வளவதுரையனின் நாவல் ‘மலைச்சாமி ‘ யை முன் வைத்து.

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

எஸ்ஸார்சி


நன்செய்ப்பாசனத்திற்கென்று வளவனூரில் கம்பீரமாய் ஒரு ஏரி இருக்கிறது அது மண்ணைப்பொன்னாகியது அந்த வளவனூரிலும்தான். நீர் நிலைகள் நதியோ அருவியோ குளமோ ஏரியோ கிணறோ அவை உயிரோடு இயங்குவதாகவே ஒரு எழுத்தாளனுக்குப் படைப்புக்களில் அனுபவமாகிறது.
கரை புரண்டு ஔடும் நதியோ அழகக்கொட்டும் அருவியோ நீர் கரை ததும்பும் ஏரியோ பொங்கும் கடலோ அவை பேசுவதாக ஆடுவதாக கோபிப்பதாக கொஞ்சுவதாக காதலிப்பதாக நல்லவைகள் எவருக்கும் போதிப்பதாக நாம் பயிலும் சிறுமை கண்டு பொங்குவதாக ஆற்றும் நற்செயல்கள் நோக்கி நன்றிபாராட்டுவதாகப் படைப்பாளிகள் தம் கற்பனைத்திறம்கொண்டு எழுதிப்போவர். மெய்யே நீரின்றி அமையாது உலகென்பது.
படைப்பாளி தான் லயிக்கும் தடம் தேடிக் கண்டடைவானாகில் இயற்கையோடு த்தனக்கொரு ஆன்ம பந்தம் ஆழமாய் இருப்பதை உணர்ந்து அனுபவிப்பான். கலைப் படைப்பு எதுவுமே அந்த இயற்கைத்தாயொடு தன் பந்தத்தை சொல்லிச்செல்வதுவே உயிரோட்டமுள்ள எந்தவொரு எழுத்துப்படைப்பிலும் அது இயல்பாகவே அமைந்து விடுகிறது
வளவதுரையன் என்னும் சிறுகதை எழுத்தாளர் தேரு பிறந்த கதை என்னும் தனது சிறுகதை தொகுப்பால் இலக்கிய உலகில் தன் முத்திரை பதித்தவர். சங்கு என்னும் பெயரில் வெளி வரும் உயிரோட்டமுடைய இலக்கிய இதழின் ஆசிரியர். மரபுக்கவிதை நவீனக்கவிதை தத்துவம் திருமாலின் பக்தி இலக்கியம் இவைகளில் ஆழ்ந்த படிப்பும் பிடிப்பும் கொண்டு கூத்தப்பாக்கம் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளராய் இருந்து தமிழ்த்தொண்டு ஆற்றி வருபவர்.
வளவனூர் ஏரிக்கரை தன் அழகு சொல்லி சொக்க வைக்க எழுத்தாளர் பாவண்னனைப் பெற்றது அந்த வளவனூரின் ஏரி வளவதுரையனையும் விட்டு வைக்கவில்லை. சிக்கெனப்பிடித்து நிற்கிறது. . மலைச்சாமி நாவலில் வரும் மாந்தர்கள் யாவருமே ஏரியோடு சம்பந்தப்பட்டவர்கள். பறவைகள் விலங்குகள் வயல்வெளிப்பயிர்கள் செடிகொடிகள் யாவுமே இந்த நீர் நிலையோடு தம்மை பிணைத்துக்கோண்டே இயங்குகின்றன. மனிதரைச்சொல்லவே வேண்டாம் வாழ்வின் மூல அச்சு அங்கே இந்த ஏரி என்பது. மானிட வாழ்வின் நல்லது கெட்டது அப்படி வரும் எதற்கும் உற்றத் துணை அவ்வூரில் அந்த ஏரிதான். வாழ்வில் கெட்டது என்பது எதுவும் இல்லை. வேதாந்தப்பார்வை மனிதர்க்கு இலகுவானால் கெட்டதும் பின் நல்லதும் ஏது. யாதுமாவதுவாய் அனுபவமாவதும் ஒன்றே.. எதிர்படும் இடும்பை இயல்பென்று உணர்ந்திட மனிதர்க்கு துன்பம் வந்துபின் அது துயர்தருகின்ற சாத்தியம்தான் ஏது.

