விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

சேஷாத்ரி ராஜகோபாலன்அறிமுக ஆரம்பத்தில் ஓர் சிறு விளக்கம்:
விதுரநீதியும் பகவத்கீதையும்

அன்றாடம் நம் வாழ்க்கையை செவ்வெனே நடத்திச் செல்ல, செயல் முறை சார்ந்த சிறந்த வழிகாட்டி நூலாக விதுர நீதி அமைகிறது. ஆனால், பகவத் கீதையோ, வாழ்க்கையின் மூலாதாரமான, இறைவனை அடைதல் எனும் கருத்துப் படிவத்தை, செயலாற்றுவதற்கான வழி முறைகளில், எவ்வாறு நம்மை ஆயத்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று படிப்படியாகக் கற்றுக் கொடுக்கும் பாடங்களாக அமைகிறது.
நம் எல்லோரும் எல்லாகாலத்திலும் ’நம்மை நாமே அறவழியிலேயே நிர்வாகம் செய்து கொள்லாம்’ (Self Management)என்பது பற்றியும், மேலும் ’அரசாங்கத்தை நியாமான வழியில் கூட! சமாளித்து நடத்தலாம் (Government Management) என்பது பற்றியும், அப்படி செயலாற்றுவதால் உண்டாகும் ஆதாயங்களைப் பற்றி அறிவுரைகள் மூலமாக விதுரர், மிகத்தெளிவாக வழங்கி இருக்கிறார். இவ்வரிய அறிவுரைகள் இன்றைய நாளிலும் (நம்மைப் போன்ற!) எல்லோருக்கும் மிகப் பொருந்தி உபயோகிக்கத் தக்கதென போற்றிப் புகழப் படுகிறது. இவர் அன்று நம் எல்லோருக்குமே அருளிய இவ்வறிவுரைக் கோப்புகள் தான் “விதுர நீதி” என ஓர் நீதிக் களஞ்சியமாக மஹாபாரத உத்யோக பர்வத்தில் 33 வது அத்தியாயத்திலிருந்து தொடர்ந்து 40 வது அத்தியாயம் வரை, கூறப்பட்டுள்ளது.
முதலில் இங்கு ஒன்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். வாழ்க்கையை சமாளித்து முதலில் நடத்திக் கொண்டால் தான், வாழ்க்கையின் லட்சியமான கடவுளை அறிதல், அல்லது உணர்தல் எனும் மிகச் சிறந்த, ஆழ்ந்த பொருளடங்கிய பகவத்கீதையில் கூறப்படும் யோகமுறைகளில், நன்றாகத் தெளிந்து வாழ்க்கையின் குறிக்கோளை அடைய முடியும். ஆகவே ‘விதுர நீதி’யில் தக்க பயிற்சி இன்றி, நேராக பகவத் கீதையில் முதலில் நுழைவது முறையன்று என பெரியோர்கள் கூறுவர். பகவத் கீதையை ஆழ்ந்து பயில்வதற்குத் தக்கவாறு, பூர்வாங்கமாக மனதை சீராக்கிக் கொள்ள வேண்டும். அ,ஆ,இ,ஈ…….என அரிச்சுவடிக்குப் பின்னர் தான், ஆழ்வார்கள் பாசுரங்களைக் கற்க வேண்டுமல்லவா? இம்முறையில் மிக நேர்மையான, கற்றறிந்த, விதுரரின் நன்நெறி விளக்கங்களில் கூறப்பட்ட அறிவுரை களின்படி முதலில் வாழ்க்கையை செவ்வெனே நடத்திக்கொள்ளப் பழகிக் கொண்டு விட்டால், “தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்றபடி, கையில் சாட்டையுடன், பாண்டவப் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதியாக ஸ்ரீகிருஷ்ணனால் பகவத்கீதையில் கூறப்பட்டவை கள் மிகத்தெளிவாக நமக்குத் துலங்கும். விதுர நீதியை நன்கு கற்றுணரமல் நேராக பகவத் கீதையை வாழ்க்கை முறைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதென்பது, எந்த நோக்கத்துடன் ஈடுபட முனைந்தோமோ, அது முற்றிலும் குறைபாடுடைய தாகவே ஆகிவிடும். ஆக விதுர நீதியை நன்கு கற்றுணர்ந்த பின்னரே பகவத் கீதையைக் கற்றுணர்தல் சாலச்சிறந்தது.
விதுர நீதியோ, கௌரவர்களின், பிரதம மந்திரியான விதுரர், குருக்ஷேத்ரப் போர் நடப்பதற்கு முன் இரவில் மனதில் கவலைகளால் தடுமாற்றம் அடைந்த கௌரவ குல குருட்டரசன் திருதராஷ்ட்ரனுக்கு தன்னைத்தானே சமாளித்து வாழ அறிவுரையாகவும், அது சம்பந்தப்பட்ட காரணங்கள் என்னென்ன என, குருக்ஷேத்ரப் போர் மூள இருப்பதற்கான முக்கிய காரணங்களான:
• அரசாங்க முறைகளில் இருந்த முறைகேடான நிர்வாகம்,
• இவைகளுக்குக் காரணங்கள்,
• இதன் விளைவுகள் என்னென்னவாக இருந்தது,
• இப்படியே போனால் வருங்காலத்திலும் என்னென்ன கேடுகள் விளையலாம்,
• எவ்வாறு இவைகளைத் திறம்பட நிகழ்த்தி இருக்க வேண்டும்
என்றவைகளால் நிரம்பப்பெற்றது.

இவ்வறிவுரைகள் இக்காலத்திற்கும் நமக்கும் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றவாறு, உபயோகமாக இருக்கிறது. ஏனெனில் இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்திருக்கிறது, வருகிறது, இனி மேலும் வரலாம். இதனால் தான், விதுர நீதியை நன்கு படித்துத் தெரிந்துணர்ந்த பின் பகவத் கீதையில் நுழைவது நல்லது என சொல்லழுத்தத்துடன் முன்னரே கூறியிருந்ததையே மீண்டுமொரு தடவை திரும்பி வலியுறுத்த விரும்புகிறேன்.

பகவத் கீதை வேத சாஸ்திரங்களின் உள்ள உட்கருத்துகளையெல்லாம் தெளிவுபட விளக்குகிறது. “வேத சாஸ்திரங்களை பசுக்கள் என்றால் பகவத் கீதையை தூய்மையான பசும் பால்” எனப் பகரலாம்.

பசுங்கன்று தாய்மடியை முட்டி முட்டிப் பாலுண்ணும் போது, தாய்ப் பசு அதை மிகப் பாசத்துடன் உடல் முழுதும் நக்கி நக்கிக் கொடுக்கும். அது பொதுவாக விலங்கி னங்களுக்காக இறைவனளித்த பிரத்யேக வரம். அக்கன்று மிக திருப்தியாகப் பாலுண்ட பின் கிடைக்கும், கறந்த நல்ல பசும் பாலை வேண்டுமளவு நேரிலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வாய்க்கப் பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்க, முடியவில்லையே எனும் மனக்கவலை வேண்டாம்”, என்று சமீபகாலத்தில் நம்மிடையே வாழ்ந்த யோகி, சித்பவானந்தர் பகவத் கீதையின் மேன்மையைப் பற்றிக் கூறியுள்ளார்.

வாழ்க்கையின் உன்னத லட்சியத்தை ஆன்மீக வழிகளில், சீராக அடைய, பகவத் கீதையில் உள்ள மூன்று வழிகள் உள்ளன: கர்மயோகம்; பக்தியோகம்; ஞானயோகம் எனும் மூன்று வகைப்படும். இம்முன்றுமே முடிவில் இறையின் தாளில் இறுதியில் சரணாகதியடைய உபயோகமான வழிகள்.

இதைத் தான் ஸ்ரீமத் ராமானுஜர், தான் இயற்றிய கத்யத் த்ரயங்களில் (திரயம் என்றால் மூன்று), — சரணாகதி கத்யம் (ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்க நாயகி நாச்சியார், ஸ்ரீமந்நாராயணன் ஒருவருக்குடன் ஒருவர் என உரையாடல்), ஸ்ரீரங்க கத்யம் (முதல் கத்யத்தின் சுருக்கம்), வைகுண்ட கத்யம் என (சரணாகதி தத்துவ நீதி போதனையாகச் செய்து) மூன்று கத்யங்களில் பகவத் கீதையின் சாரத்தை வெவ்வேறு சொற்களால், அங்கங்கு அலங்கரித்துள்ளார். இதையே, முதலில் அகில உலகத் தயான ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியாருடைய பரிந்துரையாகிற ஆசியுடன், ஸ்ரீரங்க ராஜனுடன், அதாவது ஸ்ரீமந் நாராயணனும், ஸ்ரீராமானுஜரும் நேரிலேயே ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டபடி கூறப்பட்டுள்ளது. அதற்கு அந்த ஆதி முதற்கடவுள் ஸ்ரீமந் நாராயணனே, பதில் நேராக கூறியவாறும் உள்ளது. பகவத் கீதையில் (18:66) தானே கொடுத்த அதே வாக்குறுதியை இன்னொரு தடவை, ஸ்ரீராமானுஜருக்கு சொல்லழுத்தத்துடன் உறுதிபடுத்திக் கூறி, “எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு என்னையே தஞ்சமென அடைந்துவிடு. நானே உன்னை எல்லா பாபங்களிலிருந்து விடுவிப்பேன். இனி வருந்தாதே!”

सर्व धर्मान् परित्यज्य मां एकं शरणं व्रज |
अहं त्वा सर्व पापेभ्य:मो‍क्षयिष्यामि मा शुच:|| ப. கீதை (18:66)
ஸர்வ த⁴ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஸ²ரணம் வ்ரஜ |
அஹம்° த்வா ஸர்வ பாபேப்⁴ய:மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச:||

इति मयैव हि उक्तम् – (இதி மயைவ ஹி உக்தம்), “என்று என்னால் (பகவத் கீதையில்) அன்று இவ்வாறே கூறிப்பட்டு இருக்கிறது”, என சரணாகதி தத்வத்துடன், “இறையாகிற நானே பொய்யனாகிவிட மாட்டேன்” (பி.ப. அண்ணா ஸ்வாமி அன்று எழுதியபடி) எனத் திண்மையை பொறுத்தி, சரணாகதி கத்யத்தை உறுதி மொழி அடங்கிய வாக்கு மூலச் செய்தியுடன் தீர்மானமாக சொல்லப்பட்டுள்ளது.

(கத்ய நடை என்றால் என்ன? மிகக் கவர்ச்சியுள்ள சங்கீதம் போன்ற ஏற்றத் தாழ்வு தொனியுடன் மந்திரத்தை உச்சரிப்பது போல, நீண்ட சொற்கூட்டுகளால், மிளிரும் கவிதை நயத்துடன் ஆனால் உரை நடை பாணியில் எழுதுவதை கத்ய நடை என்பார்கள் (all in one). இந்நடையில் எழுத, மொழிப் புலமை வாய்ந்த மிகப் பேரறிஞர்களால் தான் ‘கத்யத்தை’ இயற்ற இயலும்). இக்கத்யத்தை மனமுருகி இறைவனுடன் ஸ்ரீ ராமானுஜரு டைய அதே உரையாடலை பொருணர்ந்து நாமே ஆற்றி, அதற்கு இறைவன் கூறிய பதிலையும் நாமே அவராக எண்ணிச் சொல்லிப் பார்த்து அதைப் பாராயணம் செய்யும் இன்பமே, கண்ணீர் மல்கும் ஒரு சுகானுபவம். அதை அவ்வப்போது அனுபவிப்போருக்கு இதன் அருமை தெரியும். இவ்வைபவம் ஸ்ரீரங்கன், ஸ்ரீநாச்சியார் முன்னிலையில் விசேஷமாக ஏக சிம்மாசனத்தில் வீற்றிருக்க, பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று வருடாவருடம் நடைபெறுகிறது.

பகவத்கீதை மஹாபாரதத்தில் பீஷ்மபர்வத்தில் 25 அத்தியாயத்திலிருந்து 42வது அத்தியாயம் வரையில் மொத்தம் (18 அத்தியாயதுடன்) 700 ஸ்லோகங்களைக் கொண்டது. இதை யோகசாஸ்திரம் எனவும் கூறலாம். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே 18 நாட்கள் குருக்ஷேத்ரத்தில் நடைபெற்ற யுத்த பூமியின் நட்ட நடுவில்தான் பகவத்கீதை என்னும் யோகசாஸ்த்திரத்தை ஸ்ரீமந்நாராயணனே தேரோட்டிக் கிருஷ்ணனாக, எழுந்தருளி மானிடனான அர்ஜுனனுக்கு (பார்த்தனுக்கு) அறிவுரை வழங்குவது போன்று, (நமக்கும் சேர்ந்து தான்) உபதேசித்தார். இந்த மகாயுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இரு தரப்பிலும் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவினர்கள். இதில் கௌரவர்கள் ஒருபக்கமும் பாண்டவர்கள் ஒருபக்கமுமாக ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிட்டனர்.

இனி விதுர நீதியைப் பற்றி விளக்க ஆரம்பிக்கலாம்.

கௌரவர்கள் தந்தையான குருட்டரசனான திருதராஷ்ட்ரன், நாளை நடக்க இருக்கும் யுத்தத்தின் விளைவு விபரீதமாகத்தான் இருக்கப்போகிறது என அவனுடைய உள்ளுணர்வு உருத்தியது. காரணம் எங்கும் தேடவேண்டிய அவசியம் இல்லை; அவனது மனசாட்சிக்குத் தெரிந்தது தான்; தானும், தன்னைச்சேர்ந்த கௌரவர்களும் எவ்வாறு முறைகேடாக, பாண்டவர்களிடம் நடந்து கொண்டனர் என்று, ஓர் குற்ற உணர்ச்சியுடன் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தான். இருப்பினும், அவன் இச்சமயத்தில் யாராவது உண்மை பேசுபவர் தன்னுடன் பேசக் கிடைக்கமாட்டார்களா என ஏங்கினான்.
அயோக்கியர்கள் எப்போதுமே கோழைகள், அவர்கள் தங்களுடைய ஆடம்பரம், இறுமாப்பிலேயே ஒருகாலகட்டம் வரை பிழைத்திருக்கும் வழக்கமுண்டு. “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்பதாலும், “எளியோரை வலியோர் வாட்டினால், அவ்வலியோரை தெய்வம் வாட்டும்” என்பது உலக வழக்கம் / அனுபவமும் கூட. ஒரு கட்டத்தில் அயோக்கியர்களது அடித்தளமே ஆட்டம் கண்டால், அப்போதைகாவது, ஒரு நிலையில் இல்லாது, சற்று நல்லுணர்வோடு சில காலம் இருக்க வாய்ப்புண்டு. ஆனால், மறுபடியும் வேதாளம்/பேதாளம் முருங்கமரத்தில் தலைகீழாக மரத்தில் வௌவால் (bat) போன்று தொற்றிக் கொள்ளும்!! நாய்வாலை நிமிர்த்த முடியுமா?
மிக யோக்கியனான விதுரர், கௌரவர்களால் மிகக் கீழ்த்தரமாக அவமதிக்கப்பட்டு, இந்த அநாவசியப் போரில் தன்னை எவர் தரப்பிலும், ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமின்றி, பிரதம மந்திரி பதவியை கொஞ்சமும் தயக்கமின்றி உதறித்தள்ளி ராஜ சபையிலிருந்து உள்ளச் சோர்வுடன் வெளியேறினார். அதே விதுரர் தான் இச்சமயத்தில் ஓர் சிறந்த வழிகாட்டியாக இருக்கமுடியும் என திருதராஷ்ட்ரன் தீர்மானித்தான். அவ்விரவிலும் நேராக தன் படுக்கை அறையுள், விதுரரை அழைத்து வர தன் பணியாளர்களை அனுப்பினான்.
விதுரரை அழைத்துவர தன் பணி ஆட்களை அனுப்புவதற்கு சற்று முன்புதான் சஞ்சயன் திருதராஷ்ட்ரனிடம் குருக்ஷேத்ர யுத்தபூமியில் நடப்புகளை **நேர்காணலாக அறிவித்து விட்டு மிகக் கோபத்துடன் போனான். சஞ்சயன் அரசரையே ஏசி விட்டு, திருதராஷ்ட்ரனும் அவனது கௌரவக் கூட்டமும் ஒன்றுசேர்ந்து, பாண்டவர்களுக்கு இழைத்த கொடுமைகளையும், செய்த அவமானங்களையும் பட்டியலிட்டு, இடித்துக் கூறினான். அதன் பின்விளைவுகளை அனுபவிக்க்க வேண்டிய காலம் வந்துவிட்டதென எச்சரிக்கையும் விடுத்து; நாளை அரசவையில், பாண்டவர்களில் மூத்த சகோதரர், தர்ம புத்திரர் செல்லி அனுப்பிய செய்தியை எடுத்துரைக்கப் போவதாகச் சென்றிருந்தான். சொல்லப்போகும் எச்சரிக்கை ‘அறிக்கை’ யில் என்னென்ன கூற இருப்பதைப்பற்றி’க் கூற மறுத்துவிட்டான். புதல்வர்கள் எல்லோருமாக போருக்குச் சென்றுவிட்டதால், தனித்து விடப்பட்டு இருந்த திருதராஷ்ட்ரன், சற்று முன்னர் சஞ்சயன் சொன்ன கடுஞ்சொல்லால் நடுங்கிப்போய் மன சமநிலையை இழந்து (வயிற்றில் புளியைக் கரைப்பது போல என) அவ்விரவில் மனசாந்தி எனும் ஏற்ற மருந்துக்காக நல்ல நீதி கூறும் ஓர் உற்ற துணைவனுக்காக ஏங்கித் தவித்தான்.

இங்கே இரண்டு விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். முதலில், குருக்ஷேத்திர யுத்த பூமிக்குப் போகாமல், அங்கு நடப்பவைகளை நேர்காணலாகக் காண, **ஞானக்கண் = “திவ்ய த்ருஷ்டி” எனும் இயல்பு வலிமையாக, வியாஸ மஹரிஷியே, சஞ்சயனுக்கு வரமாக அளித்திருந்தார். அதனால் ஒவ்வொரு நாளும் குருக்ஷேத்திர யுத்த பூமியில் நடந்ததை நடந்தவாறு திருதராஷ்ட்ரனுக்கு சஞ்சயனால், கூறமுடிந்தது. ஆக, சஞ்சயனை நம்பியே திருதாராஷ்ட்ரனுக்கு இருக்கவேண்டிய நிலையில் இருந்தான்.
இரண்டாவதாக, தலைமை பீடத்தில் உள்ளவர்களுடைய பலவீனங்களை நன்கறிந்த கீழ் மட்ட அரசாங்க அதிகாரி எவரும், அரசாங்கத் தலைவரை தனிமையில் மரியாதை இன்றி ஏசுவர் (“உன் வண்டவாளங்களனைத்தும் ஆதியோடு அந்தமுமாக நானறிவேன்” என) எனும் கூற்றுக்கு சஞ்சயன் ஒரு உதாரணம். தனிமையில் ஏசினால், அரசனானாலும் என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்? நடந்ததைத் தானே சொல்கிறான். பொய்யொன்று மில்லையே! அப்படி கீழ் மட்ட அரசாங்க அதிகாரி மீது பின்னர் நடவடிக்கை எடுத்தாலும், தனியாகச் சொன்னவை அனைத்தையும் பகிரங்கமாகப் போட்டுடைக்கவும் ஆரம்பித்து விட்டால், இன்னும் தானே வானளவு மானம் எகிறிப் போகும். தனிமையில் அரசனுக் கேற்பட்ட பிரத்யேக அவமதிப்பை தானே பகிரங்கமாக்கத் தேவையா? மேலாக சஞ்சயன் ஒருவனையே அரசனும் நம்பியாக வேண்டிய கால கட்டம் அது. சஞ்சயனில்லாமல் திருதராஷ்ரனுக்கு போர் செய்திகளை நடந்தது நடந்தவாறு அறிவிப்பவர் யாருமில்லை. ஆகையால், திருதராஷ்ரனும் சஞ்சயனை எதிர்த்து எந்த நேரடி நடவடிக்கையை எடுக்க முடியாமல் இருந்தான். பேசாமல் மௌனியாக அவன் சொன்னவற்றை முடிச்சுப் போட்டுக்கொண்டு ‘தேமே’என இருப்பதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?

