இரா முருகன்
அத்தியாயம் இருபது
ஏகக் கோலாகலமாகக் கிளம்பினார்கள் சங்கரனுக்குப் பெண் பார்க்க.
மொத்தம் இரண்டு கோஷ்டி. கல்யாணி அம்மாளின் ஒன்று விட்ட சகோதரன் கச்சேரி ராமநாதய்யர், ஜோசியர் நாணாவய்யங்கார், சுப்பிரமணிய அய்யரின் அம்மான்சேயான அறுபது வயது கரம்பக்காடு கிருஷ்ணய்யர் (உத்தியோகம் சுகஜீவனம்), அய்யரின் அத்தான் பிரம்மஸ்ரீ சுந்தர கனபாடிகள், இவர்கள் எல்லோருடைய அகத்துக்காரிகள், அப்புறம் நித்திய சுமங்கலி சுப்பம்மாள் என்று ஒரு குழு. இது ஊர் எல்லாம் சுற்றிக் கொண்டு அம்பலப்புழை போய்ச்சேர ஏற்பாடு.
சுப்பிரமணிய அய்யர், சங்கரன், கல்யாணி அம்மாள் என்று இன்னொரு கோஷ்டி. இது விசேஷத்துக்கு இரண்டு நாள் முன்னால் கிளம்பிப் போய்ச் சேருவதாகத் திட்டம். கடையை ஒரு வாரத்துக்கு மேல் வியாபாரம் இல்லாமல் முடக்கி வைக்க சங்கரனுக்கு இஷ்டம் இல்லை.
முதல் கோஷ்டி அரசூரில் இருந்து கிளம்பி குறைந்த தூரத்துக்கு மாட்டு வண்டி குடக்கூலிக்குப் பிடித்துக் கொண்டும், காலாற நடந்தும் அங்கங்கே தங்கி இளைப்பாறியும் வழியில் கோவில்களில் தரிசித்துக் கொண்டும் கொல்லம், ஆலப்புழை வழியாக அம்பலப்புழை சேர்வது என்று திட்டம் பண்ணிக் கொண்டு இருபது நாள் முன்னாடியே கிளம்பி விட்டார்கள் இவர்கள்.
தூரம் நின்று போன ஸ்திரீகள் என்பதால் பெண்டுகளைக் கூட்டிப் போக நாள் கணக்கு எதுவும் ரகசியமாக விரல் மடக்கிப் பார்க்க வேண்டியிருக்கவில்லை. சுப்பம்மாள் மூத்த குடிப் பெண்டுகளை அழுது தொழுது வேண்டிக் கொண்டு அவர்களில் எவளொருத்திக்காகவும் இன்னும் இரண்டு மாச காலம் தூரத்துணியை அரையில் கட்டிக் கொள்ளத் தேவையிலை என்று சத்தியப் பிரமாணம் வாங்கி விட்டாள்.
அவள் இப்போதெல்லாம் சுப்பிரமணிய அய்யர் வீட்டுக்கு வருவதே குறைந்து போனது. அந்த ராட்சசி துர்மரணப் பெண்டு மற்ற நித்திய சுமங்கலிகளை எல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டு சுப்பம்மாள் மேலேறி அவளை இம்சிக்கிறது தாளாமல் எடுத்த முடிவு இது.
சுப்பம்மாள் வேண்டிக் கொண்டதால் ஜோசியர் நாணாவய்யங்கார் ஏகப்பட்ட கிரந்தங்களைப் பரிசீலித்துச் செப்புத் தட்டில் ஒரு யந்த்ரம் செய்து கொடுத்தார். கழுத்திலோ காதிலோ கட்டித் தொங்கப் போட்டுக் கொள்கிற தோதில் செய்து தருவதாக அவர் சொல்லி இருந்தாலும், மூலைக்கு ஒன்றாகத் தேவதைகளை நிறுத்தியதில் ஏகப்பட்ட இட நெருக்கடி உண்டாகி, அந்தச் சதுரத் தகடு முக்காலே மூணு மாகாணி அடி நீள அகலத்தில் முடிந்தது.