வளவதுரையனின் மலைச்சாமி நாவலை அறிமுகப்படுத்தி எழுதும் புதுவை விமர்சகர் பேராசிரியர் நாகராசன்,
‘ பச்சைத்தண்ணீரை முகத்தில் அறைந்துகொன்டால் ஏற்படும் ஜில்லென்ற புத்துனர்ச்சி
இந்நாவலைப்படிக்கும் போது உண்டாகிறது’ என்பதாய்க்குறிப்பிடுவது மிகச்சரியே.
எதையோ பார்த்துப் பயந்துவிட்ட மாலதியை மலைச்சாமி என்னும் சாமியாரிடம் அழைத்துச்செல்வதாய் தொடங்கிய கதை பல தரவுகள் ஊடாகப்பயணித்து இறுதியில்
மலைச்சாமி ஊரைவிட்டே சென்றுவிட்டாதாகவும் சொல்லி முடிகிறது.
சாம்பலாகிப்போன தன் அப்பாவை மண் சட்டியில் அள்ளி க்கொன்ட குருமணி நாவலில் இப்படிப்
பேசுகிறார்.
‘ அந்தப்பானையில் இருப்பது எலும்புகளா அப்பாவா அவ்வளவு ஆகிருதி படைத்த அறிவு
இதில் அடங்கிவிட்டதா, விஷ்ணு சஹச்ர நாமமும் கம்பராமாயணமும் அதனுள் இருக்கின்றனவா,
உள்ளே பாரதியும் குடிகொண்டுள்ளாரா, நான் என் தம்பிகள் எங்கள் குழந்தைகள் இந்த வீடு தெரு இந்த ஊர் கோயில் குளம் எல்லாம் ஆட் கொண்ட மனம் சமுத்திரத்தில் ஆழப்போகிறதா?’

