ஆசாரப் பூசைப் பெட்டி

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர் ?

‘ஆசாரப் பூசைப் பெட்டி! ‘

அப்படி ஒரு பெயரைத் தன் அலுவலகத் தோழர்கள் தனக்கு வைத்திருந்தார்கள் என்பது அனந்தராமனுக்கு வெகு நாள்கள் முன்பு வரையில் தெரியாதிருந்தது. கொஞ்ச நாள்களுக்கு முன்னால்தான் தனக்கு அவர்கள் வைத்திருந்த கேலிப்பெயர் அவனுக்குத் தெரிய வந்திருந்தது. அது கூட யாரும் சொல்லி அவனுக்குத் தெரியவில்லை. மிகவும் தற்செயலாக.

சிற்றுண்டிப் பொட்டலத்தைத் தன் மேசை மீது வைத்துவிட்டு அவன் கை கழுவச் சென்றிருந்த நேரத்தில் அவனுடைய எதிர் மேசைக்காரன் சம்பத்து, “ பொட்டலத்தைப் பிரிச்சுப் பாக்கலாமாடா ?” என்று கேட்க, அவன் சகபாடிகள், “வேணாண்டா. அவன் சமாசாரந்தான் நமக்குத் தெரியுமே! எதுக்குப்பா வீண் வம்பு ?” என்றனர். சற்றே இரைந்த குரலில், “அவன் ஒரு முசுடுடா,” என்று யாதமூர்த்தி கருத்துத் தெரிவித்தான்.

“அதென்னடா, அப்படி ஒரு வழக்கம் அவன்கிட்ட ? தான் கொண்டு வர்றதிலே யாருக்கும் ஒரு விள்ளல் கூடக் கொடுக்க மாட்டான், தானும் யார் கிட்டேருந்தும் வாங்கிச் சாப்பிட மாட்டான். விசித்திரமா இருக்குப்பா. நீயும் தர வேண்டாம், நானும் தரல்லைங்கிறது ஒரு கொள்கையா யிருக்கலாம். ஆனாலும், காசு விஷயத்தில் வேணும்னா அப்படிக் கறார இருக்கலாம். டிஃபன் விஷயத்தில கூடவா! சே! சரியான கட்டுப்பெட்டிப்பா அந்தாளு!” – இது சம்பத்து.

“நம்ம தாமோதரன் ‘ஆசாரப் பூசைப் பெட்டி ‘ன்னு அவனுக்கு வெச்சிருக்குற பேரு நொம்பப் பொருத்தமான பேருதாம்ப்பா. நீ என்ன சொல்றே ?” – இது பெருமாள்.

கை கழுவச் சென்றிருந்த அனந்தராமன் தப் பிரிவுக்குள் புகுவதற்கு முன்னால், தன் பெயரை யாதவமூர்த்தி சொன்னது காதில் விழுந்ததால் நின்று தற்செயலாய்க் கேட்க நேர்ந்தவைதான் இந்தச் சொற்பரிமாற்றங்கள்.

அனந்தராமன் அப்போதுதான் வருகிறவன் போல் தொண்டையைக் கனைத்துவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டு பிரிவுக்குள் நுழைந்தான். அவன் என்றும் தன் சிற்றுண்டிப் பொட்டலத்தையோ சம்புடத்தையோ மேசை மீது வைத்துவிட்டுக் கை கழுவச் சென்றதே இல்லை. கை கழுவிவிட்டுத்தான் சிற்றுடியை வெளியே எடுப்பான். இன்று என்னவோ தவறுய்தலாய்ப் பொட்டலத்தை எடுத்து முதலில் வைத்துவிட்டான்.

