சூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் ?

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

மஞ்சுளா நவநீதன்


சிவகாமியின் சபதமும், பார்த்திபன் கனவும், யவனராணியும், கடல்புறாவும் கனவுகள். ‘அப்படி இருந்தது அழகாக ‘ என்ற மனப்பிம்பங்கள். அவைகளில் உண்மை எவ்வளவு என்பது இரண்டாம் பட்சம். அப்படி இருந்திருக்கலாம், அப்படியே இருந்திருக்கலாம், இன்றுவரை என்பது ஒரு ஆசை. நோஸ்டால்ஜியா என்று ஆங்கிலத்தில் சொல்வதற்கு ஏற்ற தமிழ் வார்த்தையைத் தேடிப் போக வேண்டுமென்றாலும், அந்த ஆசை ஒவ்வொருவர் மனதிலும் ஒரு விதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அம்மா கையிலிருந்து உண்ட நிலாச்சோறுக்காக கவிதை எழுதும் 40 வயது கவிஞர்கள் நிறைந்த பூமி இது. எது பழசு என்பதை விட, எது எனக்கு விருப்பமான பழசு என்பதுதான் முக்கியம். அது ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பமான பழசாக இருக்கும். என் சிறுவயதில் நான் கேட்ட ‘கட்டடம் கட்டிடும் சிற்பிகளாம் ‘ என்ற யேசு பாடல் என்னை பழைய இனிய நினைவுகளுக்கு இட்டுச்செல்லும். அதற்காக தமிழ்நாடு முழுக்க அந்தப்பாடல்தான் ஒலிக்க வேண்டும் என்று நான் கோரமுடியுமா ? அப்படி தனக்கு விருப்பமான பழசுதான், (அல்லது பழசு என்று காணும் கனவு) எல்லோரும் செய்யவேண்டும் என்றும் சட்டமியற்ற முடியுமா ? பழசை நினைவு கூர்வதே ஒரு தேர்வு தான். தமக்கு விருப்பமான அல்லது உவப்பான ஒரு நினைவின் கனவுத் தன்மையின் ஊடாக உருவாகும் ஓர் ஏக்கம். இன்னமும் வெள்ளைக்காரனின் காலத்திற்காக ஏங்கும் பெரிசுகளும், காந்தியின் காலத்தை அசைபோடும் பெரிசுகளும், பெரியாரின் நினைவில் ஊடாடும் பெரிசுகளும் இங்கே உண்டு.

சமீபத்தில் பொங்கல் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அது கவிதையாக இருந்திருந்தால், ம்ம்.. என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம். அது அறிவுஜீவி கட்டுரையாக வேறு உருக்கொண்டிருந்தது. பக்கத்திலேயே கட்டுரையாளர் படம் வேறு.

சூரிய தீபன் எழுதி ஆறாம் திணை இணைய இதழில் வெளி வந்திருக்கும் கட்டுரை இது.

சூரியதீபனின் மேற்கோள் தொடக்கம்:

‘வீதிக்கொரு ஆங்கிலப் பள்ளி முளைத்து இருபது ஆண்டுகளாகியிருக்கலாம். அது போல் வீதிமுனைக்கொரு கோயில் முளைத்தும் அவ்வளவு காலம்தான் இருக்கலாம். வீதி நடுவிலிருக்கும் ஆங்கிலப் பள்ளியும் வீதிமுனைக் கோயிலும் தமிழர் திருநாளின் முகத்தை அழித்திருந்தன.

‘மண்வாசனை பீரிடுகிற கூத்து, பாட்டு, கும்மி, கோலாட்டம், வில்லிசை, தப்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என தமிழ் இனத்தின் கலைகளுக்குப் பதில் ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டம் போல் இசைதட்டு நடனம், மேற்கத்திய இசை, கேளிக்கை, மது என தமிழர் திருநாளிலும் பாய்கின்றன. கபடி, கிளித்தட்டு, குலை குலையா முந்திரிகா, ஓட்டப் பந்தயம் என்ற குயுக்தியான விளையாட்டுக்களின் இடத்தை கிரிக்கெட் எடுத்துக் கொண்டு வெகுகாலமாகிவிட்டது. கிராமங்களில் வறண்ட நிலங்கள் உலக விளையாட்டில் மேலாதிக்கம் பெற்ற கிரிக்கெட் மைதானங்களாக மாறிக்கொண்டன.

‘வேளாண்மைத் திருநாள் என்றழைக்கப்படுகிற காட்டுத் திருவிழா மட்டுமல்ல; திருமணம், பூப்புனித நீராட்டு போன்ற வீட்டுத் திருவிழாக்களும் மத அடிப்படையில் நடத்தப்படுகின்றன. திருமணம், சடங்கு போன்றவையெல்லாம் தமிழர் வாழ்வியலில் மதம் சாராதவை. தீபாவளி, கார்த்திகைக் தீபம், விநாயகர்சதுர்த்தி, ஆயுதபூஜை போன்றவை பிராமணியம் முன்னிறுத்திய இந்து மதம் சார்ந்த பண்டிகைகள். மத அடிப்படையிலான இந்துமத விழாக்கள் போலவே, மத நம்பிக்கையே தொடாத பொங்கல் விழாவும் மதம், கோயில்வழிபாடு, சார்ந்ததாக மாறிவருகிறது என்பதன் அடையாளமே தெருமுனைக் கோயிலின் கூப்பாடு.

‘சைவம், வைணவம் போன்ற சமயங்கள் இப்போது இந்து மதம் என்ற பெருமதத்திற்குள் சங்கமாகிவிட்டன. ஆனால் தமிழர் வாழ்வில் சைவ, வைணவ மதங்கள் தோன்றும் முன்னரே, இயற்கை நெறி சார்ந்த வேளாண்மைத் திருவிழாவான பொங்கல் தோன்றிவிட்டது.

‘மதம் சாராத, தெய்வவழிபாட்டுத் தொடர்பில்லாத ஒரு விழா – தமிழரின் முதன்மை அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட ஒரு விழா இன்று மத வழிபாடு ஊடுருவியதாக மாறிவருகிறது. தானாகவே மாறவில்லை. திட்டமிட்டு மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக மற்ற மதப் பண்டிகைகள் போலவே உருமாற்றுவது பெண்கள் பெருவாரியாக இதில் பங்கேற்பதால் எளிதாக நடக்கிறது. முன்பு உழவாரப் படையினரும், அடியார்களும், திருப்பாவை, திருவெம்பாவை முழங்கும் மகளிரும், உலவிய கோயில் வீதிகளில் இப்போது காவிமயமாக்கம் நடைபெறுவதை இந்தப் பொங்கல் துல்லியமாகக் காட்டுகிறது.

‘உலகமயமாக்கலும், காவிமயமாக்கலும் சமூகதளத்தில் துல்லியமாகத் தெரிகிற மாற்றங்கள். ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்வரை இல்லாத வினோதமான பண்பாட்டு அசைவுகள். ‘

மேற்கோள் முடிவு.

சூரியதீபன் அவர்களது குற்றச்சாட்டுகளை இப்படி வகைப் படுத்திக் கொள்ளலாம். 1) தெருவுக்கு நடுவில் ஆங்கிலப்பள்ளி, 2) தெருமுனையில் கோவில் 3) ஹாப்பி பொங்கல் எழுதிய கோலம். 4) கும்மி கோலாட்டம் போய், இசைத்தட்டு நடனம், (ரெக்கார்டு டான்ஸ் என்று சொன்னால் நன்றாகத்தெரியும்) , கேளிக்கை மது ஆகியவை 5) பெண்கள் மத வழிப்பாட்டில் கூட்டமாக ஈடுபடுவது (பக்தி பிரசங்கங்கள், பஜனைகள்) 6) பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழிகாடாக்கி அதன் மேல் ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்துகிற உலகமயம் என்கிற ஒற்றை உலகக் கோட்பாடு. பல்வேறு இனங்களின் மொழி, பண்பாட்டு அடையாளங்களை மட்டுமல்ல, அதனோடு கூடவே பல்வேறு மதங்களின் இருப்பையும், அங்கீகரிக்காமல் பரவி வருவது இந்துத்வா என்ற ஒன்றை மதக் கோட்பாடு.

