மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நாகூர் ரூமி


ஒரு ஹதீஸில் பின் வரும் நிகழ்ச்சி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு நாள் அரண்மனையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தார் அமீர் முஆவியா. அரண்மனையின் கதவுகள் உட்புறமாக தாழிடப்பட்டிருந்தன. ஏனெனில், ஏகப்பட்ட குடிமக்களைச் சந்தித்து, அமீர் மிகவும் களைப்புற்றிருந்தார்.

திடாரென யாரோ ஒருவன் அமீரை எழுப்பினான். அமீர் கண்விழித்ததும் எழுப்பியவன் மாயமாய் மறைந்து போனான்.

அரண்மனைக்குள் யாரும் நுழைய முடியாது. எனினும் அவ்வளவு துணிச்சலாகவும் மரியாதை கெட்டத்தனமாகவும் யார் நுழைந்திருக்க முடியும் ? தனக்குள் கேட்டுக்கொண்டார் முஆவியா.

பார்வையிலிருந்து மறைந்து நிற்கும் அந்த மாயவனை அரண்மனை முழுக்க தேடினார் அமீர். கடைசியில் ஒரு கதவின் பின்புறமாக, திரைச்சீலையில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு நின்ற அந்த துர்பாக்கியசாலியைக் கண்டார்.

‘யார் நீ ? உன் பெயரென்ன ? ‘ என்று கேட்டார் அதட்டலாக.

‘சபிக்கப்பட்ட ஷைத்தான் எனது பெயர் ‘ பதிலும் அலட்சியமாக வந்தது.

‘என்னை ஏன் எழுப்பினாய் ? உனது நோக்கமென்ன ? ‘

‘தொழுகைக்கான நேரம் முடியப்போகிறது. பள்ளிவாசலுக்கு நீங்கள் விரைய வேண்டும். நேரம் முடிவதற்குள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று முஸ்தஃபா கூறியுள்ளார்கள் ‘ என்றான் இப்லீஸ்.

‘ம்ஹும். நல்லவற்றை நோக்கி (என்னை) செலுத்தும் வழிகாட்டி நீயல்ல. என் வீட்டுக்குள் ஒரு திருடன் புகுந்து நான் காவல் காக்க வந்தேன் என்று சொன்னால் நான் நம்ப வேண்டுமா ? நல்லவற்றுக்கான நன்மைகளைப் பற்றி திருடனுக்கென்ன தெரியும் ? ‘ என்றார் முஆவியா.

‘நானும் முதலில் ஒரு மலக்காகத்தான் இருந்தேன். அல்லாஹ்வுடைய பாதையில் பணிவுடன் எனது ஆத்மா வெகுதூரம் பயணித்திருந்தது. பக்திப் பாதையில் செல்பவர்களைப் பற்றி நான் திட்டவட்டமாக அறிந்திருந்தேன். அல்லாஹ்வில் அர்ஷின் பக்கத்தில் வாழ்பவர்களையும் நான் நன்கறிவேன். ‘

‘முதல் காதல் மனதை விட்டுப்போகுமா ? முதல் அழைப்பை ஒருவன் மறக்க முடியுமா ? நீங்கள் அந்தோனியாவுக்கும் கூத்தானுக்கும் பயணம் செய்தாலும் உங்கள் தாய் நாட்டை மறந்துவிடுவீர்களா என்ன ? ‘

‘இறை மதுவை உண்டு போதையுற்றவர்களில் ஒருவனாகத்தான் நானுமிருந்தேன். இறைவனின் சபையில் நானும் ஒரு காதலன். இறைக்காதல் என்பது பிறவியிலேயே என்னுள் விதைக்கப்பட்டது. ‘