அனந்தராமன் நுழைந்ததும் அங்கே ஒரு பேசாமை விளைந்தது. அவன் தனது நாற்காலியில் உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்தான். அடுத்த கணத்தில் தோசையும் எள்ளு மிளகாய்ப்பொடியும் கலந்த வாசனை அங்கே பரவி அனைவரின் மூக்குகளையும் துளைத்தது. யாதவமூர்த்தி தயிர் சாதமும் எலுமிச்சங்காய் ஊறுகாயும் கொண்டுவந்திருந்தான். சம்பத்து, அரிசி உப்புமா. தியகு, ரவை உப்புமா. வெங்காயம் போடதது. அதைச் சாப்பிடுவதை விடவும் பட்டினி கிடக்கலாம் என்பது எண்ணெய்ப் பசையே இல்லாத அந்த உப்புமாவை விதியே என்று அவனோடு பகிர்ந்துகொள்ளும் நண்பர்களின் கருத்தாகும். ராகவசுந்தரம் எப்போதுமே இட்டிலிதான். இட்டிலி பூப்போல இருந்தாலும் எண்ணெய் ஊற்றி எடுத்துவர மாட்டானாதலால், அதை விழுங்கும் போது மென்னியைப் பிடிக்கும். தொட்டுக்கொள்ள வாகாக எதுவும் எடுத்து வர மாட்டான். அலுவலகத்தில் ஒர் சின்ன டப்பாவில் சர்க்கரை எப்போதும் வைத்திருப்பான். அதிலிருந்து எடுத்துப் போட்டுக்கொள்ளுவான். சர்க்கரையைத் தொட்டுக் கொள்ளுவது இட்டிலி தின்பதைப் பற்றி அந்தப் பிரிவில் இருந்தவர்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. சர்க்கரையைத் தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளுவானே தவிர, நண்பர்களிடமிருந்து தினமும் ஊறுகாய், மிளகாய்ப்பொடி, சட்டினி, சாம்பார் என்று கேட்டு வாங்கி இட்டிலிகளுடன் பிசிறிக்கொள்ளாமல் இருக்கமாட்டான். வாயைத் திறந்து கேட்டுவிவுவா னாதலால், மனத்துள் திட்டிக்கொண்டே கொடுத்துத் தொலைப்பார்கள். வீட்டிலிருந்து எதுவும் எடுத்து வராமல் இப்படி ராப்பிச்சைக்காரன் மாதிரி கையேந்துகிறானே என்று எல்லாருக்குமே அவன் மேல் எரிச்சல்தான். இருந்தாலும், சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுகிற வழக்கத்தைக் கடைப்பிடித்து வருவதால் யாரும் வெளிப்படையாக முகங்கடுத்துக் கொண்டதில்லை.

யாருடனும் நெருக்கமான பழக்கம் வைத்துக் கொள்ளாத நிலையிலும் கூட, அனந்தராமனுக்கு இந்த விஷயங்கள் யாவும் நன்றாகத் தெரியும். மவுனம் காப்பவர்களுக்கே உரிய அசாத்திய உள்ளுணர்வும், கண்கள், செவிகளின் உன்னிப்பும் அவனுக்கு நிறைய உண்டு.

அனந்தராமன் தோசையை விண்டு வாய்க்குள் திணித்துக்கொண்டான். எதிர்மேசைப் புறத்திலிருந்து புறப்பட்டு வந்த தோசை-மிளகாய்ப்பொடியின் மணம் தாக்கியதில் யாதவமூர்த்தியின் நாவு உமிழ்நீரில் முழுகிப்போயிற்று. சம்பத்து ஒரு பொறாமையுடன் அனந்தராமனை வெறித்தான். மற்றவர்களும் அப்படியே ஓர் ஆற்றாமையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அவன் தினமும் நல்ல, நல்ல டிஃபனாக் கொண்டு வறாண்டா. அதன் நம்மோட பங்கு போட்டுக்க இஷ்டப்பட மாட்டெங்குறான்,” – இது யாதவமூர்த்தி முணுமுணுப்பாய்ச் சொன்னது.

“அது மட்டுமில்லேடா. அவன் சரியான ஆசாரக்காரன்னு நினைக்கிறேன். ஒரு நாளாவது நெத்தியிலே திருநீறு இடாம வர்றானா, பாத்தியாடா ? சரியான பத்தாம்பசலிப் பாப்பான்!” – இது சம்பத்து – அவனே ஒரு பார்ப்பனன் ஆயினும் – அவனுக்குச் சொன்ன பதில் முனகல்.

‘பாப்பான் ‘ என்கிற சொல்லை மட்டும் தன்னை மறந்த கடுமையுடன் சம்பத்து உச்சரித்து விட்டமையால், அது அனந்தராமனின் காதுகளில் விழுந்து அவற்றின் மடல்களில் சிவப்பேற்றியது. ஆனால், அவன் தலையைத் தூக்கிப் பாராமல் கருமமே கண்ணாக இருந்தான்.

‘எனக்கு அறிவில்லை. இனிமேல் டிஃபன் கொண்டுவரக் கூடாது. இவங்க கொண்டு வர்றதெல்லாம் பெரும்பாலும் எண்ெணெளய்ப் பசையே இல்லாத இட்டிலி, உப்புமாதான். என்னைக்காவது தோசை. அடிக்கடி தயிர் சாதம்கிற பேர்லே இவங்க கொண்டுவர்றதெல்லாம் வெறும் மோர் சாதம்தான். என் டிஃப்ன் மேலே ரொம்ப நாளாவே இவங்களுக்கெல்லாம் ஒரு கண்ணு. இனிமே நானும் மோர் சாதம் கொண்டு வரணும். காலையிலே வீட்டிலேயே டிஃபனை முடிச்சுக்கலாம்.. . .; – அனந்தராமனின் எண்ணம் இது இப்படி ஓடியது.

