தாம்பத்யம்

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

நவநீ


“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ சந்திச்சுருப்பேனா சொல்லு. ஒனக்கு ஒன்னும் ஆகாது சிவகாமி! ஒன்னோட கையிலதான் என்னோட உயிரு போகணும்னு அந்தப் பகவான் ஏற்கனவே எழுதிட்டான் சிவகாமி” என்று துக்கம் தொண்டை அடைக்க, பெட்டில் படுத்திருந்த சிவகாமியின் கைகளைத் தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தார் பரமசிவம்.

டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “சுகர் கொஞ்சம் ஹை-யா இருக்கு, ப்ரஷரும் நார்மலா இல்ல, அதான் ஒங்களுக்கு மயக்கம் ஜாஸ்தியா வருதும்மா, மெடிசின்ஸ் தர்றேன்…. எடுத்துக்கங்க, சாப்பாடு நான் சொன்னபடி சாப்பிடுங்க, எல்லாம் சரியாய்டும், நத்திங் டு வொர்ரி, கண்ணெவிட மேலாக் கவனிச்சுக்க ஒங்க கணவர் பக்கத்துல இருக்கறச்ச நீங்க ஒர்ரி பண்ணலாமா? ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணப்படாது, சரியா?” என சிரித்த முகத்தோடு, சிவகாமியிடம் கூறிவிட்டு, “டேக் கேர் மிஸ்டர் பரமசிவம்” என்று சொல்லிச் சென்றார் டாக்டர்.

“சிவம் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே? எனக்கு இப்படி அடிக்கடி ஒடம்பு சரியில்லாம வர்றத நெனச்சா மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு. யாருக்கும் தெரியாம நம்ம காம்பவுன்ட்-ல இருக்கற முப்பாத்தம்மன் கோயில்ல வச்சு எனக்கு ஒரு மாங்கல்யம் கட்டிடுறீங்களா? நான் நிம்மதியா மாங்கல்யத்தோட, பொட்டும், பூவுமா நித்ய சுமங்கலியாப் போய்ச் சேருவேன்… சிவம்! செய்வீங்களா?” – என்று கலங்கிய கண்களை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள் சிவகாமி.

பதறிப்போன பரமசிவன் “என்ன சிவகாமி நீ! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற! ஒங்கண்ணுக்கு முன்னாடிதானே டாக்டர் சொல்லிட்டுப்போனாங்க, நீ நல்லாருப்பெ சிவகாமி! ஒனக்கு ஒன்னும் செய்யாது சிவகாமி! மாங்கல்யந்தானே! சரி கவலய விடு, நீ சொன்னமாதிரியே நான் வர்ற வெள்ளிக்கிழமை ஒங்கழுத்துல தாலி கட்டுறேன் சரியா? நீ எனக்குன்னே பொறந்தவ சிவகாமி. விசாலம் செத்த அன்னைக்கே, அவகூட நானும் போய்ச்சேந்துருக்கணும், பகவான் என்னெ ரொம்பச் சோதிச்சுட்டார். ஆனா விசாலம் என்னெத் தனியா விடக்கூடாதுன்னு, ஒன்னோட ரூபத்துல வந்து எங்கூடவே வாழ்ந்துகிட்டு இருக்கா, நாம ரெண்டு பேரும் இன்னும் ரொம்ப நாள் உயிரோட இருப்போம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

“ஐயா! ஒங்களுக்குப் போன் வந்திருக்காம், ஆபீஸ்ல கூப்படுறாங்க! ஆயாம்மாள் வந்து சொல்லிச் சென்றாள்.

“ஹலோ! என்னப்பா! சௌக்யமா இருக்கேளா? பணமெல்லாம் டைமுக்கு வந்து சேந்துருக்குமே! நான் ஒரு ப்ராஜக்ட் விசயமா சைனா வந்தேன். கொஞ்சம் டைம் கெடச்சது, அதான் ஏர்போர்ட்ல இருந்து பேசுறேன். நான் யு.எஸ். போனதும் கால் பண்றேன், ஒடம்பப் பாத்துக்கங்க! முடிஞ்சா இந்த இயர் என்ட்-ல பசங்களுக்கு சம்மர் வெகேசனுக்கு சென்னை வர்றதா இருக்கோம். கன்ஃபாம் ஆனா சொல்றேம்பா, வேற ஒண்ணும் சேதி இல்லயே!” ஒரே மூச்சில் மகன் ஸ்ரீகாந்த் எதிர்முனையில்.