‘நான் நல்ல நாட்களைக் கண்டிருக்கிறேன். என் வசந்த காலத்தில் அவனுடைய தெய்வீகக் கருணை (எனும்) நீரை அருந்தியுள்ளேன். என்னை விதைத்தது அவனது வள்ளல் கரமல்லவா ? இல்லாமையிலிருந்து எனக்கு என் இருப்பைக் கொடுத்தது அவனல்லவா ? அவனது அளவற்ற அன்பெனும் ரோஜாத் தோட்டத்தில் நான் பலமுறை உலா வந்துள்ளேன். ‘

‘என் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பால் கொடுத்தது யார் ? அன்பு, கருணை, வள்ளல் தன்மை, இவைதான் இறை (வன் என்ற) நாணயத்தை உருவாக்கிய அடிப்படை உலோகங்கள். கோபம் என்பது அந்த நாணயத்தின்மீது படிந்த தூசிதான். அவனிடமிருந்து நான் பிரிந்திருப்பது அவனோடு இணைவதன் மதிப்பை உணர்ந்து கொள்ளத்தான். பிரிவு அனைத்தும் உறவின் அருமையை உணரத்தான். ‘

‘ ‘எனது படைப்பின் நோக்கம் நன்மை செய்வதுதான். எனது தேனானது எனது படைப்புகள் தங்கள் கைகளில் தடவிக்கொள்ளத்தான்; அவர்களிடமிருந்து நன்மையை நான் பெறுவதற்காக அல்ல ‘ என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் ஒரு ஹதீஸ் குத்ஸியிலே சொல்லுகிறார்கள். ‘

‘நான் இறைவனை விட்டுப் பிரிந்திருக்கும் இந்த குறுகிய காலத்திலும் எனது கண்கள் அவனது அழகிய முகத்தின்மீதே லயித்துள்ளன. இவ்வளவு அழகான முகத்தில் எப்படி இவ்வளவு கோபம் என்றுதான் நான் வியக்கிறேன். ‘

‘இறைக்கோபம் தற்காலிகமானது. தற்காலிகமானது தற்காலிகமானதைத்தான் உருவாக்கும். நான் நிரந்தரமானதையே நோக்குகிறேன். இறைவனின் கருணை நிரந்தரமானது. ‘

‘எனது பொறாமையினால்தான் நான் ஆதமுக்கு பணியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த பொறாமை இறைவன்மீது நான் கொண்ட அன்பினால் எழுந்ததுதான். அவன் கட்டளைக்கு அடிபணியாமையினால் எழுந்தது அல்ல. ‘

‘எல்லாப் பொறாமையும் காதலின் விளைவுதான். நம்மையல்லாத வேரொருவர் இறையன்புக்கு பாத்திரமாகிவிடுகிறாரே என்ற பொறாமைதான். தும்மலைத் தொடர்ந்து அல்ஹம்துலில்லாஹ் வருவதுபோல, அன்பின் பின் (விளைவாக) பொறாமை வருகிறது. ‘

‘துன்பத்திலும் அவனது இன்பங்களையே நாடுகிறேன் ‘ என்றான் இப்லீஸ்.

‘நீ சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் அதில் உன் பங்கு என்று நீ பகர்ந்தது மட்டும் பொய். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களை நீ வழிகெடுத்திருக்கிறாய். ஒரு சின்ன ஓட்டை போட்டு அதன் வழியாக கஜானாவுக்குள்ளேயே நீ நுழைந்துவிடுவாய். உன் கைகளால் கிழிபடாத கூடாரம் உண்டா ? நீ நெருப்பு. எதையாவது எரித்துக்கொண்டே இருப்பதுதான் உனது இயற்கை. இது உன்மீது இறைவனிட்ட சாபம். அவனே உன்னை எரிப்பவனாகவும் திருடர்களின் தலைவனாகவும் ஆக்கினான். ‘

‘நீ இறைவனோடே நேருக்கு நேர் உரையாடியுள்ளாய். உன்னுடைய ஏமாற்று வேலைக்கு முன்னால் என் போன்ற எளியோர் என்ன செய்ய முடியும் பகைவனே ? ‘

‘உன் அறிவெல்லாம் கழுகு பிடிப்பவன் எழுப்பும் ஒலியைப் போன்றது. அது பறவையின் சப்தத்தை ஒத்திருக்கும் என்றாலும் அது பறவையின் ஒலியல்ல. பறவைக்கான கண்ணி அது. எத்தனையோ அப்பாவிப் பறவைகள் உனது வாயின் வலையில் விழுந்துள்ளன. உனது குரலை நண்பனின் அழைப்பு என்று நம்பி வந்தவை அவை. விண்ணில் உனது குரல் கேட்டு மண்ணில் இறங்கி மாட்டிக்கொண்ட அப்பாவிகள் அவை. ‘

‘நீ ஏமாற்றியதால் (இறைத்தூதர்) நூஹின் (நம்பிக்கை கொள்ளாத) மக்கள் புலம்பிக்கொண்டுள்ளார்கள். ஆதமின் மக்களை அழிவுக்காற்றுக்கு அர்ப்பணித்தது நீ. (இறைத்தூதர்) லூதின் மக்கள்மீது கல்லெறியப்பட்டதும் உன்னால்தான். கறுப்பு மழைநீரினுள் அவர்கள் அமிழ்த்தப்பட்டதும் உன்னால்தான். (இறைத்தூதர் இப்ராஹீமை எதிர்த்து) நம்ரூதின் மூளை சிதறியதும் உன்னால்தான். எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தியிருக்கிறாய்! ‘

‘(இறைத்தூதர் மூஸாவை எதிர்த்த) ஃபிர்அவ்னுடைய அறிவு உன்னால் மழுங்கியது. (ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட) அபுல்ஹகம் உன்னால் (ஜுவாலையின் தந்தை என்று) அபுலஹப் ஆகி யோக்கியதை இழந்தான். ‘

‘உன் சதுரங்க விளையாட்டில் எத்தனையோ பண்டிதர்களுக்கு ‘செக் ‘ வைத்திருக்கிறாய். எண்ணற்ற இதயங்களை எரித்துள்ளாய். உன் இதயமும் கறுப்பாக்கப்பட்டது. எத்தனையோ படைகள் உன்னால் சிதறுண்டு போயுள்ளன ‘ என்றார் முஆவியா.

‘இந்த முடிச்சை அவிழுங்கள். செல்லாக் காசுக்கும் நல்ல காசுக்கும் இடையில் நானே உரைகல்லாக உள்ளேன். நல்லதையும் கெட்டதையும், சிங்கத்தையும் அசிங்கத்தையும் (கீழான மிருகத்தையும்), பிரித்தறிய (உங்களுக்கு உதவ) இறைவன் என்னைப் படைத்துள்ளான். செல்லாக் காசின் முகத்தை கறுப்பாக்கியது நானல்ல. நான் ஒரு பண வியாபாரி. எது செல்லாக்காசு, அதன் மதிப்பு (இன்மை) எவ்வளவு என்று நான் காட்டுகிறேன், அவ்வளவுதான். ‘

‘நல்லவற்றுக்கு நான் வழிகாட்டி. உலர்ந்துபோன கிளைகளை நான் உரித்துக்காடுகிறேன். புரிந்து கொள்ளட்டும் என்று மக்கள் முன் அவற்றை நான் வைக்கிறேன். ஓநாய் பெற்றெடுத்த மான் குட்டிக்கு ஓநாய் குணமா அல்லது மானின் குணமா என்று அறிய வேண்டுமா ? புல்லையும் எலும்புத் துண்டுகளையும் அதன் முன் போடுங்கள். எந்தப் பக்கம் அது தாவுகிறது என்று பாருங்கள். எலும்பின் பக்கமெனில் அது ஓநாய். புல்லின் பக்கமெனில் அது மான். ‘

‘கருணை கோபம் இந்த இரண்டின் பிணைப்பில் பிறந்ததுதான் நல்லது கெட்டதுகளின் உலகம். புல்லையும் போடுங்கள், எலும்பையும் போடுங்கள். உடலுக்கான உணவையும் கொடுங்கள், உயிருக்கான உணவையும் கொடுங்கள். முன்னதை நாடுபவன் வீணன். பின்னதை நாடுபவன் ஆன்மீகத் தலைவன். உடலுக்கு சேவை செய்பவன் கழுதை. ஆன்மாவின் கடலுக்குள் நுழைபவனே முத்துக்களைக் காண்பான். ‘

‘நல்லது கெட்டது என்ற இந்த இரட்டையர்கள் வெவ்வேறானவர்கள்தான் என்றாலும் இருவருமே ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். இறைத்தூதர்கள் பக்தியை முன்வைக்கிறார்கள். இறைவனின் பகைவர்களோ இச்சையை முன் வைக்கிறார்கள். ‘

‘நல்லவனை நான் எப்படி கெட்டவனாக்க முடியும் ? நான் என்ன ஆண்டவனா ? அசிங்கமானதற்கும் அழகானதற்கும் இடையில் நான் ஒரு கண்ணாடிதானே தவிர வேறொன்றுமில்லை. ‘

‘இந்த கண்ணாடி மனிதனை அசிங்கமாகக் காட்டுகிறது என்று அவநம்பிக்கையாளன் கூறுகிறான். இறைவன் என்னை ஒரு தகவல் தருபவனாகவும் உண்மை விளம்பியாகவும்தான் படைத்துள்ளான். அசிங்கமானதை அசிங்கமானதாகவும் அழகானதை அழகானதாகவும் நான் காட்டுகிறேன், அவ்வளவுதான். ‘

‘நான் ஒரு சாட்சி. சாட்சிக்கு சரியான இடம் சிறையா ? எனது வெள்ளை மனதுக்கு இறைவனே சாட்சி. பழம்தரும் மரம் விதை எனில், நான் அதை ஒரு தாதியைப் போல கவனித்து வளர்க்கிறேன். கசப்பான (கனிகொண்ட) காய்ந்த மரம் எனில், அதை வெட்டிச் சாய்க்கிறேன். அப்போதுதான் கழிவு எது, கஸ்தூரி எது என்று தெரியும் ‘ என்றான் இப்லீஸ்.

‘திருட்டுப் பயலே, வாதம் செய்யாதே. எனக்குள் நுழைய உனக்கு வழியே கிடையாது. திருடனான உன்னிடம் நான் என்ன வியாபாரம் செய்வது ? நீ ஒரு அவநம்பிக்கையாளன். என் இடத்தைச் சுற்றி அலையாதே. இறைவா, இந்தப் பகைவனிடமிருந்து என்னை நீ காப்பாயாக! மேற்கொண்டு இவன் ஒரு வார்த்தை பேசினாலும் எனது நம்பிக்கை எனும் போர்வையைத் திருடிக்கொள்வான். ‘

‘இறைவா, இவனுடைய பேச்சு புகையைப் போல எனது ஆடையைக் கறுப்பாக்கிவிடும். இப்லீஸிடம் வாதிட்டு என்னால் வெல்ல முடியாது. உயர்ந்தவரானாலும் சரி, தாழ்ந்தவரானாலும் சரி, தன் வசப்படுத்திவிடுவான் அவன். ‘

‘ஆதம் அவர்களாலேயே இவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சொர்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேற இவனே காரணம். பூமியின் முகத்தில் அவர்களைக் குப்புற விழச்செய்தவன் இவன். ‘சிமாக் ‘ (என்ற உயர்ந்த நிலை) யிலிருந்து தனது வலைக்குள் ஒரு மீனைப்போல அவர்களை விழவைத்தான். ‘

‘இவனுடைய ஒவ்வொரு சொல்லிலும் விஷமத்தனம் உள்ளது. ஆண் பெண் மனங்களில் அனாவசியமான ஆசைகளை இவன் தூண்டுகிறான். ‘

‘மக்களை மயக்கி விழுங்கும் இப்லீஸே, எதற்காக என்னை எழுப்பினாய் சொல் ‘ என்றார் முஆவியா.

‘கெடுதி செய்யும் எந்த மனிதனும் ஆயிரம் அடையாளக் குறிப்புகள் (உண்மையையும் நன்மையையும் நோக்கி) காட்டினாலும் திருந்தப் போவதில்லை. சந்தேகப்படும் மனதின் முன் ஆதாரங்கள் காட்டினாலும் சந்தேகம்தான் அதிகமாகும். புனிதப் போர்வாளானாலும் திருடனின் கையில் அது (திருட்டுக்கான) கருவியாகிவிடுகிறது. ‘

‘இப்படிப்பட்டவர்களுக்கு பதில் அமைதியும் ஓய்வும்தான். முட்டாளோடு வாதிடுவது பைத்தியக்காரத்தனம். என்னைப் பற்றி இறைவனிடம் ஏன் முறையிடுகிறீர்கள் ? கெட்டவர்களின் கெட்ட குணம் பற்றி முறையிடுங்கள். ‘

‘நீங்கள் ஹல்வா சாப்பிட்டால் அளவுக்கு மீறி கொப்புளமும் காய்ச்சலும் வரத்தான் செய்யும். ஏன் என்னைச் சபிக்கிறீர்கள் ? உங்கள் ஏமாற்றுத்தனம் உங்களிடமிருந்துதான் புறப்படுகிறது. ‘

‘செம்மறியாட்டின் கொழுத்த வாலை நோக்கி ஓநாயைப் போல ஓடும் நீங்கள்தான் குற்றவாளி, இப்லீஸ் அல்ல. இந்த உலக ஆசைகள் உங்களை (ஆன்மீக) குருடராகவும் செவிடராகவும் ஆக்குகிறது. உங்கள் நஃப்ஸ் (கீழான இச்சை) தான் குற்றவாளி. அடுத்தவர்களோடு சண்டை போடவேண்டாம். தலைகீழாகப் பார்க்க வேண்டாம். கெடுதியும் பேராசையும் பகைமையும் நான் வெறுப்பவை. ‘

‘ஒரேயொரு கெட்ட காரியம் செய்தேன். அதற்காக இன்றுவரை வருந்திக்கொண்டிருக்கிறேன். எனது இரவு எப்போது பகலாகும் என காத்துக்கொண்டிருக்கிறேன். ‘

‘மனிதர்கள் என்னையே சந்தேகிக்கிறார்கள். ஆணும் பெண்ணும் தாங்கள் செய்யும் பாவங்களையெல்லாம் எனது வாசலில் வைத்துவிட்டுப் போகிறார்கள். பசி கொண்ட ஓநாய் பலகீனத்தால் நகர முடியாமல் கிடந்தால்கூட வயிறு புடைக்க உண்டதால் நகர முடியவில்லை என்றுதான் காண்பவர் கூறுகிறார்கள் ‘ என்றான் இப்லீஸ்.

‘உண்மையைச் சொன்னால் தப்பிக்கலாம். உண்மையைச் சொல்ல நீதி உன்னை அழைக்கிறது. ஏமாற்ற எண்ணினால் உன்னை விடமாட்டேன் ‘ என்றார் முஆவியா.

‘எது உண்மை, எது பொய், எது நல்லது எது கெட்டது என்று எப்படி அறிவீர்கள் ? ‘

‘அதை அறிவதற்கான ஒரு தெளிவான வழியை பெருமானார் காட்டியுள்ளார்கள். நல்ல காசையும் செல்லாக் காசையும் பிரித்தறிய உதவும் உரை கல்லைக் கொடுத்திருக்கிறார்கள். ‘

‘மனிதனுடைய மன அமைதியை எதுவெல்லாம் குலைக்கிறதோ அதுவெல்லாம் உண்மைக்கும் நன்மைக்கும் புறம்பானதாகும். உண்மையும் நன்மையும் இன்பமான அமைதிக்கு காரணமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அமைதியிழந்த மனம் பொய்யான வார்த்தைகளினால் திருப்தியுறுவதில்லை. தண்ணீரும் எண்ணெயும் (சேர்ந்து) ஒளியைத் தராது. ‘

‘வேதனையிலிருந்தும் வியாதியிலிருந்தும் விடுதலை பெற்ற முழுமையைப் புரிந்துகொண்ட மனதுக்குத்தான் உண்மையின் சுவையும் பொய்யின் சுவையும் தெரியும். ‘

‘விலக்கப்பட்ட கனியை ஆதம் விழைந்தபோது, அவர்களுடைய மன நலம் கெட்டது. உன் வசீகரப் பொய்களுக்கு செவிகொடுத்தார்கள். (உன்) விஷத்தைக் குடித்தார்கள். அந்த நேரத்தில் (உலகின் எல்லா உயிர்களின் பெயர்களையும் அறிந்த) அவர்களுக்கு கஸ்தும் (தேன்) எது, கந்தும் (கோதுமை) எது என்று பிரித்தறிய முடியவில்லை. ஆசை எனும் மதுவை உண்டவர்களைவிட்டு அறிவு பறந்துவிடுகிறது. ‘

‘என்னை ஏன் எழுப்பினாய் ? நீ விழிப்பு நிலைக்கு எதிரியல்லவா ? என்னை ஏமாற்ற முடியாது. கல்லிடம் நான் கடவுளைக் காண்பதில்லை. கழிவிடம் நான் கஸ்தூரியை முகர நினைப்பதில்லை. ஆற்றுக்குள் நான் உலர்ந்த கற்களைத் தேடுவதில்லை. நல்ல எண்ணத்தோடு ஷைத்தானாகிய நீ என்னை எழுப்பிவிட்டாய் என்று நம்பிவிடுவேனா ? ‘ என்றார் முஆவியா.

அமீரின் அசைக்க முடியாத உறுதியின் முன் இப்லீஸின் ஏமாற்று வேலைகள் எடுபடவில்லை. கடைசியில் கனக்கும் மனசோசு இப்லீஸ் ஒத்துக்கொண்டான்.

‘பெருமானாரின் வழிமுறையைப் பின்பற்றும் வகையில், கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்வீர்கள் என்றுதான் எழுப்பினேன். தொழுகை நேரம் தவறியிருந்தால் இந்த உலகமே உங்களுக்கு இருண்டு போயிருக்கும். வேதனையில் நீங்கள் அழுவீர்கள். ஏனெனில் இறைவணக்கத்தில் இன்பம் காண்பவர்களால் கொஞ்ச நேரம்கூட அதைவிட்டு இருக்க முடியாது. அந்த ஏமாற்றமும் கண்ணீரும் ஆயிரம் தொழுகைகளுக்கு ஈடாகி இருக்கும். ‘

‘பெருமானார் தொழுகையை (முன் நின்று) நடத்தி முடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்ட ஒருவன், தவறவிட்டுவிட்டோமே என்று வேதனைப் பெருமூச்சு விட்டானாம். அந்தப் பெருமூச்சில் அவன் இதயத்தின் ரத்தவாடை இருந்தது. பதிலுக்கு நான் என் தொழுகையைத் தருகிறேன் என்றாராம் தொழுத ஒருவர். ஏற்றுக்கொள்கிறேன் என்றானாம் அவன். அந்தப் பெருமூச்சின் பொருட்டு எல்லோருடைய தொழுகைகளும் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டன என்று அவர் தூங்கும்போது ஒரு அசரீரி கேட்டதாம். ‘

‘எனவே, உயர்வான அமீர் அவர்களே! நான் இப்போது உண்மையைச் சொல்கிறேன். தொழுகையை நீங்கள் விட்டிருந்தால், அழுது புலம்பியிருப்பீர்கள். அந்த அழுகையும் புலம்பலும் தொழுததால் கிடைக்கும் நன்மையைவிட இரு நூறு மடங்கு அதிகமான நன்மைகளை உங்களுக்குக் கொடுத்திருக்கும். ‘

‘அப்படிப்பட்ட ஒரு பயனை நீங்கள் அடைந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு பெருமூச்சை நீங்கள் விட்டுவிடக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை நீங்கள் அனுபவிக்கக் கூடாது. அதனால்தான் உங்களை எழுப்பினேன். ‘

‘நான் பொறாமை பிடித்தவன். பொறாமையினால்தான் அப்படி நடந்து கொண்டேன். நான் பகைவன். எனக்குரிய வேலை ஏமாற்றுவதும் கெடுப்பதும்தான் ‘ என்று ஒத்துக்கொண்டான் இப்லீஸ்.

‘அப்படி வா வழிக்கு, இப்போதுதான் நீ உண்மை பேசியிருக்கிறாய். பொய்தான் உனது உண்மை. நீ ஒரு சிலந்தி. ஈக்களைக் குறிவைத்து உன் வலையைப் பின்னு. நானோ வெண் கழுகு. என்னை வேட்டையாட அரசனால்(ஆண்டவனால்)தான் முடியும். கழுகைப் பிடிக்க சிலந்தி வலை பின்ன முடியுமா என்ன ? நீ எழுப்பியது தூக்கத்தைத்தான். நீ காட்டியது கப்பலல்ல, (கப்பல் போன்ற தோற்றம் கொண்ட) சூறாவளி. நன்மை கருதி நீ என்னை எழுப்பவில்லை. தொழுவதைவிட அதிகமான நன்மை வந்துவிடக் கூடாது என்பதனாலேயே எழுப்பினாய். போ போ, போய் ஈக்களைப் பிடி ‘ என்று பதிலளித்தார் அமீர் முஆவியா.

****

அருஞ்சொற்பொருள்

—-

முஆவியா (ரலி) — இஸ்லாமிய ஆட்சியின் முதல் நான்கு கலீஃபாக்களான அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலீ(ரலி) இவர்களுக்குப் பிறகு, கலீஃபாவாக அங்கீகரிக்கப்பட்டவர். அலீயின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ஆளுனராக இருந்தாலும், அலீயின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தவர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்ட தோழர்களில் ஒருவர்.

இப்லீஸ் — ஷைத்தான் என்றும் இவன் அழைக்கப்படுகிறான். ஆரம்பத்தில் இறையருள் பெற்ற ஒரு வானவராக (மலக்கு) இருந்தவன். முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்ட பிறகு, இறைவன் எல்லா மலக்குகளையும் ஆதமுக்கு மரியாதை செலுத்தச் சொன்னான். எல்லாரும் செய்தனர். ஆனால் இப்லீஸ் மட்டும் செய்யவில்லை. ஒளியால் படைக்கப்பட்ட ஒரு வானவன், மண்ணால் படைக்கப்பட்ட மனிதனைவிட உயர்ந்தவர் என்பது அவனது வாதம். அதன் பொருட்டு அவன் இறைவனின் கோபத்துக்கு ஆளானவனாக, மனிதர்களுக்கு எதிரியாக ஆகிறான்.

அபூலஹப் — இஸ்லாத்தின் கடுமையான விரோதிகளில் ஒருவர். பெருமானார் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதர்களில் ஒருவர். திருமறையில் அபூலஹபின் கரங்கள் அழிந்துபோகட்டும் என்று சொல்கின்ற அளவுக்கு இறைவனின் கோபத்துக்கு ஆளான ஒருவர். ஆரம்பத்தில் ஞானத்தின் தந்தை என்ற ஒரு பட்டப்பெயர் அவருக்கு இருந்தது. பிறகு நெருப்பின் தந்தை (அபூலஹப்) என்று ஆனது.

தும்மல் — யாராவது தும்மினால் கேட்பவர் ‘அல்ஹம்துலில்லாஹ் ‘ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது இஸ்லாமிய வாழ்முறை அம்சம்.

ruminagore@gmail.com

http://www.tamiloviam.com/rumi

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி