வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue


வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)

யான் இந்திராணி கேட்கிறேன்
விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின்
செயல் அறிவாயோ இந்திரா
நினக்கு ச்சோமம் பொழிவதனை
மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ?
யான் இந்திரன் பேசுகிறேன்
பொன்நிறத்து விருஷாகபி
செய்த அத்துன்பம் தான் என்ன
இந்திராணி என்னிடம் சொல்லேன்.
பன்றி வேட்டையாடும் நாய் போல்
அவன் காதுகளைப் பிடி
எனக்குப்பிரியமானவைகளை அக்கபி நாசஞ்செய்தான்
அவன் தலை க்கொய்யப்படுக
தீமை செய்தோனுக்கு ச்சுகம் எப்படிக்கிட்டும்
என்னைப்போல் பதியை ஆர்வமுடன்
ஆலிங்கங்கனம் செய்யும் அழகி யார்
வசீகரிப்போர் யார் இனிய லீலைகள் செய்வோர் யார்
விருஷாகபி பேசுகிறேன் இந்திராணித் தாயே
ஏனிப்படி ப்பேசுகிறீர்கள் என்னை
என் சிரமும் தலையும் நடுங்குகின்றன.
யான் இந்திராணி பேசுகிறேன் குரங்கே
எனக்கு வீர புருஷன் இல்லையா
மருத்துக்களின் நண்பன் யான்
வீர மக்கள் எனக்கு உண்டு.
செளபாக்கியமுள்ள இந்திராணி யான்
இந்திரனுக்கு மூப்பினால் மரணமில்லை
அவன் யாவர்க்கும் தலைவன்.
இந்திரன் இடை மறித்துப்பேசுகிறான்
அறிவாய் இந்திராணி
விருஷாகபி எனக்கு நண்பன்
அவன் என்னோடு இருப்பவன்.
இந்திராணி சொல்கிறேன் கேள்
இன்பமே துய்ப்போன் தலைவனாவதில்லை
எவனது சொல் விரிந்து செயல் விரிந்து
ஆணைகள் பறந்து காணப்படுகிறதோ
அவனே தலைவனாகிறான்.
இந்திராணி அறிவாய் நீ
யான் ஆரியனையும் தாசனையும் தெளிவாய்க்காண்போன்
பொறுப்பாய் சோமம் படைப்பது பருகுபவன்
விருஷாகபி உனது இல்லம் போய்விடு
மறுபடியும் வரலாம் நீ.
கேட்கிறாள் இந்திராணி
மானிடர்க்குத்துன்பம் செய்யும் விருஷாகபி எங்கே போயிற்று
மனுபெற்ற மகள்
ஒரு பிரசவத்திலே இருபது மகவு பெற்றாள்
பெற்ற வயிறு துன்பப்பட்டிருக்கலாம்
அவள் யோனி மங்கலம் தருவது.
சகோதரி யைச்சேர்பவனும்
நண்பனுக்குத்துன்பம் செய்வோனும்
மூத்தவனை அவமதிப்போனும்
அதோகதிக்குப் போவார்கள்
அனுபவிக்காத வணிகனும்
தானமளிக்காத செல்வந்தனும்
அறிஞர்களால் இகழப்படுவர்
குடிக்க இயலாத நீர் நிலை
ஈகை அறியாயாச்செல்வன்
தொடமுடியா அழகுப்பெண்
அறிவிலிக்கு நிகராகிக் கணக்கில் தள்ளப்படுவர்
தாகம் நீக்கும் நீர் நிலை
அள்ளித்தரும் செல்வன்
தொடமுடிகின்ற சுந்தரி
கணக்கிலே கொள்ளப்படுகிறார்கள்
கணவனை நீங்கிய காரிகையும்
சுகம் வேண்டி போர் துறப்போனும்
சுமக்க ச்சுணங்கும் குதிரையும்
கணக்கிலே தள்ளப்படுகிறார்கள்
ஆசைபொங்கும் மனையாளும்
போருக்கு விரும்பிச்செல்வோனும்
சுமக்க த்தயாராகும் குதிரையும்
கணக்கிலே கொள்ளப்படுகிறார்கள்
குதிரை வலிமையால் அறியப்படுகிறது
கோமய நெடியால் பசுவின் தடம் புலனாகிறது
பேசு மொழியால் அறிஞன் தெரியப்படுகிறான்.
சிறு நிலமோ பெருநிலமோ
தவறு செய்வோர் தண்டிக்கப்படுக
