ஜோதிர்லதா கிரிஜா
1.
அழைப்புமணி ஒலி கேட்டு வாசலுக்குச் சென்று கதவு திறந்த சாந்தா பக்கத்து வீட்டு அம்மாளைப் பார்த்ததும் புன்னகை காட்டி, “அட! அதிசயமாயிருக்கே! வாங்க, வாங்க. உள்ளே வாங்க,” என்று உபசரித்தபடி உள்ளே போகத் திரும்பினாள்.
சாந்தாவின் கை பற்றி அவளைத் தடுத்த பங்காரம்மா, “நான் கைவேலையைப் பாதியிலே விட்டுட்டு வந்திருக்கேம்மா. எங்கண்ணன் மகன் மருதம்பட்டியிலேருந்து வந்திருக்குறான். டாக்டருக்குப் படிச்சுப் பாஸ் பண்ணிட்டு இப்ப வேலையை எதிர்பார்த்துக்கிட்டிருக்குறவன். எங்க வீட்டிலே தமிழ்ப் பேப்பர் தான் வாங்குறது. அவனுக்கு இங்கிலீஷ் பேப்பர் வேணுமாம். அதான், ஹிண்டு பேப்பர் இருந்தா வாங்கிட்டுப் போலாம்னு . . .” என்று இழுத்தாள்.
“அப்பா வாசிச்சுக்கிட்டிருக்காரு, மொட்டை மாடியிலே. இன்னும் ஒரு அரை மணி நேரத்துலே நானே கொண்டுவந்து குடுக்கிறேன்,” என்று அவள் கூறவும், “ரொம்ப தேங்க்ஸ்ம்மா,” என்ற பங்காரம்மா விடை பெற்றாள்.
அவள் அப்பா வாசித்து முடித்த “இந்து” நாளிதழுடன் கொஞ்ச நேரம் கழித்து அவள் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டியபோது, ஓர் இளைஞன் கதவைத் திறந்தான். அவனது அகலமும் உயரமும் – எல்லாவற்றுக்கும் பேலாக அவனது கறுப்பின் பளபளப்பும் – அவளை அயர்த்தின. அவளே உயரம்தான். அவளே தலை உயர்த்திப் பார்க்கும்படியான உயரத்தில் அவன் இருந்தான். முகத்தில் ஓர் இயல்பான புன்சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருந்தது. பார்வை பளிச்சென்றிருந்கது வட்டக்கரிய விழி என்னும் பாரதியாரின் பாடல்வரி அவளுக்கு உடனே ஞாபகம் வந்தது.
“வாங்க.”
“பங்காரம்மா கிட்ட இந்தப் பேப்பரைக் குடுத்துடுங்க.”
“உள்ளே வந்து அவங்களைப் பாத்துட்டுப் போங்க. . . அத்தே, அத்தே! பக்கத்து வீட்டிலேருந்து வந்திருக்குறாங்க.”
அவன் குரல் கொடுத்துக் கொண்டிருக்கையிலேயே பங்காரம்மா அங்கு வந்துவிட்டாள்.
“வாம்மா. உள்ளே வா.”
“இல்லீங்க. நான் அவசரமா வெளியிலே போகணும். ஹிண்டு பேப்பர் கேட்டீங்களே?”
“வாங்கிக்க, ரத்தினம்.”
ரத்தினம் அதை வாங்கிக்கொண்டு, “தேங்க்ஸ்!” என்றான்.
சாந்தா புன்னகை செய்தாள்.
“மருதம்பட்டியிலேருது வந்திருக்குற என் அண்ணன் மகன்.”
“வணக்கம்.”
“வணக்கங்க.”
“அப்ப, நான் போயிட்டு வர்றேம்மா,” என்ற சாந்தா ரத்தினத்தையும் நோக்கித் தலையசைப்பின் மூலம் விடைபெற்றுக் கிளம்பிப் போனாள்.
