வசிட்டர் வாக்கு.

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

பாரதிராமன்.


முத்துப்பாண்டிக்கு மிகப்பெரிய மனசு. தனக்குள்ள ஆசைகள் தீர்வதுபோல் தன் நாட்டவர் ஆசைகளையும் தீர்த்துவைப்பதில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். இதற்காக ஒரு படையையே அவன் தன் கீழ் திரட்டிவைத்திருந்தான்.உலகத்தின் எந்தமூலையில் எந்தப் புதுப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது அடுத்த வாரமே இங்கே கிடைக்கும்படி செய்வதில் அவனுக்கு நிகர் அவனே.எலெக்ட்ரானிக் சாதனங்கள்,கணினிகள்,மற்றும் தங்கக்கட்டிகள் எனப் பலவும் அவனுடைய வியாபாரப் பொருட்களாயின. நாளை வெளிவரப்போகும் திரைப்படத்தின் ஒலி-ஒளிக் குறுந்தட்டுகள் அவனிடம் இன்றே கிடைக்கும்.இத்தொழிலில் அவனுக்குதவ எல்லாத்துறைகளிலும் நண்பர்கள் இருந்தார்கள்.அவன் செய்துவந்ததெல்லாமே சட்டவிரோத செயல்களாக இருந்தபோதும் அவன் மட்டும் சட்டத்தின் பிடிகளில் சிக்கிகொள்ளாமல் இருந்ததற்கு அதுவே காரணம் எனலாம்.

முத்துப்பாண்டி சிக்காவிட்டாலும் அவன் கீழ் வேலை செய்பவர்கள் எப்போதாவது அகப்பட்டுக்கொள்வார்கள். ஆனால் தங்கள் எஜமானைக் காட்டிக்கொடுக்கமாட்டார்கள்.பலருக்கு யார் உண்மையான எஜமான் என்றே தெரியாது.என்ன நேர்ந்தாலும் அம்மாதிரி சமயங்களில் போலீஸில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு எல்லாவிதமான உதவிகளும் செய்துதரப்படும். உண்மையில் சிறையில் உள்ளவனின் குடும்பம் அவன் வெளியில் இருந்தபோது வாழ்ந்ததைவிட கூடுதலான வசதியுடன் வாழ வகை செய்து தரப்பட்டிருக்கும்.எனவே அவனிடம் வேலை செய்துவந்தவர்கள் மிகுந்த விசுவாசத்துடன் அவனுக்காக உயிரைக்கொடுக்கவும் சித்தமாக இருந்தார்கள். அவர்களது பக்கபலத்தில் முத்துப்பாண்டி நகரின் பெரியமனிதர்களில் ஒருவனாகிவிட்டான்.வெளியில் ஒப்புக்கு ஒரு சூபர் மார்க்கட் வைத்து வியாபாரம் நடத்திவந்தான். அங்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுங்கப்பறிமுதல் பொருள்களும் விற்பனைக்குக் கிடைத்தன!

இறக்குமதி விதிகள் தளர்த்தப்பட்டதிலிருந்து வெளிநாட்டுப் பொருள்கள் சுலபமாகக் கிடைக்க ஆரம்பித்ததில் முத்துப்பாண்டிக்கு வியாபாரம் மந்தமாயிற்று. அவனிடம் வேலை பார்த்த வீரப்பாண்டி பம்பாய் கோஷ்டி ஒன்றுடன் சேர்ந்துகொண்டான். குணா மட்டும் தொடர்ந்து முத்துப்பாண்டியிடமே வலது கரமாக மாறிப் பணிபுரிந்துவந்தான்.இப்போது வியாபாரம் திசைமாறியிருந்தது. போதைப்பொருட்கள் கடத்தல் ஆபத்து மிகுந்ததாக இருந்தாலும் தங்கச் சுரங்கமாக விளங்கியது.உலகச் சந்தையில் ஒரு கிலோ பிரவுன் ஷுகர் ( பழுப்பு சர்க்கரை!) ஒரு கோடி ரூபாய்க்கு விலைபோயிற்று. குணா கோடாஸ்வரனாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

