மெய்மையின் மயக்கம்-11

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

அழகு

அழகு என்பது என்ன ? என்று இலக்கணப் புலவர்களைக் கேட்டால் அது ஒரு பண்புப் பெயர் என்று நமக்கு அவர்கள் விளக்கம் அளிப்பார்கள். அழகு என்னும் சொல்லின் தன்மையினையும் பிறப்பினையும், அதாவது, அச் சொல்லின் வேர் மற்றும் விளர்ச்சியினையும் (எவல்யூஷன்) நாம் புரிந்து கொள்வதற்கு உதவி கரமாக அவர்களது விளக்கம் இருக்கும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

ஆனால், மொழி இயலை நம்பிக் களம் இறங்கிட முடியாத ஒரு கலை இயலின் வாசலில் நின்று கொண்டு நாம் இருக்கிறோம். ‘அழகு இயல் ‘ என்று இதனை நாம் அழைத்திட முடியுமா ? என்பதும் நமக்குத் தெரிய வில்லை.

இந் நிலையில், அழகு என்பதைப் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வதைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை.

அறிவு என்பதையோ அல்லது உள்ளம் என்பதையோ அழகு என்று நாம் சித்தரித்திட முடியுமா ? என்றால், முடியாது! உள்ளத்தின் அழகு பற்றியோ அல்லது எண்ணத்தின் அழகு பற்றியோ கவிஞர்களும் மற்றவர்களும் பேசிடலாம் என்ற போதிலும், இத் தகு கவிதை மொழிகளைக் கொஞ்சம் இங்கே நாம் ஒதுக்கி வைத்து விடுவதுதான் நல்லது.

இனி, கவிதைகளையும் கதைகளையும் அழகு என்று நாம் வகைப் படுத்திட முடியுமா ? என்றால், அதுவும் முடியாது.

ஆனால், ஓவியத்தின் அழகு பற்றி நாம் பேசிட முடியும். அதே நேரத்தில், ஓவியத்தின் அழகு என்பது அந்த ஓவியத்தின் நேர்த்தியும் அந்த ஓவியம் புனைந்து காட்டுகின்ற ஏதேனும் ஒரு பொருளும்தான் என்பதால், அந்தப் பொருளின் அழகினை மட்டும் நேரடியாக நாம் எடுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.

எனவே, அழகானதாக அனைவரும் கருதுகின்ற ஏதேனும் ஒரு பொருளை நாம் எடுத்துக் கொள்வோம்.

அலை கடல்

அழகான ஒரு பொருளாகக் கடலை நாம் குறிப்பிட முடியுமா ? என்றால், முடியும்! எனினும், அலை கடல் என்று அதனைச் சித்தரிப்பது இன்னும் அழகு! கூடவே, அடி வானத்தையும் நாம் சேர்த்துக் கொண்டால் கொள்ளை அழகு! கதிரவன் தோன்றுவதும் மறைவதும் அங்குதானே! எனினும், எங்கும் இருக்கின்ற ஓர் ‘அங்கு ‘ அது; குறிப்பாக, நமது உலகத்தில்! ஜ்ஸார தூஸ்த்ரச் சிந்தனை மரபில் இதற்கு ‘வை ‘ என்று பெயர்!

‘ஃபார்ஸ் ஃபார்ச்சுனா ‘ என்று ஈரோப்பில் ஒரு தேவதை இருந்தாளாம்; ஒவ்வொரு நாளும் மக்களுக்கு யோகத்தை அவள்தான் கொண்டு வந்து தருவாளாம்; ‘உஷஸ் ‘ என்னும் பெயரில் காலை நேரத்தில் இந்தியாவில் வணங்கப் பட்டு வருபவளும் அவள்தானாம்—-மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.

ஆனால், அவளோ தமிழ் மொழியின் ‘பருதித் தேவதை ‘!

இவள் வசிக்கின்ற இடத்தைச் ‘சூர் வான் ‘ என்று ஜ்ஸார தூஸ்த்ர இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன; சூரியனின் தூதுவர்கள்தாம் ஜ்ஸார தூஸ்த்ரர்களும் ஆவர்.