“நல்ல மனுசங்க – அவளோட அம்மாவும் அப்பாவும். ஒரே மக. ஆனா, அதுக்காகச் செல்லமெல்லாம் குடுத்து வளக்கல்லே. நல்லா சமையல் செய்யும். நல்லாவும் படிச்சிருக்கு. காலேஜ் படிப்பை முடிச்சுட்டு இப்ப கம்ப்யூட்டர் கத்துக்கிட்டுருக்கு.”
“அப்படியா?” என்ற ரத்தினம் அத்தையின் பேச்சில் லயிக்காதவன் போன்று நாளிதழைப் பிரிக்கலானான்.
“பெரிய பணக்காரங்க. ஆனா அந்தப் பொண்ணு தான் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையைக் கொஞ்ச நாளாச்சும் பாப்பேன்னு ஒரே பிடிவாதம் பிடிக்குதாம். அவங்கம்மா எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க. . . நல்ல செவப்பு. . .அழகு வேற. எவன் குடுத்து வெச்சிருக்குறானோ!”
ரத்தினம் முகத்துக்கு நேரே நாளிதழைத் தூக்கிப் பிடித்துக்கொண்டான். பங்காரம்மா தன் அலுவலைப் பார்க்கப் போனாள்.
சற்றுப் பொறுத்து அங்கு வந்த பங்காரம்மா, “அவங்க நம்ம சாதிதான். நான் வேணுமின்னா உனக்குக் கேட்டுப் பாக்கட்டுமா? நல்ல புள்ளையா வேணும்னு தேடிட்டுருக்குறாங்க. பணக்காரச் சம்பந்தம் வேணாம்னே சொல்லிட்டுருக்குறாங்க. நீயும் ஒண்ணும் ஏப்பை சாப்பை இல்லே. டாக்டருக்குப் படிச்சு முடிச்சுட்டே. மெடல் வேற வாங்கி யிருக்குறே. என்ன சொல்றே?”
ரத்தினம் நாளிதழில் அடுத்த பக்கத்தைப் புரட்டியபடி கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான்.
“என்னடா சிரிக்கிறே? இம்புட்டு இரைச்சலாச் சிரிக்கிறதுக்கு நான் என்ன ஜோக்கா சொன்னேன்?”
“ஜோக்குதான், அத்தே, ஜோக்கேதான்! போய்க் கேட்டுக் கீட்டு வைக்காதீங்க. கட்டையை எடுத்துக்கிட்டு அடிக்க வந்துடப் போறாங்க! அந்தப் பொண்ணு எம்புட்டுக் கலரு! நானோ அம்புட்டுக்கு அம்புட்டு அட்டைக் கரி! போய்க் கேட்டு அவமானப் படாதீங்க, அத்தே. இப்ப நான் சிரிச்ச மாதிரி அவங்களும் சிரிப்பாங்க.”
அத்தை குறும்பாய்ச் சிரித்தாள் : “அப்ப, அந்தப் பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்குதுன்னு சொல்லு.”
“எந்தப் பொண்ணையும் பாத்துப் பிடிக்கலைன்னு சொல்லக் கூடாது, அத்தே. அதெப்படிப் பிடிக்கலைன்னு சொல்ல முடியும்? எதை வெச்சு? வெளிக்குத் தெரியற அழகையோ அவலட்சணத்தையோ வெச்சுத்தானே பிடிக்கிறது, பிடிக்க்லைன்ற பேச்சே வருது? அது தப்பில்லயா, அத்தே? தவிர, இப்ப வந்துட்டுப் போன பொண்ணை யாருக்குத்தான் பிடிக்காது?”
பங்காரம்மாவுக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது: “அப்படிப் போடுடா எங்கண்ணன் மவனே!”