குணா கோடாஸ்வரன் என்றால் செண்பகம் கோடாஸ்வரிதானே ? ஆனால் அவளுக்கு அப்படி ஏதும் ஆசை இருந்ததாகத் தெரியவில்லை.பலத்த போட்டிக்கிடையே குணாவைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்துகொண்டவள் அவள், தமயந்தி நளனை மணந்ததுபோல.செண்பகத்தை மணக்க அவளுடைய நான்கு அத்தை மகன்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். மாமன் மகன் வீரப்பாண்டியோ கையில் தாலியுடன் அவள் எப்போது கழுத்தை நீட்டுவாள் என்று காத்திருந்தான்.செண்பகத்தின் பார்வையோ சைக்கிள் கடை குணா மீதுமட்டுமே பயணிக்கத் தயாராக இருந்தது.ராஜபாட்டை அமையாவிட்டாலும் ஒற்றையடிப்பாதையே சைக்கிள் செல்ல தோதாக அமைவதுபோல் கஞ்சியோ கூழோ குடித்துக்கொண்டு குணாவும் செண்பகமும் சந்தோஷத்துடன் வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.

நளனை சனி தொடர்ந்ததுபோல் இவர்களை வீரப்பாண்டி தொடர்ந்தான். ‘ எத்தனை நாள்தான் குடிசையில் இருக்கப்போகிறாய் ? தங்க விக்கிரகம் போலிருக்கிற செண்பகத்தை தங்கத்தால் அலங்காரம் செய்து பார்க்கப்போவது எப்போது ? நாலு காசு சம்பாதிக்கிற வழியை நான் காட்டுறேன் வா! ‘ என்று குணாவை மயக்கி முத்துப்பாண்டியிடம் அழைத்துச் சென்றது வீரப்பாண்டிதான். வென்றது சூது, நள சரித்திரம் சொல்வதுமாதிரி தற்காலிகமாகவேனும். செண்பகததைத் தன் தாயுடன் தனியாக விட்டுவிட்டு தொழில் நிமித்தம் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றுவரவேண்டியிருந்தது குணாவுக்கு. வீடு நிறைய குழந்தைகள் வளைய வரவேண்டும் என்று ஆசைப்பட்டது தள்ளிக்கொண்டே போனது செண்பகத்துக்கு. மச்சு வீட்டுக்கு மாறியதும் கணவனைப்பற்றிய கவலை முற்றியது. என்றாவது ஒருநாள் குணா திரும்பிவராமற்போகக்கூடிய அவலமும் நேரிடலாம் என்று அவளுக்குத் தெரிய வந்தபோது பகீரென்றது. அருகிலிருந்த தர்மராசா கோவிலுக்குச் சென்று தினமும் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். கோவிலில் பாரதம் படித்துக்கொண்டிருந்தார்கள். கணவன் ஊரில் இல்லாததால் அத்தையுடன் தினமும் பாரதம் கேட்கப் போய்வந்தாள் செண்பகம்.

சகுனியின் வஞ்சனையால் சூதாட்டத்தில் அனைத்தையும் தோற்றுவிட்டு தன்னைவிட கஷ்டங்களுக்குள்ளானவர்கள் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள் என்று மனச்சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்த தருமரைத் தேற்றும் விதமாக பிருகதஸ்வர் என்ற முனிவர் நள மகாராஜாவின் கதையை அவருக்குச் சொல்லியதாக பிரவசனசாகரம் குஞ்சு பாகவதர் நள சரித்திரத்தை விஸ்தாரமாக பிரசங்கித்துவிட்டு ‘நீநாம ‘ பாடியதைக் கேட்டுவிட்டுபோனதுதான் கடைசியாக இருக்கப்போகிறது என்பதை செண்பகம் எதிர்பார்த்திருக்கமாட்டாள். பாரதக்கதை மனதுக்கு ஆறுதலாகவும் படிப்பினைகள் தருவதாகவுமிருந்தது. தன் கணவனையும் அவன் ஊர் திரும்பியதும் தொழிலுக்கு விடுமுறை அளித்துவிட்டு பாரதம் கேட்க அழைத்துவரவேண்டுமென்று செண்பகம் நினைத்திருந்தாள். கதை முழுவதையும் கேட்டால் அவன் தொழிலுக்கு முழுக்கே பே ‘ட்டுவிட்டு வேறு கண்ணியமான வேலையைத் தேடிக்கொள்வான் என்றும் அவள் நம்பினாள். ஆனால் நடந்ததோ வேறு.

நேபாளம் வழியாகக் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் இந்தியா, இலங்கை மூலமாக வெளிச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.விதவிதமான உபாயங்கள் கையாளப்பெற்றன. காலணிகள், சங்கீதக்கருவிகள்,பெட்டிகளின் மர்ம அடிப்பாகங்கள் என்று பலவும் சுங்க அதிகாரிகளுக்குப் பழகிப்போனதால் சம்பந்தப்பட்டவர்கள் நூதன வழிகளைத் தேடி அலைந்தார்கள்.குணா சாமியார் வேடத்தில் அடிக்கடி நேபாளம் சென்றுவந்தான்.திரும்பிவரும்போது பெரிய பெரிய ருத்ராட்ச மாலைகள் அணிந்திருப்பான்.ருத்ராட்ச மணிகளுக்குள் என்ன இருந்தது என்பது அவனுக்கும் முத்துப்பாண்டிக்கும் மட்டுமே தெரியும். எப்படியோ இது விஷயம் வீரப்பாண்டிக்கு தெரிந்துபோக சும்மாயிருப்பானா அவன் ? குணா ஒருநாள் பிடிபட்டான். முத்துப்பாண்டி சுறுசுறுப்பானான். தான் நேரடியாகத் தலையிடாமல் குணாவின் விடுதலைக்கு தக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் அதுவரை குடும்பத்தைப்பற்றிக்கவலப்படவேண்டாம் என்றும் குணாவுக்குத் தகவல் கொடுத்தான். இந்த விபத்துக்கு வீரப்பாண்டியே காரணம் என்று தெரிந்ததும் அவன் சினம் கொண்டான்.அடுத்த நாள் பம்பாயில் விமானமேறிய வீரப்பாண்டியின் உடல்தான் சென்னை வந்திறங்கயது.மாரடைப்பு எனக் கூறப்பட்டது.அது இல்லை காரணம் என்று முத்துப்பாண்டிக்குத் தெரியும்.

குணாவுக்குத் தெரிவித்தபடி ஆறுதல் கூறுவதற்காக செண்பகத்தை வரச்சொல்லியிருந்தான் முத்துப்பாண்டி.குணாவை விடுவிப்பதற்கான வழிகளைக்காண தீவிரமான யோசனையிலிருந்தான்.வீரப்பாண்டி ஒழிந்த செய்தி இன்னொரு பக்கம் மகிழ்ச்சியூட்டியது. இதைக் கொண்டாடவேண்டாமா ? நொறுக்குத்தீனியும், ஷிவாஸ்ரீகலும்,555 சிகரெட்டும்,லைட்டரும், பழங்களும், நறுக்கும் கத்தியும் மேசை தட்டுக்கு வந்திருந்தன. ஷிவாஸ்ரீகல் கொஞ்சம் உள்ளே சென்ற்தும் ஆள் ஆட்டம்காணத்தொடங்கிவிட்டான்.இந்த சமயம் பார்த்துத்தானா செண்பகம் அங்கே அவனைப்பார்க்க வரவேண்டும் ?அவள் வந்த பத்து நிமிஷங்களுக்குள் எவ்வளவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது!

முத்துப்பாண்டியின் வீட்டிலிருந்து பரபரப்புடன் ஓடிவந்த செண்பகத்தின் மார்புப் படபடப்பு அடங்க வெகுநேரமாயிற்று. அப்படி அவள் என்னதான் செய்துவிட்டாள் ? நளமகாராஜாவின் மனைவி தமயந்தி செய்ததைத்தானே அவளும் செய்திருக்கிறாள்! குஞ்சு பாகவதர் சொன்ன கதை மீண்டும் அவள் மனதில் நிழலாடியது.

தன்னைவிட்டுப்பிரிந்த கணவனைத் தேடி காட்டில் அலைந்துகொண்டிருந்த தமயந்தி ஒரு பெரிய மலைப்பாம்பின் வாயில் சிக்கிக்கொண்டு செய்வதறியாமல் கதறினாள். அவளது அலறலைக்கேட்ட வேடன் ஒருவன் பாம்பின் வாயைப்பிளந்து அவளை உயிருடன் காப்பாற்றினான். அவளுக்கு உடலை சுத்தம் செய்துகொள்ள நீரும் உண்ண உணவும் கொடுத்து அவளது பயத்தைப்போக்கினான். பின்னர் அவளது கதையைக்கேட்டறிந்த வேடன் அவள் தனிமையிலிருப்பதைக் கண்டதும் அவள்மீது மோகம் கொண்டான்.பூர்ண சந்திரனைப்போன்ற வட்டமான முகம்,ஒளிவீசும் வளைந்த கண்கள்,பெரிய அழகிய தனங்கள்,மெல்லிய இடை,சங்கீதம்போன்ற இனிய பேச்சு இவற்றையெல்லாம் கண்ட வேடன் அவள் அழகில் அப்படியே மயங்கினான். அளவிடமுடியாத காம வேட்கையினால் அவளிடம் கொச்சையாகப் பேசத்தொடங்கினான். தான் அவளை அணைத்து இன்பம் அனுபவிக்க விரும்பியதை நாசுக்காகத் தெரிவித்தான். தமயந்தி இணங்கமாட்டாள் என்பதை உணர்ந்த வேடன் அவளைப் பலாத்காரம் செய்ய முற்பட்டான். இயலாமையும் ஆத்திரமும் அதிகமாக தமயந்தி ‘ நான் நளனைத்தவிர வேறு ஆடவரை மனதாலும் சிந்திக்காதவள் என்பது உண்மையானால் இந்த அற்ப வேடன் மாண்டு கீழே விழக்கடவன்! ‘ என்று சாபமிட்டாள். உடனே தீப்பற்றி எரியும் மரமொன்று விழுவதைப்போல கீழே வீழ்ந்து மாண்டான் அவ்வேடன். அங்கிருந்து புறப்பட்ட தமயந்தி வசிட்டருக்கு ஒப்பான முனிவர்கள் பலரிருந்த ஆசிரமததை அடைந்தாள்.நல்வரவு கூறி வரவேற்று அவளது விருத்தாந்தங்களையெல்லாம் கேட்ட முனிபுங்கவர்கள் ‘ நன்று செய்தாய், கற்புடையவளே, உன் கணவனை விரைவில் சந்தித்து இழந்ததையெல்லாம் பெற்று இன்பமுடன் வாழ்வாய்! ‘என்று ஆசீர்வதித்தார்கள்.

செண்பகமும் இப்போது அதைத்தானே செய்துவிட்டுவந்திருக்கிறாள்.அவளுடைய வாய்ச்சாபம் பலிக்குமா என்பது தெரியாததால் தன்னிடம் கொச்சையாகப்பேசித் தவறாக நடக்கமுயற்சித்த முத்துப்பாண்டியின் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சிவிட்டு வந்திருக்கிறாள்.தமயந்தியைக் காப்பாற்றிய வேடனைப்போலவே முத்துப்பாண்டியும் தனிமையில் பெண்ணைக்கண்டதும் வெறி கொண்டுவிட்டான்.காலம் காலமாய் வில்லன்கள் ஒரே மாதிரியாகப்பேசி ஒரேவிதமாக நடப்பார்கள்போலிருக்கிறது! அவர்களின் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் என்ன ?

‘தன்னைத்தாக்க வந்த பசுவையும் கொல்லலாம்,பாவமில்லை ‘ என்று கூறிய மகாத்மா இருந்தால் செண்பகம் செய்தது சரியே என்றிருப்பார். பாவிகள் அவரைச் சுட்டு வீழ்த்திவிட்டார்கள்.வசிட்டமுனிவர் ராமாயணத்துக்கு முன்னும் இருந்தார், பின்னும் இருந்தார், இப்போதும் இருக்கலாம்.செண்பகத்தின் செய்கையை அவர் நியாயப்படுத்தி கணவனுடன் விரைவில் சேர அவளை ஆசீர்வதிப்பார்.செண்பகத்துக்கு சந்தேகமேயில்லை.

‘ வசிட்டர் எங்ஙன இருப்பாக, அத்தே ? ‘ என்று மாமியாரைப்பார்த்துக்கேட்டாள் செண்பகம்.

அதை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்ட அவளது மாமியார் ‘ அதாரு விசிட்டரு ? ‘ என்று கேட்டாள்.

வாசலில் வந்து நின்ற ஜீப்பிலிருந்து இறங்கிய போலீஸ்காரர்களின் காலணிகள் எழுப்பிய சத்தம் இப்போது மிக நெருக்கத்தில் கேட்டது.

***

bharathiraman@vsnl.com

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.