சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் – செப்டம்பர் 19,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

அறிவிப்பு

செப்டம்பர் 19,2004 ஞாயிறன்று காலை 11 மணியளவில் கனெக்டிகட் மானிலம் மில்போர்ட் நகரில் சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. மில்போர்ட் நியூயார்க்கிற்கு வடக்கே ஒரு மணி தூரத்தில் உள்ளது.

கலந்துகொள்ள விரும்புவோர் 203-877-6859 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது gorajaram@yahoo.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

வே. வெங்கடரமணன்

வே. வெ : உங்களுக்குக் கனடாவின் தலைசிறந்த கல்வி அமைப்பான டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை வழங்கவிருக்கிறது. எழுபது வயது நிறைவடையவிருக்கும் இந்த நல்ல நாளில் உங்களை முதன் முறையாக சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் நல்வாழ்த்துக்கள்.

முதல் கேள்வி உங்களைப் பற்றி. இக்கேள்விக்குப் பதில் சொல்லி நீங்கள் மிகுந்த அலுப்பு அடைந்திருப்பீர்கள். ஆனால் இந்த அடிப்படைச் செய்திகளை பல வாசகர்களிடமும் கொண்டு போக வேண்டும் என்பதற்காக கேட்கிறேன்.

சு. ரா : நான் 1931ல் பிறந்தேன். 1951ல் எழுதத் தொடங்கினேன். ஐம்பது வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இடையில் ஐந்தாறு வருடங்கள் மெளனம் சாதித்திருக்கிறேன்.

வே. வெ : ஏன் மெளனம் சாதித்தீர்கள் ?

சு. ரா : அலுப்பும் துக்கமும். ஒருவித Existential agony என்று அதைச் சொல்லலாம்.

வே. வெ : உங்கள் இயற்பெயர் என்ன ?

சு. ரா : எட்டாவது வயதில் கோட்டயம் (பழைய திருவிதாங்கூரில்) நகரத்தில் மலையாளப் பள்ளிக்கூடத்தில் என்னைச் சேர்த்தபோது முதல் முறையாக என் பெயர் எஸ். ராமஸ்வாமி ஐயர் என்று பதிவேட்டில் பதிந்தது. என் தாயின் ஊரான நாகர்கோவிலுக்கு நாங்கள் குடிபெயர்ந்து வந்ததும் எனக்குச் சிறிது தமிழ் உணர்வு முளைக்கத் தொடங்கிற்று. மணிக்கொடி எழுத்தாளர்களின் இன்ஷியல்களால் கவரப்பட்டு என் பெயரை நா.சு. ராமசாமி என்று மாற்றிக் கொண்டேன். அந்தப் பெயரில்தான் என் முதல் கதையான ‘முதலும் முடிவும்’ 1952ல் நான் வெளியிட்ட புதுமைப்பித்தன் மலரில் இடம்பெற்றது.

வே. வெ : மீண்டும் எப்போது உங்கள் பெயரை மாற்றிக் கொண்டார்கள் ?

சு. ரா : பின்னால்தான் ஏகப்பட்ட ராமசாமிகள் தமிழ் உலகில் நடமாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. (எஸ். ராமகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்த விதவிதமான ராமசாமிகளைப் பற்றி ஒரு கிண்டல் கதை எழுதியிருக்கிறார்.) என் பெயர் தனியாகத் தெரியவேண்டும் என்ற ஆசையில் அப்பாவின் பெயரை என் பெயருடன் சேர்த்துக் கொண்டேன். என் இரண்டாவது கதையான ‘தண்ணீர்’ தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகப் பணியாற்றிய ‘சாந்தி’ யில் சுந்தர ராமசாமி என்ற பெயரில்தான் வெளிவந்தது. அதன்பின் அதே பெயரில்தான் இன்றுவரையிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வே.வெ: உங்கள் இலக்கிய வாசிப்பின் தொடக்கம் பற்றிச் சற்று சொல்லுங்கள்.

ஆரம்ப கால வாசிப்புகள் என்று சொல்ல ஒன்றுமில்லை. அன்று எனக்கு இலக்கியத்திலோ, வாசிப்பிலோ, படிப்பிலோ ஆர்வம் இருக்கவில்லை. எல்லா வகுப்பிலும் கடைசி பெஞ்ச் மாணவனாகத்தான் இருந்து வந்திருக்கிறேன். இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்டபோது பதிமூன்று பதிநான்கு வயதில் படுத்தப் படுக்கையானேன். அதற்கு முன் தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன்.