தமிழ்நாட்டில் பொங்கல் ‘திட்டமிட்டு ‘ காவி மயமாக்கப்படுகிறது என்று வருந்தியிருந்தார் கட்டுரையாளர். பெண்கள் போடும் கோலங்களில் எப்படி ஹாப்பி பொங்கல் என்று எழுத வைப்பது என்று, ஒரு அரைகுறை வெளிச்சமுள்ள அறையில் சிகரெட் புகைகளுக்கு நடுவே நடுத்தர வயதுடைய சிலர் கூடித் திட்டம் போடும் ஒரு காட்சி என் முன் விரிகிறது. யார் அது என்று எனக்குத் தெரியவில்லை. பிஜேபி ஆட்களாக இருப்பார்களோ என்னவோ. காவி மயமாகிறது என்றால் அதுதான் அர்த்தமோ என்னவோ. திராவிட மயமாகிறது என்றால் கறுப்பு சிவப்பு மயமாகிறது என்று சொல்ல வேண்டும் இல்லையா ? (ஆனால் ‘ஹாப்பி பொங்கல் ‘ என்று எழுத வைத்தவர்கள் நம்முடைய திராவிடப் பாரம்பரிய ஆட்களாய்த் தான் இருக்க வேண்டும். ஆங்கிலப் படிப்புக்கு பெரிதும் சாமரம் வீசியவர்கள் இவர்கள் தானே ? இவரது கருதுகோள்படி இந்துத்வா ஆட்களாக இருந்திருந்தால், இந்தியிலோ அல்லது சமஸ்கிருதத்திலோதானே எழுத திட்டம் தீட்டியிருப்பார்கள் ?)

சரி தெருமுனைகோவிலுக்கு வருவோம். யார் இந்த தெருமுனைக்கோவில்களைக் கட்டியது. அரசர்களா அல்லது குடிமக்களா ? மத்திய அரசாங்கத்திலிருந்து வரும் பணத்தில் கட்டினார்களா ? அல்லது பிஜேபி ஆட்கள் கட்டிக்கொடுத்தார்களா ? ஒரு காலத்தில் கோவில் கட்டுவதை அரசர்கள் செய்தார்கள். அது முடியரசு. இன்று கோவிலை கட்டுவது மக்கள். இது குடியரசு. இங்கு வேறெப்படி இருக்கும் ? தெரு முனைகளில் திடார் திடாரென்று சிலுவைகளும், யேசு மேரி உருவங்களும்கூடத்தான் தோன்றுகின்றன. அவற்றையும் பாஜக கட்டித்தந்ததா ?

ரெக்கார்ட் டான்ஸ் வேண்டுமானால் இன்றைய புதிய செருகலாக இருக்கலாம். ஆனால், கேளிக்கையும் மதுவும் இல்லாமல் எந்தக்கொண்டாட்டம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது ? நடுவில் காந்தி வந்து ‘குடிக்காதீர்கள்: என்று பிரச்சாரம் பண்ணிக் கெடுத்துவிட்டாரே தவிர, முன்பு கேளிக்கையும் மதுவும் எல்லா மக்கள் கொண்டாட்டங்களிலும் இருந்துகொண்டே தானே இருக்கின்றன. இன்றைகும் மதுரைவீரனுக்கும் காட்டேரிக்கும் சாராயமும், ஆட்டுக்கறியும் வைக்காமல், கூடிக் களிக்காமல் எந்தப் படையல் நடந்திருக்கிறது ?

அடுத்து பெண்கள் வழிபாட்டில் கூட்டமாக ஈடுபடுவது என்று வருந்தியிருக்கிறார் கட்டுரையாளர். இந்த மாபெரும் திராவிட இயக்கத்துக்குள் வராதவர்கள் பெண்கள்தானே ? இந்த திராவிட இயக்கதினரால் தங்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் மனைவியையும் ,அம்மாவையும், சகோதரியையும் எப்போதுமே இந்த திராவிட இயக்கத்துக்குள் கொண்டுவர முடியவில்லையே ? அப்படி இருக்கும்போது, எப்போதும் இல்லாமல் இப்போது அவர்கள் மாறிவிட்டார்கள் என்று புலம்புவதற்கு என்ன இருக்கிறது ? பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் எப்போதுமே மத நம்பிக்கை உள்ளவர்களாகத்தானே இருந்திருக்கிறார்கள் ? இப்போது அவர்களுக்கு முன்பு மறுக்கப்பட்டிருந்த பொது இடம் கொடுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் வெளியேயும் வந்து கூட்டு வழிபாட்டிலும், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பக்தி பிரசங்கங்களில் இப்போது கலந்து கொள்வதில் என்ன வருத்தம் இவருக்கு ? பெண்களுக்கு மறுக்கப் பட்ட ஐயப்பன் பயணத்திற்கு எதிரிடையாக பங்காரு அடிகளின் பூசனைகளில் பெண்கள் முன்னணியில் இருப்பதால் தானே இது பெரிதும் மக்களிடையே பரவியுள்ளது.

இறுதியாக மற்ற கலாச்சாரங்களை அழித்து அதன் கருகிய சாம்பலின் மீது ஒற்றைக்கலாச்சாரத்தை எழுப்பியது இன்றைய உலகமயம் அல்ல. அது எப்போது கிரிஸ்தவ மிஷனரிகளும், இஸ்லாமிய படையெடுப்பாளர்களும் தங்கள் நிலங்களை விட்டு வெளியேறி கடவுள்கொடுத்த ஆணைகளை நிறைவேற்ற முனைந்தார்களோ அன்றே ஆரம்பித்துவிட்டது. அதற்கும் முன்னால் கிரேக்கர்கள் உலகை வெல்லக் கிளம்பியபோதே ஆரம்பித்துவிட்டது. அப்போதெல்லாம் நடக்காத கலாச்சார அழிவு இன்று தமிழ்நாட்டில் நடந்துவிடும் என்று கருத எந்த முகாந்திரமும் இல்லை. தமிழ்க்கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை மதிக்கிறது. ஆனால் தன்னை அழித்துக்கொள்வதில்லை. மற்றைய கலாசாரங்களைத் தன்னுள் இணைத்துக் கொண்டு , ஒரு புதிய உயிர்ப்புக் கொண்டு மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது. சமஸ்கிருதம் வந்தபோதும், தெலுங்கர்கள் வந்த்போதும், இஸ்லாமியர்கள் வந்தபோதும், மராத்தியர்கள் வந்த்போதும், அவரவர் பழக்க வழக்கங்களையும் இணைத்து ஒரு புதிய விதமாய் உருவாக்கி தன்னைப் புதுப்பித்து முன்னே பயணப் பட்டிருக்கிறது. ‘திராவிட இயக்கம் ‘ என்ற போர்வையில் மேலை நாட்டுக்கலாச்சாரம், தமிழ்க்கலாச்சாரத்தை கண்மூடிப்பழக்கம் என்றும் மூடநம்பிக்கை, கல்லையும் மண்ணையும் கும்பிடும் மூளை கெட்ட ஜனங்கள் என்றும், புராணக் கதைகளை ஆபாசக் குப்பைகள் அறிவுக்கு ஒவ்வாதவை என்றும் கீழாக விமர்சித்து அழிக்க முனைந்தாலும், இது விட்டுக்கொடுக்கவில்லை. கல்லினுள் சிறு தேரையாக உயிரோடுதான் இருக்கிறது. இதையெல்லாம காதில் வாங்கி விட்டு எது தேவையோ அதை எடுத்துக் கொண்டு ந்து தேவை இல்லையோ அதை மெல்ல மறையச் செய்திருக்கிறது.

என் தமிழ்நாட்டு கலாச்சாரம் இது என்று சூரியதீபன் நிர்ணயித்து அதற்காக குரல் கொடுப்பதற்கும், என் இந்திய கலாச்சாரம் இது என்று நிர்ணயித்து அதற்காக இந்துத்வா குரல் கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம் ? ஆனால் எது கலாசாரம் ? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் ‘ எப்படி இல்லாமல் போகும் ? கலாசாரத்தைப் பாதுகாப்பது எங்கே தொடங்குகிறது ? கலாசாரத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் பழைமையைத் தூக்கி நிறுத்துவது எங்கே தொடங்குகிறது ? இதற்கெல்லாம் பதில் மக்களும் மக்களை உள்வாங்கிக் கொள்கிற , மக்களை மாக்களாய் எண்ணாத சமநிலை கொண்ட இயக்கங்களும் தான் செய்ய முடியும்.

ஆனால் என் ஆச்சரியம் எல்லாம் எப்படி தமிழர் திருவிழாவான பொங்கல் மதச்சார்பற்ற விழாவாக இவரால் (திராவிட இயக்கத்தால்- மார்கியர்களால் ) குறிப்பிடப்படுகிறது என்பதுதான்.(சூரியதீபன் தீவிர மார்க்ஸிஸ்டாய் இருந்தவர் என்று அறிகிறேன். இன்று திராவிட இயக்கங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார். ஆனால் முழுக்க பெரியாரியவாதி என்றும் இந்தக் கட்டுரையை வைத்துச் சொல்ல முடியவில்லை.)

சூரியனை வணங்குவது என்பது சூர்யம் என்ற வழிபாட்டு முறையின் கீழ் வந்த ஒரு இந்துமதப் பாரம்பரியம். சூரியனை வணங்கக்கூடாது என்று பல மதங்கள், ஜைனம், பெளத்தம், இஸ்லாம், கிரிஸ்தவம் ஆகியவை சொல்கின்றன. சூரியவழிபாட்டாளர்களுக்கு கிறுஸ்துவம் இட்ட பெயர் animists- அதாவது, உண்மையான கடவுளை விட்டு விட்டு, விலங்குகளையும் இயற்கையையும் கும்பிடுகிற கீழ்த்தரமான பண்பாடற்ற மக்கள். சூரியனை கண்ணால் காணும் பிரம்மமாக வடிவமைத்த இந்து மதத்திற்கு வெளியே எப்படி பொங்கலை மதச்சார்பற்ற திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடினார்கள் என்பதுதான் எனக்குப்புரியவில்லை. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று கவிதை யாத்த இளங்கோவடிகள் பா ஜ க ஆதரவாளரா ? (அப்படித் தான் இருக்க வேண்டும், ‘சூர்ய உவாச ‘ என்பது ரிக்வேதத்தின் மிக உயிருள்ள வரிகள் ஆயிற்றே ? ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று இந்து மதக் கொள்கையைப் பிரதிபலித்தவராயிற்றே ? ) சங்கப்பாடல்கள் தோறும், வேலனுக்காக ஆடும் பெண்களும், ஆண்களும் விரவிக்கிடக்கிறார்கள். அத்தனை பேரும் பாஜக ஆதரவாளர்கள் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ஆங்கிலப்பள்ளிகளும், வீதிமுனைக்கோவில்களும் யாரும் அங்கு வந்து திணித்தவை அல்ல. அவை நிதர்சனம். முன்பு இங்கு ஆங்கிலமும், சமஸ்கிருதமும், உருதும் பெர்ஷியனும் திணிக்கப்பட்டன. நேற்று இந்தி திணிக்கப்படும்போது எதிர்த்த அதே வாய், இன்று ஆங்கிலத்தை கற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறது. ஜனநாயகத்தின் விளைவுதான் ஆங்கிலப்பள்ளியும் வீதிமுனைக்கோவிலும். அதே ஜனநாயகம்தான் ஹாப்பி பொங்கலும். ஹாப்பி பொங்கலுக்கு பதிலாக இனிய பொங்கல் நல்வாழ்த்து என்று யாரேனும் எழுத ஆரம்பித்தால், அது மக்களுக்குப் பிடித்திருந்தால், அதுவும் பரவும்.

பிஜேபி தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்னரே போகி அன்று மண் காவியால் சுண்ணாம்பு அடித்த குடிசைச்சுவரில் தீட்டி வந்திருக்கும் என் தந்தையார் யார் சொல்லிய திட்டத்தின் கீழ் காவி மயத்தை தொடங்கினார் என்று எனக்குத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தோன்றிய திராவிட இயக்கத்துக்கும் நாத்திகவாதத்துக்கும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து பாரம்பரியம் இருக்கிறது என்று உருவாக்க நினைக்கும் இது போன்ற கட்டுரைகளுக்கு பதில் சொல்வது வீண் வேலை தான் என்றாலும், அது இன்றைய எஸ்டாபிளிஷ்மெண்ட் சிந்தனையாகப் பொய்யைப் பரப்பிக் கொண்டிருப்பதால், இதனை விவாதிக்க வேண்டியிருக்கிறது. இந்த திராவிடப்பாரம்பரியத்துக்கு ஜைனத்தையும் பெளத்தத்தையும், திராவிட இயக்கத்தின் மூதாதையர்களாக ஆக்கித்தான் இந்த பாரம்பரியத்தை நிரூபிக்க வேண்டுமென்றாலும், அவையும் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்த மதங்கள்தாம் என்பது உண்மைதானே ? அப்படியென்றால், எது தான் தமிழ்நாட்டின் சொந்தமே சொந்தமான பாரம்பரியம் ? எதுதான் இவர் தூக்கிப்பிடிக்க நினைக்கும் தமிழ்நாட்டு கலாச்சாரம் ? முருகனா ? அருகனா ? சூரிய வழிபாடா ? அதனை அனிமிஸம் எனச் சொல்லும் மதங்களா ? கிருஸ்துவ மதத்திற்கு மாறி இந்துமத இழிவிலிருந்து தலித்கள் (மட்டும்) விடுதலை பெற வேண்டும் என்று உரத்துக் சொல்கிற சிந்தனையாளர்களில் ஒருவர் சூரியதீபன் என்று அறிகிறேன். அப்போது பொங்கலை விடுத்து கிறுஸ்துமஸ் கொண்டாடினால் அல்லது, பொங்கல் விழாவின் போது சேசுவிற்கு ஸ்தோத்திரம் சொன்னால், உலக மயமாதலில் ஓர் அங்கமாய் அதைக் காண்பாரா ?

பொங்கல் ஏதோ ஒரு வடிவில் இந்தியா முழுதும் உள்ள ஒரு பண்டிகை. பருவகால மாற்றமும், அறுவடையும் இணைந்த ஒரு காலத்தில் தம் வளத்திற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லும் பண்டிகை இது.

இவர்கள் போன்றோர் முன்னாளில் மார்க்ஸியப் புரட்சியாளர்களாய், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடப் பாடுபட்டவர்கள் இப்போது பழமைப் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்வந்திருக்கிறார்கள். சரி பழமைப் பண்பாட்டை பாதுகாக்கும்போது எது தான் பாதுகாக்கவிரும்பும் பழைய பண்பாடு என்பதையும் எது கண்மூடிப்பழக்கம் எது மண்மூடிப் போக வேண்டும் என்பதையும் சற்று சொல்லிவிட்டால் நல்லது. ஜாதி என்பது சங்கப்பாடல்களில் இருக்கிறது. தொல்காப்பியர் ஈ,கொடு, தா என்பதற்கு மேல், சமம், கீழ் நிலையிலுள்ள ஆட்களிடம் சொல்ல வேண்டிய சொற்களாகச் சொல்கிறார். அது நமது பாரம்பரியமா ? அதனைக் காப்பாற்ற வேண்டுமா ?

