நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ?

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

அரவிந்தன் நீலகண்டன்


ஏறத்தாழ ஆம் என்றுதான் கூறிற்று அண்மையில் (14.7.2003) வெளியான ‘அவுட்லுக் ‘ பத்திரிகையில் வந்த சில கட்டுரைகளின் சாராம்சம், குறிப்பாக எஸ்.ஆனந்த்தின் ‘Sunya Sum Game ‘. கட்டுரையாளர் ‘Reason ‘ என்பதற்கு இந்திய மொழிகளில் சரியான பதம் இல்லை என்பதைலிருந்து ஆரம்பித்து ஏதோ ஒருவிதத்தில் நம் பண்பாடுதான் நமது நாட்டில் அறிவியல் வளராததற்கு காரணம் என குறிப்பிட்டு முடிக்கிறார். அடுத்த கட்டுரையில் சுந்தர் ஸாருக்காய் (The Deity in the Engine) கட்டுரையில் நாம் நம் தொழில்நுட்பத்துடன் கொண்டுள்ள உறவு அச்சத்தின் அடிப்படையிலானது என்றும் கூறுகிறார். இக்கட்டுரைகளில் இருக்கும் அபத்தங்கள் மற்றும் சுய-பண்பாட்டு வெறுப்பு வக்கிரங்கள் படித்தாலொழிய நம்பமுடியாதவை. பிற்காலத்தில் இக்கட்டுரைகளின் மதிப்பு அவற்றின் மேற்கூறிய தன்மைகளுக்காகவே இருக்குமே அன்றி அவற்றிலிருக்காத உண்மைகளுக்காகவாக இருக்காது.

சில அபத்தங்களை காணலாம். நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கு ஆயுதபூஜை செய்யப்படுவதை குறித்து ஒரு பகுதி:

“இயந்திரங்களுக்கு பூஜை செய்யப்படுவது உண்மையில் தொழில்நுட்பத்தின் தன்மையை நமக்கு கூறுவதைக் காட்டிலும், நாம் தொழில்நுட்பத்திற்கு ஆற்றும் எதிர்வினையைக் காட்டிலும் நமது மதத்தை குறித்தே நமக்கு கூறுகிறது. அறிவியல் நம்மை தொழில்நுட்பமும் அறிவியல் போன்றே உலகம் முழுமைக்கும் சமச்சீர் தன்மை கொண்டதென் நம்பவேண்டுமென விரும்புகிறது. உண்மை மாறானது. தொழில்நுட்பம் அது வைக்கப்படும் பண்பாட்டிலிருந்து அதனை பயன்படுத்துவோரின் கலாச்சாரத்திலிருந்து தனித்திருக்க இயலாதது.“ இவ்வாறு கூறும் ஸாருக்காய் பின்னர் கூறுகிறார், “அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்துடன் இந்தியர்களை காட்டிலும் இலகுவான இணக்கத்துடன் உள்ளனர்.” பின்னர் கட்டுரையின் இறுதியில் அவர் முடிக்கிறார், “தொழில்நுட்பத்துடனான நம் இணக்கமற்ற உறவின் மீமாம்சத்தில், நாம் நம் கடவுள்களை துணைக்கு அழைக்கிறோம். அவர்களிடம் நாம் இத்தொழில்நுட்பங்களை அறியவோ அல்லது அவற்றை நன்கு பயன்படுத்தும் அறிவை பெறுவதற்கான நம்பிக்கையையோ கேட்கவில்லை. மாறாக நாம் இந்த ‘அந்நிய ‘ தொழில்நுட்ப ஜீவவகை(creature)யிடமிருந்து நம்மை ‘காப்பாற்ற ‘ வேண்டிக்கொள்கிறோம்.” இக்கட்டுரையினூடே ஒரு கிண்டலும் உண்டு, “ஆயுதபூஜை என்பது இப்போது அனைத்து வித இயந்திரங்களையும் பூஜை செய்வது என்றாகிவிட்டது. வாகனங்களைக் கூட பூஜை செய்கிறார்கள். வாகனங்கள் எப்படி அழிவு ஆயுதங்கள் என கருதப்படுகின்றன என்பது தெரியவில்லை ?” ஸாருகாய் பெங்களூரின் ‘National Institute of Advanced Studies ‘ இல் தத்துவ அறிஞராக பணி புரிகிறார். ஆயுத பூஜையை கொண்டாடும் எந்த ஒன்றாம் வகுப்பு சிறுவனும் ஆயுதம் என்பது தொழில் கருவி என்பதனை அறிவான். ஆயுத பூஜை அன்று புத்தகங்கள் ,குறிப்பாக புத்தகங்கள், தேவியின் முன் வைக்கப்படுகின்றன. ஒரு வேளை ஒன்றாம் வகுப்புச்சிறுவனுக்கு அந்நாள் காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க இறைவியை இறைஞ்சுவதாக அமையலாம். ஆனால் அந்நாளின் பொருள் அவனுடன் வளரும், அவன் அகம் வளர்ந்தால். அஞ்ஞான இருளை, தாமஸம் எனும் மகிஷத்தை அழிக்கும் ஆயுதங்கள் அவை. மதிப்பெண்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல. சுகத்தேடலுக்கு மட்டுமல்ல வாழ்வு அதற்கும் மேலானதோர் தேடலுக்காக. அதற்கான கருவிகளாக நம் நூல்களை மாற்ற தேவியின் அருளை அன்று வேண்டுகிறோம், அவரவர் அவரவர் தளத்தில். அன்று நம் தொழில் கருவிகளை தாமச இருளழிக்கும் அன்னையிடம் சமர்ப்பித்து அவளது கருவியாக அவற்றையும் நம்மையும் மாற்றக் கோருகிறோம். அங்கிருப்பது அச்சமல்ல மாறாக வாழ்வினை உயர்த்த நம்மை நாமே மீள்-சங்கல்பித்துக் கொள்ளும் ஒரு நாள். ராபர்ட் பிர்ஸிக் கூறினார், “புத்தர் அழகிய சமவெளிகளின் மெளனத்திலும் உறைவார்; கணினிகளின் உள்ளிருக்கும் மின்னணு நுண்தகடுகளிலும் உறைவார்.” இயந்திர கருவிகளிலும் தெய்வீகம் உறையும் என்பதனை ஹிந்து இயல்பாக அறிகிறான். கீழே விழும் நூலை தொட்டுக்கும்பிடும் சிறுவர்கள் முதல் பேருந்தில் அமர்ந்ததும் ஸ்டாயரிங்கை தொட்டுக்கும்பிடும் அனுபவம் மிக்க ஓட்டுநர் வரையிலும் அச்சத்தை காட்டிலும் கருவிகளில் தெய்வீகம் உறைவதை தம் வாழ்க்கை மதிப்பீடாக ஏற்றதை வெளிக்காட்டுகிறார்கள். நம் தொழிலிய மதிப்பீடுகளை இப்புள்ளியிலிருந்தே உருவாக்க வேண்டும் இதனைச் சிதைத்து அல்ல. மேற்கில் தொழில்நுட்பம் இலகுவாக தன்னை சமுதாயத்துடன் இணைத்துவிடவில்லை. நிமிர்ந்து நிற்கும் தேவாலயங்களுக்குள் கிறிஸ்தவ இறையியல் உடைந்து கிடக்கிறது. அப்பாழ் வெளியின் மீது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. அது ஒருபுறமிருக்க, அமெரிக்க சமுதாயத்திலும் சரி, பொதுவாகவே மேற்கத்திய சமுதாயத்திலும் சரி இயந்திரங்களை பாதிரியார்களால் ஆசிர்வதிக்கும் பழக்கங்கள் உண்டே. மேலும் அமெரிக்க திரைப்படங்களை பாருங்கள். ரோபாட்கள் எவ்விதத்தில் சித்தரிக்கப்படுகின்றன ? உண்மையில் மேற்கத்திய பார்வையில் இயந்திரங்கள் மானுட அறிவை பெறுதல் என்பது அடிப்படையில் மறுக்கப்பட்ட ஞானத்தை அடைதல் சார்ந்ததாகும். வேர்களில் நாம் நோக்குவோமானால் மறுக்கப்பட்ட ஞானத்தை அடைந்ததற்காக ஏவாளுக்கும் ப்ரோமீதஸுக்கும் மேற்கின் இறைவர்கள் வழங்கிய வேதனையையும், நஸிகேதனிடம் யமன் நடந்து கொண்ட முறையையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். மானுடத்திற்கு மறுக்கப்பட்ட எந்த இறை ஞானமும், பிரபஞ்ச இரகசியமும் இல்லை என்பதே வேதாந்தம் நமக்கு வழங்கும் செய்தி. மனிதனும் இறைவனாகலாம் என்பதை நம்மூரில் எவரும் தன்னியல்பில் மிக எளிய அடிப்படை உண்மையாக அறிவார். மாறாக மிகப்பெரிய மேற்கத்திய இறையியலாளனுக்கும் இவ்வாசகம் தெய்வ நிந்தனை. கார்ல்சாகன் ‘மானுடம் இறையாக பரிணமிக்க இயலும் ‘ எனும் பாரதிய மனப்பாங்கே இனிவரும் காலத்தில் மானுடம் பிரபஞ்ச விரிவாக்கமடைய வழிவகுக்குமென்கிறார்.

என்றாலும் பாரதத்தின் இன்றைய அறிவியல் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஏன் ? அதற்கு யார் காரணம் ? ஓர் அறிவு சார் சமுதாயம் (கலாமின் கனவான ‘Knowledge society ‘ ) உருவாக தேவையான மதிப்பீடுகளை நம் பாரம்பரியம் சார்ந்து நாம் உருவாக்க இயலுமா ?