முதலில் என்னைக் கடுமையாகப் பாதித்த புத்தகம் புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’. அத்தொகுப்பிலுள்ள ‘மகாமசானம்’ என்ற கதையைப் படித்தபோது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வை அடைந்தேன். அப்போது அக்கதைகளை எழுதிய ஆசிரியரின் பெயரைக் கவனிக்கக்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இவர் எந்தக் காரியத்தைச் செய்திருக்கிறாரோ அந்தக் காரியத்தைத்தான் நானும் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பதினெட்டு பத்தொன்பது வயது வாக்கில் தமிழை கரும்பலகையில் எழுதிப் படித்தேன். இருபதாவது வயதில் என் முதல் கதையான ‘முதலும் முடிவும்’ எழுதினேன். அது முழுக்க முழுக்க புதுமைப்பித்தன் பாதிப்பை வெளிப்படையாகக் காட்டும் ஒரு கதை.

வே. வெ : உங்கள் வளர்ச்சியின் ஊற்றுக்கண், ஏமாற்றங்கள் குறித்து. . .

சு. ரா : சிறுவயதிலேயே கம்யூனிஸ சித்தாந்தத்தால் மிகவும் கவரப்பட்டு விட்டேன். எல்லாப் பிரிவுகளையும் தாண்டிய சமத்துவம் என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. சிறு வயதில் என் உறவினர்களிடமும் என்னைச் சுற்றியிருந்த உலகத்திலும் காண நேர்ந்த வறுமையும் இழிவும் என்னை மிகக் கடுமையாகப் பாதித்தன. அப்போது எனக்கு ஆங்கிலம் தெரியாது. மார்க்சீய சித்தாந்தத்தைப் பற்றி தமிழில் வெளிவந்திருந்த புத்தகங்கள் மிகக் குறைவாக இருந்தன. இருப்பினும் அவற்றைத் தொடர்ந்து படித்து வந்தேன். மனதைக் கவரும் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிப்பது என் பழக்கம். இது அன்றிலிருந்து இன்று வரையிலும் மாறாமல் இருக்கிறது. எமர்சனின் ‘தன்னம்பிக்கை’ (வ.வே.சு. ஐயர் மொழிபெயர்ப்பு) கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்ததில் மொத்தக் கட்டுரையின் பல பகுதிகளும் மனப்பாடமாகி விட்டன. அதேபோல் ஏசுவின் மலைப் பிரசங்கத்தையும், மாக்சிம் கார்கியின் அமெரிக்காவிலே (கு. அழகிரிசாமி மொழிபெயர்ப்பு) கட்டுரைத் தொகுப்பையும் பலமுறை படித்திருக்கிறேன்.

சிறு வயதில் கி. சந்திரசேகரனின் ‘பச்சைக்கிளி’ என்ற கதை எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. அதில் படிப்பு வராத ஒரு பையன் வீட்டுக்குப் பின்னால் நின்ற தோட்டத்துக்குச் சென்று சதா கிளிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். இவனுடைய எதிர்காலத்தை நினைத்துப் பெற்றோர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். மெத்தப்படித்த ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வரும்போது தந்தை மகனைப் பற்றிப் புகார் கூறுகிறார். அவர்கள் இருவரும் தோட்டத்துக்கு வருகிறார்கள். படித்தவர் சிறுவனிடம் பறவைகளைப் பற்றி பல கேள்விகளைக் கேட்கிறார். அப்போதுதான் அவனுடைய ஈடுபாடு வெளிப்படுகிறது. அவர் சிறுவனின் தந்தையைப் பார்த்து, ‘உங்கள் மகன் மிகப்பெரிய புத்திசாலி. அவன் பறவைகளைப் பற்றியே படிக்கட்டும். மிகப்பெரிய பதவிக்கு வந்துவிடுவான்’ என்கிறார். நானும் அந்தச் சிறுவனின் நிலையில்தான் இருந்தேன். அந்தக் கதையைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் எனக்குச் சுயப்பச்சாதாபம் ஏற்படும். மனசு நெகிழும். மெத்தப் படித்த ஒருவர் வந்து என்னைப் பற்றியும் என் அப்பாவிடம் அதே போல் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவருடைய வருகைக்கான என் காத்திருப்பு வீணாகிப் போய்விட்டது.

சிறுவயதில் அதிகமும் மலையாளப் புத்தகங்கள் படித்தேன். அதன் மூலம்தான் கம்யூனிஸ சித்தாந்தத்தில் நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது தகழி சிவசங்கரப் பிள்ளை நான் விரும்பிய ஆசிரியர்களில் மிக முக்கியமானவர். அவருடைய ‘தோட்டியின் மகன்’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்தேன்.

