விதியின் சதி

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்


சுந்தரும் சுந்தரியும் கைகோர்த்து பல்கலைக்கழகவளாகத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்,….

பெயருக்கேற்ப ரதிமதனையும் மிஞ்சும்படி தானிருந்தனர்.பெயர்பொருத்தம் வேறு பொறாமைக்கண்கள் அவர்கள் போனதிக்கில் விடாமல் விடாமல் பின்தொடர்ந்தன.

சுந்தரி உயிரியல் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கக் காத்திருந்தாள். சுந்தரோ இந்தியாவிலிருந்து வந்து முதுகலைப்பட்டப்படிப்பை முடிக்கவிருந்தாஅன். விருப்புவெறுப்புகளில் கூட இருவரும் ஒற்றுமையா இருந்துவந்தனர்.

‘சுந்தரி, எங்கப்பா அமெரிக்காவுல நடக்கவிருக்கறமாநாட்டுக்குப் போகவிருக்கிறாராம். போற வழியில சிங்கைக்கு வந்து நம்ம ரெண்டுபேரையும் சந்திக்கப்போறதாச் சொன்னாரு. ‘

‘ வாவ், என் வருங்கால மாமனாரை, பிரபல மருத்துவர் டாக்டர் சுமனை நான் கூடியசீக்கிரமே சந்திக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லு. ‘

‘ ம்,.. என்ன, எங்கப்பாவுக்கு சுமாரா இருக்கற உன்னப்பிடிக்குமான்னு தான் சந்தேகமாயிருக்கு…. ‘, என்று அவளைச் சீண்ட,

‘ அப்போ ஏன் என்னைக் காதலிச்சீங்க, வேற அழகான பொண்ணாப்பாத்துக் காதலிச்சிருக்கலாமே ‘, என்று சுந்தரி சிணுங்கினாள்.

‘ ம்,.. இதுவரைக்கும் உன்னவிட அழகா யாருமே கண்ணுலபடல்லியே. பட்டாக் காதலிச்சுடவேண்டியதுதான் ‘,

இருவரும் ஒருவரையொருவர் கிண்டலடித்தபடியே விடை பெற்றனர். சுந்தரியிடமிருந்து விடைபெற்ற சுந்தரின் நினைவுகள் அவனின் தந்தையைச் சுற்றிவந்தன. தனக்காகவே வாழ்ந்து தன்னைத் தோழனாகவே எண்ணிய தந்தையின் நினைவுகள் அவனைத் தாலாட்டின.

அன்னையின் புகைப்படத்தைக்கூட அவன் அவனுக்குக் இதுவரை காட்டியதேயில்லை. அதற்கு அவர் கூறிய காரணமும் அவனுக்கு மிகவும் நியாயமாகவே பட்டது. விவாகரத்து செய்தபின் பின்பு பிறந்த குழந்தையும் இறந்தே பிறந்ததெனச் சொல்லிவிட்டுத் தானே அவனை வளர்த்திருந்தார். அவள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டுமென்ற நல்லெண்ணமே அதற்குக் காரணயாய் அமைந்தது. அறிந்தும் அறியாமலும் அவளின் வாழ்க்கையில் தான் குறிக்கிடக்கூடாது என்று உறுதி பூண்டிருந்தார்.

வீட்டை நோக்கி நடந்த சுந்தரிக்கும் பற்பல சிந்தனைகள் மனதில்.சுந்தருக்குத் தன் பிறப்பின் ரகசியங்களைப் பலமுறை சொல்லியிருக்கிறாள். பிறப்பு விஷயத்தில் கூட எவ்வளவு ஒற்றுமை என்று இருவரும் பெருமைப்பட்டுக்கொண்டனர். அவனுக்கு அம்மாவின் முகம் தெரியாதென்றால் அவளுக்குத் தன் உண்மையான தந்தையின் பெயர்கூடத் தெரியாது.

உயிருக்கு உயிராகத்தான் மதிக்கும் அப்பா திரு.ராஜன் தன் உண்மையான தந்தையில்லை என்ற ரகசியம் சுந்தரிக்கு பதினைந்து வயதில் தான் தெரியவந்தது.

சுந்தரிக்கு அம்மாவைவிட அப்பாவிடம் தான் அதிக பாசம் நெருக்கம் எல்லாமேயிருந்தது. மணமானபுதிதில் ராஜனுக்கு விபத்து ஒன்றில் ஆண்மை பறிபோயிற்றாம். ராஜனோ ஒரு குழந்தையின் வரவால் மட்டுமே தங்கள் வாழ்வு நிறைவு பெறுமென்று நம்பியிருந்தார். இந்தியாவுக்குத் தன் மனைவியை அழைத்துச் சென்றார். தன் மனைவிக்குச் செயற்கை கருத்தரிப்புக்கு ஏற்பாடு செய்தார். அழகான பெண்குழந்தையும் பிறந்தது. சுந்தரியிடம் இவ்விஷயத்தைச் சொல்லாமல் தான் பலகாலம் வளர்த்துவந்தார். ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்த சுந்தரியின் அத்தை ஒருத்தி விஷயத்தை போட்டு உடைத்துவ்விட்டாள்.

அந்த உண்மையைத் தாங்க முடியாமல் சுந்தரி பட்டபாடு!

தந்தை ராஜனின் அன்புதான் அவளைத் தேற்றியது. என்றைக்கும் இணைபிரியாத தோழனாய் இருக்கும் தந்தையை நினைத்துக்கொண்டே சுந்தரி சாப்பிட ஆரம்பித்தாள்.

திரு.ராஜன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

‘ அப்பா, நா உங்ககூடக் கொஞ்சம் பேசணும் ‘, என்று பீடிகையைப் போட்டாள்.

‘ என்னம்மா, சொல்லு ‘, என்று அவளருகில் சென்று ஆதரவாய் முதுகில் தடவிக்கொடுத்தார்.

‘அப்பா, நீங்க சுந்தரப்பத்தி என்ன நினைக்கிறீங்க ? ‘

‘ நல்ல பையன், அழகும் அறிவும் நிறைஞ்ச மரியாதை தெரிஞ்ச அம்சமான பையன். ‘

‘ அப்ப உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க. ‘

‘ இதென்னம்மா, யாருக்குத் தான் அவனப்பிடிக்காமப் போகும். சுத்தி வளைக்காமச் சொல்லு. உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு… ‘

‘ ஆமாம்பா,.. நீங்கதான் அம்மாகிட்டப் பேசி நல்ல முடிவு சொல்லணும் சுந்தரரோட அப்பா அடுத்த வாரம் ஊரிலிருந்து வரார்பா ‘

‘ உன் விருப்பம்தான் என் விருப்பமும். கவலையேபடாமத் தூங்கு. நா அம்மாகிட்டப் பேசறேன். ‘

அப்பாவின் அனுமதி அவளுக்கு மனநிறைவைத் தந்தது. இனி சுந்தரின் அப்பாதான் தன் முடிவைச் சொல்லவேண்டும்.

சுந்தரின் அப்பாவை வரவேற்க ஏர்போர்ட்டிற்கு அவனுடன் அவளும் சென்றிருந்தாள்.நீண்ட நாள் கழித்துச் சந்தித்த தந்தையும் மகனும் தங்களை மறந்து நின்றனர். உர்ற தோழர்கள் போல் தோள்மேல் கைபோட்டு சகஜமாக உரையாடுவதைப் பார்த்தபோது சுந்தரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல மாமனார் நமக்குக் கிடைக்கப்போகிறார் என்று ஆனந்தித்தாள். ஆனால், என்ன இந்த சுந்தர் அப்பாவைப்பார்த்ததுமே என்னை மறந்துவிட்டான் என்று லேசானகோபமும் அவளுள் எழுந்தது.

‘ என்ன, நான் ஒருத்தி இருக்கிறதையே நீங்க ரெண்டுபேரும் மறந்திட்டாங்க போலயிருக்கே. ‘

‘ ஓ,.. அப்பா மறந்தே போனேன். இவ சுந்தரி. பார்க்கத்தான் ஆள் சாது. ஆனா, சரியான வாலு. இது என்னோட செல்ல அப்பா. உலகத்துலயே சிறந்த அப்பா ‘, என்று அறிமுகம் செய்து வைத்தான்.

‘ அங்கிள், உங்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.உங்கைப்பார்க்க ரொம்ப ஆவலாயிருந்தேன். அந்த ஆசை இப்பத்தான் நிறைவேறியிருக்கு ‘, என்று மகிழ்ச்சியுடன் சொன்ன சுந்தரியைக் கூர்ந்து பார்த்த சுமனுக்குச் சட்டென்று ஒரு நினைவு தோன்றியது.

கூடாது அப்படியிருந்து விடக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டே டாக்ஸியில் போகும்போது மெதுவாகச் சுந்தரியின் குடும்பத்தைப்பற்றி விசாரித்தார்.

சுந்தரி தன் குடும்பத்தைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். ‘ எங்கப்பா பொறியாளர் ஆக இருக்கார். என் மேல உயிராக இருப்பார்.அம்மாகிட்டே எனக்கு பயம் கலந்த மரியாதை. அம்மா தென்னிந்தியாவிலேயே பரதக்கலைஞராக இருந்தவர். பெயர் சுகுணா. நான் பிறந்தது மட்டும் தான் இந்தியா. வளர்ந்தது, படித்தது எல்லாமே சிங்கப்பூர்தான்.,… ‘

மேற்கொண்டு அவள் பேசியது எதுவும் சுமனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

சுகுணா,…. இந்த பெயரை கெட்டதுமே அதிர்ந்து போனார். அவரால் நம்பமுடியவில்லை. சுந்தரியும் சுந்தரும் நல்ல பொருத்தமான ஜோடி,.. ஆனால், இந்த சுகுணா…. ?

சுகுணா என்று வேறு யாராவதாக இருக்கலாம். இருக்கவேண்டும்,…. ஆனால், சுந்தரிக்கு சுகுணாவின் ஜாடைகள் இருக்கின்றனவே. அந்தச்சிரிப்பு,.. கடவுளே,..

தன் வீடு வந்துவிட்டதை அறிவித்துச் சிந்தனையைக் கலைத்தாள் சுந்தரி. திரு ராஜன் அவர்களை வரவேற்று உட்கார வைத்தார். மனைவி கோவிலுக்குச் சென்றிருப்பதாகத் தெரிவித்தார்.

வரவேற்பறையில் இருந்த திருமண மற்றும் குடும்பப்புகைப்படங்கள் புதிருக்கு விடையை அளித்தது. அதிர்ச்சியால் அவர் பேசமுடியாமல் சமாளித்துக்கொண்டு மெல்ல திரு ராஜனிடமும் சுந்தர் சுந்தரி ஆகியோரிடமும் சுகுணாவே சுந்தரின் தாய் என்பதை விவரித்துணர்த்தினார்.

சுந்தரிக்கு நம்பமுடியவில்லை. நம்பமறுத்தாள். அழுதாள். சுந்தரோ வாயடைத்துப் போய் உட்கார்ந்துவிட்டான். அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. விதியின் சதியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சுகுணாவின் முதல் கணவர் டாக்டர் சுமன். கருத்து வேறுபாட்டால் இருவராலும் ஒத்துவாழமுடியவில்லை. விவாகம் விவாகரத்தில் முடிந்தது. ஆனாலும், சுகுணாவின் எதிர்காலத்தில் சுமனுக்கு அக்கறை இருந்தது.

