திருவனந்தபுரம் இலக்கிய கூட்டம்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

திலகபாமா


ஆகஸ்ட்மாத துவக்கத்தில் ஓர் நாள் திருவனந்தபுரத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. சிவகாசியில் துவங்கப்பட்ட ‘பாரதி இலக்கியச்சங்கத்தின் ‘ துவக்க விழாவில் அதுவரை என் எழுத்துக்கள் எதுவும் பெரிதாக வெளிவராத நிலையில் எனைப்பற்றி, என் எழுத்துக்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகமாக என்னுடைய 14 கவிதைகளை மட்டும் அச்சில் சிறிய புத்தக வடிவிலிட்டு வந்திருந்த எழுத்தாளத் தோழர்களிடம் கொடுத்து விமரிசனமும் கேட்டிருந்தேன். அந்தப் புத்தகம் ‘கருவேலமரமொன்று ‘ திருவனந்தபுரத்தில் தமிழ் சங்கத்தின் இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘ ஆர்.கிரிஜா சுந்தர் ‘ அவருக்கு கிடைத்திருப்பதாகவும் அதை நடக்க இருக்கும் ஆகஸ்ட் மாதம் 26 ம்தேதி கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு வைக்க இருப்பதாகவும் செய்தி, அக்கடிதம் தாங்கி வந்திருந்தது. அந்தச் சிறு தொகுப்பில் உணர்ச்சி சிதறல்களும், சமுதாயத்தின் மீதான கோபமும் தென்படுகின்றது, முடிந்தால் அவசியம் வாருங்கள் என எழுதியிருந்தார்.

ஆகஸ்ட் 26ம்தேதி ஓணம் பண்டிகைக்காக கோலாகலமாக மாறிக் கொண்டிருந்த திருவனந்தபுர வீதிகளில் எங்கும் பூக்கோலங்களூம், உப்புக் கல்லில் வண்ணம் சேர்த்து பொட்ட கோலங்களுமாக… கோலங்கள் போட வென்றே மழை வந்து பூமியெங்கும் தெளித்து விட்டுப் போயிருந்தது. கோவளக் கரைகூட அலைகளின் துள்ளல்களோடு கொண்டாடிக் கொண்டிருந்தது. அலைகளில் கால் நனைத்து அலைகளை அசுத்தப்படுத்தவும் மனமில்லாது பார்த்து ரசிக்க வைத்த அலையின் வெண்மை.பத்ம நாப புரத்தில் பள்ளி கொண்டானை பார்க்க கண்கள் இரண்டு போதாது என்று பெருமாளை மூன்று கூறுகளாய் காணவைத்தது மூன்று வாசல். கோலங்களைவிடவும், திருவிழா கொண்டாட்டங்களைவிடவும் தள்ளுபடிகளும், விலைகுறைப்பும் பலரை ஈர்த்திருந்ததென்னவோ உண்மை

இடமறிந்து செல்ல கொஞ்சம் காலதாமதமாகி விட்டிருந்தது. தமிழ்சங்க கட்டிடத்தை கண்டறிந்து நான் உள்புகுகையில் என் கவிதைகளின் மீதான விமரிசன உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜி.குமரேசன். அவர் ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியாக ஒவ்வொரு சிரு விசயத்தையும் ஆய்ந்து விமரிசனம் தந்திருந்தார். தொடர்ந்து சிவகணேஸ் விமரிசனக் கவிதை ஒன்று தந்தார்.இந்நிகழ்ச்சியை ஐ.பி.எஸ். அதிகாரி சாந்தாராம் அவர்கள் தலைமை யேற்று நடத்தியபடி இருந்தார்.

அதையடுத்து படைப்பரங்கம்இரண்டு மலையாளக்கவிதை, இரண்டு தமிழ்க்கவிதை,ஒரு ஆங்கிலக்கவிதை என மும்மொழியில் அமைந்திருந்தது.ஆங்கிலக்கவிதை தந்தவர் அன்றைய கூட்டத்தலைவர் ஐ.பி.எஸ் அதிகாரி அவர்கள்

அடுத்து என்னுடைய சிற்றுரை எனைபற்றிய அறிமுகமாய் இருக்கும் விதத்தில் இருந்தது. கூடவே ‘ சூரியனுக்கும் கிழக்கே ‘ என்ற என் கவிதையும் வாசித்தேன்.

இது இச்சங்கத்தின் 96வது கூட்டம் என்பாது இதன் தனிச் சிறப்பு. தொடர்ந்து ‘கிரிஜா சுந்தர் அவர்கள் கவியரங்கும், கதைவேளையும் நடத்தி வருகின்றார். அவரது பணி சிறப்பாய் தொடர நமது வாழ்த்துக்களையும் சேர்த்து அனுப்புவோம்

நன்றி.

திலகபாமா, சிவகாசி

Series Navigation

திலகபாமா

திலகபாமா