உடலை கூடு என்று அறியும் ஒருவன் உயிரெனும் அப்பறவை அக்கூடுவிட்டு பறந்துவிடுவதும் உனரலாம். அறிவது அறிந்தவன் பேசும் வார்த்தைகள் இவை. சமய இலக்கியங்களில் அடிக்கொருதரம் தோய்ந்தும் விடுகின்ற வளவ துரையன் போன்ற ஒரு படைப்பாளிக்கு இப்படித் தரிசனங்கள் எளிதாகவே வாய்க்கின்றன. வாழும் அன்றாட வாழ்க்கையோடு அவை உரசிப்பார்க்கின்றன.
படைப்பிலக்கியம் தோன்றி ச்சமூகம் பயன் பெறுகிறது.
‘ கல்யாணத்துக்கு முன்னாடியே உதய சூரியன் மோதிரம் பார்த்துதான் நான் பொண்ணு இந்தாத்துக்கு கொடுத்தேன்’
என்று பேசும் சம்பந்தியைக் கதையில் நாம் ஆச்சரியத்தோடு சந்திக்கிறோம்.
தன் தந்தைக்குக் கரும காரியம் செய்வதற்கு மாறாகப் படத்திற்கு மட்டுமே மாலைபோட்டு கல்யான சாப்பாடு. போடத்திட்டம் வைக்கும் புரட்சியாளர் அந்த க்குருமணியைப்பார்க்கிறோம்.
வளவ துரையனே குருமணியாய் இங்கே பேசுவது வாசகனுக்கும் அனுபவமாகிறது.
அண்ணாதுரையின் மீது தான் கொண்ட ஆழ்ந்த பிரியத்தால் தான் துரையனாகி
வளவனூர்க்காரன் என்பதாலே அது வளவதுரையன் என்றும் ஆனது சிலர்க்குத் தெரிந்தும் இருக்கலாம். இது படைப்பாளியின் சொந்த வரலாறு. பார்ப்பனக்குடும்பங்களில் கூட இப்படியும் உண்டென்பது தவறாமல் இங்கே பதிவு செய்யப்படவே வேண்டும்.
மோதிரத்தில் உதயசூரியன் ஒரு பார்ப்பனர் கையில் என்பதுவாய் கதையில் வருவது அரிஞர்அண்ணாதுரை வாழ்ந்து காட்டிய அரசியல் நேர்மைக்குச் சாட்சி சொல்வதாய் அமைகிறது.
வளவதுரையன் தன் புனைப் பெயருக்கு அண்ணாதுரையைத்தேர்வு செய்ய த்தன் தந்தையே ஒரு காரணம் என்கிற உண்மையையும் தன் தோழர்களிடம் சொல்லி இருக்கிறார்.
நாவலில் வரும் தம்புசாமி யும் சுலோச்சனாவும் ஒரு விபத்தில் சிக்கக்கணவன் தம்புசாமி ஆண்மை இழந்து போகிறான். மனித வாழ்க்கை லேசானதுவா என்ன,
சுலோச்சனாவை அந்த அது என்ன செய்கிறது ? வளவ துரையன் சொல்கிறார்.
‘ சில நேரம் சிறுகோலுக்கு ப்பயப்பட்ட யானை போல் அது அடங்கி இருக்கும். மறுநாளே
மதம் பிடித்தது போல் காலால் மிதிக்கும்.சுலோச்சனா துடித்துப்போவாள். அழுவாள்.குரங்கைக்கட்டியே வைத்திருக்க வேண்டும் என்று கோயிலுக்குப்போக ஆரம்பித்தாள்.
ஔரிரு நாள் கட்டுப்பாட்டில் வந்தது.பிறகு கோயில் தூண்களில் சிலைகளாகச்சிரித்தது. அவள் பயந்துபோனாள்’
அந்தக்குரங்குக்கு வசப்படா உயிர் ஏது. காமம் என்பது பேரன்னையின் பெருங்கொடையல்லவா.
மலைச்சாமி நாவலின் அட்டைப்பட நங்கையே அந்த சுலோச்சனாவாகவும் இருக்கலாம்.
அந்த அது கொடுத்த இம்சைகள் என்னவானது?
ஏரி நிறைய தண்னீர் தளும்பிக்கொண்டிருந்தது எ.ப்பொழுதும் அது உடை படலாம்.
பாவம் ஏரியும் எவ்வளவு நாள் தாங்கும்.
ஆக க்கோபு வந்து கீறிவிட்டான்.
வளவதுரையன் அந்த அது பற்றி எத்தனை அழகாய் இங்கே எழுதி நம்மைப்பிரமிக்க வைக்கிறார்.
உவமைகளைக்கையாள்வதில் இந்நாவலில் வளவதுரையன் எழுத்தாளர் எவரையும் மிஞ்சி விடுகிறார். எடுத்துக்காட்டாகச்சில.
ஒவ்வொரு வீட்டிற்கும் அஞ்சல் தரும் ஆள் போல தண்ணீர்ப்பாம்பு. ஒவ்வோர் இடுக்கிலும் தவளை
உள்ளதா என்று தலையை உள்நுழைத்துப்பார்த்துக்கொண்டே போனது.
தொலைவில் இருந்த தார்ச்சாலையில் விளையாட்டுப்பொம்மைகள்போல பேருந்துகள்
சென்றுகொண்டிருந்தன.
அழுத்தி வாரப்பட்டிருந்த மாலதியின் தலை கருப்புக் க்ரானைட் கல்தளத்தைப்போல பளபளத்தது.
தன் கணவன் முருகேசன் இறந்துவிட்டதாய் ஒரு சேதி வந்ததால் நாட்டாமையின் சொல்படி தன் கணவனின் தம்பி பெரியசாமியை மீண்டும் சுமதி மணக்கிறாள். முருகேசன் இறந்துபோனது என்கிற விஷயம் பொய் என்றாகிட நாட்டாமை நொந்து நூலாகிப் போகிறார்
மும்பை சென்ற அந்த முருகேசனோ தேவி என்கிற பெண்ணிடம் சிக்கி ச்சின்னாபின்னமாகிறான்
வளவ துரையன் இப்படி எழுதுகிறார்.
‘ ஆனால் பிசாசிடம் எங்காவது ஜாக்கிரதையாக இருக்க முடியுமா. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகத்தன் தந்திரங்களால் பிசாசு அவனை முழுதுமாக ஆக்கிரமித்தது.
அந்த அது என்பதுவே இங்கே பிசாசாகி முருகேசனை மட்டுமல்ல வாசகனையும் கட்டிப்போட்டு வேடிக்கைக் காட்டுகிறது.`
கோபுவுக்கும் மாலதிக்கும் நடைபெறும் புரட்சித் திருமணத்திற்கு எழுத்தாளர்கள் சபாநாயகம் பழமலய் இதயவேந்தன் எச்ஸார்சி அன்பாதவன் வளவதுரையன் ஆகியோர் நேரில் சென்றிட பாவண்ணன் மட்டும் பெங்களூருவிலிருந்து வாழ்த்து அனுப்புகிறார். அண்மைக்காலத்தே வாசகனுக்கு அனுபவமாகும் புது யுக்தி இது. செலவில்லாமலே ஒர் இலக்கியக்கூடல்.
மலைச்சாமியைப்பார்க்கப்போன மாலதியும் கோபுவும் சாமியைப்பார்க்காமலே திரும்புகிறார்கள்.
மலைச்சாமி க்கு அவ்விடத்துப்பணிதான் நிறைவுக்கு வந்துவிட்டதே. ஆக மலைச்சாமி வேறெங்கேனும் ஒரு ஊருக்கு நடைகட்டி இருக்கலாம்.
படிக்கச் சுகம் தரும் எழுத்து நடையால் வாசகனைக்கிறங்க வைக்கிறார் வளவ துரையன். உவமையும் யுக்தியும் அவரிடம்கொஞ்சி விளயாடவே செய்கின்றன.
. வளவதுரையனின் எழுத்துச் சாதனையே புதின இலக்கிய தடத்தில் இந்த மலைச்சாமியின் வருகை.
————————————————————————————

Series Navigation