சஞ்சயன் அரசவையில் நாளை கூறப்போகும் செய்தியானது இது தான்:
• போரின் பயனின்மையை எடுத்துக்கூறி,
• கௌரவர்களே பாண்டவர்களிடம் மன்னிப்புக்கேட்டு,
• அரசாளும் உரிமையை கௌரவர்களே பாண்டவர்களுக்கு உவந்தளிப்பதே

ஒரு நல்ல முடிவு; இதனால், நாட்டில் அமைதி ஏற்படக்கூடும். இந்த தர்மசங்கடமான பிரச்சனைக்கு அது ஒன்றே நல்ல தீர்வு, என சற்றும் தயங்காமல் உரைப்பதென தீர்மானித்திருந்தான்.
திருதராஷ்ரன் பிறவிக்குணமான பொறாமையுடன், உள்மனதில் பாண்டவர்களிடம் உள்ள விஷத்தை மனதில் வைத்துக்கொண்டு, குற்ற உணர்ச்சியால் கடிக்கப்பட்டு, குற்றவாளிகளான தன்மக்கள் கௌரவர்களிடம் உள்ள பாசத்தாலும், போரின் முடிவு என்னவாகும் என உள்ளுணர்வால் ஊகித்து, பெருங்கடலில் கடும்புயலில் சிக்கிய பாய்மரக்கலம் போல் மனம் பரிதவித்துத் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
வீணான போரின் வேண்டாத முடிவை நன்குணர்ந்த விதுரர், போரின் பயனின்மையை எத்தனையோ விதத்தில் கௌரவ அரசவையில் மென்மையாக எடுத்துக் கூறியிருக்கிறார். அவருடைய அறிவுரை விழலுக்கிரைத்த நீர் போல, ஏற்கப்படா விட்டாலும் பரவாயில்லை, அதற்காக விதுரரின் தாயின் பெயரால் விதுரரே நேருக்கு நேராக அரசவையில், ஏளனப் பேச்சும் கேட்க நேர்ந்தது. இதற்கு மேலும் அவையில் இருந்தால் மேலும் அவமானப்பட வேண்டிவரும் என, அரசவையிருந்து மனம் புழுங்கி, வெளியேறிய அதே, விதுரர், பழைய அவமானத்தையும் மறந்து, குருட்டரசன் திருதராஷ்ட்ரன் கூப்பிட்டவுடன் அரச பதவிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை மனதில் கொண்டு அந்த நடு நிசியிலும், அங்கு வந்தார். காரணம், விதுரர், மற்றவர்கள் போலல்லாமல், அதுதான் தக்க தருணமென்று பழிவாங்க நினைக்கும் இயல்பில்லாதவர். நாட்டு நலனில் விருப்பமும் கொண்டு, உண்மை, நீதி, நேர்மையுடன், இந்த கடைசி தருணத்திலாவது போரை நிறுத்த யோசனை கூறலாமே என்ற நல்லெண்ணத்தில் தான், திருதராஷ்ட்ரனை மேலும் தவிக்கவிடாமல் குருட்டரசனின் சயன அறைக்கு கூப்பிட்டவுடன் நேரே வந்து சேர்ந்தார்.

விதுர நீதிக்குச் செல்வதற்கு முன், அத்தியாயங்களின் பொருட்சுருக்கம்.

முதன்முதலாக, பிரதம மந்திரி, விதுரர் ஆரம்பிக்குமுன் மனக் கேடு விளைவிக்கும்
இச்சூழ்நிலை வந்ததற்கான காரணங்களை நன்கு விளக்குகிறார். இதை இவர் சொல்லும்போதுகூட இடித்துரைக்கவேண்டுமென்ற எண்ணத்தில் சொல்லவில்லை. உண்மை நிலையை அறிந்த பிறகுதானே அடுத்தற்குச் செல்ல முடியும். அஸ்திவாரத்திற்குப்பின் தானே மேல் கட்டடம் கட்டமுடியும்?

முதற்காரணமாக, கெட்ட மதிகொண்ட தான் பெற்ற பிள்ளை துர்யோதனன் சொல்லைக் கேட்டு அரசவையில் தகுதி இல்லாத பலருக்கு உத்தியோகம் அளித்ததை (favouritism in Government Ministerial appointments) நினைவு படுத்துகிறார். இதன் விளைவுகளையும் மெதுவாக அரசன் மறுக்க முடியாத வகையில் உணரும் படி, பக்குவமாக எடுத்துரைக்கிறார். அரசவையில் ஒருவித பொறுப்பில்லாமல் ஆனால் சர்வ அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு அரசையே ஆட்டு ஆட்டிவைக்கும் வெளிநபர்களால் (Non-Governmental Super Authority) விளைவிக்கப் படும் பேரழிவையும் பற்றி விளக்குகிறார்.

இன்றைய கால கட்டத்தில், இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் செயல் பாணிகளைப் பற்றி, தனியான நான் சொல்ல வேண்டியதில்லை. வெளி நாட்டிலிருந்து ஏதோ ஒரு விதத்தில், இறக்குமதி செய்யப்பட்டவர் களுக்கு, பெரும் பதவி உண்டு, அதற்கேற்ற அதிகாரம் (position-power) உண்டு, ஆனால் எவ்வித பொறுப்பும் (No responsibility) கட்டுப்பாடும் (restriction & limits) கிடையாது! நாட்டின் மீது பற்றோ / ஆர்வமோ இன்றி (No patriotic fervour) – சிந்தனை, சொல், செயல் ஆகியவைகளால், சுய நல நோக்குடன் ஐயத்துக்கு எவ்வித இடமின்றி, “முதலில்லா வியாபாரம், சுருட்டிய தெல்லாம் லாபம்” (All turnovers are profits when nothing is invested as capital or expenditure involved) எனும் எடுத்துக்கொண்ட காரியத்தில் ஒருமுகப்படுத்தி, பணம் பண்ணும் எண்ணத்தோடு (money making business thro’ politics) ஈடுபடும் மாசு படைத்த வழக்கமும் இப்பேற்பட்டவர்களுக்கு உண்டு.