“அத்தே! வேணாம். வேணான்னா வேணாம். எனக்காகப் போய்ப் பேசி வீணா உங்களுக்குள்ள உள்ள உறவைக் கெடுத்துக்குடாதீங்க. அவங்க வீட்டுல போய் என்னை மாதிரி ஒரு கரிக்கட்டைப் பயலுக்குப் பொண்ணு கேக்குறது – அதிலேயும் செக்கச்செவேல்னு இருக்குற ஒரு பொண்ணைக் கேக்குறது – கொஞ்சங்கூட ஞாயமே இல்லாத விசயம், அத்தே. விட்றுங்க, வேணாம்.”
“அடப் போடா, நீ ஒருத்தான்! கறுப்பாவது, செவப்பாவது! . . . கறுப்புத்தான்
எனக்குப் பிடிச்ச கலரு . . .” என்று பங்காரம்மா பாடிச் சிரிக்க, ரத்தினம் புன்னகை புரிந்தான்.
“உங்களுக்குக் கறுப்புப் பிடிச்சிருக்கலாம். ஆனா அந்தப் பொண்ணு அப்படி நினைக்கணுமில்லே?”
“நீ பாட்டுக்கு இங்கிட்டு இருந்தவாக்கில பேசினா எப்படி? போய்க் கேட்டாத்தானேப்பா தெரியும் – பிடிக்கிறதும் பிடிக்காததும்?”
“அத். ..தே! வேணாம். விட்றுங்க. வம்பை வெலைக்கு வாங்காதீங்க.”
அத்தை பதில் சொல்லாவிட்டாலும், பக்கத்து வீட்டுக்குப் போய் அந்தப் பெண்ணின் பெற்றோருடன் பேசிப்பார்க்க முடிவு செய்துவிட்டாள் என்பதை ரத்தினம் புரிந்துகொண்டான்.
சமையலை முடித்துவிட்டு, பங்காரம்மா நாள்காட்டியில் நல்ல நேரம் பார்த்தாள்.
“என்ன அத்தை பாக்குறீங்க?”
“பக்கத்து வீட்டுக்குப் போறதுக்கு நல்ல நேரம் பாக்குறேண்டா.”
“அத்தே! வேணாம்னா, கேளுங்க அத்தே! அவங்க பணக்காரச் சம்பந்தம் வேணாம்னு சொல்றாங்கன்னு வேற சொல்றீங்க. அப்ப, வீட்டோட மாப்பிள்ளையாத் தேடுறாங்களோ என்னமோ! அந்தப் பொண்ணு சம்மதிச்சாலும், அது நமக்குச் சரிப்பட்டுவராது, அத்தே.”
“சும்மா யிருடா. போய்ப் பேசினாத்தானேடா அதெல்லாம் தெரியும்? இங்கிட்டுக் குந்தினவாக்கில நாமே எல்லாத்தையும் ஊகிக்கிறதா?”
“ம்! சரி. நீங்க எம் பேச்சைக் கேக்கப் போறதில்லே. எதுக்கும் ஒரு புது விளக்குமாறு இருந்தா அதைக் கையோட எடுத்துட்டுப் போங்க.”
“எதுக்குடா?”
“அவங்க வீட்டு விளக்குமாறு பிஞ்சு போயிறுமில்லே? பதிலுக்குக் குடுத்துட்டு வர்றதுக்குத்தான். அதானே ஞாயம்?”
“சரிதாண்டா. பொல்லாத ஞாயக்காரந்தான்! . . .சும்மாரு. நான் போயிட்டு வர்றேன். கதவைச் சாத்திட்டு டி.வி. பாரு. வந்து உனக்குச் சாப்பாடு போடுறேன். என்ன? அதுக்குள்ளார உங்க அத்தானும் வந்துடுவாரு,” என்றவாறு பங்காரம்மா படியிறங்கிவிட்டாள்.
2.
வேளை வந்துவிட்டால் எதுவும் நிற்காது என்பது அத்தையின் திட்டத்தைப் பொறுத்தவரையில் சரியாக இருந்தது. மளமளவென்று எல்லாம் நடந்தன. மறு நாளே சாந்தாவின் அப்பா பரமசிவம் தம் மனைவி சிங்காரியுடன் பங்காரம்மாவின் வீட்டுக்கு வந்துவிட்டார்.
எடுத்த எடுப்பில், “என் மக சரின்னுட்டா. எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! ஏன்னா, கொஞ்ச நாளாச்சும் வேலை பாத்துட்டு அதுக்கு அப்பாலதான் கலியாணம் பண்ணிப்பேன்னு சொல்லிக்கிட்டிருந்தா. இப்ப சரின்னுட்டா. அதனால அடுத்த முகூர்த்தத்திலேயே நிச்சயதார்த்தம், கலியாணம் ரெண்டையுமே வெச்சுக்கிடலாம். அய்யரைக் கூப்பிட்டு ஜாதகப் பொருத்தமெல்லாம் பாக்கவேணாம்னு நெனைக்கிறேன். மனசுக்குப் பிடிச்சுட்டா, அப்பால அதெல்லாம் எதுக்குன்னு நெனைக்கிறவன் நான். என்ன சொல்றீங்க, அம்மா?” என்று அவர் எடுத்த எடுப்பிலேயே பொழிந்து தள்ளிவிட்டார்.
“நீங்க சொல்றது சரிதான். எனக்கும் அதிலே அவ்வளவா நம்பிக்கை கிடையாது. மனப் பொருத்தம் சரியானபடி அமைஞ்சுட்டா ஜாதகம் பாக்கத் தேவை யில்லைன்னு ரொம்பப் பெரிய சோசியரு ஒருத்தரே சொல்லியிருக்காரு. தவிர, பாத்துப் பாத்துப் பண்ணி வைக்கிறதெல்லாம் என்ன வாழுது! இல்லீங்களா?” என்று பங்காரம்மா ஒத்துப்பாடினாள்.
“சரியாச் சொன்னீங்க.”
“பையனுக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கணும். பொண்ணுக்குப் பையனைப் பிடிச்சிருக்கணும். மத்தப்படி வேற எதுவும் அம்புட்டு முக்கியமில்லேதான்,” என்று பங்காரம்மா மறுபடியும் ஒத்து ஊதினாள்.
ரத்தினம், “ சார்! ஒரு விஷயம். நான் ரொம்பவே கறுப்பு. எதுக்கும் உங்க மக ஒரு தரத்துக்கு நூறு தரம் நல்லா யோசிக்கட்டும். அப்பால வருத்தப்படக் கூடாது. யாராச்சும் எங்க ஜோடிப்பொருத்தம் பத்திக் கிண்டல் பண்ணினாங்கன்னா, அதும் மனசுக்கு வருத்தமாயிருக்குமில்லே?” என்றான்.
“அட, என்னங்க தம்பி, நீங்க வேற. நான் மட்டுமென்ன, செவப்பா? எம்பொஞ்சாதி வேணா நல்ல நெரம்,.”
“உங்க பொண்ணோட நான் கொஞ்சம் பேசணும், சார். நேர்ல பாத்து ஒரு வார்த்தை கேட்டுட்றதுதான் எப்பவுமே நல்லது.”
“அதுக்கென்ன? பேசிட்டாப் போச்சு. நீங்க இன்னைக்கே எங்க வீட்டுக்கு வாங்க. வந்து சாந்தியோட பேசுங்க. எம்மக கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்றேன்.”
“சரி.”
“உங்களுக்குச் சொந்தமா ஒரு நர்சிங் ஹோம் கட்டித் தர்ற அளவுக்கு எங்ககிட்ட பணம் இருக்கு. அதனால நீங்க கவலையே பட வேணாந்தம்பி.”
“அதெல்லாம் தப்பு, சார். கொஞ்ச நாள் ப்ராக்டிஸ் பண்ணி நாலு காசு சேமிச்சதுக்கு அப்பால நானே சொந்தமாக் கட்டுறதுதான் மரியாதை. வரதட்சிணக்கெல்லம் நான் ஒண்ணாம் நம்பர் எதிரிங்க. அதனால அப்படியெல்லாம் ஆசை காட்டாதீங்க. பணமா வாங்குறது தப்புன்னா, இதுவும் தப்புத்தானே?”
“என்ன தம்பி, இது? இந்தக் காலத்துலே டாக்டர் படிப்புப் படிச்சவங்க பேசாத பேச்சாப் பேசறீங்களே! அவனவன் அத்தக் கொண்டா, இத்தக் கொண்டான்னு கண்டிஷனாக் கேக்குறான். நீங்க என்னடான்னா, வலுவிலே நாங்களே முன்வந்து குடுக்கிறதை வேணாம்குறீங்க!”
“ஞாயம்னு ஒண்ணு இருக்குல்லே?”
“சரி. அதையெல்லாம் அப்புறமேல்பட்டுப் பேசுவோம். நீங்க சொல்ற மாதிரி சாந்தியை நீங்க தனியாப் பாத்து ஒரு வார்த்தை எதுக்கும் பேசி அவளுக்குச் சம்மதம்தானான்குறதை நேரடியாவே கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. “
மேலும் சற்று நேரம் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்த பின், காப்பி குடித்துவிட்டு இருவரும் கிளம்பிப் போனார்கள்.
பங்காரம்மா மூலம் சம்மதம் கேட்டபின், அன்று மாலையே ரத்தினம் சாந்தியின் வீட்டுக்குப் போனான். சிற்றுண்டிக்குப் பிறகு, பரமசிவம் சொன்னதன் பேரில் அவன் சாந்தியோடு அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போனான். அங்கு தயாராகப் போடப்பட்டிருந்த
நாற்காலிகளில் எதிரெதிராய் இருவரும் உட்கார்ந்தார்கள்.
உட்கார்ந்த பின் ரத்தினம் அவளை ஆழமாக ஏறிட, சாந்தி சிவந்துவிட்டிருந்த தன் முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள். ஆயினும் உதடுகள் புன்சிரிப்புக் கொண்டிருந்தன.
தொண்டையைக் கனைத்துக்கொண்ட ரத்தினம், “என்னையப் பிடிச்சுருக்குன்னு சொன்னீங்களாம். அது நெசந்தானான்னு நிச்சயப் படுத்திக்கிறதுக்காகத்தான் நேர்லே சந்திச்சுப் பேசணும்னு சொன்னேன்,” என்றான்.
அவள் தலை தாழ்ந்தே இருந்தாலும், அவளுள் கிளர்ந்த மகிழ்ச்சியால் உதடுகள் சிரிப்பில் பிளந்துகொண்டன – வரிசைப் பற்கள் வெளித்தெரிகிற அளவுக்கு.
“அப்ப? உங்க அப்பா சொன்னது நெசந்தான். இருந்தாலும் சும்மா சிரிச்சா மட்டும் பத்தாது. வாயைத் தொறந்தும் சொல்லணும்!”
“ம். . . பிடிச்சிருக்கு.”
“இந்த பாருங்க. என்னைய நல்லாப் பாருங்க. அரையும் கொறையுமாப் பாத்துட்டு, சரின்னும் சொல்லிட்டு, அப்பால வருத்தப்படப் போறீங்க! நான் அதோ அந்தத் தென்னமரத்துக் காக்கா அளவுக்குக் கறுப்பா யில்லாட்டியும், கிட்டத்தட்ட அந்த நெறந்தான்கிறதை நல்லா மனசிலே வாங்கிக்குங்க.”
“இல்லீங்க.”
“அப்ப? நான் அந்தக் காக்காவை விடப் பரவாயில்லேன்றீங்க!”
“நான் அப்படிச் சொல்லல்லே. நீங்க கோவிச்சுக்கல்லைன்னா இதுக்குப் பதில் சொல்லுவேன்.”
“எதுவானாலும் சொல்லுங்க.”
“அந்தக் காக்கா உங்களைக் காட்டிலும் கொஞ்சம் செவப்போன்னு எனக்கு சம்சயம்.”
ரத்தினம் அவளது வெளிப்படையான பேச்சால் கவரப்பட்டு விழுந்து விழுந்து சிரித்தான். பின்னர், “அப்படி இருந்தும் என்னையப் பிடிச்சிருக்குன்றீங்க. அப்படித்தானே?” என்றான், சிரித்து ஓய்ந்ததும்.
“ஆமா”
“அதுக்கு என்ன காரணம்கிறதைத் தெரிஞ்சுக்கலாமா?”
“இதுக்கெல்லாம் என்ன காரணம்னு சொல்றது? எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. அம்புட்டுத்தான் சொல்லத் தெரியுது. நல்லவராத் தெரியறீங்க. உங்க நெத்தியிலேயே அப்படி எழுதி ஒட்டியிருக்குறதா எனக்குத் தோணுது. . . அது ஒரு பொண்ணோட உள்ளுணர்வு. . . அப்புறம் . . . கம்பீரமா யிருக்கீங்க. வேற எதுவும் எனக்குச் சொல்லத் தோணல்லே.”
“சரி. ஆனா, நான் நல்லவனா கெட்டவனாங்குறது என்னோட பழகினதுக்கு அப்பால நீங்களா கண்டுபிடிக்க வேண்டிய விசயம். என்னையப் பத்தி நானே எதுவும் சொல்லக்கூடாது.”
‘இப்படிச் சொல்றதுலேர்ந்தே தெரியுதே நீங்க நல்லவர்தான்னு!”
“நல்லாவே பேச்சிலே மடக்குறீங்க.. . . அப்புறம். . . என் தரப்பு விசயம் ஒண்ணு. கலியாணம்னு ஒண்ணு ஆகுறதுக்கு முந்தி உங்ககிட்ட சொல்லிடணும்னு தோணுது. கலியணம் ஆனதுக்கு அப்பால நமக்குள்ளே பிரச்சனை வரக்கூடாதில்லே? அதனால, முன்கூட்டியே அதைப்
பத்திப் பேசிடுறது நல்லது.”
“சொல்லுங்க.”
“என்னால, வீட்டோட மாப்பிள்ளையால்லாம் இருக்க முடியாது. அது எனக்கு கவரவக். . . .”
“கொறைச்சல்னு சொல்ல வந்தீங்க. அம்புட்டுத்தானே? நானும் அப்படித்தான் நெனைக்கிறேன். கலியாணத்துக்கு அப்பால நாம தனியாத்தான் இருக்கப் போறோம். அதைப் பத்தின சந்தேகம் உங்களுக்கு வேணாம்.”
“பரவால்லே. உலக நடப்பை நல்லாவே புரிஞ்சு வச்சுருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ்..” . .
“உங்களோட தன்மானமும் கவுரவமும் எனக்கும் முக்கியம் இல்லியா? அதை எந்தக் காரணத்தைக்கொண்டும் நான் விட்டுக் குடுக்கக் கூடாதில்லே? எங்கப்பா அம்மாவோட நான் இது பத்திப் பேசல்லே. இருந்தாலும், அவங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்திச்சுன்னா, அதுக்கு நான் ஒத்துக்கப் போறதில்லே. அது தப்பு!”
“மறுபடியும் தேங்க்ஸ்.”