ஒன்று ரெண்டு தேவதைகள் ஆவாஹனம் பெறாவிட்டால் பரவாயில்லை என்று சுப்பம்மாள் சொல்லிப் பார்த்தாள். யந்திரத்தின் அளவு அதிகமாகிப் போகிறது தவிர, ஜோசியருக்குத் தர வேண்டிய காசும் கூடிக் கொண்டு போகிறது என்பதும் அதற்கு ஒரு காரணம்.
ஒவ்வொரு தேவதையும் ஒவ்வொரு பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிற்பதால் செப்புத் தகட்டை அளவு குறைக்க முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் ஜோசியர்.
அந்த யந்திரத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டபோது விலகு – இது என்னோட இடம் – இது எனக்கு என்று தேவதைகள் அடிபிடி சண்டை போட்டது அவள் காதுகளில் கேட்டது. மூத்த குடிப் பெண்டுகள் அவர்களைச் சமாதானம் செய்து வைத்து எல்லோரும் கால் ஊன்றிக் கொள்ள வழி பண்ணினார்கள்.
கழுத்தில் எல்லாத் தேவதைகளும், சுற்றி மூத்த குடி நித்திய சுமங்கலிகளும் இருந்தபோது சாமாவைப் பிடித்தவள் சுப்பம்மாள் பக்கம் வரவில்லை தான். ஆனால், பத்து இருபது பேரைக் கட்டிச் சுமக்கும் போது சுப்பம்மா கிழவிக்குத் தாங்க முடியாத தோள் வலியும், இடுப்பில் நோவும் ஏற்பட்டது. மூத்திரம் சரியாகப் பிரியாமல் வயிறு கர்ப்ப ஸ்திரி போல் ஊதிப் போனது.
பாறாங்கல்லைக் கழுத்தில் கட்டி எடுத்துப் போவது போல் நடக்க சிரமப்பட்டு அங்கங்கே தடுமாறி விழும்போதெல்லாம் மூத்த குடிப் பெண்டுகள் பரிவோடு தூக்கி விட்டார்கள்.
அப்புறம் அவர்கள் ஆலோசனை சொன்னபடிக்கு தச்சு ஆசாரி சுப்பனிடம் சொல்லி ஒரு மர வண்டி செய்வித்து வாங்கிக் கொண்டாள் சுப்பம்மாள். இடுப்பில் கோர்த்த ஒரு கொச்சக் கயிறால் பிணைத்த அந்த வண்டி பின்னால் உருண்டு வர அவள் நடந்தபோது முதல் இரண்டு நாள் தெருவில் விநோதமாகப் பார்த்து அப்புறம் அடங்கிப் போனது.
மரப்பாச்சியைப் பொம்மைச் சகடத்தில் வைத்து இழுத்து வரும் குழந்தை போல் நாணாவய்யங்கார் ஸ்தாபித்த யந்திரத்தைச் சக்கரங்களுக்கு மேலே இருத்தி இழுத்துப் போவதை தேவதைகள் ஆட்சேபித்தார்கள். தெருவில் திரிகிற நாய்கள் பக்கத்தில் வந்து மோந்து பார்க்கும். காலைத் தூக்கும். குழந்தைகள் விஷமம் செய்வார்கள். எங்களுக்கு இது சரிப்படாது.
திரும்பவும் சுப்பம்மாள் சார்பில் மூத்த குடிப் பெண்டுகள் வாதாடி, பிரதிஷ்டையான தேவதைகளைச் சம்மதிக்க வைத்தார்கள். இன்னும் கொஞ்ச நாள். அப்புறம் அந்தப் பீடை தொந்தரவு அடியோடு ஒழிந்து விடும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் வேண்டியபோது அவர்கள் சார்பில் சுப்பம்மா நடுத்தெருவில் ஒவ்வொரு திசையாகப் பார்த்து புழுதியில் விழுந்து கும்பிட வேண்டிப் போனது.