இனி விதுர நீதியில் கூறப்பட்டவை இந்திய நாட்டில் தற்போது அரசாங்கத்தில் நடக்கும் கோளாறுகள் போலத் தோன்றினால், அது (co-incidence) தற்செயலாக இணையுள்ளது என சொல்லலாம். எதற்கும் இதை முன்னாலேயே சொல்லி வைக்கிறேன். இக்கட்டுரையை ஒரு வடிவில் வார்த்து எழுத வெகு நாட்களாக மனதின் ஓரத்தில் ஓர் எண்ணம் இருந்தது. அது தற்சமயம் தான் நிறைவேறியது. மேலாக, இதை இப்போது வெளியிட்டது மிகப் பொருத்தமாக இருந்தால், அதுவும் நல்லது தானே! அவ்வப்போது இனி வரும் பகுதிகளிலும், வேண்டிய இடங்களில் ஒத்த நிலையில் இன்று நம் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்ச்சிகளும் இடம் பெறலாம்.

இப்பட்டியலில், காந்தார நாட்டிலிருந்து (இன்றைய ஆஃப்கானிஸ்தான்) வந்தவர், குருட்டரசனின் மைத்துனனான கொடுங்கண்களுடைய, உடலில் குறைவுற்ற, சகுனி மாமா, மற்றும் கௌரவர்கள்-துர்யோதனன் தம்பி, துச்சாசனன், துர்யோதனின் நெருங்கிய நண்பன்-கர்ணன் முதலியோர் அடக்கம். இவர்கள்-எக்காலமும், பாண்டவர்களிடம், பொறாமை பூண்டு, அவ்வெறுப்பின் இறுதி எல்லைக்கே சென்றவர்கள், இவர்கள் எப்போதும் பாண்டவர்களுக் கெதிராகவே செல்லும் வழியை அரசாங்கத்திற்கு, அவ்வப்போது தவறான அபிப்பிராயங்களாகக் கூறுவது வழக்கம். இப்பேற்பட்டவர்கள் எந்நேரத்திலும் எங்கும் நீண்டகாலம் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.
இந்த அத்தியாயத்தில் இந்நிகழ்ச்சிகளைத் தெளிவாக்குகிறார். “இப்போதும் கூட நேரமாகவில்லை. பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய மரபுரிமையை அளித்து, இந்த கடைசி கட்டத்திலும் மக்களுக்குப் பேரழிவு விளைவிக்கும் போரை நிறுத்திவிடமுடியும்” என நல்லுரை வழங்குகிறார்.
அடுத்ததாக,
• மன நிம்மதி இன்மை, அதனால் தூக்கமின்மைக்குக் காரணம்,
• நல்ல அரசாங்க ஆட்சி முறைகளென்னென்ன
• அதில் நாட்டுத்தலைவனிடம் (அரசனிடத்தில்!) இருக்கவேண்டிய குணங்கள்
• நாட்டுத்தலைவன் எவ்வாறு நாவடக்கிப் பேசவேண்டுமெனவும்
• பிறரிடம் பேசும்போது கேட்பவர் மனதைப் புண்படுத்தாதவாறு பேசும் பாணியையும்,
• அப்படி ஏதாவது சிறு தவறிழைத்தாலும், அவைகளைச் சுட்டிக்காட்டி, திருத்திக் கொள்ள துணைபுரிகிறவாறு நல்ல முறையில் செய்திகளையும் அறிவுரைகளை யும் அனுப்பியளிக்க வேண்டுமே தவிர சுடுஞ்சொற்களால் எவரையும் புண்படுத்தக் கூடாது,
• பொறுமையின் எல்லை, பொறுமையின் விளைவு,
• நல்ல நண்பர்களுக்கேற்ற பண்புகள்,
• முன்னோர்கள் தங்கள் வாழ்க்கைப் பாணியில் நன்கு நடத்திச் சென்ற உதாரணங்களை எவ்வாறு அடுத்த தலைமுறையினர் ஏற்றுப் பின்பற்றி நடத்திச் செல்லவேண்டும் என்றும்,
• சுயநலமில்லாத கூட்டுறவின் நன்மைகள்,
• ஒவ்வொருவருடைய எண்ணம், சொல் செயல் ஆகியவைகளால், பிறருக்கு விளையும் விளைவுகளையும்
• தர்ம வழியை மேற்கொள்வதால் விளையும் நன்மைகளையும்
• உலகில் தாங்கள் எடுத்துக்கொண்ட கடு முயற்சியாலும் அவைகள் நிறைவேறாது போகும்போது பதினேழுவித மாந்தர்களுக்கேற்படும் விபரீத விளைவுகள்
• முழு ஆயுளான நூறு வருடங்கள் முழுதும் வாழாது மக்கள் அல்பாயுசில் ஏன், மரிக்கின்றனர், அதன் காரணம்,
• உடல், மனம் ஆகியவை களில் இருக்க வேண்டிய தூய்மை
• நம்மைச் சார்ந்தவர்களை எவ்வாறு பேண வேண்டும், அவர்களிடமே வெறுப்பைக் காட்டாது இருக்க வேண்டுமெனவும்,
• தூதனுக்கு இருக்க வேண்டிய பண்புகள்,
• மாந்தருக்குள் ஐந்துவித இயற்கையாக இருக்கும் இயல்பு,
• தன்னைச் சார்ந்த பெரியோர்களுக்கும், வாழ்க்கையில் நலிந்தோருக்கு இழைக்கும் மகா பாபங்களால் விளையும் கேடுகள்,
• நம் கண்முன்னால் இல்லாத, நற்பண்புகள் நிறைந்த நல்லவர்களை ஏசாமல் இருப்பதால் விளையும் நன்மைகள்
ஆகியவைகளை விவரமாகக் கூறி விளக்குகிறார்.
இனி அடுத்ததாக,
• மங்கயரை மரியாதையுடன் நடத்துவது பற்றியும், அவர்களை வீட்டு விலங்குகள் போல நடத்தக்கூடாது எனவும்,
• நம்மைவிட மூத்தோருக்கு நாம் தர வேண்டிய தக்க மரியாதை செலுத்த வேண்டிய அவசியம் பற்றியும்,
• எங்கெங்கு நன்மை செய்பவர் யாராக இருந்தலும், அவர்கள் முயற்சியை அங்கீகரித்து அவர்களுக்கு தக்க மரியாதை செய்வதைக் கடமையாகக் கொள்ள வேண்டுமெனவும்,
• தன் நலமில்லாத தக்கார் அளிக்கும் நல்லுபதேசங்களை அரசன் புறக்கணிக்க லாகாது எனவும், அதே சமயத்தில், முன்னரே நிரூபிக்கப்பட்ட சுய நலக்காரர்கள் அளிக்கும் ஆலோசனைகளை ஏற்கலாகாது எனவும்
• தலைவனே குற்றங்களைத் தூண்டிவிடாமல் இருக்க வேண்டுமெனவும்
உபதேசம் செய்கிறார்.
இச்சமயத்தில் குருட்டரசன் திருதராஷ்ட்ரனுக்கு துர்யோதனன் மூலம், அவ்வப்போது தூண்டிக் கொடுக்கும், திருதராஷ்ட்ரனின் மனைவி காந்தாரியின்- சகோதரன்-காந்தார நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகுனி மாமா, முதலியோர் கெட்ட ஆலோசனைகளை அமலாக்கி செயல்படுத்தியதன், விளைவாக நடக்கப் போவது தான் குருக்ஷேத்ரப் போர் என தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார். பாண்டவர்களிடம் கௌரவர்களுக்கிருக்கும், பழைய தவறான கெட்ட எண்ணங்களை மறந்துவிட்டு, இனியாவது அவர்களிடம் அன்புடன், நல்லெண்ணங்களுடன் தன் சகோதரன் பாண்டுவின் மக்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பகுதி ராஜ்யத்தை பெருந்தன்மை யுடன் வழங்கி இரு பரிவாரங்களும் அமைதியுடன் நேர்மையுடன் தங்கள் அரசாட்சியை இனியாவது நிம்மதியுடன் நிர்வாகம் செய்ய விதுரர் அறிவுரைகளை வழங்குகிறார்.
நேர்மையான நடத்தையால் கிடைக்கும் மன நிம்மதியே தான் நிரந்தரம், மற்றவை எல்லாமே அல்ப சந்தோஷத்தை கொஞ்ச நாள்களுக்குத் தான் அளிக்குமெனவும், வெறுப்பு, பொறாமை, இறுமாப்பு, ஆகியவைகளால். குறுக்கு வழிகளை, வாழ்க்கையில் கடைபிடிப்போர் யாவரும் முடிவில், அவர்கள் கெட்ட செயல்கள் உலககெங்கும் அம்பலமாக்கப் பட்டு, அவமானத்துடன், எப்போதுமே துக்கத்தில் ஆழ்த்திவிடுமென என விதுரர் இறுதியாகக் கூறி முடிக்கிறார்.
அவரவர் செய்த கர்மங்களின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும் எனவும் விதுரர் கடைசியில் கூறுகிறார்:
“दैवमेव परम् मन्ये पौरुषं हि निरर्थकं”
தை³வமேவ பரம் மன்யே பௌருஷம் ஹி நிரர்த²கம்
“கடவுளின் சக்தியேதான் எல்லாவற்றைக் காட்டிலும் மிக உயர்ந்தது,
அதற்கு முன், மானிட வலிமை எல்லாமே அர்த்தமற்றது”
எனச் சொல்லி, நடப்பவை எல்லாமே வினைப்பயன் என விவரிக்கிறார்.
இவ்வளவுக்குப் பிறகு மகாத்மா விதுரர் சொன்ன உபதேசங்களை, “பூம் பூம் மாடு” என தலையசைத்து சிலாகித்த பின்னரும், அவருக்கும் ‘நன்றி’ பகன்று, வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக்கொண்டது” எனும் மூதுரைக்குத் தக்கவாறு, திருதராஷ்ட்ரனின் இயற்கையாக உள்ள துர்குணத்தால், நடைமுறை எனும் போது, தடம் கவிழ்ந்து, பிள்ளைப் பாசத்தால், விதுரர் அதுவரை கூறப்பட்ட நல்லுரைகளுக்கு எதிர் மாறாகவே நடக்கிறான்.
விதுர நீதியும் பகவத் கீதையும் ஆகிய இரண்டுமே, குருக்ஷேத்ரப் போர் ஆரம்பிக்கு முன், பயம் குடிகொண்ட சூழ்நிலையில் தான் அளிக்கப்பட்டது. முதலில், விதுர நீதியோ, பயத்தில் நடுநடுங்கிக் கொண்டிருந்த தகுதியற்ற குருட்டரசனின் படுக்கையறையிலும், அடுத்தது, பகவத் கீதையோ, இரு பகைப்படைகள் போர் புரியத் தங்கள் தலைமை தளபதியின் சமிக்கை ஆணையை எதிர்பார்த்து அணிவகுத்து இருக்கும் அச்சூழ்நிலையின் நடுவில் தான், ஸ்ரீகிருஷ்னன், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருக்கும் போது, அளிக்கப்பட்டன.

சரித்திரம்:

இனி, இங்கே பரத அரச வம்ச பரம்பரைச் சரித்திரத்தைப் பற்றிக் கூறவேண்டும். சந்தனு என்பவர், அரச பரம்பையின் மூத்த தலைவராக் கருதப்பட்டார். அவர் முதல் மனைவியாக மானிட உருவில் வந்த புனித நதி, கங்கா, பெண் உருவங்கொண்டவராக வந்து சந்தனுவை மணந்தார். இவர்களுக்கு ‘பீஷ்மர்’ பிறந்தார். இவருக்கு மற்றோர் பெயர், ‘காங்கேயன்’ (= கங்கை மைந்தன்) எனும் பெயரும் உண்டு. பிறந்தவுடன் தன் மகன் காங்கேயனை (பீஷ்மனை) அரசனிடம் ஒப்படைத்து கங்கா பழைய படி சென்று விட்டார். பின்னர், சந்தனு, சத்தியவதி எனும் பேராசைகொண்ட மீனவப் பெண்ணிடம் ஆசை கொண்டு, அவளைத் தன் இரண்டாவது மனைவியாக மணந்துகொள்ள விரும்பினார். இவளோ, தன்னை மணப்பதானால், தனக்குப் பிறக்கும் சந்ததியே நாட்டை ஆளவேண்டுமென நிபந்தனை விதித்தாள். அத்தருணத்தில், சத்தியவதியையே தந்தை மணக்க பீஷ்மரே உதவி செய்தார். பீஷ்மரே, மூத்தவரானாலும், எவ்விதத்திலும், சந்தனுவிக்குப்பின் அரசாள உரிமையிருந்தும், தன் தந்தைக்காக தியாகம் புரிந்து, தன் வாழ் நாள் பூராவும் மணம் செய்துகொள்வதில்லை எனும் பிரம்மசர்ய விரதத்தை பிடிவாதமாக மேற்கொண்டு விட்டார். இதைத் தான் நெறி வழுவாது கடைபிடிக்கும் எந்த சபதத்தையும், இன்றும் ‘பீஷ்ம சபதம்’ போன்று, எனச் சொல்வதுண்டு. இதனால், தன் அரசுரிமையைத் தனக்குப் பின் பிறந்த சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்து, ‘பிரம்மசாரியாகவே தன் வாழ் நாள் முழுதுகாக இருந்தார். அரசவைப்பணிகளில், நியாயம், நேர்மை, கடமை ஆகிய நற்குணங்களுடன் சுய நலமின்றி, ஒரு மூத்தவர் எனும் முறையில், நாட்டுக்குத் தொண்டு உண்மையாகப் புரிந்து வந்தார்.
சத்தியவதி இரு ஆண்மகன்களைப் பெற்றார். முதல் மகன் சித்திராங்கதன், இரண்டாவதாக விசித்ர வீர்யன் பிறந்தனர். சித்திராங்கதன் இளம் வயதில் போரில் இறந்தான். விசித்ர வீரியன் அம்பிகா, அம்பாலிகா எனும் மனைவியரை மணந்தான். இவனுக்கு, ஆரம்பத்தில் குழந்தைப் பேறில்லை. இதனால் சந்ததி இல்லாமல் போய்விடுமோ பயந்த சத்தியவதி, பின்னர், அம்பிகாவுக்கு ‘திருதராஷ்ட்ரன்’ என்றும், அம்பாலிகாவுக்கு ‘பாண்டு’ எனும் இரு மகவுகளும் பிறந்தனர். ‘திருதராஷ்ட்ரன்’ பிறவிக் குருடனாகப் பிறந்தான் ‘பாண்டு’வுக்கோ, வெண் குஷ்டம், எனும் தோல் வியாதியுடன் பிறந்தான். [leukoderma (hypo-pigmentation)].
குழந்தைகள் (குருடனாகவோ அல்லது குஷ்டரோகத்தோடு) பிறப்பதற்கு ஒரு மூதுரை சொலவதுண்டு. – “மாதா பிதாக்கள்” செய்தது “மக்களை”க் காக்கும்” ஒவ்வொரு பெற்றோரும் தன் வினையால் கூட தம் குழந்தைகளின் பிறவி வினை நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
கடவுள் அப்படித்தான் ஒருவரோடு ஒருவர் உறவை ஜாடிக்கு மூடியாக அவரர்களுக்கு ஏற்றவாறு தகுதிக் கேற்ற வகையில் (+_ = Plus * Minus) ஏற்படுத்தி படைத்தும் விடுகிறார். அவர் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியாக பொருந்தும் பாங்காக அமைத்த “இருப்புநிலை ஏடு” (Balance Sheet) எப்போதுமே “ சொத்து-பொறுப்பு” ஆகியவைகளுக்கு மதிப்பீடு (Assets & Liabilities) சரி சமமாக (Tally) இருக்கும். இதில் மருந்துக் கூட தவறுக்கு இடமில்லை. இவர் மிகத் திறமை கொண்ட “ஒழுங்கு முறைத்திட்டப் பகுத்தாய்வு வல்லுனர்” (Systems Analyst) அங்கேயும் கொடுக்கல் வாங்கலில் எங்குமே “ஜோடி நுழைவு ஒழுங்குமுறைத் திட்டம்” தான் (Double-entry Accounting system) அவருடைய நினைவாற்றலை கணிதத்தில் கூறினால் “Zillion to the power of infinite Zillions” என்றே சொல்ல வேண்டும். “Zillion” என்பது மிகப் பெரியதும், முடிவில்லாது எழுதியும் எழுதி மாளாத எண்ணிக்கை – Very large indeterminate number.

திருதராஷ்ட்ரன் பாரத நாட்டின் வடக்கிலிருந்த காந்தார நாட்டு ( பிரமிப்படைய வேண்டாம்……இன்று அது ஆஃப்கனிஸ்தான் என ஆக்கப்பட்டுவிட்டது). இளவரசி, ‘காந்தாரி’யை மணந்து, துரியோதன் முதலாவதாகக் கொண்ட கௌரவர்களை ஈன்றாள். பாண்டு ‘குந்தி தேவி’ எனும் நங்கையை மணந்து அவளிடம், பிரபலமான பஞ்சபாண்டவர்’ எனும், தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகதேவனென ஐவரைப் பெற்றாள்.
விதுரர் தன் கர்ம பலனால், அரச அந்தப்புர தாதிக்கு, மகனாகப் பிறந்தார். இவர் முன் பிறவியில் தர்ம ராஜா, யமனாக இருக்கும்போது, ‘மாண்டவ்ய’ மகரிஷிக்கு புரிந்த கடும் குற்றத்திற்காக, மனிதனாக பிறவி எடுக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இங்கு
ஒன்றை நாம் அறிய வேண்டிய போதனை, சனாதன தர்மத்தில், “தீவினைக்குத் தக்க தண்டனை உண்டு”, அதற்கு எவரும் விதி விலக்கல்ல (யமனே கூட) என புரிந்து கொள்ள வேண்டும். “வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினையறுப்பான்” – பழமொழி. இதன் தொடர்ச்சி இரண்டாம் பகுதியில் சற்று விளக்கத்துடன் அளிக்கப்பட உள்ளது.
விதுரர் ஆரம்ப நாள் முதலாகவே, நீதி வழுவாது நியாயம், நேர்மை என நற்குணங்கள் பொருந்தியவராக இருந்தார். விதுரர் எனும் சொல்லுக்கு ‘மிக்க மதி நலம் மிக்கவர்’ எனும் பொருளுண்டு. விதுரரோ, சிறு வயது முதல், நுண்ணறிவாற்றல், பகுத்தறிவு’ ஆகிய சிறந்த பண்புகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவருக்கு பொருளீட்டலில் ஈடுபாடிலாது, கடவுள்பற்றே, தன் உள் நோக்கமாக வைத்துக்கொண்டு, மிகத் தூய்மையான, சூது வாதில்லாத, எளிய வாழ்க்கையை ஏற்று, ‘பீஷ்மரையே’ தன் வழிகாட்டியாகக் கொண்டு செயலாற்றினார். இவர், ‘நேர்மை’, ‘உண்மை’ஆகியவைகளைக் கடைபிடித்து, வாய்மை வழுவாது எல்லோருக்கும் நல்லதையே நினைந்து, போதித்து, செயலாற்றியும் வந்தார். எல்லா முக்கிய விஷயங்களில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் பேதமில்லாது தனது அறிவுரைகளை அளித்துவந்தார்.

கடைசி நிமிடம் வரை அரச குடும்பச் சண்டைக்காக நாட்டையே குருக்ஷேத்ரப் போரில் ஈடுபட வைக்காதிருக்க விதுரர் அரும் பாடு பட்டார். தான் வளர்த்து ஆளாக்கிய கௌரவ பாண்டவ வம்சங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு, தன் முன்னே மாண்டு போவதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகவும் துடித்துப் போனார். தன் பிரதம மந்திரி பதவியையும் தியாகம் செய்து விட்டதாலும், எவ்வித அரசாங்கப் பொறுப்பும் இல்லாததால், இனி, போர் நடப்பது நிச்சயம் என போர் முழக்கம் செய்யப்பட்டு விட்டது என்று இரு தரப்பிலிருந்தும் போர் தொடங்கிய செய்தி வந்த அந்த அடுத்த நொடியில், முன்னரே விதுரர் எடுத்த முடிவின்படி எவர் சார்பாகவும் போரிட விரும்பாது, தன் சபதத்தை நிறைவேற்ற அதன் பிறகும் தன் வீட்டில் தங்கி இக்கொடுமைக் செய்திகளை அல்லது காட்சிகளைப் பற்றி கேட்டு சகித்துக்கொள்ளும் மனமில்லாது, இறை தியானத்தில் மூழ்கிவிட ‘ஹரித்வார்’ சென்று, தவ வேடம் மேற்கொள்ளச் சென்று விட்டார்.

பாரதயுத்தம் முடிந்து, கிருஷ்ணரும் மறைந்து விட்டதாகவும் தெரிந்து மிக துக்கமடைந்தார். கிருஷ்ணர் மறையும் தருவாயில் ‘உத்தவருக்கு’ கடைசியாக நல்லுபதேசங்களை அளித்ததாகக் கேள்விப்பட்டு (essential Farewell message of Lord Krishna to Uddhava), உத்தவரை அணுகி, அவருக்கு கிருஷ்ணர் சொன்ன அறிவுரைகளை தனக்கும் உபதேசிக்கக் கேட்டுக்கொண்டார். இது மிக உபயோகமான நல்லுரைகள் அடங்கியது. இதை பகவத் கீதைக்கு அடுத்த படி நிலை என மதிக்கப்பட்டு மிக உயர்தரமான, சுருக்கச் சொல்லிய அறிவுரைகள் நிறம்பப் பெற்றது. இதை உத்தவ கீதை என்றும் கூறுவர். மீண்டும் ஒரு தடவை –
முதலில் விதுர நீதி
இரண்டாவது பகவத் கீதை
மூன்றாவது உத்தவ கீதை
என படித்துத் தெளியவேண்டும்.

விதுரருடைய சாதாரண சொற்கள் கூட அநேக தடவை திருதராஷ்ட்ரனைக்
கடுமையாகச் சாடியும், சிலது அங்கதமாகவும், மனதைத் துளைத்துத் தைக்கும் கூரிய அம்பென பாய்ந்தது. உண்மையே பேசுபவதென கொள்கையுடையவர்கள், யாரிடம் எதற்காக பயப்பட மாட்டார்கள். அப்படி ஏதாவது விபரீதம், அவர்களுக்கே நடக்கலாம் என்றாலும், அப்போதும் கூட உண்மை பேசுபவர்கள் அஞ்சி ஓடி ஒளிய மாட்டார்கள். உண்மையின் எதிரிகளை எதிர்த்து உயிரைத் தூசென மதித்து உயிர் துறக்கவும் தயாரென செயலிலும் காட்டுவர். அது தான் உண்மை பேசுபவரின் நிரந்தர மன நிலை.
ஆனால், இச்சொற்களில் விதுரருடைய மதிநலத்தின் திறத்திண்மையை வெகுவாகக் காண்பித்தது. இவருடைய அநேக பொது வாக்கு மூலங்கள் இன்று நம் இந்திய நாட்டில் நடக்கும் பல அவல நிலையை ஒத்திருப்பதால், அந்த அவலங்களை அகற்ற விதுரர் அன்று கூறிய அறிவுரை ஏற்றால் இந்திய நாடே உருப்பட்டு போக வாய்ப்புண்டு. நாம் சொல்லவந்ததைச் சொல்லிவிடுவோம். இனி சொன்னதைக் கேட்டு நல்லவைகளை ஏற்பது ஏற்காதது அதிகார பீடத்தில் உள்ளவர்கள் பொறுப்பு. (“ஊதும் சங்கை ஊதி வைப்போம், விடியும் போது விடியட்டும்” என்பது போல, எவ்வளவுக் கவ்வளவு மக்கள் இன்னுண்மையை அறிகிறார்களோ, அதுவரை நல்லது தானே!) நாம் நம் கடமையைச் செய்து கொண்டே இருப்போம். நடப்பது நடக்கட்டும். உண்மையேதான் தன் பலம் என்று நினைக்கும் சில பைத்தியக்கார சாமானியர்களும் இவ்வுலகத்தில் உண்டு.
இனி, விதுர நீதியில் உள்ள மிக முக்கிய ச்லோகங்களின் பொழிப்புரைகளைக் கொடுத்து, அதன் விளக்கங்களை அளிக்க இருக்கிறது.

सुलभा: पुरुषा: लोके सततं प्रियवादिन: |
अप्रियस्य च पथ्यस्य वक्ता श्रोता च दुर्लभ: ||
ஸுலபா⁴: புருஷா: லோகே ஸததம்° ப்ரியவாதி³ந: |
அப்ரியஸ்ய ச பத்²யஸ்ய வக்தா ஸ்²ரோதா ச து³ர்லப⁴: ||
நமக்கு விரும்பியவைகளை மட்டுமே கூறும், மாந்தர்களை உலகில் காண்பது மிக எளிது; கிடைப்பதும் ஏராளம். தனக்கு உட்கொள்ள விருப்பமில்லாத ஆனால், நன்மை பயக்கும் கசப்பு மருந்து போன்ற நல்லுரைகளை சொல்லிக் கொடுப்பவர்களும் மிக அரிது; அதைக் கேட்டு பயனடைய விரும்புபவர்களும் அதைவிட மிக மிக அரிது.
[கட்டுரை எழுதியவரின் கோரிக்கை: விதுர நீதி விளக்கங்கள் முழுதும் ஒரு கட்டுரைத் தொகுப்பில் கொடுக்க இயல வில்லை. இதற்காக, ஒரு முழு புத்தகத்தைத் தான் எழுத வேண்டி வரும். இனி வரும் பகுதிகளில், தனிச் சிறப்பு வாய்ந்த மிக முக்கிய விதுர நீதி ஸ்லோகங்களை மட்டும் பொறுக்கியெடுத்து விளக்குவதோடு, இதன் நடுவில் ஒத்த நிலையில் இன்று இந்திய நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்ச்சிகளும் இடம் பெறலாம்].

(அடுத்து, இரண்டாம் பகுதி ஆரம்பம்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்