அறிவியல் என்பது அடிப்படையில் நம்பிக்கை சார்ந்ததன்று மாறாக சுயமாக ஆராய்ந்து அறிவின் மூலம் முடிவினை தேர்ந்தெடுப்பது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் வாழ்வின் ஆகப் பெரிய கேள்விகளுக்கான விடையை நம்மால் தேட முடியுமெனில், நம் வாழ்வே அறிவியல் அடிப்படை கொண்டதாக அமையும். இங்கு அறிவியல் அடிப்படை என்பது ஒரு திறந்த மனத்துடன் வாழ்வினை சந்திப்பதும் உண்மையைத் தேடுதல் என்பதற்கு வாழ்வின் மற்றனைத்தையும் இரண்டாவதாக்குவதுமாகும். இம்மதிப்பீட்டிற்கான பாரம்பரிய அழுத்தத்தை நாம் பகவத் கீதையில் காண்கிறோம். கிருஷ்ணன் பார்த்தனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டிய பின்னும், தன்னை முதலும் முடிவுமற்று எங்கும் வியாபித்து நிற்கும் பரம்பொருளாக காட்டிய பின்னும் தன் வார்த்தைகளை அப்படியே ஏற்க சொல்லவில்லை. என்னை- என் வார்த்தைகளை நம்பாவிட்டால் உனக்கு மீளா நரகம் தான் என்று கூறவில்லை. மாறாகக் கூறுகிறான்,

“மாபெரும் இரகசிய மாமறை, ஞானம்

இவ்வாறுனக்கு யான் சொன்னேன் –

குறைவற இதனை நீ அறிவால் ஆய்ந்து

உன் இச்சைப்படி நீ வாழ்க.” (பகவத் கீதை 18:63)

புத்தரின் மார்க்கமும் இத்தன்மை கொண்டதே. பாரதத்தின் ஜீவனாக இப்பண்பு விளங்குகிறது. அகந்தையால் நான் கூறுவதை விலக்காதே என்றும் இதற்கு முன் கிருஷ்ணன் பார்த்தனை கடுமையாக எச்சரிக்கிறான் (18:58). அகந்தை அல்ல, சித்தாந்த சார்புகள் அல்ல, முன்முடிவுகள் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகள் அல்ல, அது அனைத்தாற்றலும் கொண்ட அச்சம் தரும் விஸ்வரூபம் கொண்ட இறைவனே ஆனாலும் அவன் வார்த்தைகளையும் ‘அறிவால் ஆய்ந்து ‘ தேர்ந்தெடுக்கவே கூறுகிறான் கிருஷ்ணன். மேற்கத்திய ஞான மரபுகளினின்றும் ஆபிரகாமிய இறைவாக்கினரின் சமயங்களிலிருந்தும் எவ்வளவு மாறுபடுகிறான் குருஷேத்திர ஆச்சாரியனான கோகுலத்து இடையன்! ஹெர்மான் ஹெஸ்ஸே பாரத வாழ்வில் இம்மதிப்பீட்டினை தெளிவாகவே படம்பிடித்துக் காட்டுகிறார். புத்தரை காணும் சித்தார்த்தன் கூறுகிறான்,”நீங்கள் கூறுவதனைத்துமே உண்மை என்றாலும் நான் என் அனுபவத்தால் அவற்றை அறிய வேண்டும். எனவே என் தேடல் பாதையில் நான் செல்கிறேன்.” நம்பிக்கை சார்ந்தல்ல, அதிகார பீடங்கள் சார்ந்தல்ல, அனுபவம் சார்ந்தே, அறிவு சார்ந்தே உன் வாழ்வின் மிக முக்கியமான கேள்விகளுக்கு நீ பதில் காண வேண்டும் எனும் நிலைபாடு அக வாழ்விற்கே எனும் போது பிரபஞ்சம் குறித்த அறிதலும் அதே மதிப்பீடுகள் சார்ந்தே அமைய வேண்டுமல்லவா ? ஆனால் இன்றைய இந்திய அறிவியல் அமைப்புகளில் அத்தகைய மதிப்பீடுகள் இன்மைக்கு காரணம் யார் ?

ஸாருக்காயின் கட்டுரையை கொண்டே இதற்கான விடையை தேடலாம். ஆயுத பூஜையினை அவர் அனுபவ அடிப்படையில் அணுகவில்லை. அதன் அடிப்படைகளை குறித்து எவ்வித தரவுகளையும் அவர் ஆய்ந்து ஒரு முடிவுக்கு வரவில்லை. சில இடங்களில் அவர் கூறுபவை சமுதாய யதார்த்தத்திலிருந்து வெகு வெளியே இருக்கும் ஒரு நபரின் வார்த்தைகள். ‘ஆயுதம் ‘ என்றால் அழிவுக்கருவி அப்போது வாகனங்கள் எப்படி ஆயுதங்கள் ஆக முடியும் என்பதிலிருக்கும் அபத்ததை பாருங்கள் ஆனால் என்ன! அவரால் மார்ட்டின் ஹெய்டெக்கரை மேற்கோள் காட்ட முடிகிறது- பேசுவது பாரத சூழலை பற்றி என்றாலும். பாரதத்திற்கு உகந்த மக்களுக்கான தொழில் நுட்பத்தை பற்றிய மிகவும் விரிவான விவாதங்களை சென்ற நூற்றாண்டில் முன்வைத்தவர்கள் மகாத்மா காந்தியும் ரவீந்திரநாத தாகூரும். இவ்விவாதங்கள் மிக முக்கியமானவை. பாரதம் மேற்கின் தொழில்நுட்ப பார்வையை குறித்து எடுத்துக்கொண்ட நிலைபாடும் தன் தொழில்நுட்பம் எத்தகைய தன்மை கொண்டதாக அமையவேண்டும் என கருதியதும் இதில் தெரியவரும். தொழில்நுட்பம் என்பது வெறும் பெரு இயந்திரங்கள் மட்டுமல்ல. ஸாருக்காயும் தொழில்நுட்பத்தின் இத்தன்மையை ஒப்புக்கொள்கிறார். உடனடியாக அவர் காட்டும் உதாரணம், “அமெரிக்காவின் சில மிகச்சிறந்த கண்டுபிடிப்புக்கள் பொம்மைகளிலும் வீட்டு உபயோக பொருட்களிலும்” ஏற்பட்டதாக கூறுகிறார். அண்மைக்காலத்தில் வளங்குன்றா வளமைக்கான சில மிக சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பாரதத்தில் ஏற்பட்டன என்பது ஏனோ அவருக்கு முக்கியமான விஷயமில்லாததாகிறது. ஆனால் ஸாருகாய் பெங்களூரின் ‘National Institute of Advanced Studies ‘ இல் தத்துவ அறிஞராக பணி புரிகிறார். நம் ‘சோஷலிச சர்க்காரின் ‘ அறிவியல் அமைப்புகளின் அடிப்படை மனப்பாங்கு இதுதான். பாரத சமுதாய யதார்த்தத்திலிருந்து விலகல், நம் பண்பாடு குறித்த சுயதாழ்வு, நம் அனைத்து தோல்விகளையும் நம் பண்பாட்டின் மீது திணித்தல். உலகமெங்கும் சோஷலிச அரசமைப்புக்கள் அறிவியல் – தொழில்நுட்ப தேக்கத்தை உருவாக்கின என்பது ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவே சுதந்திர பாரதத்தில் அறிவியல் வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டதுக்கும் காரணமாக்கப்பட வேண்டியது. எவ்வாறு சோவியத் ஐந்தாண்டு திட்டங்களின் அச்சு பிரதியெடுப்பு பாரதத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படுத்திய தேக்க நிலைக்கு ‘ஹிந்து வளர்ச்சி வேகம் ‘ எனப் பெயரிடப்பட்டு நம் பண்பாட்டின் மீது சோஷலிச அரசு இயந்திரத்தின் தோல்வி சுமத்தப்பட்டதோ (அதே சமயம் சிந்தி,பனியா, செட்டி, மார்வாரி ஆகிய ஹிந்து வணிக சமுதாயங்களின் வெற்றி கீழ்த்தரமாகவும் வெறுக்கத்தக்கதாகவும் பொது ஜன மனங்களில் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. இப்பிம்பம் ஏறக்குறைய நாஜிக்கள் யூதர்களை குறித்து ஏற்படுத்திய வக்கிர வெறுப்பியல் மனபிம்பத்திற்கு ஒப்பானது.) அது போலவே இன்று ஒரு வளமான அறிவியல் அமைப்புகளை, அறிவியலாளர்களை உருவாக்க இயலாத சமூக தேக்க சூழலுக்கு ஹிந்து மதிப்பீடுகளும் பண்பாடும் பலிகிடாவாக்கப்படுகின்றன.வழக்கமான கீழ்த்தர மார்க்சிய மற்றும் சோஷலிஸ பிரச்சார உக்தி அவுட்லுக் வழியாக அரங்கேறியுள்ளது.

அவுட்லுக் பத்திரிகையில் ஆனந்த் கூறுகிறார், “பிராமணிய உலகத்தில் அக புற உலகுக்கு இடையேயான வேறுபாடு உருவாக்கப்பட்டு , முன்னது முக்கியத்துவம் உடையது என்றும், பின்னது தீட்டை உண்டாக்கக்கூடியது எனவும் கற்பிக்கப்பட்டது. உடல் உழைப்பிலிருந்து எழுந்த அறிவு கீழானது என கூறப்பட்டது. எனவே ‘பாண்டித்ய ‘ அறிவுகளான கணிதம், தர்க்கம், வானவியல்-ஜோதிடம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. ..ஒரு அறிவியல் வரலாற்றாசிரியர் சூனியம் குறித்த தத்துவ விவாதங்களிலிருந்தே பூஜ்யம் குறித்த சிந்தனை எழுந்ததென்கிறார். பயனற்ற தத்துவ விளையாட்டுக்கள், தத்துவ மம்போ ஜம்போக்கள் அறிவியலாக கருதப்பட்டன. பிராம்மணீய அக-புற இரட்டைத்துவத்தின் விளைவாக பிராம்மணர்கள் தங்கள் கரங்களால் ‘தீட்டான ‘ பருப்பொருட்களை தொட மாட்டார்கள், மாறாக உழைக்கும் கீழ்சாதியினருக்கோ தர்க்கம் கணிதம் தத்துவம் ஆகியவற்றை போதிக்கும் குருகுலங்களில் வாய்ப்பு கிட்டாது. எனவே மக்களை மையப்படுத்தி எழும் உண்மையான அறிவியல் உருவாக எவ்வித களமும் இல்லாது போனது.” தொடர்ந்து பெளத்தமே அத்தகைய அறிவியலை மருத்துவத்தில் உருவாக்க முயன்றது என்றும், பிராம்மணீயம் அதற்கு எதிராக இருந்தது எனவும், பின்னர் பிராம்மணீய ஹிந்துமதம் பெளத்தத்தை வெற்றி கொண்டதால் மருத்துவமும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டு அதன் தத்துவம் உயர்ஜாதி பிராம்மணர்கள் கையில் சிக்கிகொண்டது . கள-மருத்துவம் ‘கீழ்ஜாதி ‘யினரால் பாதுகாக்கப்பட்டது என்கிறார்.