இந்தப் பக்கம் மூத்த குடிப் பெண்டுகளும் பின்னால் கட்டி இழுத்துக் கொண்டு தேவதைகளுமாக அவள் நடந்தபோது ஒரு நிமிஷம் நின்று குரலெடுத்து அழுதாள். காசியில் எதை எதையோ விட்டதுக்குப் பதில் உசிரை விட்டுவிட்டு வந்திருந்தால் இந்த ஹிம்சை எல்லாம் இருக்காதே என்று ஒரே ஒரு நிமிஷம் தோன்றியதை மாற்ற மூத்த குடிப் பெண்டுகள் அவள் நாக்கில் இருந்து கொண்டு வலசியதி கிண்கிணி என்று அஷ்டபதி பாடி அவளைக் குதித்துக் கூத்தாட வைத்தார்கள்
நடுவில் ஒரே ஒரு நாள் யந்திரம் இல்லாமல் ஒரு பகல் பொழுதில் கல்யாணி அம்மாளைப் பார்க்க அவசரமாக அவள் போனபோது வாடி தேவிடியாளே என்று அந்த லங்கிணி சுப்பம்மாள் மேலே வந்து உட்கார்ந்து விட்டாள்.
நாணாவய்யங்கார் சுப்பிரமணிய அய்யருடன் உட்கார்ந்து சங்கரன் ஜாதகத்தையும், அம்பலப்புழை குப்புசாமி அய்யன் இளைய சகோதரி பகவதிக்குட்டி ஜாதகத்தையும் வைத்து நவாம்சமும் அலசிக் கொண்டிருந்த நேரம் அது.
இந்தச் சோழியன் உன்னை வச்சுண்டு இருக்கானா ?
சுப்பம்மாள் உள்ளே நுழைந்ததுமே வேறு குரலில் அலறிக் கொண்டு நாணாவய்யங்காரின் குடுமியைப் பிடித்து இழுத்து முகத்தில் அறைந்தாள். அவருடைய வற்றிய மாரில் எட்டி உதைத்துதாள். காரி வரவழைத்த சளியை முகத்தில் உமிழ்ந்தாள். பூணூலைக் கால் விரலில் மாட்டி அறுப்பது போல் போக்குக் காட்டினாள்.
அப்புறம் யாரோ சொன்னது போல் ஐயங்காரை உதட்டில் முத்தமிட யத்தனிக்க, ஜோசியர் ஏட்டை எடுத்துக் கொண்டு சமயம் சரியில்லே அய்யர்வாள். உங்காத்துக்குப் ப்ரீதி நடத்தணும். நான் வெகு சீக்கிரம் நடத்தித் தரேன். இந்தக் கிழவி பண்ணிக் கொடுத்த யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்காது என்று சொல்லி வெளியே அவசரமாகக் கிளம்பிப் போனார்.
சுப்பம்மா அவர் கொடுத்த யந்திரத்தை வைத்துக் கொள்ளப் புது இடம் கிடைத்து விட்டதாக அறிவித்து இடுப்புக்குக் கீழே காட்டிச் சிரித்தாள்.
இப்படி யந்திரத்தோடு போனால் ஒரு மாதிரியும் போகாவிட்டால் இன்னொரு மாதிரியும் அவஸ்தை தொடர்ந்ததால் சுப்பம்மாள் புகையிலைக்கடை அய்யர் வீட்டுக்கு வருவது குறைந்தே போனது.
இருந்தாலும் சங்கரனுக்குப் பொண்ணு பார்க்க மலையாளக் கரைக்குப் போக வேணும். க்ஷேத்ராடனமாக மதுரை, பாணதீர்த்தம், சுசீந்திரம் எல்லாம் தரிசித்துக் கொண்டு ஆலப்புழைக்குப் போகலாம் என்று சுந்தர கனபாடிகள் சொன்னதும் வேறு எதுவும் யோசிக்காமல் சரி என்று விட்டாள் அவள்.
ஆனாலும் ஜோசியர் நாணுவய்யங்கார் யோசனைப்படி, மடிசஞ்சியில் அந்த யந்திரத்தைப் பத்திரமாக எடுத்துப் போக மறக்கவில்லை அவள்.
எல்லோரும் சுப்பிரமணிய அய்யரின் வீட்டில் இருந்து புறப்படுவதாகத்தான் ஏற்பாடு. ஆனாலும் மாட்டு வண்டியை எதிர்பார்த்து சுப்பம்மாள் நாலு தெரு சந்திப்பிலேயே நார்ப்பெட்டியும், சஞ்சியுமாக நின்றாள்.
