அன்பளிப்பு

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

T V ராதாகிருஷ்ணன்


எங்கள் வங்கியின் ஆண்டிப்பட்டி கிளைக்கு என்னை அதிகாரியாக மாற்றியிருக்கிறார்கள்.

உடன் வேலையில் சேர்ந்து அந்தக் கிளையில் தற்போது உள்ள சுப்புராமன் ஒரு
வாரத்திற்குள் பொறுப்பிலிருந்து விடுவித்து சென்னை பிரதானக் கிளைக்கு
அனுப்புமாறு எனக்கு உத்தரவு.

அடுத்த நாள் காலை..ஆண்டிப்பட்டிக்குப் போய் சுப்புராமனை
சந்தித்தேன்..அவர் எனக்கு அந்தக் கிளையைப் பற்றியும், வாடிக்கையாளர்கள்
பற்றியும் கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது…

‘ஐயா கும்புடறேனுங்க’ என்று சொல்லியபடியே ஒரு கிராமவாசி கையில் ஒரு
பெரிய பூசணிக் காயையும், இரண்டு கிலோ தக்காளி கொண்டுவந்து
சுப்புராமனிடம் அவற்றை வைத்துவிட்டு சென்றான்.

இதெல்லாம் என்ன என்றேன்

‘கணபதிராமன்..நாம சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுக்கிறோம்..அதை வைச்சு
அவங்க வியாபாரம் பண்ணி முன்னுக்கு வராங்க.இப்ப வந்து போனானே அவன் ஒரு
காய்கறி வியாபாரி.நான் அவனுக்கு வங்கிக்கடன் கொடுத்ததாலே இந்தக் காய்களை
அன்பளிப்பா கொடுத்துட்டுப் போறான்..’

‘இது போல நாம வாங்கறது தப்பில்லையா?’

‘நான் அவன் கிட்ட பணமா வாங்கறேன்..தவிர நாம கொடுக்கற பணத்தால
அவங்களுக்கு ஆயிரக்கணக்கில லாபம் வர்றப்போ..நமக்காக கொஞ்சம் செலவு
பண்ணினா என்ன தப்பு ?’

நான் அவரிடம் பதில் ஏதும் பேசவில்லை.

அடுத்த நாள் அலுவலகம் செல்ல சட்டையைத் தேய்க்க சலவைக் கடைக்கு போன
போது..என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்துவிட்டார் கடைக்காரர்.

‘ஐயா..வங்கிக்கு வந்திருக்கிற புது அதிகாரி நீங்க..எனக்கு நீங்க
இதுக்கெல்லாம் காசு தரவேணாம்..சுப்புராம ஐயா போல இந்த ஏழை மேல கருணை
வைச்சா போதும்’ என்றார் கடைக்காரர்.

மேலும் விசாரித்த போது ரிக்சாக்காரர் ஒருவருக்கு கடன்
கொடுத்ததால்..சுப்புராமன் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சென்றுவர இலவச
ரிக்சா சவாரி.

சுப்புராமனால் பயனடைந்த தையல்காரன் இவரது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை
தைத்துக் கொடுத்திருக்கிறான்.மளிகைக் கடைக்காரன் ஒருவன் அவரது மாதாந்திர
மளிகைச் செலவுகளைக் கவனித்துக் கொள்கிறான்.

நான் விசாரித்த வரையில் சுப்புராமன் கடன் வழங்கி அதற்கு பதிலாக எந்த
அன்பளிப்பையும் கொடுக்காதவர் ஒருவர் மட்டுமே இருந்தார்..

சுப்புராமனைப் பற்றி மேலிடத்தில் புகார் செய்யலாமா..வேண்டாமா..எனக்
குழம்பிக்கொண்டிருந்த எனக்கு..அவரை..அவரது இல்லத்தில் சென்று பேசினால்
என்ன? என்ற எண்ணம் எழ அவரது வீடு நோக்கிப் போனேன்.

வீட்டின் வாசலில் சிறு கும்பல்..சுப்புராமனுக்கு திடீரென இரவு மாரடைப்பு
வந்து..மருத்துவர் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதாம்.

‘நான் கடன் வழங்கினவங்க எல்லாரும் அன்பளிப்பு கொடுக்கறாங்க..ஆனால்
உன்னால் மட்டும் எதுவும் தரமுடியாதுடான்னு சொல்வீங்களே..ஆனா நான் இப்ப
இலவசமா கொடுக்கப்போற சவப்பெட்டிலதான் நீங்க போகணும்’ என்று கூறியபடியே
அழுது கொண்டிருந்தான் ஒருவன்.

‘அவன் யார்?’ என்று அருகிலிருந்தவரை விசாரித்தேன்.அவன் பெயர்
அந்தோணி..சவப்பெட்டி தயாரிக்கிறவன்.சுப்புராமன் அவனுக்கும் வங்கிக் கடன்
கொடுத்திருக்கிறார்’ என்றார் அவர்.

செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு படிச்சிருக்கிறேன்..ஆனால் இந்த
சுப்புராமன் தனக்கு வர வேண்டிய அன்பளிப்பை செத்தும் பெற்றுக் கொண்டார்.

T V Radhakrishnan.

Series Navigation