கு இளைஞர் முன்னணியின் செயலர் உள்ளிட்ட 5 இளைஞர்கள் சூலை 24 ஆம் நாள் முதல்வர் ஓ இபோபி சிங்கின் மாளிகை வாசலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தனர். அதேநாள் காலை ஆய்னம் தினேஷ்குமார் என்ற 24 வயது இளைஞர் அசாம் துப்பாக்கிப்படை முகாம் வாசலருகே தனது இரு கைகளையும் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம் நடத்தினார்.
அதற்கும் முன்னதாக, சூலை 15ஆம் நாள் நடைபெற்ற பெண்களின் போராட்டம்தான் இந்திய வரலாற்றிலேயே இதுவரை யாரும் கண்டறியாத, கேட்டறியாத அவலமாக இருந்தது.
ஆம், பத்துக்கும் மேற்பட்டப் தாய்மார்கள் அசாம் துப்பாக்கிப்படையின் முகாமான காங்லா கோட்டையின் மேற்கு வாயிலில், முற்றிலும் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றுகொண்டு, ‘எங்களைஸ்ரீ கற்பழி!, எங்களைக் கொல்! எங்கள் சதையை எடுத்துக்கொள் ‘ ( ‘Rape us, Kill us, Take our flesh ‘) என்று ஓலமிட்டனர். இத்தனை ஆண்டுகாலமாக தமது மகள்களும் மகன்களும் கொடூரமாக நடத்தப்பட்டதன் வேதனை, சித்திரவதைப்படுத்தப்பட்டதன் கண்ணீர், கற்பழிக்கப்பட்டதன் அவலம், கொல்லப்பட்டதன் சோகம் அந்தக் குரல்களில் எதிரொலித்தது.
இத்தகையதொரு போராட்டத்தை நடத்த என்ன காரணம் என்று அப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தாயிடம் கேட்கப்பட்டபோது, ‘எங்கள் மகள்களின் கெளரவம் பாதுகாக்கப்படவேண்டும். மேலும், இதற்கு மேலும் பொறுக்க இயலாத எங்களின் வேதனைக்குரலை, துயரை நீண்டகாலமாகவே யாரும் செவிமடுக்கவில்லை. அதனால்தான் இப்படியொரு போராட்டத்தை நாங்கள் நடத்தவேண்டியதாயிற்று ‘.
இந்நிலையில் சூலை 21 முதல் ஆயுதப்டையைச் சேர்ந்த 7 பேர் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். இந்தக் கறுப்புச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், மனோரமா தேவியைச் சித்திரவதைப்படுத்திக் கொலைசெய்தவர்களைஜ் தண்டிக்கவும் காங்லா கோட்டையிலிருந்து இராணுவத்தை விலக்கவும் கோரி சூலை 22ஆம் நாள் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்பட்டது. அது பலத்த போலீஸ் தாக்குதலுக்கு இலக்கானது.
இராணுவத்தினர் பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்ததால் ஏற்பட்ட காயத்தால் உணவுண்ண முடியாதுபோன, 56 வயதான மனோரமாவின் தாயார் குமன்லி சூலை 23ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மனோரமா
இச்சூழலில், மாநில அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக, பெண்களின் பிரதிநிதியாக இருக்கும் லீமாவின் பொறுப்பற்றத்தனத்தைக் கண்டித்து அவரைச் சமூக நீக்கம் செய்வதாக 3 அமைப்புகள் அறிவித்தன. இவற்றின் பிரதிநிதியான ஏ.கே. ஜானகி என்பவர் எல்லைதாண்டி பற்றி எரிந்துகொண்டிருக்கும் மக்கள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒழித்துவிடமுடியாது என்றார். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகவே லீமா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மெம்டோம்பி என்பவர் கறுப்புச் சட்டம் நீக்கப்படும்வரை மனோரமாவின் உடலைப் பெறமாட்டோம் என்று எச்சரித்தார்.