. . . மறு நாள் பிற்பகலில் அனந்த ராமன் தனது டப்பாவைத் திறந்த போது அவனுடைய சகபாடிகள் பாதிச் சாப்பாட்டில் இருந்தார்கள். தலையாய வேலை ஒன்றில் அவன் ஈடுபடவேண்டி இருந்ததால் ட்ப்பாவை திறப்பதில் தாமதம் விளைந்துவிட்டது. எல்லார் பார்வைகளும் சொல்லிவைத்தாற்போல் அவனது டப்பாவின் மீது பதிந்தன.

அட! மோர் சாதம்!

“என்னப்பா, அனந்தராமா! நீயும் என்னை மாதிரி மோர் சாதம் கொண்டு வந்திருக்கியே!” என்று யாதவமூர்த்தி கேட்டுவிட்டு அனந்தராமனின் பதிலுக்கு ஆவலாய் அவனைப் பார்த்தான்.

அனந்தராமன் வாயைத் திறந்து பதில் என்று வார்த்தைகளை உதிர்க்காமல், ஒரு புன்சிரிப்பை மட்டுமே தன் தன் விடையாக அளித்தான்.

யாதவமூர்த்தி விடவில்லை: “என்னப்பா, பதில் சொல்லாம இருக்கே ?” என்று விடாப்பிடியாகத் தொடர்ந்தான்.

“இனிமே என்னைக்குமே மோர்சாதம் தான்!”

இபோது எல்லருடைய பார்வைகளுமே வியப்புடன் அவன் மீது விழுந்தன.

“அதேம்ப்பா அப்படி ? நாங்க கூட இப்பல்லாம் டிஃபன் கேட்டு உன்னைத் தொந்தரவு பண்றதில்லையே ?” என்று சம்பத்தும் தலையிட்டான்.

“அட, என்னப்பா என்னவோ ‘இப்பல்லாம் ‘குறே ? நாம கேட்டு என்னைக்குத்தான் அவரு குடுத்திருக்காரு ?” என்று ராகவசுந்தரம் கிண்டினான்.

“அதான் தெரிஞ்ச விஷயமாச்சே! அவரு ரொம்ப சுத்தம்! நாமெல்லாம் குடுததா வாங்க மாட்டாரு. அவரு குடுத்தா நம்ம கிட்ட வாங்கிக்க வேண்டி வருமே! அதனாலதான், குடுக்கவும் வேணாம், வாங்கவும் வேணமுனு இருக்காரு!” என்று தியகு சிரித்தான்.

எப்போதும் கல் மாதிரி உணர்ச்சியற்று இருக்கும் அனந்தராமனின் முகம் அவர்கள் பேச்சால் முதன் முறையாக மாறியது. உதடுகள் துடித்தாற்போல் தோன்றியது உண்மையாகவா அல்லது தனது கற்பனையா என்பதைத் திட்டவட்டமாய்த் தெரிந்துகொள்ள யாதவமூர்த்தி அவனைக் கூர்ந்து பார்த்தான். இத ?ற்குள் அனந்தராமன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு இயல்பாகிவிட்டான். வழக்கம் போல் அவனது முகம் ஒரு மரத்தட்டுப் போல் ஆகியது.

அனந்தராமன் அவசரமாஇ அள்ளிப் போட்டுக்கொண்டு கக் கழுவ எழுந்து போனான்.

“எங்கம்மா சொல்லுவாங்கடா – ஆசாரப் பூசைப் பெட்டி, அதன் மேலே தோசைப் பெட்டின்னு! சுத்தத்துக்காக ஏதோ கொஞ்சம் ஆசாரமா யிருக்க வேண்டியதுதான். ஆனா, அதுக்காக இப்படியா! அதுவும், இந்தக் காலத்திலே! ஆஃப்பீஸ்ல உபயோகிக்கத் தனி டம்ப்ளர், ஸ்பூன் எடுத்துட்டு வர்றான். அந்த டம்ப்ளர்லதான் காண்டான்லெ காப்பியை வாங்கிக்கிறான். . .” என்று கூறிக்கொண்டு போன சம்பத்தை, “டவராவும் கொண்டுட்டு வர்றாண்டா. அத்த விட்டுட்டியே!” என்று இடைமறித்த தியாகு சத்தம் போட்டுச் சிரித்தான்.

கழுவுதொட்டியை நோக்கி நடந்துகொண்டிருந்த அனச்தராமனின்

செவிகளை வந்தடைந்த அந்தச் சிரிப்போசை அவர்கள் தன்னைப் பற்றித்தான் ஏதோ கிண்டலடித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கல் என்று அவனை நினைக்க வைத்தது. அவன் ஒரு பெருமூச்சுடன் நடந்தான்.