விடியலில் எழுகின்ற இளம் கதிர்கள்தாம் மயில் தோகையாம்; சூரியன்தான் முருகனாம்; சூரியன் எழுகின்ற பொழுது கூவுகின்ற சேவல்தான் முருகனின் கொடியாம்—-மறைமலை அடிகளார் கூறுகிறார்.

மனிதர்களின் சிந்தனைகளை இப்படி எல்லாம் வளப் படுத்திக் கொண்டு வந்து இருக்கின்ற இளம் சூரியனும் அது தோன்றுகின்ற அல்லது மறைகின்ற அடி வானமும் அதனுடன் ஒட்டி உறவாடுகின்ற அலை கடலும், எத்துணை அழகான ஒரு காட்சியாக மக்களுக்குக் காலங் காலமாகத் தோன்றிக் கொண்டு வந்து இருக்க வேண்டும்!

ஆனால், இந்த அழகினைப் புரிந்து கொள்வதுதான் நமது சிக்கல்!

மனிதனும் எந்திரமும்

அழகினைச் சுவனிப்பது சிறந்ததா ? அதனைப் புரிந்து கொள்வது சிறந்ததா ? என்று ஜெய மோகனைக் கேட்டால், அவர் கூறுவார்—-சுவனிப்பவன் மனிதன்; புரிந்து கொள்பவன் எந்திரம்; என்று!

அதுவும் சரிதான்! வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டிதுதானே! இதில் என்ன விளக்கம் வேண்டிக் கிடக்கிறது ? எனினும், வாழ்க்கையை எல்லோராலும் வெறுமனே வாழ்ந்து விட முடிவது இல்லை.

எது அழகு ?

இளங் கதிரவனின் எழுச்சியினையும் அடி வானத்தினையும் அலை கடலினையும் சித்தரித்துக் காட்டுகின்ற ஓவியங்கள் அழகானவை என்றால், இந்தக் கீழ்த் திசைக் கடலின் நேரடிக் காட்சியும் அழகு ஆனதுதான் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், இதில் எது அழகு ?

அடி வானத்தின் ஒளியா ? ஒளியின் வண்ணமா ?

ஆழ் கடலின் அலையா ? அலையின் இயக்கமா ?

அழகு என்பது ஒரு குணமா ? பண்பா ? குணவியல்பா ? பான்மையா ? குணவரையா ?

அல்லது, சுவையா ? மணமா ? வண்ணமா ?

வண்ணத்தின் அழகு பற்றி நாம் பேசலாம்; மணத்தின் நறுமை பற்றி நாம் பேசலாம்; சுவையின் இனிமை பற்றியும் நாம் பேசலாம்.

சுவையான பொருள்கள் பல; மணமான பொருள்களும் பல; வண்ணமான பொருள்களிலும் பல் வேறு வகைகள் உள்ளன.

நாவினால் சுவைகளை நாம் அறியலாம்; அதனைச் சுவைப்பு என்று நாம் அழைக்கலாம். மூக்கினால் மணத்தினை நாம் அறியலாம்; அதனை மணப்பு என்று நாம் அழைக்கலாம்.

கண்களால் வண்ணத்தினை நாம் அறியலாம்; ஆனால், வனப்பு என்று அதனை நாம் அழைத்துக் கொள்ள முடியுமா ? முடியும் என்றால் எப்படி ?

ஐம் புலன்கள்

சுவை என்பது ஒரு பொருளின் ஒரு பண்பு; நாவினால் அதனை அனுபவித்து நாம் அறிகிறோம். மணம் என்பதும் ஒரு பொருளின் ஒரு பண்புதான்; மூக்கினால் அதனை அனுபவித்து நாம் அறிகிறோம்.

இப்படி, அழகு என்பதும் ஒரு பொருளின் பண்புதான் என்று நாம் கூறி விட முடியுமா ?

(1) உற்று அறிதல், அதாவது, தொட்டு அறிதல் (2) கண்டு அறிதல் (3) கேட்டு அறிதல் (4) முகர்ந்து அறிதல் (5) சுவைத்து அறிதல், என்று ஐந்து வகையான அறிதல்களை வரிசைப் படுத்துகின்ற தொல் காப்பியர், தோல், கண், காது, மூக்கு, நாக்கு, ஆகிய ஐம் புலன்களின் வழியாக இவ் அறிவுகளை நாம் பெறுகிறோம் என்று கூறி, ஆறாவது அறிவாக மனத்தினை வகைப் படுத்துகிறார்.

நுகர்ச்சியின் மூலம், அல்லது நேரடித் தொடர்பின் மூலம் நமது மூளையில் நாம் பதிந்து கொள்கின்ற நமது அனுபவ அறிவுதான் இந்த ஐந்து புலன்களின் அறிவு என்பது வெளிப் படை! எனினும், இந்த ஐந்து புலன்களிலும் முக்கியமான ஒரு புலனாக நமது கண்ணை நாம் குறிப்பிடலாம்.

ஆனால், அழகு என்பது ஏதேனும் ஒரு காட்சியின் அழகுதான் என்பதனால் மட்டும் அல்ல!

கண்

கண்ணுதல் என்னும் சொல்லிற்குத் தமிழில் சிந்தித்தல் என்று பொருள்; கண்களின் மூலமாகத்தான் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் என்றுதான் :க்ரீக்கர்களும் நம்பிக் கொண்டு வந்து இருந்தார்களாம்.

‘காண் ‘ என்னும் சொல்தான் ‘க்னோ ‘, அதாவது, ‘னோ ‘ என்னும் ஆங்கிலச் சொல்லின் அடி வேர் என்பது சொல் ஆய்வின் முடிபு; ‘ஞானம் ‘ என்னும் சொல்லுக்கும் இதுதான் அடி வேர்!

ஆனால், கண்களின் மூலமாகத்தான் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் என்று இதனால் எல்லாம் நாம் முடிவு செய்து விட முடியுமா ? பிற நான்கு புலன்களைப் போல கண்ணும் ஒரு புலன்தான் என்பதைத் தவிர, வேறு முக்கியம் ஏதேனும் அதற்கு இருந்திடவும்தான் முடியுமா ?

நாவினால் நாம் சுவைப்பதையும் மூக்கினால் நாம் முகர்வதையும் அழகு என்று உணர்ந்திட முடியாத நாம், கண்களால் நாம் காண்கின்ற காட்சியினை மட்டும் அழகு என்று உணர்ந்து விடுகிறோமே, எப்படி ?

பருப் பொருள்

பொருள் என்பது எந்த ஒரு பொருளாகவும் இருக்கலாம்; ஒரு பருப் பொருளாகவோ அல்லது ஒரு கருத்துப் பொருளாகவோ அது இருக்கலாம். ஆனால், கருத்துப் பொருள்களை ஐம் புலன்களினால் அறிந்திட முடியாது என்பதால், பருப் பொருள்களை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொள்வோம், குறிப்பாக, ஒரு பழம், அதுவும், மாம் பழம்!

மாம் பழத்தைப் பார்த்ததும் நமது கண்ணில் தெரிவது அதன் அமைப்பு, அதாவது, வடிவமைப்பு! அதன் வண்ணமும் கூடத்தான்! கையில் அதனைத் தூக்கிப் பார்த்ததும் நமக்குத் தெரிவது அதன் எடை! கொஞ்சம் தட்டிப் பார்த்தால் நமக்குக் கேட்பது அதன் ஒலி; காயா ? பழமா ? என்று நாம் அறிந்திடத் தக்க ஒலி! முகர்ந்து பார்த்தால் நமக்குத் தெரிவது அதன் மணம்! கடித்துப் பார்த்தால் நமக்குத் தெரிவதோ அதன் சுவை!

இன்னும் ஒன்றினையும் இங்கே நாம் கவனித்து ஆக வேண்டும்.

பெயர் இல்லாத மணங்கள்

வண்ணங்களுக்குத் தனித் தனியாகப் பெயர்கள் உள்ளன; சுவைகளுக்கும் தனித் தனியாகப் பெயர்கள் உள்ளன. தனித் தன்மை வாய்ந்த சுவைகளைக் குறிப்பிடுகின்ற பொழுது, அந்த சுவைகளுக்கு உரிய பருப் பொருள்களின் பெயரில் அந்தச் சுவையின் பெயரினை நாம் குறிப்பிட்டும் விடுகிறோம். எடுத்துக் காட்டாக, மாம் பழச் சுவை, வாழைப் பழச் சுவை, முதலியன!

ஆனால், தனித் தனியான மணங்களைக் குறிப்பிடுவதற்குத் தனித் தனியான பெயர்கள் தமிழில் இல்லை. வேறு மொழிகளில் உள்ளனவா ? என்பதும் தெரிய வில்லை. இதனால்தான், மல்லிகைப் பூ வாசனை, மருக் கொழுந்து வாசனை, என்று அந்தந்த வாசனைகளுக்கு உரிய பருப் பொருள்களின் பெயரில் அவற்றை நாம் குறிப்பிட்டுக் கொண்டு வருகிறோம்.

பண்புகள்

மாம் பழத்தை உண்கின்ற பொழுது அதன் சுவையினை நாம் அறிகிறோம்; முகர்ந்து பார்க்கின்ற பொழுது அதன் மணத்தினை நாம் அறிகிறோம்; கண்களால் பார்த்து அதன் வண்ணத்தினையும் நாம் அறிந்திட முடிகிறது.

மாம் பழத்தின் சுவையும் மணமும் வண்ணமும் அதற்கே உரிய பண்புகள்! அதனை நாம் உண்டாலும் சரி, உண்ணா விட்டாலும் சரி—-முகர்ந்தாலும் சரி முகரா விட்டாலும் சரி

—-கண்டாலும் சரி காணா விட்டாலும் சரி—-அதன் பண்புகள் அதனிடம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

அதே நேரத்தில், மாம் பழத்திற்கு என்று ஒலி எதுவும் இல்லை. கீழே அது விழுகின்ற பொழுதோ அல்லது கையால் அதனைத் தட்டி நாம் பார்க்கின்ற பொழுதோ அதில் இருந்து எழுகின்ற ஒலி, கொஞ்சம் வேற்றுமை ஆனதுதான் என்ற போதிலும்—-கல் விழுகின்ற பொழுதோ அல்லது மண் கொட்டுகின்ற பொழுதோ எழுகின்ற ஒலியில் இருந்து வேறு பட்ட ஒரு ஒலிதான் என்ற போதிலும்—-மாம் பழத்திற்கே உரிய ஒலி என்று அதனை நாம் கூறி விட முடியாது.

ஏனென்றால், அதில் இருந்து ஓர் ஒலி எழுவதற்கு அதனை இயக்குகின்ற வேறு ஒரு திறல் தேவைப் படுகிறது; அல்லது ஓர் உராய்வு தேவைப் படுகிறது. அந்த உராய்வின் ஒலியினைத்தான் மாம் பழத்தின் ஒலியாக நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆனால், உயிர் உள்ள உடலங்களோ ஒலி எழுப்புகின்றன. எனவே, ஒலி என்பது உயிர் உள்ள பருப் பொருள்களின் பண்பு என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த ஒலியின் இசைவான—-ஒத்திசைவான—-ஒழுங்கமைவான, அல்லது ஒழுங்கு முறையான—-ஏற்ற-இறக்கங்களிலான—-இயக்கத்தினைத்தான் இசை என்று நாம் அழைக்கிறோம். நமது செவிப் புலனில் அது ஏற்படுத்துகின்ற அதிர்வுகள்தாம் நாம் சுவனித்து மகிழ்கின்ற இசை என்பதும் ஆகும்.

ஆனால், அழகு என்பதோ இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் வேற்றுமை ஆனது!

காட்சியின் அழகு

அழகு என்பது ஒரு பருப் பொருளின் பண்பு என்று நாம் கூறிட முடியுமா ? என்றால், முடியாது. மனிதர்களாகப் புனைந்து கொண்ட வெறும் கற்பனைதான் அழகு என்றாவது நாம் கூறிட முடியுமா ? என்றால், அதுவும் முடியாது.

ஒரு பருப் பொருளின் பண்பாகவும் இல்லாமல் வெறும் கற்பனையாகவும் இல்லாமல், அதே நேரத்தில், இருந்து கொண்டும் வருகின்ற ஒரு பொருள்தான் அழகு என்பதுதான் அழகின் சிறப்புப் போலும்! அழகின் மாய்மைக்கு இதுதான் காரணமும் போலும்! அழகினை இதனால்தான் மனிதர்கள் ஆராதித்துக் கொண்டும் வருகிறார்கள் போலும்!

‘தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலைதான்!

உண்டு என்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை! ‘

என்று கடவுளைப் பற்றிப் பாடுகிறார் கண்ண தாசனார்.

இதைப் போல—-ஆபாசம் என்பது கண்களில் இருக்கிறது என்று அண்ணா துரையார் கூறியதைப் போல—-அழகு என்பது நம் பார்வையில் மட்டும்தான் இருக்கிறது என்றோ, அல்லது நமது பான்மையில் மட்டும்தான் இருக்கிறது என்றோ நாம் கூறி விட முடியுமா ? என்றால், நிச்சயம் முடியாது!

ஏனென்றால், இல்லாத ஒன்றினை யாரும் கற்பனை செய்து விட முடியாது—-கடவுளாக அது இருந்தாலும் சரி, அழகாக அது இருந்தாலும் சரி! கேள்வி எல்லாம், கடவுளாக நாம் கருதுவது எது ? அழகாக நாம் கருதுவது எது ? என்பதுதான்!

உப்பு நீரால் ஆன ஓர் அமைப்பும் விரிவான ஒரு பரப்பும் அலை அடிக்கின்ற இயக்கமும் கொண்டது கடல்!

கடற் கரையில் பிறந்து, கடலுடன் வளர்ந்து, கடலை நம்பியே வாழ்ந்து கொண்டு வருபவர்களுக்குக் கூட சில சமயங்களில் கடல் என்பது ஒரு புதிர்! புதிதாகக் காண்பவர்களுக்கோ அதன் பரப்பும் அமைப்பும் இயக்கமும் ஒரு வியப்பு!

இந்த வியப்பு என்பது கடலின் ஒரு பண்பா ? என்றால், இல்லை! ஆனால், கடலைக் கண்டதும் நம்முள் எழுகின்ற ஒரு சிந்திப்பு அது!

சிந்திப்பு

மனிதர்களின் உள்ளங்களில் அவ் அப்போது ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நிழலாடிக் கொண்டு இருப்பது உண்டு. ஒரு நிகழ்ச்சியின் நிழலாக நாம் கருதிட முடிகின்ற இந்த ஆட்டம் என்பது உண்மையில் ஒரு நினைப்புதான் ஆகும்.

நமது உள்ளத்தில் பதிந்து கிடக்கின்ற கடந்த காலத்து நிகழ்ச்சிகளை நினைவு என்று நாம் வகைப் படுத்துகிறோம்; மீண்டும் அவற்றை நினைத்து நாம் பார்க்கின்ற நமது சிந்தைச் செயலினை நினைப்பு என்று நாம் குறிப்பிடுகிறோம்!

இது போல, நிகழ் காலத்து நிகழ்ச்சிகளைப் பற்றிய நமது சிந்தைச் செயலினைச் ‘சிந்திப்பு ‘ என்று நாம் அழைக்கலாம்.

‘வாழ்க்கையின் வெற்றிகளைப் பற்றிய சிந்திப்பு, மனிதர்களிடம் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது என்றால், தோல்விகளைப் பற்றிய சிந்திப்பு, அவர்களிடம் துயரத்தைத் தோற்றுவிக்கிறது.

சொல்லப் போனால், வெற்றிகளைப் பற்றிய மனிதனின் ‘நேரடியான சிந்திப்பு ‘தான் மகிழ்ச்சி என்பது. இது போல, தோல்விகளைப் பற்றிய மனிதனின் ‘நேரடியான சிந்திப்பு ‘தான் துயரம் என்பது. இந்தச் சிந்திப்பு ஓய்கின்ற வரை மகிழ்ச்சியும் துயரமும் ஓய்வதும் இல்லை. ‘

இத் தகையது ஒரு சிந்திப்புதான் அலை கடலினைக் கண்டதும் நாம் அடைந்த வியப்பு ஆகும். நேரடியாக நிகழ்வது இது; நேருக்கு நேர் ஆனது!

ஆக, கொஞ்சம் கொஞ்சமாக அழகினை நாம் நெருங்கி விட்டோம் எனலாம்.

காட்சியும் கருத்தும்

சில காட்சிகளைக் காணுகின்ற பொழுது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது; வேறு சில காட்சிகளைக் காணுகின்ற பொழுது நமது உள்ளத்தில் ஏற்படுகின்ற அருவருப்பிற்கு அளவு இல்லை! திகைப்பு, வியப்பு, பயங்கரம், எனப் பல் வேறு பான்மைகளை நமது நெஞ்சத்தில் உருவாக்குகின்ற காட்சிகளையும் நாம் காணாமல் இல்லை.

தத்தம் தன்மையில், இந்தப் பான்மைகள் அனைத்தும் ஒரே மாதிரி ஆனவை! அழகு உணர்வுக்குப் பொருந்துகின்ற நமது வாதங்கள் அனைத்தும் அருவருப்பு உணர்வுக்கும் பொருந்தி வருபவை என்கின்ற வகையில், இந்த இரண்டிற்கும் இடையே நமக்கு இங்கே எந்த வேறுபாடும் இல்லை! எனினும், அழகிற்கு நாம் வருவோம்.

முதலாவதாக, அழகு என்பது எந்த ஒரு பொருளினதும் பண்பு அல்ல. நாம் காண்கின்ற காட்சிகளின் பருமைத் தன்மைக்கோ, வடிவமைப்பிற்கோ, வண்ணத்திற்கோ, வேறு பிற குணவியல்புகளுக்கோ அது உரியது அல்ல. அதாவது, தம்மில் தாம் ஆனவை என்கின்ற

வகையில், காட்சிகளின் ஒரு குணவியல்போ (ப்ராப்பெர்ட்டி) அல்லது குணப் பண்போ (ஆட்ரி:ப்யூட்) அல்ல அழகு!

இரண்டாவதாக, காட்சிகளை நாம் கண்ணுறுகின்ற கணத்திலேயே நமது உள்ளத்தில் ஒரு சிந்திப்பு நிகழ்கிறது. இந்தச் சிந்திப்பு என்பது நமது சிந்தனைச் செயல் அல்ல; மாறாக, அனுபவ முறையான ஒரு சிந்தைச் செயல்! இந்தச் சிந்திப்பு என்பது ஒரு வியப்பாகவும் அல்லது இதமான ஏதோ ஒன்றாகவும் மாற்றம் அடைகின்ற அந்தக் கணத்தில்தான் காட்சிகளில் அழகினை நாம் காண்கிறோம்.

ஆக, புறமை வயமான (ஆ:ப்ஜெக்டிவ்) ஒரு காட்சியினை அகமை வயமாக (ச:ப்ஜெச்டிவ்) நாம் கருத்துப் படுத்திக் கொள்கின்ற நமது பான்மைதான் அழகு என்பது முடிபு.

இனி, இந்த அழகின் மாய்மைக்குள் சற்று நாம் உற்றுப் பார்ப்போம்.

15-07-2004

தொடரும்

—-

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்