இந்நிலையில், சூலை 24ஆம் தேதி உறவினர்களின் ஒப்புதலின்றி, உறவினர்கள் எவருமே இல்லாமல், மினுதோங் பொதுச்சுடுகாட்டில் மாலை 5.45க்கு அரசால் மனோரமாவின் உடல் எரியூட்டப்பட்டதைக் கண்டித்து இரண்டாவது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.
சூலை 26ஆம் நாள் மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆளுநர் மாளிகை வாசலில் அமைதியாக போராட்டம் நடத்தினர். இதில், போலீசார் நடத்திய கொடூரமான தடியடியில் மாணவர் சங்கத் தலைவர் அசிர்ஜித் லுவாங் உட்பட பலர் படுகாயமடைந்து, மயங்கி விழுந்தனர்.
32 அமைப்புகளின் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு சூலை 29ஆம் நாள் தங்மிபண்ட் மைதானத்திலிருந்து புறப்பட்டு குமன் லாம்பக் விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துடன் முடிவடைந்த மாபெரும் பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப்பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முழங்கினர். இப்பேரணியின்போது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகைக்குண்டு வீச்சில் பெண்கள் உட்பட 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இப்படியாக, ஊரடங்கு உத்தரவுகளையும் போலீஸ் அடக்குமுறைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுகளையும் மீறி நாள்தோறும் மணிப்பூரெங்கும் பற்றிப் படர்ந்து, தொடர்ந்து நடந்துவருகின்றன போராட்டங்கள். இந்தியப் படையே வெளியேறு என்று முழங்குகின்றனர் மணிப்பூர் மக்கள்.
மாநில பாரதீய சனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் சூலை 25ஆம் நாள் கூடி, இன்னும் 3 நாட்களுக்குள் மணிப்பூரைக் கலவரப் பகுதியாக அறிவிக்கும் ஆணை திரும்பப்பெறப்படவேண்டும் என்று அரசை எச்சரித்துள்ளன.
ஆகஸ்ட் 15ஆம் நாளுக்குள் மணிப்பூரைக் கலவரப்பகுதியாக அறிவிக்கும் ஆணையும் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டமும் திரும்பப்பெறப்படாவிட்டால் தாம் பதவி விலகப்போவதாக 2 அமைச்சர்களும் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரிலுள்ள அனைத்து நாகா மாணவர் சங்கமும் போராட்டத்தில் இறங்கப்போவதாக எச்சரித்துள்ளது.
ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் 1980 முதல் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனால் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பல்வேறு அமைப்பினரும் இச்சட்டம் தேவையற்றது என்று வலியுறுத்துகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால், இச்சட்டம் திருத்தியமைக்கப்படும் என்கிறார். அதோடு, கைதுகளின்போது உள்ளூர் காவல்துறையினருடன் செல்லவேண்டும், பெண்களாயின் பெண் காவலர்கள் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்வதை மக்கள் அவநம்பிக்கையுடனேயே பார்க்கின்றனர்.
எனினும், கங்லா கோட்டை இராணுவ முகாமை வரும் டிசம்பர் 31ஆம் நாளுடன் காலிசெய்துவிடுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார். மத்திய அமைச்சர் எஸ்.இரகுபதி, ‘காங்லா கோட்டைக்குப் பதிலாக ஆயுதப்படையினருக்கு வேறிடத்தில் முகாம் அமைக்கப்பட்டு வருவதாகவும் மாநில அரசு போதிய ஒத்துழைப்பு வழங்காததால் அப்பணி நிறைவடையவில்லை ‘ என்றும் மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
மணிப்பூரை கலவரப்பகுதியாக அறிவிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என்று கோரி மணிப்பூர் முதல்வர் இபோபி சூலை இறுதிவாரத்தில் 4 நாட்கள் டெல்லி பயணம் மேற்கொண்டார். அப்போது, இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டால், பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலானோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுவதாக சாங்காய் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
இராணுவ அதிகாரியொருவர் மாநில அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே கலவரப் பகுதி சட்டம் நடைமுறைப்படத்தப்படம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், நாகலாந்து அரசு இதுவரை இருமுறை அச்சட்டத்தை தமது பகுதியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை முன்வைத்து, மத்திய அரசால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக சூலை 22அம் நாள் அது காலாவதியான பின்னரும் கைவிடப்படாமல் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மனோரமா தேவியின் பிணப்பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழிக்கப்படவில்லை என்றும் துன்புறுத்தப்படவில்லை (there has not been any rape and molestation) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தடய அறிவியல் துறையின் அறிக்கை கிடைத்த பின்னர்தான் அதனை உறுதிபடுத்த இயலும் என்று விசாரணைக்குழு தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்த மக்களின் கோபமும் செய்தி ஊடகங்களின் மீதும் திரும்பியுள்ளது. மணிப்பூரில் நடக்கும் இத்தகைய கொடுமைகளையோ அல்லது அதற்கு எதிரான மக்களின் பெரும் போராட்டங்களையோ இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதே அதற்குக் காரணம். இந்தியப்படையின் அராஜகத்தை வெளிப்படுத்த வேண்டாமென்ற தேசிய உணர்வே அதற்குக் காரணம் என்று மணிப்பூர் மக்கள் கோபப்படுவதில் நியாயம் இல்லாமலில்லை. ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் நடைமுறையில் இருப்பதால், ஏதேனும் எழுதப்போய் நம் கதியும் அதோகதியாகிவிட்டால் என்ன செய்வதென்று பத்திரிகையாள˜கள் அஞ்சுவதும் இத்தகைய செய்திகள் வெளிவராமலிருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
டெல்லி தூர்தர்சனில் (அதுதாங்க தொலைக்காட்சி) உள்ளூர் பண்பாட்டிற்கு உரிய இடம் அளிக்கப்படாமல் தமது பண்பாடும் தனித்தன்மையும் அழிக்கப்படுவதாக மணிப்பூர் மக்கள் கருதுகின்றனர். அதேவேளை உள்ளூர் மண்வாசனையோடு நிகழ்ச்சிகளைத் தந்துவந்த உள்ளூர் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தற்போதைய போராட்டச்சூழலைக் காரணமாக்கி அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஈழத்திலும் வீரப்பன் காட்டிலும் என்ன நடக்கிறதோ அதேதான் மணிப்பூர் நாட்டிலும் நடக்கிறது. இராணுவம் என்பதன் இலக்கணமே இதுதானோ ?
கண்ணகியின் அறச்சீற்றத்துடன் முன்னின்று போராட்டம் நடத்திவருகின்றனர் மணிப்பூர் பெண்கள். கண்ணகியில் முலை குண்டால் பற்றி எரிந்த மதுரையைப்போல எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர். இந்நியாய நெருப்பு அணைக்கப்படாவிட்டால் ஒருநாள் இந்தியாவே எரிவது நிச்சயம்.
—-
Box News:
மணிப்பூர் மக்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளவை:
கலவரப்பகுதி சட்டம்
அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டக் களமாக உள்ள மணிப்பூர் கலவரப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958
மணிப்பூர் மக்களால் எதிர்க்கப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 கொடூரமான கறுப்புச் சட்டங்களில் ஒன்று. இதன் 4வது பிரிவின்படி ஒரு பகுதி கலவரப்பகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டால் அங்கு ஆயுதப்படையினருக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டுவிடுகிறது. கட்டளைJடும் அதிகாரமற்ற அதிகாரிக்குக்கூட சுடுவதற்கு ஆணையிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவம் ஆணையின்றியே யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், சுடலாம், பொருட்களை நாசப்படுத்தலாம். இச்சட்டத்தின் 6வது பிரிவின்படி ஆயுதப்படையினர் மீது மத்திய அரசின் ஒப்புதலின்றி யாரும் வழக்குத் தொடர முடியாது.
இச்சட்டத்தை எதிர்த்து 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டெல்லியிலுள்ள உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இச்சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று கோரி சர்மிளா என்ற பெண்மணி, இம்பாலுக்கு அருகிலுள்ள மலோமில் இந்தியப் படையினரால் 11 கொல்லப்பட்ட 2000 நவம்பர் 2ஆம் நாள் முதல் கடந்த 4 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார். சில அமைப்புகள் இவர் பெயரை நோபல் பரிசுக்கும் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
மணிப்பூரானது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பத்திரிகையாள˜கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த யாரும் மணிப்பூருக்குள் செல்ல முடியாது. அவ்வாறு செல்லவேண்டுமானால் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து சிறப்பு அனுமதி (விசா) பெறவேண்டும். அதுவும் 14 நாட்களுக்குத்தான் தரப்படும். அதில், மணிப்பூர் தலைநகரான இம்பாலில் 3 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். கொடுமை என்னவென்றால் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களுக்கும் இதே விதிகள் பொருந்தும்.
காங்லா கோட்டை
இக்கோட்டையானது மணிப்பூர் மன்னர்களின் அதிகாரத்தின் சின்னமாகும். 1892ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் வீழும்வரை இது அவர்களின் அதிகார மையமாக இருந்தது. அதன்பின் இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. இக்கோட்டையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கை 1977ஆம் ஆண்டு முதலே மணிப்பூர் மக்களால் முன்வைக்கப்படுகிறது. 1992ல் மத்திய அமைச்சர் எம்.எம். ஜேக்கப் இதனை காலி செய்வது தொடர்பாகப் பேசினார். 1997ஆம் ஆண்டு மத்திய அரசானது 2000 சூலை முதல் நாளுக்குள் முழுமையாக அங்கிருந்து படையை விலக்கிவிடுவதாக உறுதியளித்தது. வழக்கம்போல அதுவும் காற்றில் பறந்தது. இப்போது டிசம்பர் 31க்கும் அது நிறைவேற்றப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சர் சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அங்கிருந்து இந்தியப்படை திரும்பப் பெறப்பட்டால் அதுவொரு வரலாற்றுத் திருப்பமாகவே இருக்கும்.
—-
(asuran98@rediffmail.com)
- கடிதம் – ஆகஸ்ட் 5 , 2004
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- டயரி
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- மதுரை உயர் நீதிமன்றம்
- முழு சுகாதார திட்டம்
- மெய்மையின் மயக்கம்-11
- Bonjour le Canada
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- பேல் பூரி , கொத்துமல்லி சட்டினி , பேரீச்சம்பழ சட்டினி
- பாலூட்டும் பூச்சிகள்
- ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது.
- நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் : பிரபஞ்சன் பங்கு பெறும் இலக்கிய நிகழ்ச்சி – ஆகஸ்ட் 8,2004
- கடிதம் ஆகஸ்ட் 5,2004
- சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு – டிசம்பர் 11,12
- குறிஞ்சிவேலனுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- கடிதம் ஆகஸ்ட் 5,2004 – பரமார்த்த குருவும் சீடர்களும்
- கடிதம் ஆகஸ்ட் 5, 2004
- தீர்வு ஞானம்
- பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி
- ஸ்பைடர்மேன் தெலுங்கு டப்பிங் படத்தில் சேர்க்கப்பட்ட காட்சி
- மிஷன் இம்பாஸிபிள்
- கிரிஸ்துவ அடிப்படைவாதியின் பத்து அடையாளங்கள்
- ஆட்டோகிராஃப் 12:கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ ?
- இந்து அடிப்படைவாதியை அடையாளம் காண பத்து வழிகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- அவன் ஒரு அகதி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- சிதைந்த கனவுகள்
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- மழை
- இப்படிக்கு தங்கபாண்டி…
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- பார்வைகள்
- காத்திருப்பு
- பெரியபுராணம் – 3
- வறண்டது காவிரி மட்டுமா ?
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- வேடம்
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )
- கவிதைகள்
- திரைகடலோடியும் …
- நேசித்தவன்
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- அப்பா – ஆலமரம்
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- மாலை
- சலனங்கள்
- பாஞ்சாலியின் துயரம்
- நளாயனி
- புணரி
- துப்பாக்கி முனையில்….
- இயற்கைக் காட்சி
- என் ஊர்–அத்தாழநல்லூர்!