“ . . . ‘இனிமே என்னைக்கும் மோர் சாதம்தான் ‘ நு சொன்னானே ஒழிய ஏன்னு சொல்லல்லே! `கவனிச்சியா ? திருப்பித் திருப்பி ரெண்டு வாட்டி கேட்டும், ஆளு வாயே தொறக்கல்லே!” என்று யாதவமூர்த்தி வியப்புடன் சலித்துக் கொண்டான்.

“அவன் தினமு வாய்க்கு ருசியா வகை வகையான டிஃப்ன்களாக் கொண்டுட்டு வர்றான் – அடை, தோசை, ஆனியன் ஊத்தப்பம், காஞ்சிபுறம் இட்டிலி, சேவை, அது, இதுன்னு! நாமளோ உப்புச் சப்பில்லாத அயிட்டங்களா எடுத்துட்டு வர்றோம். அதனால, நம்ம கண்ணு பட்டு ஏதாவது ஆயிடுமோன்னு ஞானோதயம் வந்திருக்கும் அந்தாளுக்கு. அதான் அதான் இனிமே மோர் சாதம்தான் கொண்டுவர்றதுன்னு முடிவு பண்ணியிருப்பான். வேற என்னடா காரண்ம் இருக்க முடியும்குறே ?” என்ற ராகவசுந்தரம் சிரித்தான்.

அன்று தன் பிறந்த நாள் என்பதான் பிற்பகலில் யாதவமூர்த்தி எல்லாருக்கும் காப்பி வாங்கிக் கொடுத்தான். காண்டானிலிடுந்து வந்த காப்பியை வழக்கம் போல் அனந்தராமன் தன் தம்ப்ளரில் ஊற்றச் சொல்லி எடுத்துக் குடிக்கலானான். குடித்து முடித்ததும் தம்ப்ளரைக் கழுவி வைக்கும் எண்ணத்துடன் அதை எடுக்க வந்த அவர்கள் பிரிவைச் சேர்ந்த பியூன் கந்தையாவை, “வேணாம்ப்பா. என் டம்ப்ளரை நானே கழுவிக்கிறேன்,” என்று தடுத்தான். பின்னர், அதை எடுத்துக்கொண்டு கழுவுதொட்டியை நோக்கி வெளியே நடந்தான்.

“இம்புட்டு ஆசாரம் பாக்குறவன் காண்டான் காபிபயை மட்டும் குடிக்கிறானேப்பா ? அது எப்படிப்பா ? தன்னோட டம்ப்ளரைக் கூடா யாரும் தொடக் கூடாதுன்றானே! சரியான மடிசஞ்சிப்பா!” என்று யாதவமூர்த்தி ஆத்திரமாய்ச் சொன்னான்.

. . . . .அன்றிரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிய கணவனிடம், “டாக்டர் என்ன சொன்னார் ?” என்று மைதிலி ஆவலாய் விசாரித்தாள்.

“ஆரம்ப நிலையிலேயா வந்துட்டதால கம்ப்ளீட்டா சரியாப் போயிடுத்துன்னு சொல்லிட்டார். இனிமே மருந்து கூட சாப்பிட வேண்டாம்னு சொல்லிட்டார்.”

மைதிலி கண்களில் பொங்கிய கண்ணீருடன் அவன் கைகளைப் பற்றிக்கொண்ட போது, “மைதிலி! வேணாம். சரியாப் போச்சுன்னு அவர் சொல்லிட்டாலும், இன்னும் ஒரு அஞ்சாறு மாசம் வரைக்கும் நீ என்னைத் தொடவேண்டாம். . .” என்று அவளை அவன் மெதுவாக அப்புறப்படுத்தினான்.

“அப்பா!” என்று வழக்கம் போல் தன் கால்களைக் கட்டிக்கொள்ள வந்த குழந்தையிடமிருந்து விரைவாக நகர்ந்து, “மைதிலி! இவனை எடு, சொல்றேன். . . கண்ணா! இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோடா, ராஜா! அதுக்கு அப்புறம் அப்பா உன்னைத் தூக்கி வெச்சுப்பேன், கடைக்குக் கூட்டிண்டு போவேன். பீச்சுக்குக் கூட்டிண்டு போவேன். எல்லாம் பண்ணுவேன். அப்பாவுக்கு இப்ப உடம்பு சரியில்லே, பாரு, அதான்!” என்ற அவன் கண் கலங்கினான்.

கணவனுக்கு நம்பிக்கை யளிப்பதற்காக, ‘தொழு நோய் என்பது தீர்க்க முடியாத நோய் அன்று ‘ எனும் வாசகம் உள்ள _ மைதிலி மாட்டியிருந்த – சுவரொட்டி புதிய மெருகுடன் மின்னியது.

. . . . . . . . .

.

jothigirija@hotmail.com “மந்திரக்கோல்” / 1.5.1989

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா