சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


ஏனோ எனக்கு உருப்படியாக சிறுகதைகள் எழுத வரவில்லை. பேனா எடுத்ததுமே எனது நீண்ட வாழ்வில் கண்ட கேட்ட கருதிய எல்லாமே முந்தி அடித்துக்கொண்டு தாளில் குதித்து விடுகின்றன. அவை ஒவ்வொன்றுமே நல்ல சிறுகதையாக வளரக்கூடிய வாழ்வின் பதியங்கள்தான். எனினும் அவற்றை ஒரு சிறுகதையாக வளைத்துப் போடுவது எனக்கு இன்னமும் கைவரவில்லை. சொல்ல வந்த கதை நல்லபடி ஆரம்பித்து, சிறுகதையின் எல்லைகளைத் தாண்டிப் பெருகி எங்கெங்கோ சென்று, பின்னர் எழுதப் படுவது குறுநாவலா நாவலா என என்னையே குழம்ப வைத்துவிட்டுத் தேங்கிப் போய் விடும்.

கணனிக்குப் பழக்கப் படும்வரை இப்படி அறுவடையாகாத கதைகளின் காகிதக் கசங்கல்களால் அடிக்கடி எனது அறை நிறைந்துவிடும். எதிலும் எப்போதுமே இப்படி ஒரு அதிகப் பிரசங்கித்தனம். யோசித்துப் பார்க்கையில் அந்தச் சின்னம் சிறு வயதில் திரு. லாம் மாஸ்டர் “வாயாடி நம்பர் வண்” என்று எனக்கு வைத்த பட்டப் பெயர் மிகவும் பொருத்தமானது எனவே தோன்றுகிறது.

லாம் மாஸ்டர் மலையாளி. அப்போ தெல்லாம் இலங்கையில் பயிற்றப் பட்ட ஆசிரியர்களுக்குப் பற்றாக் குறை இருந்ததில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களுக்கு தென் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவளைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி விசேடமான

ஆசிரியர்கள் நெடுந்தீவு போன்ற பின்தங்கிய ஒரு தீவுக்கு அனுப்பப் படுவது வளமையில்லைதான். எனினும் எங்கள் நடு நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான நவரட்ணசிங்கம் மாஸ்டரின் அரசியல் செல்வாக்கால் ஆங்கிலம் கற்பிக்க திரு.லாம் மாஸ்டர்ரும் விஞானம் கற்பிக்க அவரது மனைவியான திருமதி.லாம் ரீச்சரும் நெடுந்தீவுக்கு வந்தார்கள்.

அவர்கள் வந்த நாள் எனக்கு நல்ல ஞாபகம். அன்று எங்கள் பாடசாலைக்கு முன் வீதியெல்லாம் மூன்று வண்ணக் கொடி கட்டப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சிக்காரர்கள் பலர், வண்ணக் கொடிகளோடு பாடசாலை முகப்பிலுள்ள இரும்புக் கேற்றுக்கு முன்பாகக் கூடி நின்று எங்களைப் பள்ளிக்கூடத்துக்குப் போக விடாமல் தடுத்தார்கள். எங்களுக்கெல்லாம் படம் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்கள் கிடைத்தது. விசாரித்த மாணவர்களுக்கு “புகைப் படத்தில் இருக்கிறது ஈழத்துக் காந்தி தந்தை செல்வநாயகம் அவர்கள்” என துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்தவன் மேடைப் பேச்சுத் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தான்.

பள்ளிக்கூட முற்றத்தில் நவரட்ணசிங்கம் மாஸ்டரின் தலை தெரிந்ததும் நாங்கள் பக்கத்து வளவுக்கு ஓடிப்போய் பனைமரங்களுக்குப் பின்னே ஒழிந்து கொண்டோம். கேட் வசல் வரை பிரம்பும் கையுமாக வந்த நவரட்ண சிங்கம் மாஸ்டர் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு வாசலில் கும்பலாக நின்றவர்களிற் சிலரை உள்ளே அழைதுக்கொண்டுபோனார். நெடுநேரமாக உள்ளே போனவர்கள் திரும்பி வராததால் வெளியில் நின்றவர்கள் பரப்படைந்தார்கள். ஆனால் உள்ளே போனவர்கள் திரும்பிவந்து சொன்ன புதினங்கள் எல்லோரையும் சிரிக்க வைத்தது. அவர்கள் சிரிப்பையும் மீறி நவரட்ணசிங்கம் மாஸ்டர் எங்களுக்குத் தேனீரும் பிஸ்கட்டும் தந்து `அரசியல் வேறு படிப்பு வேறு` என்கிற தனது தத்துவத்தையும் போதித்து அனுப்பினார் என்றார்கள்.

தமிழரசுக் கட்சிக் காரர்களைக் கணும் போதெல்லாம் “படிப்பு வேறு அரசியல் வேறு” என்று என்கிற அவரது தர்க்கம் ஆரம்பித்துவிடும். நவரட்ணசிங்கம் மாஸ்டருக்கு இரவில் தமிழரசுக் கட்சிக்காரது நினைப்பு வந்தால் விடிய விடிய தூக்கத்தில் படிப்புவேறு அரசியல் வேறு என்று பிதற்றுவார் என்கிற பகிடி ஊரில் பிரபலமாக இருந்ததது. இது உண்மையில் பிறரைக் கிண்டல் செய்வதிலும் பகிடி விடுகிறதிலும் பேர்போன எனது அப்பா ஒரு முறை சொன்ன பகிடிதான். அந்தக் கும்பலில் யாரோ அந்தப் பகிடியைச் சொல்லிச் சிரித்தபடி என்னைச் சுட்டிக் காட்டி எதோ பேசினார்கள். அதுபற்றி நான் பெருமைப் பட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது.

“எல்லாம் முடிஞ்சுது” எனக் கத்திக்கொண்டு மூச்சிரைக்க ஓடோடி வந்த ஒருத்தர் பண்டாரநாயக்க பாராளு மன்றத்தில் சிங்கள மட்டும் சட்டத்தை நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். வானொலிச் செய்தியில் கேட்டாராம்.. சற்றைக்கெல்லாம் தனது சிவப்பு வர்ணச் சைக்கிளில் தந்தி கொடுப்பவர் வந்தார். மீண்டும் அந்தக் கும்பல் பரபரத்தது. சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து கொழும்பில் சத்தியாக்கிரகமிருந்த செல்வநாயகமும் ஏனைய தமிழ்த் தலைவர்களும் தாகப் பட்டதாக தந்தியைப் படித்தவர் உரத்துச் சொன்னார். “உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை.”

எல்லோரும் பண்டார நாயக்கவை தூற்றினார்கள். தெருவால் போன கிழவி ஒருத்தி செல்வநாயகம் தாக்கப் பட்ட சேதியைக் கேட்டு ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள். “ஐயோ எங்கிட ராசாமேல கைவைச்ச பண்டாவும் அவனது வம்சமும் வேரும் வேரடி மண்ணுமில்லாமல் அழிந்து போகட்டும்” என அவள் மண்ணை அள்ளிக் கொட்டிச் சாபமிட்டாள். “இந்தக் கொடுமைகளை எதிர்த்து நாங்கள் போராடாவிட்டால் தமிழ் மட்டுமல்ல தமிழர்களும் அழிந்து போவார்கள்” என ஒருவன் நிமிடத்துக்கு ஒருதடவை கீறல் விழுந்த இசைத் தட்டுப் போலச் சொல்லிக் கொண்டிருந்தான்.னொரு பள்ளித் தோழன் அது உண்மைதான் என்றான். சுதந்திரன் பேப்பரிலேயே எழுதியிருக்கிறார்கள் என நானும் அதனை ஆமோதித்தேன். முன்பெல்லாம் பேப்பரில் வருவதெல்லாம் உண்மை என்றே எல்லோரும் நம்பினோம். சுதந்திரனோமெங்கள் பெற்றோர் ஆதரிக்கும் தமிழரசுக் கட்சிப் பத்திரிகையாக வேறு இருந்தது. அது பற்றி தலைவர்கள் பேசியதை நாங்கள் ஏற்கனவே தேர்தல் கூட்டங்களிலும் கேள்விப் பட்டிருந்தோம். போராடாவிடால் எங்களை, எங்கள் அப்பா அம்மாவை எல்லாம் அழித்து விடுவார்கள் என்கிற அச்சம் எங்கள் பிஞ்சுமனதில் ஆத்திரமாக மூண்டெரிய ஆரம்பித்தது. அதுவும் பள்ளிக்கூடத்தில் மேல்வகுப்பு மாணவர்கள் மேடையேற்றிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த பின்னர் நாமெல்லாம் சிவாஜி கனேசனைப் போல வீரவசனம் பேசிக் கொண்டு கற்பனைக் குதிரைகளில் எறிச் சிங்களப்

படைகளைத் துரத்திக் கொண்டு திரிந்தோம்.

அந்தப் பகிஸ்கரிப்புப் போராட்டம் முடிவடையும் தரணத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. “அகிம்சைப் போராட்டம் பம்மாத்துப் போராட்டம். துப்பாக்கி தூக்கிப் போராடாமல் தமிழ் மக்களுக்கு விடிவில்லை” என்று வெளியூர்காரரான தாடிக்கார இளைஞன் ஒருவன் கோசமிட்டான். “இவன் அந்த அறப்படிச்ச விசரன் வவுனியா சுந்தரலிங்கத்தின்ட ஆள். எங்க கூட்டத்தைக் குழப்ப வந்திருக்கிறான்” என யாரோ கத்தினார்கள். “இல்லை இவன் கம்யூனிஸ்டாய் இருக்க வேணும். சீவ்ப் கிளாக்கர் செல்வரட்ணம் வீட்டில்தான் தங்கியிருக்கிறான்” என்று வேறு யாரோ சொன்னார்கள்.

வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் செல்வரட்ணம்தான் நெடுந்தீவில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கம்யூனிஸ்டுகளுக்குத் தலைவர் போல இருந்தார். தீவிர வாதி என்பதற்கு அடையாளமாக அவரும் தாடி வைத்திருந்தார். யாழ்ப்பாணம் நகரத்தில் கார் மெக்கானிக்குகளாகவும், பட்டறைத் தொழிலாளர்களாகவும், மூடை தூக்குபவர்களாகவும், கள் இறக்குபவராகவும் இருந்த ஒடுக்கப் பட்ட சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களுட் பலர் கம்யூனிஸ்ட் அனுதாபிகளாக இருந்தார்கள். எங்காவது கம்யூனிஸ்டுகள்மேல் கைவைத்தால் பின்னர் யாழ்பாணம் நகருக்குப் போகும்போது உதைபட நேரிடும். அதனால் ஆட்பலமுள்ள உள்ள ஏனைய கசிக்காரர்களே அகிம்சை வாதிகளான தமிழரசுக் கட்சி வாலிபர்களுக்கு அஞ்சி அஞ்சி அரசியல் செய்த அந்த நாட்களில் ஊர் ஊருக்கு ஐந்தாறு பேரே இருந்தபோதும் கம்யூனிஸ்டுகள் பயப்படுவதில்லை. ஊர்ச்சுவரெங்கும் இரவிரவாக சிவப்பு மையினால் புரட்சி ஓங்க வைத்து விடுவார்கள்.

வன்முறைக் கட்சித் தாடிக்காரனின் அட்டகாசத்தைக் கண்டு அகிம்சை வாதியான தாடிக்காரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியைச் சேர்ந்த தீவிர வாதியான அந்த தாடிக்காரன் “அடேய் எங்கிட புனிதமான அகிம்சைப் போராட்டத்தையா எதிர்கிறாய்” என்றபடி வேலிக் கம்பை உருவிக்கொண்டு அந்த வன்முறைக் கட்சிக் காரனை அடிக்க ஓடினான். “யாழ்ப்பாணத்தில் சந்திக்கலாமா தோழர்” என்றபடி அந்தத் தாடிக்காரன் அசையாமல் நின்றான். தமிழரசுக் கட்சித் தாடிக்காரனுக்கு திடாரென தங்கள் கட்சியின் அகிம்சைத் தத்துவம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அவன் சற்று தரித்து “துரோகிகள்” என்றபடி பின்வாங்கினான். அங்கு கூடி இருந்த எல்லோரும் அந்த தாடிக்காரனை அங்கிருந்து போய்விடும்படி எச்சரித்தார்கள். “அகிம்சையால மகாத்மா காந்தி பிரிட்டிஸ் சாம்ராட்சியத்தையே தோற்கடித்திருக்கிறார் இலங்கை அரசு எந்த மூலைக்கு” என்பதே அங்கு பொதுக் கருத்தாக இருந்தது..

“துப்பாக்கிக் குழலில் இருந்துதான் ஆட்சி அதிகாரம் பிறக்கிறது” என்றும் “ஒரு நாள் வன்னிக் காடு சுடும்” என்றும் கத்தியபடி அந்த கம்யூனிட் கட்சித் தாடிக்காரன் மெல்ல நழுவினான். அவன் சற்றுத் தூரம் போகும் வரை சும்மா பார்த்துக் கொண்டு நின்ற தமிழரசுக் கட்சித் தாடிக்காரனோ “டேய் உன்னைப்போல துரோகிகள் தாடி தாடி வளர்கக் கூடாதடா” என தோழ்களைத் தட்டி முழங்கினான். அதன் பின்னர் பின்னர் கும்பலில் இருந்த பலரும் உரத்த குரலில் கட்சிப் பாடல்களைப் பாடினார்கள்.

“ஏற ஏறப் பார்க்கிறான்,

எம் நாட்டில் பண்டா குடி

ஏற ஏறப் பார்க்கிறான்.

வேப்ப மரத்தை வெட்டி

வெள்ளரசினை நாட்டி..”

இது போன்ற பிரபலமான சினிமாப் பாடல்களின் மெட்டில் அமைந்த கட்சிப் பாடல்கள் மாணவர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. நாமும் நவரட்ண சிங்கம் மாஸ்டருக்கு தெரியாதபடி மறைவில் நின்று கொண்டு “ஏற ஏறப் பார்க்கிறான்” என்கிற பாடலை பாடினோம்.

(தொடரும்)

Series Navigation