நல்ல வார்த்தைக் கிளி

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

பசுபதி


கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு.
கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு;
கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும்.
மலைநடுவில் உண்டு மலம்.
*****

தெய்வக் குறமகளின் — கையமர்
சின்னஞ் சிறுகிளியே!
செய்யோன் அருளடைய — ஒருசொல்
செவியில் பகர்வாயோ ? (1)

உன்னை ‘அருணகிரி ‘ — என்றே
உலகோர் கூப்பிடுவர்!
உன்னிடம் ஓர்கணம்நான் — அமர
யுக்தி உரைப்பாயோ ? (2)

பத்தித் திருப்புகழை –ஓதிடப்
பாத்திரன் ஆக்குவையோ ?
அத்தி மணவாளன் — எனக்கு
அருளைத் தருவானோ ? (3)

‘முத்தைத் தரு ‘வென்றே — உனக்கு
முருகன் தந்தஅடி
‘தத்தத் தன ‘ச் சந்தம் — அதனால்
‘தத்தை ‘ உருவமிதோ ? (4)

குகனின் உள்புகுந்தே — இஇன்பக்
கொள்ளை புரிந்துவிட்டாய்!
சுகத்தில் சொக்கினதால் — வந்ததோ
‘சுகமெ ‘ னும்பெயரும் ? (5)

சும்மா இருப்பதற்கோர் — மந்திரம்
சொல்லிக் கொடுத்தெனையே
ஐம்புல வேட்டுவர்கள் — எய்திடும்
அம்பிடம் கா கிளியே! (6)

‘தனந்தந் தன ‘ மென்றே — புகழில்
தாளக் களிநடனம்;
‘தனம்தந் தன ‘மென்றே — மெய்யருள்
தனமெ னக்கருளாய்! (7)

உள்ளமாம் கூண்டினிலே — கிளியே!
உன்னைச் சிறைபிடிப்பேன்!
உள்ளொளி காட்டிடுவாய் ! — என்றும்
ஓமெனப் பாடிடுவாய்! (8)

கந்தர் அனுபூதி — பெற்றுக்
கந்தர் அனுபூதி
சொன்ன ‘அருணகிளி ‘ ! — காப்பாய்
‘ஸோஹம் ‘ நிலையருளி! (9)

கிள்ளை கடித்தகனி — சுவையில்
கொள்ளை இஇனிப்பென்பர் ;
கிள்ளிக் கொடுத்திடுவாய்! — பூதியைக்
கேட்டே கதிபெறுவேன்! (10)

^ = http://www.thinnai.com/pm02020310.html

pas@comm.utoronto.ca

~*~o0o~*~

Series Navigation