முழு சுகாதார திட்டம்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

ஜெ. ரஜினி ராம்கி.


கும்பகோணம் தீவிபத்திற்கு பின்பு கீற்றுக் கொட்டகைகளை பிரித்துப்

போடுவதில் நண்பர் பரபரப்பாக இருந்தால் சமீபத்தில்தான் அவரைப் பார்க்க

அவரது பஞ்சாயத்து ஆபிஸ் வரை போயிருந்தேன். வழியிலேயே பேஷன்,

தொட்டி என நிறைய அடுக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் மாதிரி கழிப்பறை

கட்டி பார்வைக்கு வைத்திருந்தார்கள். அது சம்பந்தமான விபரங்களை

படிக்கும்போதுதான் எவ்வளவு உருப்படியான திட்டம் என்பதே புரிய வந்தது. மழை

நீர் சேகரிப்பு திட்டம் நடைமுறையிலிருக்கும்போது அறிமுகப்படுத்தப்பட்ட

திட்டம் இது. மழை நீர் சேகரிப்பு பற்றி தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்

குழந்தைகளிலிருந்து சமூக அமைப்புகளை வரை கொடி பிடித்து ஊர்வலம் போய்

திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். ஆனால், கழிப்பறை

திட்டத்தையோ யாரும் கண்டுகொள்வாரில்லை.

தமிழக அரசு முழு சுகாதார திட்டம் என்கிற பெயரில் ஒரு திட்டத்தை இரண்டு

வருஷங்களாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னும்

அரசியலாக்கப்படாமல் இருக்கும் அருமையான திட்டமாக இதைச் சொல்லலாம்.

இதன்படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இரண்டரை லட்சம் மதிப்பிலான கழிப்பறை

வளாகம் கட்டப்படுகிறது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஆறு

கழிப்பறைகளும் நான்கு குளியறைகளும் இருக்கும். இது மட்டுமல்லாமல் துணி

துவைக்க தனியாக இட வசதியும் அதற்கென்று பிரத்யேகமாக தண்ணீர்

தொட்டியும் உண்டு. வளாகத்தின் மேற்பகுதியில் பெரிய அளவில் தண்ணீர்

வசதிக்காக தொட்டி கட்டப்பட்டு மோட்டார் வசதியும் இணைக்கப்பட்டிருக்கும்.

கழிப்பறை வளாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த பகுதி மகளிர் சுய

உதவி குழுக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாதந்தோறும் அதற்கான செலவாக

குறிப்பிட்ட தொகையை சுய உதவிக் குழுக்களுக்கு அரசே வழங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் எல்லா பஞ்சாயத்துகளிலும் இதற்கான வேலை தொடங்கி

எழுபது சதவீதம் நிறைவேறியிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் திட்டம்

முழுமை பெற்றுவிடும். இதற்கான நிதியுதவி மத்திய அரசிலிருந்தும் மாநில

அரசிலிருந்தும் பெறப்படுகிறது. திட்டத்திலும் சில குறைகள் இருக்கத்தான்

செய்கின்றன. பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்பட்டு வந்தாலும் பெரிய

நகரங்களிலும், சிறு ஊர்களிலும் இத்தகைய திட்டம் நடைமுறையிலிருப்பதாக

தெரியவில்லை. குறிப்பாக சென்னை. கழிப்பிடங்கள் குறைவாக இருக்கும்

இந்திய நகரமாக சென்னையை சொல்லலாம். அதிகமான மக்கள் தொகை

இருந்தாலும் மும்பையின் ஒவ்வொரு தெருவிலும் ஒரு பூங்காவும் ஒரு கழிப்பறைகளும்

இருப்பதை பார்க்க முடியும். ஆனால், சென்னையிலோ கட்டணக் கழிப்பிடங்களை

கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். இது போன்ற கழிப்பறை வணிக

வளாகம் நகரங்களிலும் உருவாக்கப்படும் பட்சத்தில் சமத்துவபுரம், உழவர் சந்தை

வெற்றிகளை தொடர்ந்து கழிப்பறை வளாகமும் பெரிதாக பேசப்படும்.

இது மட்டுமன்றி ‘வீடு தோறும் கழிப்பறைகள் ‘ என்றொரு திட்டமும்

பஞ்சாயத்துக்களில் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் சுற்றுப்புற சுவர் இல்லாமல் வெறும்

பேஷன், தொட்டி வைத்து கழிப்பறை கட்டுவதற்கு ஆகும் செலவாக அரசு

மதிப்பிடும் தொகை ரூ. 750/- இதில் ரூ.500/- அரசே வழங்கிவிடும்.

பயனாளி தனது சொந்த செலவில் கழிப்பறையை சுற்றி சுற்றுப்புற சுவர்

எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கும். கழிப்பறை கட்டுவதற்கான மூலப்

பொருட்களையும் கொத்தனார் போன்றவற்றையும் அந்தந்த பகுதி பஞ்சாயத்து

அலுவலகமே ஏற்பாடு செய்து தருகிறது. மீதமுள்ள ரூ.250/-

பயனாளியிடமிருந்து பெறப்படுகிறது. 750 ரூபாய்க்குள் ஒரு கழிப்பறை

ரெடியாகிவிடும் என்று அரசு சொன்னாலும் கையில் 1000 ரூபாய் இருந்தால்

கழிப்பறை கனவு நிச்சயமாக நிறைவேறிடும் என்றுதான் தெரிகிறது. மழை

நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது போலவே இதற்கும் பயனாளி ரூ.250/-

செலுத்தியவுடனேயே பஞ்சாயத்து அலுவலகர்கள் பணியை முடுக்கிவிடுகிறார்கள்.

இதற்காக அரசு ஒதுக்கீடும் செய்யும் தொகையில் இலவசமாகவே கழிப்பறை

கட்டி கொடுத்துவிடலாமே என்கிற விமர்சனங்களும் உண்டு. பயனாளியின் பங்கும்

கழிப்பறை கட்டுவதில் இருந்தால் மட்டுமே அதை முறைப்படி பராமரிக்கும்

மனோபவம் இருக்கும் என்கிறது அரசு வட்டாரம். கழிப்பறை ரெடி. ஆனால்,

தண்ணீருக்காக எத்தகைய ஏற்பாடுகளை அரசு செய்யப்போகிறது என்பதும் ஒரு

பக்கம் இருக்கும் கேள்வி. எது எப்படியிருந்தாலும் மழை நீர் சேகரிப்பு

போலவே கழிப்பறைகளின் அவசியம் பற்றியும் தமிழ்நாடு முழுவதும்

விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டியது இன்றைக்கு அவசரத் தேவை. அதில்

அரசியல் காழ்ப்புணர்ச்சி அண்டாமல் பார்த்துக் கொள்வதும் ரொம்பவும்

அவசியம்.

rajni_ramki@yahoo.com

Series Navigation

ஜெ. ரஜினி ராம்கி

ஜெ. ரஜினி ராம்கி