“இன்னொண்ணு. வாராவாரம் எங்கப்பா அம்மாவை நான் சந்திச்சுட்டா அவங்க ஏக்கமும் தீர்ந்துடும், என்னோட ஏக்கமும் தீர்ந்துடும். அப்புறமென்ன? ஏன்? எங்கப்பா கிட்டதான் கார் இருக்கே? தினமும் வந்து நம்மைப் பாத்துட்டுப் போக முடியும் அவங்களாலே. “
ரத்தினம் உடனே முதுகை நிமிர்த்திக்கொண்டு உட்கார்ந்தான். அவள் என்ன எண்ணிப் பேசுகிறாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அவன் முகம் கணத்துள் இருண்டுவிட்டது. அவள் எண்ணிக்கொண்டிருந்தது தவறு என்பதை எத்தகைய சொற்களால் நாசூக்காக அவளுக்குப் புரியவைப்பது என்கிற சிந்தனையில் ஆழ்ந்த அவன் சொற்களைத் தேடலானான்.
“ஏதோ சொல்ல நினைக்கிறீங்கன்னு தோணுது. . . “
“ஆமாங்க. . . கலியாணத்துக்கு அப்பால நாம் இங்கே சென்னையிலே இருக்க முடியாது. என்னோட கிராமத்துக்குப் போய் அங்கே தான் நான் டாக்டரா யிருக்கப்போறேன்.”
இப்போது சாந்தாவின் முகம் இருளடித்துப் போனது.
“என்னது! உங்க கிராமத்திலேயா! அது ஒரு பட்டிக்காடுன்னு உங்க அத்தை சொன்னாங்களே?”
“ஆமா. போதுமான மருத்துவ வசதி இல்லாத ரொம்பச் சின்ன ஊருங்க அது. அங்கே தான் நான் ப்ராக்டிஸ் பண்றதா ஒரு தீர்மானமே செய்திருக்குறேன். நான் ஒரு டாக்டராகணும், ஆனதும் அங்கேதான் கிளினிக் வெச்சு கிராமத்து ஜனங்களுகுச் சேவை செய்யணும்கிறதெல்லாம் பதினாலு வயசிலேயே நான் பண்ணிட்ட முடிவுங்க. அதுக்கு ஒரு நல்ல, நியாயமான காரணம் இருக்கு. எங்க கிராமத்திலே போதுமான மருத்துவ வசதி இல்லாததுனாலதான் எங்க அம்மா மதுரை ஆஸ்பத்திருக்குக் கொண்டுட்டுப் போற வழியிலேயே செத்துப் போயிட்டாங்க.. . நாங்க ஏழைங்க. இருந்தும் எங்க அப்பா மதுரை ஆஸ்பத்திரிக்கு எங்க அம்மாவை எடுத்துக்கிட்டுப் போக முடிவு செஞ்சாரு. அதுக்காகக் கடன் வாங்கினாரு. ஆனா
என்ன பிரயோசனம்? அம்மாவைப் பறி குடுத்துட்டு நாங்க பாதி வழியிலேயே கிராமத்துக்குத் திரும்பி வந்தோம். அன்னைக்கு நான் எடுத்த முடிவுங்க இது. அது மட்டுமில்லீங்க. நான் டாக்டருக்குப் படிக்க என்னோட கிராமத்து ஜனங்கதான் ஆளாளுக்குப் பத்தும் பதினஞ்சுமா தருமமாக் குடுத்து உதவினாங்க. அவங்களுக்கு நான் ஏதாச்சும் திருப்பிச் செய்யணுமில்லே? அதுக்கு ஒரே வழி நான் எங்க கிராமத்திலேயே டாக்டர் தொழில் நடத்துறதுதான். அதுக்காக நான் ஏதோ எல்லா மக்களுக்கும் ஓசியிலே வைத்தியம் பாப்பேன்னு அர்த்தமில்லே. எங்க கிராமத்திலேயும் நிறைய பணக்காரக் குடும்பங்க இருக்குது. அவங்க கிட்ட ஒட்டிக்கு ரெட்டியாச் சேத்து வசூல் பண்ணிடுவேன். . . என்ன? எதுவுமே சொல்லாம இருக்கீங்க?”
