மீண்டும் சந்திப்போம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

ஆதிபுரீஸ்வரன்


(இது ஒரு கற்பனை கதை. அமானுஷ்ய கதை எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுதியது. எந்த தத்துவத்தையும் ஆதரித்து இதை எழுதவில்லை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.)

மீண்டும் சந்திப்போம்

தனியார் சானல் கருத்தரங்கத்தில் “ஆவிகள் இல்லை” என ஆவி பறக்க பேசி விட்டு வெளியே வந்தான். இன்று அவன் பேசியதில் அவனுக்கே பெருமை தாங்கவில்லை. பாதி பேர் அவனிடம் மாட்டிக் கொண்டு அல்லாடியதில் அவனுக்கு ஒரு சந்தோஷம். எந்த காலத்தில் இது போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் ஒருவரால் வாதாடி வெல்ல முடிந்திருக்கிறது?! அறிவார்ந்த கேள்வி கொக்கிகளில் அந்த நம்பிகைகள் சிக்கி தொங்குவதுதானே காலம் காலமாய் நடப்பது!

“நீங்கள் பேசியதில் உங்களுக்கே பெருமை பிடிபடவில்லை போலும்”, அருகில் நடந்து வந்தவாறு அந்த பெரியவர் கேட்டார். தலைமுடி முழுவதும் நரைத்திருந்தது. முகத்தில் சுருக்கங்கள் இல்லை. ஆனால் சதைப்பற்று அவ்வளவாக இல்லாத முகம். நீலநிற ஜிப்பா அணிந்திருந்தார். வெள்ளை வேட்டி பழுப்பு நிறத்தில்.

அவன் ஒன்றும் பேசாமல் அவரை பார்த்தான். அவரே தொடர்ந்து பேசினார்:

“புலன்களை அடிப்படையாக வைத்து ஒன்றை நிரூபிக்க சொல்வதே சரியில்லை. உங்களுடையதும் ஒரு நம்பிக்கை என்றுதான் ஆகிறது”

“இதையெல்லாம் உள்ளே பேச வேண்டியதுதானே! அங்கேயே பதில் சொல்லியிருப்பேனே!”, என்று எரிச்சலுடன் சொன்னான்.

“எங்களுக்கு எங்கே வாய்ப்பு கொடுத்தார்கள்? ஒரு மணி நேர நிகழ்ச்சி. அதில் 25 நிமிடங்களுக்கு மேல் விளம்பரங்கள். பாக்கி முப்பதைந்து நிமிடங்களில் உங்களை போன்ற முக்கிய விருந்தினர்களுக்கு 20 நிமிடங்கள் போய் விடுகின்றன. பார்வையாளர்கள் பக்கம் இருக்கின்ற நாங்களோ ஐம்பது பேர். பலமுறை மைக்கை கேட்டும் என் பக்கம் வரவேயில்லை.”, என்றார் அவர்.

“சரி! உங்களுக்கு என்ன வேண்டும்?”, செயற்கையான புன்னகையை முகத்தில் தவழ விட்டு, கேட்டான்.

“உங்களிடம் ஒரு அரை மணி நேரம் பேச வேண்டும்! என் பக்க கருத்தை சொல்ல விரும்புகிறேன்.”, என்றார்.

“என்னிடம் எதற்கு பேச வேண்டும்? நிகழ்ச்சி தான் முடிவடைந்து விட்டதே! என்னிடம் ஒன்றை நீங்கள் நிரூபிப்பதன் மூலமாக உங்களுக்கு என்ன ஆக போகிறது?”, என்றான்.

“ஆக…நிகழ்ச்சிக்கும், பொதுமக்கள் பார்வைக்கும் தான் கொள்கையா? தனிப்பட்ட முறையில் ஒருவர் கொள்கையில் உள்ள தவறை சொல்வதால் எந்த உபயோகமும் இல்லையா என்ன? உங்களிடம் பேசுவதன் மூலமாக, என் கருத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக, எனக்கு ஒரு திருப்தி கிடைக்கும்.”, என்றார் அழுத்தந்திருத்தமாக.

“அரை மணி நேரமா? நான் உடனே என் அலுவலகத்திற்கு போக வேண்டுமே! இப்பொழுது கிளம்பினாலே நான் போய் சேர முக்கால் மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்”, என்றான் தயக்கத்துடன்.