பாதி உண்மைகளாலான முழுப்பொய் என்பதுதான் மேற்கண்ட பத்தியின் இயற்கை.

அக-புற இரட்டைத்தன்மை அனைத்து கலாச்சாரங்களிலும் எழுந்துள்ளன. ஒவ்வொரு பண்பாடும் அவ்விரட்டைத்தன்மையினை தமக்கே உரிய வழியில் தீர்வுகள் கண்டுள்ளன. உதாரணமாக ஐரோப்பிய மரபில் புற இயற்கை இறைவனின் மேன்மைக்கு சான்று பகர்வதற்காகவே பயிலப்பட வேண்டிய ஒன்று என்பதே அறிவியல் ஆய்வுகளுக்கான நியாயப்படுத்தலாக கருதப்பட்டது. கலிலியோ போன்ற அறிவியலாளர்கள் இயற்கையை விவிலியத்தை ஒத்த இறைவனின் வெளிப்பாடாக கண்டார்கள். பிரச்சனை இந்த வெளிப்பாடு கடவுள் தன் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவாக்கினருக்கு அறிவித்த வெளிப்பாடான விவிலியத்தின் சிலபகுதிகளுக்கு எதிராக இருந்ததிலிருந்து ஆரம்பித்தது எனலாம். பாரதம் அக-ஆன்மிக பயணத்திற்கும், பருப்பொருட் பிரபஞ்சம் குறித்த அறிவுக்கும் இடையே எவ்வித மதிப்பீடுகளை முன்வைத்தது ? இந்த இரட்டை நிலையும் அதனில் ஒன்று மற்றொன்றை காட்டிலும் சிறந்ததென கருதும் போக்கும் அன்று இருந்தது என்பது உண்மைதான். ஆனால் ஆனந்த் குறிப்பிட மறந்தது (அல்லது மறைத்தது ?) எதனையெனில் உபநிஷதம் இதற்கு அளிக்கும் தீர்வினை. ஈஸாவாஸ்ய உபநிஷதம் கூறுகிறது, “அக-அறிவை புறக்கணித்து புற-அறிவை மட்டுமே பெறுபவன் உண்மையை அறிய முடியாது இருளில் மூழ்குகிறான். அதைப்போலவே புற-அறிவை புறக்கணித்து அக-அறிவை மட்டுமே பெறுபவனும் உண்மையை அறிய முடியாது பெரும் இருளில் வீழ்கிறான்.” ஒரு காலத்தில் மருத்துவர்கள் கீழ்மைபடுத்தப்பட்டார்கள் என்பதும் உண்மையே. ஆனால் வேத காலத்தின் பிற்பகுதிகளிலேயே அவர்களுக்கும் அவர்களது அறிவியலுக்கும் மீண்டும் சமுதாயத்தில் பெரும் அந்தஸ்து கிடைத்தது என்பதையும் அறிகிறோம். உதாரணமாக தேவி பாகவதத்தில் மருத்துவர்களான அஸ்வினி சகோதரர்களுக்கு அவிர்பாகம் வேள்விகளில் மறுக்கப்பட்டதையும், அவர்களால் குணமடைந்த சியவன முனிவர் அவர்களுக்காக வாதாடி அவிர்பாகத்தை மீண்டும் பெற்றுத்தந்ததையும் குறித்த கதை இதனை தெளிவாக காட்டுகிறது. மேலும் உடலுழைப்பு கீழாக நோக்கப்பட்டதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. பல நிகண்டுகள் உடலுழைப்பாளர்களை மிகவும் உயரிய அடைமொழிகளால் அழைப்பதை நாம் காணலாம். ஒருவிதத்தில் பெளத்தமும் ஜைனமும் சாதிய அமைப்புகள் இறுகவும் காரணமாக இருந்தன என்பது அரசியல்-விவேகமற்ற ஒரு வரலாற்று உண்மை. மகாபாரதத்தில் வரும் உபகதை ஒன்று ஞானம் தேடி தவமியற்றும் ஒரு பிராமணன் இறுதியில் ஞானத்தை ஒரு பெண்ணிடமும், ஒரு கசாப்பு கடைகாரனிடமும் பெற்றதாக கூறுகிறது. இறைவனை புலையனாக காட்டும் சங்கர விஜய கதையும் அனைவரும் அறிந்ததே. ஆழ்வார்களும் சரி சைவ குரவர்களும் சரி ‘ஆவுரித்து தின்னும் புலையர்களும் ‘ இறைகருணைக்கு பாத்தியமானவர்கள் என கூறுகின்றனர். ஆனால் இந்நிலைபாடு, குறிப்பாக ஊன் உண்ணும் மற்றும் ஊன் சம்பந்தப்பட்ட தொழில்களை மிகவும் கடுமையாக எதிர்த்த இவ்விருமதங்களும் காணப்பட முடியாததாகும். உதாரணமாக ஜைன மதம் உழவுத்தொழில் செய்பவர்கள் மண்ணில் இருக்கும் உயிர்களை கொல்லும் கொலைத்தொழில் செய்வதால் தாழ்ந்தவர்கள் என கருதிற்று. மருத்துவ தொழிலில் அறுவைசிகிச்சை மற்றும் பிராணி வதை ஆகியவை அஹிம்சைக்கு எதிரானவையாக அறியப்பட சாத்தியமுண்டு. உதாரணமாக அறுவைசிகிச்சையின் பின் தைக்க எறும்புகளின் கடிவாய் அழுத்தப்பட்டு எறும்புகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது கேள்விக்குரியது என்றாலும், மருத்துவர்கள் பிற உயிர்களுக்கு ஊறு விளைவிப்பதை பெளத்தம் எவ்வாறு நோக்கியிருக்கும் என்பது ஊகிக்கப்படலாம். மருத்துவத்திற்கு முக்கிய பங்களித்த நாகார்ஜுனர் வேத-பெளராணீக உட்வாங்கல் பெரிதும் கொண்ட மகாயான பெளத்தத்தை சார்ந்தவரே. சூத்திரர்கள் அறுவைசிகிச்சை போன்ற ‘கீழான ‘ செயல்களை செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இதுதான் மருத்துவம் தேக்க நிலை அடைய காரணம் என்பது திரு.ஆனந்தின் வாதம். ஸுஷ்ருத சம்ஹிதை சூத்திரர்கள் மருத்துவம் படிக்கலாம் என கூறுகிறது. சரக சம்ஹிருதை ‘இருபிறப்பாளர் ‘ மட்டுமே மருத்துவம் படிக்கலாம் என கூறுகிறது. ஸுஷ்ருத சம்ஹிதை அறுவை சிகிச்சைக்கும் சரக சம்ஹிதை ‘மருந்து வழி குணப்படுத்தலுக்கும் உரியவை. ஆனால் பல அந்தண குடும்ப வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்பதை ஐரோப்பிய பயணிகள் மற்றும் பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலம் அறிகிறோம். மேலும் ‘கீழ் ‘ சாதியினர்களில் புகழ் பெற்ற வைத்தியர்கள் இருந்தனர் என்பதையும் அறிகிறோம். உதாரணமாக, ஆனந்த் குறிப்பிடுகிறார், “மேல்ஜாதியினரே வைத்தியர்களாக அறியப்பட்டனர்”. உண்மையில், பாரதத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சையை செய்தவர் ஒரு புகழ் பெற்ற வைத்தியர் என்றும் அவர் கும்ஹர (குயவர்) ஜாதியை சேர்ந்தவர் என்றும் அறிகிறோம். அதாவது குயவர் ஜாதியை சார்ந்தவர் மருத்துவரும் ‘வைத்தியராகவே ‘ அழைக்கப்பட்டார். மேல்ஜாதியினர் மட்டுமே ‘வைத்தியர் ‘ என அழைக்கப்பட்டனர் என்பது தவறானது. ஆனால் பாரத மருத்துவம் மிகக் கொடுமையான தாக்குதலுக்கு ஆளானது ஐரோப்பிய மிஷினரிகளால். கிறிஸ்துவத்தை பரப்ப உள்ளூர் வைத்தியர்களும் அந்தணர்களும் தடையாக இருப்பதால் அவ்விரு வகுப்புகளும் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டதனை நாம் அறிகிறோம். உதாரணமாக, 1575 இல் கோவாவின் மூன்றாவது பிரோவின்ஷியல் கவுன்சில் பின்வரும் அறிவிப்பினை செய்தது, “உண்மையான மார்க்கமான கிறிஸ்தவம் பரவ தடையாக இருக்கும் பிராம்மணர்கள், மருத்துவர்கள் மற்ற விக்ரக ஆராதனையாளர்கள் தங்கள் நிலபுலங்களை விட்டுவிட்டு வெளியேற வேண்டும்.” மைக்கேல் தனினோ கேரளாவில் ஆயுர்வேத சுவடிகள் எரிக்கப்பட்டதை கூறுகிறார். தரம்பால் பிரிட்டிஷார் அம்மைத்தடுப்பு மருந்துகளை தடைசெய்ததை ஆவணப்படுத்தியுள்ளார். சுதந்திர பாரதத்திலோ அலோபதி மருத்துவர்கள் தங்கள் தொழிற்சங்கங்கள் மூலம் ஆயுர்வேத சித்த மருத்துவ முன்னேற்றத்தை தடுக்க முயல்வதை நாம் காண்கிறோம். ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் இன்றைய நிலையில் இருக்க பல காரணங்கள் உள்ளன. ஆனால் திரு.ஆனந்த் கூறும் ‘சங்கர அத்வைதத்தின் வெற்றியே அறிவியல் நசித்ததற்கு காரணம் ‘ என்பது அவற்றில் ஒன்றல்ல. சாதீயம் கட்டாயமாக ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே அல்ல. உண்மையில் இன்று ஆயுர்வேத மறுமலர்ச்சியை கேரளம் அடைந்திருப்பதில் நாரயண குருதேவரின் வேதாந்த சமுதாய எழுச்சி இயக்கத்தின் பங்கு அபரிமிதமானது. மேலும் ஆனந்த், அவுட்லுக் பத்திரிகையில் கூறுவது போல உழைக்கும் வர்க்கம் சார்ந்த அறிவியல் என்பது கேலிகூத்தாகிவிட்ட மார்க்சிய-சித்தாந்த அபத்தமேயன்றி வேறல்ல.

அதே சமயம், வேதாந்த மதிப்பீடுகள் நம் தேசிய அறிவியல் எழுச்சிக்கு வித்தாக இருந்தன என்பதையும் நாம் அறிகிறோம்.அது ஜகதீஷ் சந்திர போஸாகட்டும், ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராயாகட்டும், டாடாவாகட்டும், சத்யேந்திர நாத் போஸாகட்டும், ஜியார்ஜ் சுதர்ஸனாகட்டும் அவர்களுக்குள் அக்கினிப்பொறி ஏற்றியது அத்வைத ஒளியாகும். பெரும் தேசிய அறிவியல் எழுச்சியை ஹிந்து மறுமலர்ச்சி உருவாக்கியது. காலனிய அரசு பெருமளவு அந்த எழுச்சியை அடக்க முயன்றது. காலனிய அரசு அழிக்கத்தவறிய எச்ச சொச்ச அறிவியல் விழைவையும் மக்களிடமிருந்து மண்ணின் மரபிடமிருந்து அந்நியப்பட்ட சோஷலிச அரசு அமைப்புக்களால் அழித்த ‘புண்ணியம் ‘ நேருவியத்தினது. (நேருவின் அறிவியல் ஆர்வம் மேற்கினை பொதுவாகவும் சோஷலிச பிரச்சார மாயையை குறிப்பாகவும் அப்பட்டமாக ‘காப்பி ‘ அடிப்பதை தாண்டவில்லை. என்ற போதிலும் அவரது நோக்கம் பாரதத்தின் உயர்வு என்பதில் ஐயமில்லை. சர்.சி.வி. ராமனின் பார்வையில் காந்திஜி மிகுந்த யதார்த்தத்துடன் அறிவியல் வளர்ச்சியை அணுகியவராக தென்படுகிறார்.) இன்றும் அறிவியல் ஆர்வம் மீதமுள்ளதென்றால் அதற்கு நாம் உண்மையை தேடும் நம் பாரம்பரிய உயிர்துடிப்பு இன்னமும் அழியாததே காரணமென கூறலாம்.

திருமூலர் விதி:

இன்று தாழ்வு மனப்பான்மையும் அதிலிருந்து எழும் சுயதாழ்வு வக்கிரங்களும் அதே தாழ்வு மனப்பான்மையிலிருந்து எழும் பழம் பெருமை அபத்தங்களையும் நாம் காண முடிகிறது. உதாரணமாக குருஷேத்திர போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன அல்லது இராமன் கட்டிய பாலம் நாஸாவால் கண்டுபிடிக்கப்பட்டது அல்லது இராமன் காலத்தில் இருந்த புஷ்பக விமானம் நவீன விமான தொழில்நுட்பத்தை மிஞ்சியது என்பன போன்ற அபத்த உளறல்கள். இந்த அபத்த களஞ்சியங்கள் புராணங்களை நேரடி உண்மையாக கருதுவதற்கு முன் திருமூலரின் விதியை நினைவில் கொள்ளுதல் நலம். “முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் ‘. நம் நாட்டில் புராணக்கதைகள் அதிகம். மிக அதிகம். நம் பன்மை போற்றும் மனப்பாங்கிற்கு அவை சான்றளிக்கின்றன. ஆனால் அவற்றை நேரடி பொருள் கொள்ளூதல் தேவையற்ற ஒன்று. புராணக்கதைகள் அகவயப்படுத்தப்பட வேண்டியவை. அவற்றினுள் ஒரு வரலாற்று உண்மை மையம் இருக்கக்கூடும் ஆனால் அதனைச்சுற்றி பல அதீத கற்பனை சுற்றுக்கள் உருவாக்கப்படுகின்றன. சில நேரங்களில் வரலாற்று மையம் கூட ஓரங்கட்டப்பட்டு ஒரு அக உண்மையின் குறியீடாக அல்லது உருவகமாக அது மாறிவிடக்கூடும். புராணங்களின் இத்தன்மையை நம் மக்களும் நம் பண்பாடும் நன்றே உணர்ந்துள்ளனர். இவ்விதத்தில் நம் அறிவியல் பார்வை கிறிஸ்தவ இறையியலின் அறிவியல் பார்வையை பல நூற்றாண்டுகள் முந்திவிட்டது என நியாயமாகவே நாம் பெருமை கொள்ளலாம். ஆனால் இன்று அறிவியலுடனான விவாதத்தை நிறுவன கிறிஸ்துவ இறையியலால் செய்ய முடிந்த அளவுக்கு பாரத மரபுகளால் செய்ய இயலவில்லை. காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் மரபிற்கும் அறிவியலுக்கும் இடைவெளியை நம் அரசு ஸ்தாபனங்களும் இடதுசாரி பிரச்சாரங்களும் உருவாக்கி வந்துள்ளன. ஆனால் அதையும் மீறி அறிவியலாளர்கள் அவ்வுரையாடலை நடத்தி வந்துள்ளனர். உதாரணமாக எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர், ப்ரிட்ஜாப் கேப்ரா, இலியா ப்ரிகோகைன், ஜியார்ஜ் சுதர்ஸன், நித்ய சைதன்ய யதி, ஸ்வாமி ரங்கனாதானந்தர், கிருஷ்ணமூர்த்தி, டேவிட் போம் ஆகியோர். பலவிதங்களில் நம் பண்பாட்டு மதிப்பீடுகள் நம்மை அறிவுசார் சமுதாயமாக்க அனுகூலமாகவே உள்ளன. ஆனால் ஐம்பதாண்டு சோஷலிஸ அமைப்புச் சங்கிலிகளில் அடிமைப்பட்டு கிடக்கும் நம் மேல்தட்டு மக்களின் மனப்பாங்கும், சோஷலிச அரசு அமைப்புக்களுமே பெரும் தடைகற்களாக விளங்குகின்றன. அறிவியலின் அடிப்படையைக்கூட அறிய முற்படாமல், அதனுடன் தன் கலையுணர்வினை எவ்வித உரையாடலுக்கும் உட்படுத்தாமல் மேற்கத்திய செல்வ செழிப்பில் பிரமித்துக் கொண்டும், அதே நேரத்தில் சோஷலிச பற்று குறித்து பேசிக்கொண்டும் வாழும் அறிவுஜீவிகள், நம் பண்பாடு அறிவியலுக்கு முரணானது என தீர்ப்பு உரைப்பார்கள். ஜியார்ஜ் சுதர்ஷன் போன்று தன் வாழ்நாளையே அறிவியல் தேடலுக்கு அர்ப்பணித்தவர்கள் தம் இயக்க சக்தியை நம் பாரம்பரிய மதிப்பீடுகளிலிருந்து பெற்றனர் என்றால் நம் குழந்தைகள் ஏன் அதே உந்து சக்தியை பாரத பண்பாட்டிலிருந்து பெறக்கூடாது ? ‘பிரபஞ்சத்தின் இரகசியங்களை நேருக்கு நேர் காணும் ஆற்றல் ‘ நம் இளையதலைமுறையினருக்கு தேவை என்றார் ஸ்வாமி விவேகானந்தர். அத்தகைய ஆற்றலை அளிக்கும், அத்தேடலை வளர்க்கும் மதிப்பீடுகளை நாம் நம் பண்பாட்டிலிருந்து பெற முடியும். ஆனால் அறிவியலின் பெயரில் நம் மதிப்பீடுகளை உதாசீனப்படுத்துபவர்கள் உண்மையில் அறிவியல் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கின்றனர். அப்துல் கலாமின் வார்த்தைகளில், “பெரும்பாலும் அரைகுறை வளர்ச்சியுற்ற மேட்டுக்குடி மக்களும் நம் தொன்மையான திறமைகளையும் அறிவாற்றலையும் உதாசீனப்படுத்தினர். வளர்ச்சி அடைவதில் நாம் காட்டிய அவசரம் சில வளர்ந்த நாடுகளைப் பிரதி எடுப்பது போன்ற போலித்தோற்றம் காட்டிற்று.” இன்றைக்கும் இந்த அரைகுறை வளர்ச்சி மேட்டுக்குடிகள் தங்களை ‘முற்போக்கு மகா சன்னிதானங்களாக ‘ பாவித்து தங்கள் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் பாரத பண்பாட்டை சிலுவையிலறைய முற்படுவதும் இந்த அபத்த கூத்தர்கள் அறிவுஜீவிகளாக அறியப்படுவதும்தான் பரிதாபமான அறிவியல்தன்மையற்ற விஷயம்.

hindoo_humanist@lycos.com

Series Navigation