“….ம்ம்…ம்.. இல்லப்பா” பரமசிவம் சொல்லி முடித்தவுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

பரமசிவம் ஒரு ரிடையடு தாசில்தார். நேர்மையான, கௌரமான மனிதர். தனது மனைவி விசாலம். குழந்தையே இல்லாமல் தவமாய் தவமிருந்து திருமணமாகிப் பதினான்கு வருடங்களுக்குப்பின் பெற்றெடுத்த ஒரே பிள்ளை ஸ்ரீகாந்த். மகன், தனக்கு இது வேண்டுமென்று நினைக்கும்போதே அவன் கண் முன் கொண்டுவந்து அதை நிறுத்தியிருப்பார் பரமசிவம். அளவுக்கு மீறிய சுதந்திரம் பிள்ளைக்குக் கொடுத்தவர். படித்தவராயிற்றே! கேம்பஸ் இன்டர்வியு மூலமாகவே வேலை கிடைத்துத் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது தனது பெற்றோரிடம், தான் ஒரு இந்திய வம்சாவழிப் பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும், அனுமதி கேட்பதற்குப் பதிலாக தகவல் சொன்னான். சற்று அதிர்ச்சியுற்றாலும், அதனைப் புரிந்துகொண்ட பரமசிவமும் விசாலமும் மகனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர்.

திரும்ப அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து, பெற்றோரை அமெரிக்கா அழைத்துச்செல்வதற்கான, விசாவில் தாமதம் ஏற்படுகிறதென்பதால், அதுவரை பொறுக்கமுடியாத வம்சாவழிப்பெண், எங்கே வேறொரு கை மாறிவிடுமோ என்று திருமணத்தை முடித்துவிட்டு வழக்கம்போலப் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் கணவர் இவற்றையெல்லாம் நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதையும் பார்க்கப் பொறுக்காமல், பல நாள், இதுபற்றியே பேசிப்பேசிக் கவலையடைந்த விசாலம் அவளுக்கே தெரியாமல் ஒருநாள் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்துவிட்டாள். விசாலமும் தன் பிள்ளையும்தான் இந்த உலகம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்த பரமசிவம் தனியாளாய் தவித்து நின்றார்.

அதுவரை கலங்காத பரமசிவம் தன்னையும் மீறிக் கதறிக் கதறிக் கண்ணீர்விட்டுத் தானும் உயிரை விட்டுவிடுவோம் என்று நினைக்கையில்,
“அப்பா ஒங்களவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? என்னெ மன்னிச்சுருங்கப்பா, அம்மா என்னெ நெனச்சு ரொம்பக் கவலப்பட்டே போய்ச்சேந்துட்டாங்கப்பா, நீங்களாவது இனிமே எங்ககூட இருங்கப்பா” என்று தன் மகன் தன்னைக்கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, தான் கூடிய விரைவில் தன்னை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசியதும் பரமசிவன் மனம் மாறிவிட்டார்.

ஆனால் நடந்த கதை வேறு, விசா எல்லாம் தயார் செய்துகொண்டு அழைத்துப்போகும்வரை, தன்னைத் தனியாக விட்டால் அம்மாவையே நினைத்து ரொம்பக் கவலைப்பட்டு எதுவும் செய்து கொள்வார் என்ற அக்கறையில், இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்றவன்தான். வருடங்கள் 7 ஆகிவிட்டது. வாரம் தவறாமல் மகனிடமிருந்து போன் வரும். ஆனால் விசா இன்னும் வந்தபாடில்லை. பரமசிவனும் இதுவரை அதுபற்றிக் கேட்டதும் இல்லை. தனக்கு மாதாமாதம் வரும் பென்சன் பணத்தையும், மகன் அனுப்பும் பணத்தையும் கூட அந்த இல்லத்துக்கே அவர் கொடுத்துவிடுவதால், அனைவருக்குமே பரமசிவத்தின்மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். பரமசிவத்தின் ஆலோசனையின் பேரில் இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது ஆதரவற்ற சில குழந்தைகளையும் அந்த இல்லம் தத்தெடுத்துக்கொண்டது.

பரமசிவன் முதியோர் இல்லத்துக்கு வருவதற்கு முன் இருந்தே சிவகாமி அங்கு இருக்கிறாள். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும்தான் அங்கு நெடுநாட்களாக இருப்பவர்கள். இல்ல நிர்வாகத்தினர் தவிர அனைவருமே இவர்களைக் கணவன் மனைவி என்றே நினைத்துக்கொண்டிருந்தனர். சிவகாமி எங்கு பிறந்தாள். பெற்றோர் யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன்? அவளுக்கே தெரியாது. இந்த இல்லத்தை நடத்தும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், கல்கத்தாவில் அவர்களின் கிளையில் இருந்து சிவகாமியை அவளது முப்பதாவது வயதில் சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். இங்கு இந்த இல்லத்தில் முக்கியமான பணிகளையெல்லாம் கவனித்துவருகிறாள். தான், கல்கத்தாவில் சிவராத்திரியன்று கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் ஒப்படைக்கபட்டதாகவும், அங்கு அடிக்கடி வந்து போகும் அன்னைத் தெரசாதான் தனக்குச் சிவகாமி என்று பெயரிட்டதாகவும், தனக்கென்று யாருமில்லையென்றும், தான், ஒரு ஆதரவற்ற பெண் என்பதையும் சிவகாமி பரமசிவனிடம் சில வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் அன்பாகப் பழகினர். ஒருவருக்கு வேண்டியதை இன்னொருவர் செய்துகொண்டு, மிக அமைதியான சூழலில் வாழ்ந்தனர். பரமசிவத்துக்குக் கிடைக்கவேண்டிய மன அமைதி, நிம்மதி இந்த இல்லத்தில் கிடைத்ததாகவே உணர்ந்தார். அதனால்தான் அமெரிக்கா செல்வது பற்றித் தன் மகனிடம் அவர் இதுவரை பேசியதே இல்லை.

பரமசிவனைச் சிவகாமி தன்னுடைய 50-வது வயதில் சந்தித்தாலும், தனக்குப் பரமசிவன் மேல் அளவுகடந்த மரியாதை, இதுவரை உணராத ஒரு பாச உணர்வு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஏதோ நெருங்கிய சொந்தம் கிடைத்தது போன்ற ஒரு தெளிவு. தனக்கென்று கடவுள் இவரை அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ மனதுக்குள் தோன்றிற்று. காதல், காமம், உறவு, இல்லறம், பிரிவு இவையெல்லாம் சிவகாமிக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது கருணை ஒன்றே! தியானம், பக்தி, படிப்பு இவைகள்தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு தன்மீது பரமசிவம் காட்டும் அக்கறை, பொறுப்பு, பாசம், பரிவு, பகிர்தல் இவையெல்லாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தப்பாச உணர்வுகளை மனம் தேட ஆரம்பித்தது. இருவருக்குமே இந்த வயதில் எது தேவையோ அந்தத் தேவைகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிடைத்ததை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். தத்தம் உணர்வுகளைச் சரியான அலைவரிசையில் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் இருந்துவிட்டால் அந்த உறவில் ஏற்படும் பலமே வீரியம் மிக்கதுதான். அது அங்கு இரட்டிப்பானது. எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒன்று கோவிலில் இருப்பார்கள் அல்லது அங்குள்ள சிறிய பூங்காவில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

சிவகாமி முதன்முறையாக அழுதது அன்னைத் தெரெசாவின் மறைவின்போதுதான். இரண்டாவது முறையாக இன்றுதான் அழுதிருக்கிறாள். தனக்கு உடல்நிலை மோசமாகி அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவதால், எங்கே? தான் பரமசிவத்தை விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்று எண்ணித் தனக்கு மாங்கல்யம் கட்டச்சொல்லும்போதுதான் அழுதிருக்கிறாள். கடவுளிடம் இந்தக் கன்னியுள்ளம் வேண்டுவதெல்லாம்
“நான் மறுபடியும் சிவகாமியாகவே பிறக்கவேண்டும். பரமசிவனின் மனைவி ஆவதற்காகவாவது பிறக்கவேண்டும். ஆனால் ஒரு ஆதரவற்ற அனாதையாக மறுபடிப் பிறக்கவே கூடாது” என்பதுதான்.