“நீங்கள் அனுமதித்தால் நான் உங்களுடனே காரில் வருகிறேன். இல்லை உங்களுக்கு என்னுடன் வர தயக்கம் இருந்தால், இங்கேயே பேசுவோம். ஒரு பதினைந்து நிமிடங்கள் நீங்கள் ஒதுக்கினாலும் போதும்.”, என்று வேண்டுகோள் வைத்தார்.

ஒளி வீசிய அவரது கண்கள் அவர்பால் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது வயது அவன் தந்தையை ஒத்திருந்ததால் சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவனுக்கு ஒரு பாச உணர்வை ஏற்படுத்தியது.

“இல்லை! எனக்கு ஒரு தயக்கமும் இல்லை! என்னுடன் நீங்கள் காரில் வரலாம். ஆனால் நீங்கள் என் அலுவலகம் இருக்குமிடத்திலிருந்து உங்கள் வீட்டிற்கு எப்படி போவீர்கள்?” , என்றான்.

“அது ஒன்றும் பிரச்சனை இல்லை. என்னிடம் ட்ரெயின் பாஸ் இருக்கிறது. பிரச்சனை இல்லை.”, என்றார் புன்னகையுடன்!

கார் கிளம்பும் வரை பேச்சு எதும் எழவில்லை.

“ஆவிகள் இல்லையென்று சொல்வதால் என்ன பலன்? அந்த நம்பிக்கையை ஏன் உடைக்க வேண்டும்?”, என்று அவரே ஆரம்பித்தார்.

முகம் கொள்ளா சிரிப்புடன் அவரிடம் கேட்டான்:

“கடவுள் இல்லையென்று சொல்வோரிடத்தில் விவாதிக்க வருவதை கண்டிருக்கிறேன். நீங்கள் இந்த விஷயத்தில் கொண்டிருக்கும் தீவிரம் வியப்பாக இருக்கிறது. சரி! நீங்கள் கேட்ட அதே கேள்வியை திருப்பி கேட்கிறேன்! ஆவி இருக்கிறது என்று சொல்வதால் என்ன பலன்? அந்த நம்பிக்கையை ஏன் உருவாக்க வேண்டும்?”

காரின் முன்பக்க கண்ணாடி வழியாக சாலையை உற்று பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், தன் பார்வையை திருப்பாமல்,

“நியாயமான கேள்வி!” என்றார்.

“நன்றி. உங்கள் பதிலை சொல்லுங்கள்!” என்றான்.

“இதற்கு பதில் நான் சொல்வதற்கு முன், நான் இன்னும் ஒரு சிறிய கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது! மரணத்தின் போது ஏற்படும் உணர்வுகளையும், வேதனையையும்,போராட்டத்தையும் அறிவீர்களா?” என்றார்.

எனக்கு இந்த வாதம் போகும் போக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. என்ன செய்ய?
“என்ன கேட்கிறீர்கள்? Near death experience போலவா?”

நெற்றியை சுருக்கி யோசித்தவர்,

“ம்! அவர்களுக்கும் தெரியும்தான். ஆனால் அது ஓரளவுதான். சர்வ நிச்சயமாக மரணத்தை அடைய போகிறவர்கள் கடைசி நிமிடத்தில் படும் பாட்டை நீங்கள் அறிவீர்களா? அது உடல், மனம் இரண்டிலும் நிகழும் கொடூரமான போராட்டம். தன் இருப்பை தக்க வைத்து கொள்ள உயிரினங்கள் படும் பாடு!”, என்றார். அவர் கண்களில் அத்தகையோருக்காக தெரிந்த வருத்தம் மெய்யானதாக எனக்கு பட்டது.

“அப்படி ஒரு போராட்டம் இருக்கிறது என்பது என்ன நிச்சயம்? செத்தவர்களுக்குத்தான் அது தெரியும். அவர்களோ வந்து சொல்ல முடியாது. ஏனென்றால் ஆவி என்ற ஒன்று இல்லை என்பதுதானே என் தீர்மானம்!”, வாய் விட்டு சிரித்தான்.

அவர் முகத்திலும் புன்னகை.