ஐயர் வீட்டுக்குள்ளே போய் அந்தப் பழிகாரி பிடித்துக் கொண்டு விட்டால் கெட்டது குடி என்று பயந்தே அவள் அந்தப் பக்கம் போகவில்லை. ஆனாலும் சுப்பிரமணிய ஐயர் அவள் கைச்செலவுக்கும் சேர்த்து சுந்தர கனபாடிகளிடம் கொடுத்திருந்ததோடு பயணம் வைக்க முந்தின நாள் சாயந்திரம் அவள் வீட்டுக்கும் போய் அதைத் தெரியப் படுத்தி இருந்தார்.
சாமாவைத் தனியா விட்டுட்டுப் போகணுமான்னு இருக்கு எனக்கு. ஆனா உள்ளே வந்தாலே அந்தக் கடன்காரி மேலே வந்து பீ மாதிரி ஒட்டிக்கறாளே. நான் என்ன பண்ணட்டும்.
அவள் கண் கலங்கியபோது சுப்பிரமணிய ஐயர் தேற்றினார்.
அவனைக் கவனிச்சுக்க ஐயணையை ஏற்பாடு பண்ணி இருக்கேன். பாடசாலையிலே வித்யார்த்திகளுக்குப் பண்ற சமையலை அங்கே இருந்து ராமலச்சுமிப் பாட்டி கொண்டு வந்து வச்சுட்டுப் போயிடுவா. மூணு வருஷம் அவன் சாப்பிட்ட சமையல் ஆச்சே. அதைத் திரும்பச் சாப்பிட்டாலாவது அவன் பழையபடி ஆறானான்னு பார்ப்போம்.
ஆக மாட்டான் என்று சுப்பம்மாள் காதில் மூத்த குடிப் பெண்டுகள் சொன்னார்கள்.
ஆக வேண்டும் என்று அவர்களையும், மடிசஞ்சி யந்திரத்தில் ஏறிய தேவதைகளையும் பிரார்த்தித்துக் கொண்டு அவள் பயணம் போக வண்டிக்காக ஒரு நாழிகை சந்தியில் நின்று கொண்டிருந்தாள்.
அது ஆடி அசைந்து வந்தபோது அவள் ஏகத்துக்குச் சேர்ந்திருந்தாள்.
பிரம்மஹத்தி. உசிரை வாங்கிட்டான். பிச்சுண்டு கிளம்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து.
நாணாவய்யங்கார் அரண்மனையைத் திரும்பிப் பார்த்தபடி சொன்னார்.
புஸ்தி மீசைக் கிழவனின் கேதம் கழிந்து வந்த ராஜா முதல் வேலையாக அய்யரைக் கூட்டிக் கொண்டு வா என்று சகலருக்கும் உத்தரவு பிறப்பிக்க, நாலைந்து கிங்கரர்கள் அவர் பயணம் கிளம்பிக் கொண்டிருந்தபோது வாசலில் வந்து நின்று விட்டார்கள்.
நாணாவய்யங்காரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அரண்மனைக்குக் கூட்டிப் போகும்போது இது அந்த மனுஷ்யன் முந்தின வாரம் கொடுத்த வராகனைப் பிடுங்க உபாயமோ என்று ஐயங்கார் நடுங்கித்தான் போனார்.
ஜமீந்தான் போகாதே போகாதேன்னு முந்தியைப் பிடிச்சு இழுத்தான். அரண்மனையிலே பரிகாரம் பண்ணனுமாம்.
நாணாவய்யங்கார் இடுப்பைத் தடவிக்கொண்டே சொன்னார். அங்கே இன்னொரு வராகன் பத்திரமாக ஏறியிருந்தது.
சுப்பம்மாள் வண்டியில் ஏற நாணாவய்யங்கார் பெண்டாட்டி கையை நீட்டினாள். சுந்தர கனபாடிகள் அவள் மடிசஞ்சியையும் நார்ப் பெட்டியையும் வாங்கி ஓரமாக வைத்தார்.
அவள் வண்டியில் ஏறும்போது மூத்த குடிப் பெண்டுகள் சாமா நடுமத்தியானத்தில் பிரேத ரூபமாக வந்தவளைக் கட்டிலில் கிடத்தியதை ஞாபகப்படுத்தினார்கள்.
அதுக்கென்ன இப்போ என்றாள் சுப்பம்மாள்.
அந்தப் பொண்ணு பக்கத்து வீட்டுக்கும் நடக்கிறாள். அவர்கள் கூடவே சாவுக்கெல்லாம் போய்விட்டு வந்திருக்கிறாள். பாப்பாத்தியாச்சே என்று அவளுக்கு மரியாதை கொடுத்த அந்தப் பெரிசுகள் இப்போது அவளை எப்படிக் கழற்றி விடுவது என்று புரியாமல் முழிக்கிறார்கள். இந்த பேடிப் பயல் ஜமீந்தார் இதெல்லாம் காலும் அரைக்காலும் காதில் கேட்டுத் தப்பும் தவறுமாக அதைப் புரிந்து கொண்டு சோழியனைக் கூப்பிட்டு அனுப்பியிருக்கிறான். அவனும் சாமாவோடு தங்கியவளை சுப்பிரமணிய ஐயர் வீட்டுக்குள்ளேயே இருந்த வேண்டிய கிரியைகளை எல்லாம் மலையாள பூமி போய்த் திரும்பி வந்து செய்து தரேன் என்று வாக்குத் தத்தம் கொடுத்து விட்டு வராகனோடு வந்திருக்கிறார்.
தேவதைகளும் மூத்த குடிப் பெண்டுகளோடு சிரித்தது சுப்பம்மாளுக்குக் கேட்டது.
நன்னா, வசதியா உக்காருங்கோ. எதேஷ்டமா இடம் இருக்கு. கையிலே கழுத்துலே ஸ்வர்ணம் போட்டுண்டு இருந்தா எடுத்துப் பத்திரமா நார்மடிப் பொட்டிக்குள்ளே வச்சுக்குங்கோ.
நாணாவய்யங்கார் சொன்னபோது சுப்பம்மாள் அவரைப் பார்த்துக் கபடமாகச் சிரித்தாள்.
மடியிலே கனம் இருந்தா இல்லே வழியிலே பயம். என் கழுத்திலே காதிலே என்ன இருக்கு ? எண்ணெய் ஏறின தோடு அரைக்கால் வராகன் காசு கூடப் பெறாது.
உள்ளே புழுக்கமா இருக்கு. வெளியே எடுத்து வையேன்.
யந்திரத்தில் நின்றிருந்த தேவதைகள் சத்தம் போட்டன நார்ப் பெட்டிக்குள் இருந்து.
சோழியன் உங்களை கீகடமா இப்படி ஒரே இடத்துலே நிறுத்தியிருக்க வேண்டாம். பாவம் தவிச்சுப் போறேளே.
சுப்பம்மா சொன்னபோது அது வாயில் தெலுங்குக் கீர்த்தனமாக வந்தது. மூத்த குடிப் பெண்டுகள் ஒரு நிமிஷம் கூட அவளை விட்டுப் போகவில்லை.
எல்லோரும் மதுரை போய்ச் சேரும்போது சாயந்திரமாகி விட்டிருந்தது.
சாமி தரிசனத்துக்குப் போய்த் திரும்ப வரும்போது வடம்போக்கித் தெருவில் வெகு விநோதமாகக் கொட்டகை எல்லாம் கட்டி ஒரு பிராமணன் சோறு விற்றுக் கொண்டிருந்தான்.
துரைத்தனத்தார் பணம் நாலு செம்புக் காசுக்கு சித்ரான்னம் வடை எல்லாம் சேர்த்து வாழை இலையில் வைத்துச் சாப்பிடக் கொடுக்கிறானாம். தேசாந்திரம் வந்த நாலைந்து தெலுங்குக் குடும்பங்கள் காசைக் கொடுத்து விட்டு அங்கே குந்தி இருந்து வாயில் சோற்றை அடைத்துக் கொண்டிருந்தார்கள்.
கலிகாலம். சத்திரத்துலே தானமாப் போடறதை விக்கறான் இந்தப் பிராமணன். மழை எப்படிப் பெய்யும் ?
சுந்தர கனபாடிகள் சொன்னாலும் அந்தச் சித்திரான்னங்களை அவர் ஆசையோடு பார்த்தபடியே நகர்ந்தார். சுப்பம்மாள் வாயில் ஏறிய மூத்த குடிப் பெண்டுகள் இங்கே நின்று சாப்பிட்டுப் போகலாம் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.
அவள் அழிச்சாட்டியமாகத் தெருவில் உட்கார்ந்து அடம் பிடிக்கவே, கனபாடிகள் சஞ்சியிலிருந்து அவளுக்குச் சேர வேண்டிய வகையில் சுப்பிரமணிய ஐயர் கொடுத்ததில் சில துட்டுக்களை எடுத்துக் கொடுத்து விட்டு, என்ன வேணுமோ சாப்பிட்டுட்டு தெருக்கோடியிலே சத்திரத்துக்கு வந்துடுங்கோ என்றார்.
சோறு விற்கும் பிராமணன் வாயடைத்துப் போக, அங்கே மிச்சம் மீதி ஏதும் இல்லாமல் புளியோதரை, தயிர்சாதம், நார்த்தங்காய்ச் சாதம், போளி, வடை என்று வாரி வாரி அடைத்துக் கொண்டு தின்று போட்டாள் சுப்பம்மாள்.
இந்தக் கிழவிக்கு ஏதோ பிசாசு பிடிச்சிருக்கு என்று நினைத்தபடி காசை வாங்கிக் கொண்டு சோற்றுக்காரன் ஓலைக் கூடைகள் சகிதம் ஓடியே போனான்.
மங்கம்மா சத்திரத்தில் ராத்திரி முழுக்கப் பக்கத்தில் தெலுங்குக் கூட்டம் ஒன்று உரத்த குரலில் பேசிக் கொண்டே இருந்தது. சுப்பம்மாளின் கூட இருந்த மூத்த குடிப் பெண்டுகளும் பிரயாண அசதியில்தூங்கிப் போனார்கள்.
வயிறு ஏகமாகத் தின்ற அசெளகரியம் தூக்கத்தைக் கெடுக்க, சுப்பம்மாள் ஜன்னல் வழியே வெட்டவெளியில் பூரணச் சந்திரனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
சாமாவும் கூடவே ஒரு அழகான பெண்ணும் அவளைச் சுற்றிச் சுற்றி நடந்தும் ஓடியும் விதம் விதமாக சிருங்கார சேஷ்டைகளில் ஈடுபட்டபடி இருந்தார்கள்.
சுப்பம்மா, நான் பக்கத்திலே வரட்டுமா ?
தலைக்கு மேலே பறந்து போன வெளவால் விசாரித்தது.
கையில் நேராக ஒன்றும் குறுக்கே மற்றதுமாக நிறுத்திய மூங்கில் பிளாச்சுகளையும், குருத்தோலைகளையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு சுப்பிரமணிய அய்யர் சாயலிலும் சங்கரன் சாயலிலுமாகக் குழந்தைகள் நடந்து போனார்கள்.
ஒரு வினாடி சுப்பிரமணிய ஐயரின் இரட்டை மாடிக் கட்டிடம் தீப்பற்றி எரிந்தது.
விநோதமான பழுக்காத்தட்டுகள் சுழலச் சாவோலமாக எழுந்த சங்கீதம் எல்லாத் திக்கிலும் பரவி மூச்சு முட்ட வைத்தது.
பகவானே.
சுப்பம்மாள் நார்ப் பெட்டியை இறுக்கிக் கொண்டாள்.
தேவதைகள் மெளனமாக இருந்தன. அவைகளுக்கும் அந்த சங்கீதம் பிடித்திருக்குமோ ? அல்லது தூங்கப் போய்விட்டார்களோ என்று அவளுக்குத் தெரியவில்லை.
(தொடரும்)
eramurukan@yahoo.com
- மரம்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- காபூல் திராட்சை
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- என் இனிய சிநேகிதனே !
- கடத்தப்பட்ட நகரங்கள்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- அறியும்
- அகதி
- ஆயிரம் தீவுகள்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- உலக சுகாதார தினம்
- சிகரட்டில் புகை
- பைத்தியம்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- ஏன் ?
- குப்பைகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- விடியும்! நாவல் – (10)
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- கடிதங்கள்
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- சாமி- பெரிய சாமி
- வைரமுத்துக்களின் வானம்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- நீ வருவாயென…
- தேடுகிறேன்…
- இயற்கையே இன்பம்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- ஒரு விரல்
- பெயர் தெரியாத கவிதை! ?
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]