ஒரு எகாலஜி மாதிரி, இருக்கும் உற்பத்தி உறவுமுறைகள்தாம் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிர்ணயிக்கின்றன என்ற மார்க்ஸிய கருதுகோள் சூரியதீபனுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். அதே போல சமூகத்தில் ஒரு விஷயத்தை பாதித்தால், அது ஒரு சங்கிலி போல தொலை தூரத்தில் உள்ள இன்னொரு விஷயத்தையும் பாதிக்கும் என்பதும் சூரியதீபனுக்குத் தெரியும் என்றே கருதுகிறேன். தமிழர்கள் பெயர்களை ஆல்பர்ட் என்றும், அலெக்ஸாண்டர், என்றும், ஷப்னம் என்றும், சாகுல் என்றும் மாற்றிக்கொண்டிருக்கும் கிரிஸ்தவமும், இஸ்லாமும் பாதிக்காத தமிழ்க்கலாச்சாரத்தை எப்படி ஹாப்பி பொங்கல் பாதித்துவிட்டது என்பதையும் தெளிவாகச் சொல்லிவிடலாம். ஹாப்பி பொங்கலை பொங்கல் நல்வாழ்த்தாக மாற்றிவிடலாம்.

பெண்கள் குலவை இடவில்லை என்றால் பாரம்பரியம் கெட்டுப்போச்சி. பெண்கள் ஹாப்பி பொங்கல் என்று கோலத்தில் எழுதினால் பாரம்பரியம் கெட்டுப்போச்சி, அவர்கள் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டோ அல்லது சல்வார் கமீஸ் போட்டுக்கொண்டோ பொங்கல் கொண்டாடியிருந்தால் சூரியதீபனுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும். இதைச் சொல்லும்போது, கோவணம் கட்டிக் கொண்டு, ஏர்க்கலப்பையை தோளில் வைத்துக் கொண்டு சூஇரிய தீபன் ‘ஏரு பூட்டிப் போவோமே அண்ணே சின்னண்ணே ‘ என்று பாடிக் கொண்டிருந்தால் இது தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றும் ஒருவரின் குரல் என்று எண்ணலாம்.

ஆனால் சூரியதீபன் மட்டும் கண்ணாடி போட்டுக்கொண்டு, கிராப் வெட்டிக்கொண்டு, காலர் வைத்த சட்டை போட்டுக்கொண்டு, சட்டைப்பையில் மசி இருக்கும் பேனா வைத்து போட்டோ எடுத்து இணையப்பக்கத்தில் காட்சி தந்தால் பாரம்பரியம் போகவில்லை. (அல்லது அதனைக் கேள்வி கேட்கவில்லை)

ஏன் பெண்கள் மட்டும் குலவையிட்டு பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கவேண்டும் ? ஏன் பெண்கள் மட்டும் இந்த ஆண்களுக்கு வாய்க்கு ருசியாய் சமைத்துப் போட்டுக் கொண்டு திருவிழாக் கொண்டாடிக் கொண்டு பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் ? இந்த ஆம்பிளைகள் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்ட பின்பு, புரட்சிகரமான பேச்சுகள் ஆரம்பித்துவிடும். ‘இந்தப் பொம்பளைங்க சமைக்கிறதெல்லாம் சரி ஆனால் சமைச்சதை தெருமுனைக் கோயிலுக்குப் படையல் போடறது தான் தப்பு. சமைக்கலாம், ஆனால் சாமி கும்பிடக் கூடாது. சாமி கும்பிட்டால் பா ஜ க , காவிமயமாதல். எங்க அண்ணா, பெரியார், கலைஞர் கற்றுத் தந்த திராவிட பாரம்பரியம் போயே போச்சு. இந்தப் பெண்டுகள் சாமி கும்பிடும் பிற்போக்கு சக்திகள். காவிக்காரிகள் ‘ என்று அர்த்தமில்லாமல், பழைய மார்க்ஸியப் புரட்சியாளர்கள் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதற்கும், அந்தப்பக்கத்தில் வாலண்டைன் டே கொண்டாடுகிறாரகள் என்று புலம்பி சிவசேனா வாலண்டைன் டே வாழ்த்து அட்டைகளை விற்கும் கடைகளை நொறுக்குகிறதே அதற்கும் என்ன வித்தியாசம் ?

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்