பாவம் மட்டுமே செய்தவர்கள்
குளம்பிடை அகப்பட்ட மீனாய் துடித்துப்போவர்.
நிர்வாகம் சிறு தவறையும் கண்டு
தண்டிக்குமாயின் மட்டுமே
உயர் சிந்தனையுடையோர்
நாடு முழுவதும் விரவி
மணலிலே புரண்டு புரண்டு விழும் கழுதையென ஆனந்தம் கொள்வர்.
வெற்றியை நாடுவோர் ஆளும் நாட்டில்
தெரிந்த நிர்வாக சபை
கண்ணால் கண்டதை மட்டுமே மெய்யெனக்கொள்ளும்
சாதனை படைக்கும் சபை
கர்வமுடைய பெண் போலே நடை பயிலும்
நெல் லை ப்புடைத்து நல்லது எடுத்தல் போலே
விசாரணைகள் அங்கே நிகழ்கின்றன
அரசன் நேர் வழியினின்று வழுவும் போதெல்லாம்
தடுத்து நிறுத்தி அங்கே
நல்லவை நிறுவப்படுக
அரசன் நேர்வழியினின்று வழுவிடும்போதெல்லாம்
வனம் தீக்குள் வெந்து தீர்வதொப்ப நல் விஷயங்கள் வதைபடுகின்றன
சபை அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கும் க்குரல் தருகிறது
கணவன் மனையாளை ஆள்வதுபோலே
அரசன் அரசை ஆள்கிறான்
வலியது மெலியதை வீழ்த்தும்
வலுவுள்ள சபை சோடை அரசனை புறந்தள்ளும்
வலுவுள்ள அரசன் வில்வமரம் போலே
முட்களோடு உயர்ந்து நலம் தருவோன்.
புகழ் வாய்ந்தபோர்ப் படை
பணியொன்று முடித்த அழகுப்பெண் போலே
வெற்றிக்கும் மேலே மேலே பயணிக்கும்
வலிமை யுடைய அரசனே மக்கட்கு வளமை கொணர்வான்
அழகுடை இளம் பெண்ணுக்கு வலுவில்லா க்கணவன்
ஆற்றலுடைய சபைக்கு திறனில்லா அரசன்
கொதி எண்ணைத் தொட்ட விரல்கள் சட்டெனத் தூரம் போவதுபோலே
புறந்தள்ளப்படுவான் அவ்வரசன்.
இரண்டு கதிர்கள் ஒருங்கே விசாலமாகின்றன
கணவன் அவைகளைத்தொட்டு நிற்கிறான்
குமரிப்பெண்ணே நீ நினைப்பது போன்றில்லை அது.
நின் தாய் தந்த கதிர்கள் அவை
நின் கணவன் அவன் தனியானவனே
குமரிப்பெண்ணே நீ நினைப்பது போன்றில்லை அது
முதன்மையாயுள்ள அவை இரண்டும்
உன் வசமாகி நின்னில் இறங்குகிறது
குமரிப்பெண்ணே நீ நினைப்பது போன்றில்லை அது
மல்லாந்து கிடக்கும் யுவதியை நின்று புணர்வதே சுகம்
அப்படிப் பொறுந்துகிறாய் நீ
அழகிலே அழகின் சங்கமம்
குமரிப்பெண்ணே நீ நினைப்பது போன்றில்லை அது
வழுக்கிகொண்டு ஒரு பொருள் கப்பரை தனில் வீழ்கிறது
குமரிப்பெண்ணே நீ நினைப்பது போன்றில்லை அது.
அனுபவிக்க வந்தவனோ நாயாகித் தவிக்கிறான்.
சோம பானம் செய்ய இந்திரனை அழைப்போம்
அசுவினிகளே உமக்கும் சோமம்
எமக்குச் செடிகொடிகள் வானம் தண்ணீர்
இனிமை தருக
விண்ணகம் இனியவை தருக
வசிப்பிடத்தலைவன் இவண் இனியவை தருக
யாம் அவனை அனுசரிப்போம்
துன்பம் இல்லாதொழியட்டும் எமக்கு
விண்ணகத்து இடபம்
வான் பரப்பின் காளை
புவி மீது உலாவும் பசு
பசு பாலனஞ் செம்மயாய்ச் செய்வோர்
அசுவினிகளொடு சோமம் பருக
இவண் எழுந்தருளட்டும் உடனே . ( அதர்வ வேதம் காண்டம் 20 )
( வேதவனம் தொடர் நிறைவு பெறுகிறது )

———————————————————–
திண்ணை குறிப்பு:

சிறப்பான தொடர்கவிதையை பகிர்ந்த எஸ்ஸார்சிக்கு மனம் நிறைந்த நன்றிகள்

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி