மெளனமாய் ஒரு மரணம்.

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

சேவியர்


தயவு செய்து என்னுடைய வக்கீல் சொல்வதை நம்பாதீர்கள். என் அப்பாவைக் கொன்றது நான் தான்… குற்றவாளிக் கூட்டிற்குள் நின்றிருந்த விக்னேஷ் கத்தினான். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஒட்டுமொத்த அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டார்கள். மிகுந்த பிரயாசைப்பட்டு வக்கீலை ஏற்பாடு செய்து, வாதிட வைத்து எப்படியாவது விக்னேஷை வெள்ளிக்கொண்டு வரவேண்டுமென்று கத்திமேல் உட்கார்வது போல் ஓரமாக அமர்ந்திருந்த சந்துரு தலையிலடித்துக் கொண்டான்.

இன்று தீர்ப்பு நாள்… கண்டிப்பாக தீர்ப்பு விக்னேஷ்க்கு சாதகமாக வரும் என்று நம்பிக்கொண்டிருந்தவனுடைய எண்ணங்களில் மண் அள்ளிப் போடுவதாய் இருந்தது வினேஷின் கடைசிக் கூச்சல். என்ன தீர்ப்பு வரப் போகிறதென்று தெரியவில்லை. வக்கீல் ஓரமாக அமர்ந்து உதட்டைப் பிதுக்கி தலையை இயலாமையின் வெளிப்பாடாய் அசைத்துக் கொண்டிருந்தார். நீதி மன்றம் முழுவதும் மயான அமைதி. நீதிபதி ஜெகன்னாதன் இரண்டு நிமிட மெளனத்துக்குப் பின் தீர்ப்பு வாசிக்க ஆரம்பித்தார்.

இதுவரையில் எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் தான் விக்னேஷ் ஆனாலும் இந்த வழக்கில் விக்னேஷ்தான் கொலையாளி என்பதை கொலையை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த நீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது அதேசமயம் விக்னேஷ் ஒரு மனநோயாளி என்பதும் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே விக்னேஷின் உடல், மன நிலையைக் கருத்தில் கொண்டு மனோதத்துவ டாக்டர் பரஞ்சோதியின் கருத்துப்படி விக்னேஷை மனநல மருத்துவமனைக்கு அனுப்பவேண்டுமென்று தீர்ப்பளிக்கிறேன். சொல்லிவிட்டு எழுந்தார் நீதிபதி ஜெகன்னாதன்.

சந்துரு மெதுவாக எழுந்து விக்னேசிற்கு அருகில் சென்றான். விக்னேஷ் எந்தவித சலனமுல் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

‘விக்கி.. ‘ – சந்துரு மெதுவாக விக்னேஷின் கையைத் தொட்டான்.

வெடுக்கென்று விலகினான் விக்னேஷ்… முகத்தில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்ச்சி.

விக்கி.. டேய் விக்கி… என்னைத் தெரியலயா ? நான் தான் சந்துரு…. என்னை கண்டிப்பா உன்னால மறக்க முடியாது… நாம அப்படியா பழகி இருக்கோம் ? சந்துருவால் அதற்கு மேல் பேசமுடியவில்லை….. நா தழுதழுத்தது. கண்கள் கலங்கின.

விக்னேஷ் சலனமில்லாத முகத்தோடு காவலர்களோடு சேர்ந்து நடக்கத் துவங்கினான்.

விக்னேஷ்- க்கு உடல் நிலை சரியில்லை என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே அரசல் புரசலாக செய்திகள் வந்தன. ஆனால் அதை சந்துருவால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. விக்னேஷ் – சந்துருவின் நெருங்கிய நண்பன். இருவருக்குமிடையே ஒளிவு மறைவு இருந்ததே இல்லை. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் இணைபிரியா நண்பர்கள்.ரொம்ப நெருக்கமா பழகறவங்க எல்லாம் சீக்கிரம் ஏதாவது விஷயத்தால பிரிஞ்சுடுவாங்க என்பதற்கு ஒரு எதிர் உதாரணமாக இருந்தது எட்டு ஆண்டுகால அவர்களது நட்பு.கல்லூரியில் ஆரம்பித்த அவர்களது நட்பு எப்போதுமே சின்ன விரிசல் கூட கண்டதில்லை.

இன்னொரு நண்பன் தான் ஐந்தாறு வாரங்களுக்கு முன்பு சொன்னான், வின்கேஷ் நடுரோட்டில் நின்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்ததாக… அப்போது சந்துரு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதற்குப்பின் ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேச ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் நம்ப முடியாமல் திகைத்தான் சந்துரு. அதன்பிறகு அலுவலகத்துக்கும் வரலில்லை விக்னேஷ். அவனை சந்திக்க வேண்டும் என்னும் சந்துருவின் தேடல்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. வீட்டுக்குக் கூட வராமல் ஏதாவது தெருவோரத்தில் போய் படுத்துக் கொள்வது, தேவையில்லாமல் சண்டையிடுவது, தெரிந்தவர்கள் கூப்பிட்டால் கூட காது கேட்காததுபோல போய்விடுவது என்று ஏராளம் ஏராளம் செய்திகள். அந்த செய்திகளையே நம்பமுடியாமல் இருந்தவனிடம் தான் விக்னேஷ் அவனுடைய அப்ப ‘வையே நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொன்றுவிட்டான் என்னும் செய்தி இடியாக விழுந்தது.

அலறி அடித்துக்கொண்டு சந்துரு அங்கே ஓடிச் சென்றபோது, இரத்தக் கறை படிந்த கத்தியை வைத்துக் கொண்டு நகம் வெட்டிக் கொண்டிருந்தான் விக்னேஷ். சுற்றிலும் நடந்த விஷயங்களைக் கவனித்ததாகவே தெரியவில்லை. சற்றுத் தொலைவில் இரத்தவெள்ளத்தில் அவனுடைய அப்பா. அப்பா மேல் உயிரை வைத்திருந்தான் விக்னேஷ். அந்த அப்பாவையே கொன்று விட்டானா ? என்னவாயிற்ற்ய் இவனுக்கு ? அப்போதிலிருந்து தான் சந்துரு கொஞ்சம் கொஞ்சமாக விக்னேஷ் பற்றி பிறர் சொன்னதை எல்லாம் நம்பத் துவங்கினான். ஏதோ ஒன்று விக்னேஷை பாதித்திருக்கிறது. அது என்னவென்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.ஆனால் எப்படியாவது விக்னேஷக் காப்பாற்றவேண்டும் என்னும் ஒரே எண்னம் மட்டும் தான் அவனுடைய சிந்தனைகளெங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய வக்கீலைத் தேடிப் பிடித்த ‘ன், மனோதத்துவ நிபுணர் பரஞ்சோதியைச் சந்தித்தான். இன்று அவன் மனநோயாளிகளின் மருத்துவ மனையில், சந்துருவால் எதையும் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எல்லாம் ஒரு கனவாகப் போய்விடாதா என்று வேண்டினான். காலையில் அலுவலகத்தில், மாலை முழுதும் நண்பர் கூட்டத்தில் அரட்டை, சிரிப்பென்று கழிந்துகொண்டிருந்த நட்பில் இப்படி ஒரு புயலை அவன் எதிர்த்திருக்கவில்லை. எப்படியாவது அவனுக்கு விரைவில் குணம் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

இரண்டு நாட்களுக்குப் பின், டாக்டர் பரஞ்சோதியைச் சந்தித்தான் சந்துரு.

டாக்டர், விக்னேஷின் நிலமை எப்படி இருக்கு டாக்டர் ?

உனக்குத் தெரியாததென்று இல்லை சந்துரு. ஏதோ ஒரு சம்பவம் விக்னேஷின் மனசை ரொம்பவே பாதித்திருக்கிறது. அது என்னவென்று என்னால் சரியாக இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை கண்டுபிடித்துவிட்டால் பாதி வேலை முடிந்துவிட்டது.

விக்னேஷ் சிலசமயங்களில் மிகத் தெளிவாக பேசுகிறான், சில நேரங்களில் நேரெதிராக நடந்து கொள்கிறான். இது என்னைப்பொறுத்தவரை விரைவில் குணப்படுத்திவிடலாம் என்னும் நோய்தான். விக்னேசின் வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக நடந்த விஷயங்கள் என்னென்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும், அதில் எந்த சம்பவம் அவனை ரொம்ப பாதித்திருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். உங்களுக்கு ஏதாவது தெரியுமா ?

மிகப்பெரிய பதிலுக்கான ஒரு கேள்வியை கேட்டுவிட்டு சந்துருவைப் பார்த்தார் பரஞ்சோதி.

எனக்குத் தெரிந்தவரையில் விக்னேஷ் வாழ்க்கையை மிக எளிதாகப் பார்ப்பவன். எந்தவிஷயமும் மனதை ரொம்ப ஆழமாகப் பாதிக்கவிட மாட்டான். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்த்மா நோயாளியான அவனுடைய அம்மா இறந்து போனார்கள். அப்போது மிகவும் இடிந்து போனான். பிறகு சிலவாரங்களில் சகஜ நிலைக்கு வந்தான். ஆனாலும் அவ்வப்போது அவனுடைய அம்மாவை நினைத்து அழுவான். அவனுடைய அம்மா மேல் அவனுக்கு அவ்வளவு பாசம். அப்புறம் ஒருமுறை அவனை பஸ் ஸ்டாண்டில் ஏதோ ஒரு பெண் திட்டி விட்டாளாம். விக்னேஷ் அந்த மாதிரியான ஆள் இல்லை. அதில் இரண்டு நாள் அப்செட் ஆகி இருந்தான். இப்போது ஒரு மூன்று மாதங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது டாக்டர். விக்னேஷ் வித்யா என்றொரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான், அவளும் காதலித்தாள் என்றே நம்புகிறேன். ஆனால் திடாரென்று ஒரு நாள் அவனைவிட வசதியான மாப்பிள்ளையை வீட்டார் பார்த்த போது, அம்மா அப்பா பேச்சை மீற மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அதுவும் அவனை சில வாரங்கள் அழவைத்தது. இதைத்தவிர சொல்லும்படி பெரிதாக அவன் கவலைப்பட்ட விஷயங்கள் எதுவுமே இல்லை டாக்டர். இதில ஏதாவது சம்பவம் அவனைப் பாதித்திருக்கும்ன்னு நீங்க நம்பறீங்களா ? கேட்டு விட்டு டாக்டரை பார்த்தான் சந்துரு.

சில நேரங்களில் நம்மோட நெருங்கிய நண்பர்களைக் கூட நம்மால் கணிக்க முடியாது. மனசுக்குள் எதுவுமே மறைத்து வைக்காத நட்பானால் கூட ஒருவனுடைய மனசின் ஆழத்தை தொட்டுப்பார்க்கும் சக்தி அதற்கு பலவேளைகளில் இருப்பதில்லை. அதனால நான் இப்போதைக்கு எதையும் முடிவா சொல்ல முடியாது. நீங்க சொன்னதைத் தவிர வேற ஏதாவது காரணங்கள் கூட இருக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க இதுல பொறுமை தான் முக்கியம், சோ..கொஞ்சம் பொறுமையா இருங்க சரியாயிடும் என்ற பரஞ்சோதியை கண்களில் நீர் கசிய பார்த்தான் சந்துரு. உங்களை .. உங்களை மட்டும் தான் நம்பியிருக்கேன் டாக்டர், இதைச் சொல்லும் போது சந்துருவின் குரல் உடைந்தது.

நான் போய் விக்னேஷைப் பார்க்கலாமா டாக்டர் ?

போய்ப் பாருங்க… ஆனா நீங்க அவனை கோபப்படுத்தறமாதிரியோ, உணர்ச்சி வசப்பட வைக்கிற மாதிரியோ எதையும் கேட்காதீங்க.

அந்த கடைசி ரூம்ல தான் விக்னேஷ் இருக்கான். சொல்லிவிட்டு எழுந்தார் பரஞ்சோதி.

சந்துரு அந்த நீளமான வராந்தாவில் வந்து விக்னேசின் அறை நோக்கி நடந்தான். இதுவரை சினிமாவில் மட்டுமே மனநோய் மருத்துவமனையை பார்த்திருக்கிறான் சந்துரு. ஆனால் உண்மையில் பார்க்கும் போது மனசை ஏதோ கனமாய்ப் பிசைந்தது. எங்கும் ஒரே அமைதி. சினிமாவில் கேட்கும் அந்த சிரிப்பொலி இல்லை. அந்த நகைச்சுவை இல்லை. மனநோயாளிகளை சிரிப்புச் சித்திரங்களாக சினிமாவில் சித்தரிப்பது எத்தனை வேதனையான விஷயம் என்பதை முதன் முறையாக சிந்தித்துப் பார்த்தான் சந்துரு. தான் யார் என்பதை அறியாமல், என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஆங்காங்கே அமர்ந்திருந்த நோயாளிகளைப் பார்த்த போது மனம் கனத்தது, மனம் கனக்கும் போது கால்களை நகர்த்துவது கூட கடினமாகவே இருந்தது. ஏதேதோ சிந்தனைகளுடன் விக்னேஷின் அறையை அடைந்தான் சந்துரு.

விக்னேஷ்… விக்னேஷ்… – சந்துரு கூப்பிட்டான்.

விரல் நகத்தால் சுவரைக் கீறிக்கொண்டிருந்த விக்னேஷ் திரும்பினான்…

சந்துரூ…. எங்கேடா போயிருந்தே ரெண்டு நாளா ? கேட்டபடியே வேகமாக சந்துருவை நெருங்கினான் விக்னேஷ்.

விக்கீ… எ..எ..ன்னை.. என்னை தெரியுதா உனக்கு ? என்னடா ஆச்சு ? வாட் கேப்பண்ட் ? கம்பிகளுக்கிடையே விக்னேசின் கரம் பற்றி கேட்டான் சந்துரு. சந்துரு… எனக்கு எந்த நோயும் கிடையாதுடா. நான் வேணும்னே தான் என் அப்பாவை கொன்னேன். நான் பைத்தியம் கிடையாது. அவனை அப்பா என்று சொல்லவே கூசுதுடா… உனக்குத் தெரியுமாடா ?என்னோட அம்மா நோயால சாகலைடா… அவங்களை இந்த பாவி தான் கொன்னிருக்கான். தலையணையால அம்மாவோட முகத்தை அழுத்தி, மூச்சு விட முடியாம அம்மா செத்திருக்காங்கடா… என்னோட அம்மா…. என்னோட அம்மா….தொடர்ந்து பேச முடியாமல் அழ ஆரம்பித்தான் விக்னேஷ்.

சந்துருவின் முகத்தில் கொத்துக் கொத்தாய் அதிர்ச்சி. நீ என்னடா சொல்றே ?

அம்மாவை அப்பா கொன்னாரா ஏன் ? ? யாரு சொன்னது ? உனக்கு எப்படி தெரியும் ?

அடுக்கடுக்காய் கேள்விகள் விக்னேஷிடமிருந்து அதிச்சி கலந்து வெளிவந்தன.

அப்பாவுக்கு எங்க அம்மா நோயாளியா இருக்கிறது பிடிக்கலயாம். நோயாளியா இருந்தா கொன்னுடறது தான் வழியா ? அவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்குடா. அவ கிட்டே அப்பா பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன்.

என் ரெண்டு காதால கேட்டேன். அப்பவே ரெண்டு பேரையும் கொன்னு போட்டிருப்பேன். ஆனா ஒரு துரோகியைக் கொன்னுட்டு நான் குற்றவாளியா ஜெயில்ல கிடக்க விரும்பல. அதனால தான் மனநோயாளி மாதிரி கொஞ்ச நாள் நடிச்சேன். ஊர் ல எல்லோரும் அதை நம்ப ஆரம்பிச்சப்போ அவனைக் கொன்னேன். நான் பைத்தியம் இல்லேன்னு சொன்னாதான், பைத்தியம்கிறதையே நம்புவாங்க… அதனால தான் எல்லாருக்கும் முன்னால கொலை பண்ணினேன். எல்லோருக்கும் முன்னால கோர்ட்ல கத்தினேன். என்னால முடியலடா… என்னோட அம்மாவை நான் எந்த அளவுக்கு நேசிச்சேன்னு உனக்கு தெரியும்… என்னால முடியல. என்னோட அம்மாவை காப்பாற்ற முடியாம போயிட்டேன். டேய் நான் செஞ்சது தப்பா சொல்லு….நீ… மட்டும் சொல்லுடா… நீ என் இடத்துல இருந்தா என்ன பண்ணுவே… அவனை கொல்ல மாட்டே ? அவனை வெட்டிப்போட மாட்டே ?

சொல்லுடா சந்துரு… நீயே சொல்லுடா. அம்மா இறந்துட்டாங்கங்கறதையே என்னால தாங்க முடியல, அப்படு இருக்கும்போ அம்மா கொலை செய்யப்பட்டிருக்காங்கிறதை நான் எப்படிடா தாங்கிக்க முடியும். சாகப்போற நேரத்துல நான் வருவேன் காப்பாத்துவேன்னு அம்மா நினைச்சிருப்பாங்களாடா…

தப்பில்லேடா… தப்பில்லை…உன் இடத்துல இல்ல, என் இடத்துல நான் இருந்தா கூட அப்படிப்பட்ட ஒருத்தனை நான் கண்டிப்பா கொன்னிருப்பேன். கவலைப்படாதேடா… சீக்கிரம் உன்னை இங்கேயிருந்து வெளியே கொண்டு வரேன்… சொல்லிவிட்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, திரும்பி நடந்தான் சந்துரு. மனசுக்குள் கொஞ்சம் நிம்மதி வந்திருப்பதாகத் தோன்றியது.

வழியில் எதிர்பட்ட டாக்டரிடம், தயவு செய்து விக்னேசை சீக்கிரம் குணப்படுத்திடுங்க டாக்டர் என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்