அவள் மீண்டும் மணம் செய்து வாழ வேண்டும் என்று விரும்பினார். குழந்தை அவளின் மறுவாழ்வுக்குத் தடையாக இருக்கலாம் என்றெண்ணி

அவர் அவளுக்குப் பிறந்த குழந்தை இறந்துபிறந்ததாக அவள் பெற்றோர்மூலமே சொல்லச்செய்திருந்தார். குழந்தையைத் தான் எடுத்து வந்து வளர்த்துவந்தார். ஆண்பிறந்தால் சுந்தர் என்றும் பெண்பிறந்தால் சுந்தரி என்றும் சுகுணா பெயர் வைக்க எண்ணியிருந்தாள். பிள்ளைக்கு சுந்தர் என்று பெயரிட்டார்.

வீடு திரும்பிய சுகுணாவுக்கு நிலைமையை உணரவே நேரம் பிடித்தது. எதிர்பாராத அதிர்ச்சி அவளுக்கு 1 ராஜன் அவளை ஆசுவாசப்படுத்தினார்.

‘ சுகுணா, முதல் மணம் பற்றித்தெரிந்துகொண்டுதான் நான் உன்னை மணந்தேன். உன் குழந்தை உயிரோடு இருப்பதையும் உன் பெற்றோர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால், உன்னிடம் உண்மையைச் சொல்லக்கூடாது என்று சொல்லியிருந்தனர். கவலைப்படாதே, ஒரே தாய் வயிற்றில் பிறந்த இருவரிடையே நடக்கவிருந்த திருமணத்தைத் தடுக்கமுடிந்ததே. அதை நினைத்து நிம்மதியாயிரு. ‘ என்று ராஜன் மெளனத்தைக்கலைத்தார்.

‘ ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் திருமணம் செய்திருந்தால்,… நினைக்கவே பயமாகயிருக்கிறது. தந்தைகள் வெவ்வேறு தானென்றாலும்,.. தாய் ஒருத்தியே இல்லையா,… ‘ என்று சுமன் முடிக்குமுன்னே

‘ இல்லைங்க,.. தந்தையும் நீங்க தான் ‘ என்று கதறினாள் சுகுணா. செயற்கை கருத்தரிப்பில் ஒரு பிரபலமான அறிவாளியான டாக்டரின் விந்துதான் தனக்குச் செலுத்தப்பட்டது என்று தெரிந்ததும் அந்த டாக்டரின் பெயர்கூடத் தனக்கு சமீபகாலமாகத் தன் பெற்றோர்களின் மூலமாகத் தெரியவந்தது என்றும் உணர்ச்சிவசப்பட்டு அழதுகொண்டே சொல்லி முடித்தாள் சுகுணா.

சுந்தரும் சுந்தரியும் சிலமணிநேரம் தங்களிடம் இருந்த உறவு இப்படி மாறும் என்று எதிர்பாராததால் திகைத்துச் செயலிழந்து உட்கார்ந்திருந்தனர்.

தாய் மட்டுமல்ல தந்தையும் இருவருக்கும் ஒருவர் தானாம். என்ன விநோதமான திருப்பம். விதியும் விஞ்ஞானமும் சேர்ந்து செய்த கூட்டுச் சதியோ,…

சுந்தரியைச் சமாதானப்படுத்த ராஜன் முயற்சி செய்தார். ‘இது தானம்மா விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை. இருப்பினும் பலவிதமான விபரீதங்களும் இல்லாமல் இல்லை. சிலசமயங்களில் விஞ்ஞானவிளைவுகள் இயற்கைக்கு எதிராகச் சதி செய்யும் போதுதான் இத்தகைய விபரீதங்கள் தெரியவருகிறது. உன் விஷயத்தில் விதியும் சதி செய்துவிட்டது. காலம் உன் காயத்தை ஆற்றும். கவலைப்படாதேயம்மா,… உன் அப்பா எப்போதும் உன்னோடயே இருப்பேன். தைரியமா இருடா,.. ‘ என்று மகளைத் தேற்றினாள்.

—- (முற்றும்)—-சிங்கை எக்ஸ்பிரஸ் ஜூன் 16- ஜூலை 2 1998

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்