“ஏன்? கிட்டத்தட்ட மரணத்தை தொட்டவர்களும், தற்கொலைக்கு முயன்று பிழைத்தவர்களும், புற்றுநோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிறுக சிறுக மரண பாதையில் பயணிப்பவர்களும் கிட்டத்தட்ட அந்த போராட்டங்களை அனுபவிக்கின்றனரே! அவர்களை கண்டே தெரிந்துக் கொள்ளலாமே!”

“சரி! நீங்கள் சொல்வது போலவே போராட்டம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கு இந்த ஆவி நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு?”, என்றான். அவனையறியாமல் இந்த விவாதத்தில் அவன் ஈர்க்கப்படுவதை உணர்ந்தான்.

“மரணத்தின் போது ஏற்படும் மிக பெரிய வேதனை மனதால் ஏற்படுவது. இறந்த பின் தான் ஒன்றுமில்லாமல் போய்விடுவோமோ என்பதுதான் இறப்பவரது மிகப் பெரிய வேதனையாக இருக்கும். தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள எந்த ஒரு உயிரும் பெரும்போராட்டம் நிகழ்த்தும். அதுவும் மனம் அற்புதமாக செயல்படும் மனித இனத்தில் அந்த போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இருப்பினும் மரணம் தவிர்க்க முடியாதது. எனவே தன் இருப்பு எப்படியும் இல்லாமல் போவதில்லை என்று நம்பும் உயிர் வேதனையாக போராட்டத்தில் அதிகமாக ஈடுபடாது. அதனால் கொடுமையான அந்த மரண வேதனை கிட்டத்தட்ட இல்லாததாகிறது!”, என்றார்.

நான் சற்று நேரம் அமைதியாக இருந்தேன். பின் அவரிடம் கேட்டேன்:

“அதற்கு எதற்கு இப்படி ஒரு நம்பிக்கை தேவை? தோன்றுவதும், பின் இல்லாமற் போவது என்பதும் ஒரு நிகழ்வு என்று புரிந்துக் கொண்டு விட்டால் போகிறது”

அவனை கூர்ந்து பார்த்த பெரியவர்,

“வெறுமனே வாயில் இப்படி சொல்லிவிட்டால் மனது உடன்பட்டு விடும் என்று நம்புகிறீர்களா? இல்லாமற் போவது என்பதை எந்த ஒரு உயிரும் ஏற்றுக் கொள்ளாது. எந்த மனமும் கூட! ஆவிகள் உண்டு என்று நம்புவதன் மூலமாக தன் இருப்பு அழிவதில்லை என்று அறிகிறார் அல்லவா! அவரது மரணம் நிச்சயமாக பெரும் வேதனையாக இருக்காது!”

“ம்!சரி! அதே சமயம் ஆவி இருக்கிறது என்பதை எப்படி திடீரென நம்புவது? வெறுமனே ஒருவரால் சட்டென நம்பி விட முடியுமா?”

“நியாயம்தான்! எப்படி நிரூபிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?”, பெரியவரின் பார்வையில் குறும்பு கொப்பளித்தது.

“எப்படியாவது! அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் போதும்.”, என்றான். ஏனோ அவன் குரலில் சுரத்து இல்லை.

“சரி! நீங்களே சொல்லுங்கள். அதன்படி நிரூபிக்க முயற்சி செய்கிறேன்!”, என்றார்.

அவனுக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. ஏன் இப்படி அசட்டு நம்பிக்கையில் இருந்துக் கொண்டு நம்மையும் வெறுப்பேற்றுகிறாரோ என்று. ஆனால் மனிதர் ஆரோக்கியமான மனோநிலையில் இருப்பது உறுதியாக தெரிந்ததால், அவனால் அவரை ஒதுக்க முடியவில்லை.

தொண்டையை சற்று செருமிக் கொண்டான்.
“இதோ பாருங்கள் ஐயா! என்னுடைய தங்கை சமீபத்தில் இறந்து விட்டாள். அவள் எந்த வியாதியால் இறந்தாள் என்று அவளை கேட்டு யாரையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்!”

“ஏன் யாரையாவது கேட்க வேண்டும்? நானே கேட்டு சொல்கிறேன்!”,என்றவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின்,
“உங்கள் தங்கை வியாதியால் இறக்கவில்லையாம்! தற்கொலை செய்து கொண்டு இறந்தாளாம்!”

அவனுக்கு தூக்கி வாரி போட்டது. குடும்ப மானம் சந்தி சிரிக்க கூடாது என்பதற்காக வெளியில் இந்த விஷயத்தை சொல்லவில்லை. எல்லோரிடமும் மஞ்சள் காமாலையில் இறந்தாள் என்று சொல்லியிருந்தார்கள். இருப்பினும் அவனால் முழுவதுமாக எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

“அவளது ஈ மெயில் பாஸ்வேர்ட் என்னவென்று கேட்டு சொல்லுங்கள். பார்ப்போம்!”. அவன் குரல் கம்மியிருந்தது.

இரண்டு நிமிடங்களில் பெரியவர் பதில் சொன்னார்.

“abi141sankaR265”

காரை உடனடியாக ஒரு ஓரத்தில் நிறுத்தி, மடிக்கணினியை திறந்தான். ஆண்டவனே! ஈ மெயில் படக்கென ஓபன் ஆகி விட்டது. அவன் முகத்தில் வியர்வை துளிகள் அரும்ப ஆரம்பித்தன.

பெரியவரே தொடர்ந்து பேசினார்.
“ஏன் தற்கொலை செய்துக் கொள்கிறேன் என்ற காரணத்தை அவள் ஈ மெயில் மூலமாக உனக்கு அனுப்பியிருக்கிறாள். ஆனால் ஐ.டியில் சிறிய தவறு செய்து விட்டதால் உனக்கு வரவில்லை போலும். அவளது மெயிலுக்கே அது திரும்பி விட்டிருக்கலாம். உடனே அந்த மெயிலை உன் மனைவியின் ஐ.டிக்கு அனுப்பி விடுங்கள்.”

உண்மைதான். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. தங்கையின் மெயில் பவுன்ஸாகி இருந்தது.

“ஏன்? என் மனைவியின் ஐ.டியிற்கு அனுப்ப வேண்டும்?”. அவன் குரல் கம்மியிருந்தது.

“நீங்கள் சொல்லி நான் இவ்வளவு செய்யவில்லையா? இது ஒன்றையாவது என்னை நம்பி நீங்கள் செய்ய கூடாதா?”, கனிவுடன் கேட்டார் பெரியவர்.

மறுபேச்சு பேசாமல் மடலை அவன் மனைவியின் ஐ.டிக்கு அனுப்பி வைத்தான்.

அவனுக்கு ஒரே தடுமாற்றமாக இருந்தது.

“ஆவி, ‘நம் இருப்பு’ போன்றவற்றில் இப்போதாவது நம்பிக்கை வந்து விட்டதா?”, பெரியவர் கேட்டார்.

“சொல்ல தெரியவில்லை. நீங்கள் செய்தது அமானுஷ்யமாக இருக்கிறது. உண்மையாகவும் இருக்கிறது. ஆனால் இதனால் ஆவி இருக்கிறது என்று சொல்ல முடியுமா என்ன? டெலிபதி, அது இது போன்று எப்படியோ இந்த ஈ மெயில் விஷயங்களை செய்யலாம் அல்லவா?”, குளறலாக பேசினான்.

“இறந்து போன ஒருவர் விஷயங்களை டெலிபதியில் எப்படி அறிய முடியும்? அதற்கும் அவர்கள் இருப்பு இருந்தால்தானே முடியும்?! அப்படி பார்த்தாலும் அவர்கள் உடலை விட்ட பிறகு இருக்கிறார்கள் என்று தானே பொருள்!”, நட்புடன் என்னை பார்த்து கேட்டார்.

அமைதியாக தலையை ஆட்டி ஆமோதித்தான்.

“இருந்தாலும்….”, அவனக்கு பேச தயக்கமாக இருந்தது.

“இன்னும் தெளிவாக எதாவது நிரூபணம் வேண்டும்…அதானே?”

“ம்”

“அண்ணா….”, பின் சீட்டிலிருந்து பெண்குரல் கேட்டது. அதிர்ச்சியில் மிரண்டு போய் திரும்பி பார்த்தான். அவனுடைய தங்கை. அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை. மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிஸம் போல ஏதாவதா? காரை திரும்பவும் ஓரமாக நிறுத்தி விட்டான்.

அவளது கரங்கள் மென்மையாக அவன் தோளை அழுத்தின.

தெருவில் செல்லும் வாகனங்கள், என் வண்டியை அருகில் பிச்சை எடுக்கும் பெண், கடைகள் எல்லாம் தெளிவாக இருந்தன. அவன் தங்கையும் தெளிவாக தெரிந்தாள். என்னால் மூச்சை சரியாக விட முடியவில்லை. பதட்டத்தில் மூச்சு மிகவும் தாறுமாறாக ஓடியது.

“இன்னும் என்னப்பா செய்ய வேண்டும்?”, பெரியவர் கேட்டார்.அதில் ஆணவம் தெரியவில்லை.

மீண்டும் காரை கிளப்பினேன். அவன் தங்கையின் உருவம் மறைந்திருந்தது. அவனுடைய கோட்டில் அவள் கை படிந்த இடத்தில் கை விரல்களின் அழுத்த அடையாளம் இன்னும் இருந்தது. என்ன சொல்ல?

“என்னை என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? மீடியாவிலும், வெப்பிலும் ஆவி இருக்கிறது என்ற என் கருத்தை வெளிப்படுத்த வேண்டுமா?”, அவரிடம் கேட்டான்.

“ஒன்றும் வேண்டாம். உங்களுக்கு கடுகளவாவது நம்பிக்கை வந்து விட்டதா? அது தெரிந்தால் போதும்”, ஆர்வத்துடன் கேட்டார் அவர்.

“ம்! மெய்யாகவே கொஞ்சம் வந்திருக்கிறது”

“நல்லது! நான் வந்த வேலை முடிந்து விட்டது!”

“என்ன? என்ன வேலை?”, குழப்பத்துடன் பார்த்தான்.

“உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதுதான் என் வேலை”, என்றார்.

“எனக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதா? நீங்கள் யார்? எதற்கு இப்படி மெனக்கெட்டு எனக்கு நம்பிக்கை ஏற்படுத்த பாடுப்பட்டீர்கள்?”

“என் பெயரே நம்பிக்கைத்தான்! மரணத்திற்கு முன்பு ஒருவருக்கு முடிந்தவரை நம்பிக்கை ஏற்படுத்துவதே என் பிழைப்பு! அப்படி நம்பிக்கை ஏற்படுத்துவதன் மூலமாக அவர்களது மரண போராட்டம் குறைந்து, வேதனையின் அளவு குறையும்!”

“ஓ! எனக்கு ஏன் திடீ……..”

பின்புறத்தில் தறிக்கெட்டு வந்த மண்லாரி அவன் காரின் பக்கவாட்டில் கவிழ்ந்து, காரின் மேல் விழுந்து நசுங்கியது. அவன் அதிகமாக கஷ்டப்படவில்லை.அவர் சொன்னாற் போல் மனப்போராட்டம் அவ்வளவாக இல்லை. காரின் உள்ளே இருந்த பெரியவரின் உருவம் மங்கலாக மறைந்துக் கொண்டிருந்தது.

“திரும்பவும் சந்திப்போம் பெரியவரே”, மனதில் நினைத்துக் கொண்டான்.


adipureeswaran@gmail.com

Series Navigation

மீண்டும் சந்திப்போம்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

கற்பகம்.


———————-
கனவுக்குள் இருந்து
நான் தினமும் உன்னை
அழைக்கின்றேன்.
கருப்பும் வெள்ளையுமாய்
அங்கே
என் முகம் …
அதனால்
உன் கண்களுக்குத்
தெரிவதில்லையோ ?!

ஓசைப்படாமல்
குரலெழுப்ப முடிவதில்லை
அதனால்
என் மெளனப்
பார்வைகளும்
உனக்குப்
புரிவதில்லையோ ?!

ஒரே நொடியில்
இரயிலைக் கோட்டைவிடும்
அரியவர்களின்
பட்டியலில்
நமக்கும்
நிரந்தர
இடம் ஒதுக்கிவிடுதா ?

இந்த மங்கலான கனவுகள்
எப்பொழுதாவது தெளிந்து
உறக்கத்தில் இருந்து
உணர்வுக்குள் உவந்து
நாம் விழிக்கும் பொழுதொன்றில்
மீண்டும் சந்திப்போம்.

Series Navigation

author

கற்பகம்

கற்பகம்

Similar Posts