இன்று சிவகாமி மிகவும் தெளிவான முகத்தோடு காணப்பட்டாள். வெள்ளிக்கிழமையும் வந்தது. அங்குள்ள பிள்ளைகளும், முதியோர்களும் புத்தாடையிலும் இனிப்புகளிலுமாக குதூகளித்து அனைவரும் பேசிக்கொண்டனர். “சிவகாமிப்பாட்டிக்கும் பரமசிவம் தாத்தாவுக்கும் பொன்விழாவாம். அந்தத் தாத்தாவுக்கு 75 வயசாச்சாம். சீக்கிரமே 100-வது வயசுக்கல்யாணமும் கொண்டாடணும், அப்பத்தானே எங்களுக்கெல்லாம் நெறைய ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் கெடைக்கும்… ஹையா.. ஜாலி…. பெஸ்ட் ஆப் லக் தாத்தா!’’ தனக்கு 75 வயது ஆகாவிட்டாலும் அனைவரிடமும் அவ்வாறு சொல்லி, எந்த உறவுகளுமே இல்லையென்றாலும், அந்த இல்லம்தான் உலகம் என்று ஆயிரமாயிரம் கனவுகளோடு துள்ளிக்குதிக்கும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்களின் முன்னிலையிலும், வாழ் நாளெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளுக்காக மெழுகாக உருகித் தன்னை அர்ப்பணித்துவிட்டுக் கடைசிக்காலத்தில், எப்பொழுது ஆதரவும், பரிவும், பாசமும் அவர்களுக்குத் தேவையோ அப்பொழுது, பெற்ற பிள்ளைகளாலேயே சுமையென நினைத்துத் தூக்கி வீசப்பட்ட அந்த ஆதரவற்ற முதியோர்களும் வாழ்த்துவதைவிடவா வேறொருவர் வாழ்த்திவிட முடியும்? அந்த அற்புத உலகத்தைத் தமதாக்கிக் கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்தோடு, வாழ்க்கை, இல்லறம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசம், பரிவு, கருணை இவைகளே வாழ்க்கை என்று எண்ணி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்து மறைந்த அந்த அன்னைத் தெரசாவைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்த அந்தக் கன்னி சிவகாமியின் கழுத்தில் பரமசிவன் தாலியைக் கட்டித் தன் சொந்தமாக்கிக்கொண்டு அந்த இல்லத்துக்குள்ளேயே இருவரும் தன் சொந்தங்களான அந்தப் பிஞ்சுக்குழந்தைகளோடு குழந்தைகளாக அடைக்கலம் புகுந்தனர்.

Series Navigation

நவநீ

நவநீ

தாம்பத்யம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

பவளமணி பிரகாசம்


மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே
இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள்
இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள்
என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள்
ஒரே தடத்தில் இரு மனங்களின் மெளனப் பயணம்
“நீயே என் ஒரே ஆதாரம்” என்கின்றான் அவன்
“நீங்கள்தான் என் ஒரே ஆதரவு” அவள் பதில்
நிறைய கற்பனைகள் நடுவே நீண்ட பெருமூச்சுகள்
சொல்லத் தெரியாத புதிரான எதிர்பார்ப்புகள்
இன்பமா துன்பமா இனங்காண முடியாத திகைப்பு
கலையாத தவமா கலைக்க விரும்பாத கனவா
மிச்சமின்றி துய்த்துவிட்ட பெருங்களைப்பா-
“நடு நிசி ஆகிவிட்டது தூங்கப்போகலாம்
பல்செட்டை கழற்றிவிட்டுப் படுக்க வாருங்கள்”
———————————————————————————————————–
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்