சாந்தி சன்னமாய்ப் பெருமூச்செறிந்தாள்.
“அப்படின்னா நான் யோசிக்கணுங்க. வீட்டிலேயும் பேசணும். அதனால இப்போதைக்கு இதுக்கு என்னோட பதில் ‘யெஸ்’ ங்கிறதா இருக்க வேணாம்.. .” – இவ்வாறு மெல்லிய குரலில் சொன்ன சாந்தியின் முகம் களையிழந்துவிட்டிருந்தது. முகத்துப் புன்னகையும் காணாமற் போயிருந்தது.
ரத்தினம் உடனே எழுந்துவிட்டான்.
“சரிங்க. அப்ப நான் வரட்டுமா?” என்று அவன் கை கூப்பினான். அவன் முகத்தில் அவளைப் புரிந்துகொண்டதற்கான புன்சிரப்பு இருந்தாலும் அது உயிரற்றிருந்தது.
பதிலுக்குக் கும்பிடத் தோன்றாததாலோ, அல்லது ஏமாற்றத்தில் குரல் அடைத்துக் கொண்டிருந்ததாலோ, அவள் தலையை மட்டும் அசைத்தாள். அவள் எச்சில் விழுங்கியதில் அவளது உணர்ச்சிகளை அவன் ஓரளவு புரிந்துகொண்டான். பின்னர் இருவரும் மவுனமாக மொட்டை மாடியிலிருந்து இறங்கிக் கீழே வந்தார்கள்.
இருவர் முகங்களும் சிரிப்பற்றுத் தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாற்போல் தென்படவே, கூடத்தில் குழுமி யிருந்த பெரியவர்கள், ‘என்ன பேசியிருப்பார்கள்? இருவர் முகங்களிலும் மலர்ச்சியே இல்லையே?’ என்கிற பொருள் ததும்ப ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சமாளித்துக்கொண்டு சாந்தியின் அப்பா பரமசிவம்தான் பேசினார்: “என்ன, பேசினீங்களா? சந்தேகம் எதுவும் இல்லியே?”
“மனசு விட்டுப் பேசினோம். நான் சொன்ன ஒரு விசயம் பத்தி உங்க மக ரொம்ப யோசிக்க வேண்டியதா யிருக்குன்னிச்சு. யோசிச்சு, உங்களோடவும் கலந்து பேசிட்டு பதில் சொல்றேன்னிச்சு. சரிதான்னுட்டேன். அப்ப. . . வரட்டுமா? அத்தே! வாங்க, போலாம்,” என்ற ரத்தினம் பங்காரம்மாவை நோக்கி, ‘எந்திரிங்க’ என்பது போல் சாடையாய்த் தலையசைக்க, அந்த அம்மாள் திகைப்புடன் எழுந்துகொண்டாள்.
(அடுத்த பக்கத்தில் தொடர்கிறது)
- பெயர் மறக்கடிக்கபட்ட பின்னிரவு
- அனுகூலம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1
- மணல் வீடு சிற்றிதழ் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழ்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`
- அன்புள்ள திண்ணை யர்க்கு
- சுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ கட்டுரைகள்.
- திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.
- மாறும் மனச்சித்திரங்கள்
- அணு ஆயுதப் போரில் நேரும் அகோர விளைவுகள்.(கட்டுரை: 1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 63
- கார்முகிலின் முற்றுகை
- பொங்குநுரை
- நீராலான உலகு
- ஞானோதயம்
- நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்
- மொட்டை மாடி இரவுகள்
- எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை
- (மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்
- இருளில்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- விலையேற்றம் கட்டுப்படுமா?
- நினைவுகளின் தடத்தில் – (40)
- முள்பாதை 9
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1
- வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)
- மழைப்பேறு
- புதுப் பெண்சாதி
- ஞானோதயம் (நிறைவு பகுதி)