அன்று தமிழில் அதிகமும் படித்தவை அரசியல் துண்டுப் பிரசுரங்கள். அப்போதெல்லாம் துண்டுப் பிரசுரங்கள் சரமாரியாக வந்து கொண்டிருந்தன. ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு என்று. புதுமைப்பித்தனைப் படித்தபின் தமிழிலும் இலக்கியப் புத்தகங்கள் படிக்கும் ஆவல் ஏற்பட்டது. கிடைத்தவரையிலும் எல்லாவற்றையும் பாரபட்சமில்லாமல் படித்தேன். ஆங்கில புத்தகங்கள் படிக்கத் தொடங்கியபோது சாதாரண புத்தகங்கள் கூட மிகக் கடினமானவையாகத் தென்பட்டன. எமிலி பிராண்டி எழுதிய ‘உதறிங் ஹைட்ஸ்’ படித்த போது ஒவ்வொரு பக்கம் புரிவதற்கும் இருபது முப்பது தடவை ஆங்கில அகராதியைப் பார்க்க நேர்ந்து மிகுந்த சலிப்படைந்து அறையைச் சாத்திக்கொண்டு அழுதிருக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் ஆற்றல் ஒரு போதும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்திருக்கிறேன். பின்னால் ஆங்கிலப் புத்தகங்களை நிறையப் படிக்க முடிந்தது என்பது எந்த முட்டாளாலும் கடினமான உழைப்பை மேற்கொண்டு எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. அநேகமாக எல்லாத் திறன்களையும் கடின உழைப்பால் பெற்று விடலாம். கடின உழைப்பால் பெற்றுவிட முடியாதவை மனிதனின் வக்கிரங்களும் கோணல்களும்தான்.

வே. வெ : கிட்டத்தட்ட ஐம்பதாண்டு எழுத்துப் பயணத்தில் நிழலாகத் தொடர்ந்து வந்திருக்கும் நம்பிக்கைகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள் ?

சு. ரா : எப்போதும் நம்பிக்கையுடனேயே இருந்தேன் என்று சொல்ல முடியாது. இளம் வயதில் நம்பிக்கையோடும் மத்திய வயதுகளில் அவநம்பிக்கையோடும் முதுமை ஏறத் தொடங்கியதிலிருந்து மீண்டும் நம்பிக்கையோடும் இருந்து வருகிறேன் என்று பொதுவாகச் சொல்லலாம். அதிக நம்பிக்கையோடு இருப்பது இப்போதுதான். இன்னும் முப்பது வருடங்கள் வாழ்ந்தால் என் நூறாவது வயதில் இப்போது இருப்பதைவிடவும் பல மடங்கு நம்பிக்கையோடு இருப்பேனோ என்னவோ.

சிறுவயதிலிருந்தே மனதிற்கு இசைவான நண்பர்களைப் பெறும் வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறேன். சொல்லியும் அதிகம் சொல்லாமலும் இவர்கள் தந்த ஊக்கம் பெரிய உந்து சக்தியாக இருந்து வந்திருக்கிறது. சிறுவயதில் என் தாயும் அதன்பின் என் மனைவியும் நான் சோர்ந்து துவண்ட போதெல்லாம் என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்களானபின் அவர்கள் தரும் ஊக்கம் எளிய வார்த்தைகளில் விவரிக்கக்கூடியவை அல்ல.

எனக்கு விளையாட்டுத் துறை, கட்டடக் கலை, காலத்திற்கு ஒவ்வாத சமயப் புத்தகங்கள், சட்டம், வழக்குகள் பற்றிய விவரங்கள், துப்பறியும் கதைகள், பேய்க் கதைகள், வாசகனை மகிழ்விக்கும் நோக்கம் மட்டுமே கொண்ட நூல்கள், உடலுறவை முன்னிலைப்படுத்தும் நூல்கள் நீங்கலாக பிற வகை நூல்கள் எல்லாவற்றிலுமே ஈடுபாடு உண்டு. புத்தக வாசிப்பு சில சமயம் மிகப்பெரிய அனுபவத்தைத் தந்திருக்கிறது. சிறந்த படைப்புகளைப் படிக்கும்போது மனித ஜென்மம் எடுத்ததற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

வே. வெ : உங்களை மிகவும் சங்கடப்படுத்திய விஷயம் எது ?

சு. ரா : சிறுவயதில் தொடர்ந்து பல வருடங்கள் நோய்வாய்ப் பட்டிருந்தேன். ஆனால் அந்த வயதில் ஏனோ தெரியவில்லை என் துன்பத்தையே எனக்கு உணரத் தெரியாமல் இருந்திருக்கிறது. மார்க்சீய இயக்கத்தில் நெருக்கமான தொடர்பு ஏற்பட்ட பின் எழுத்தாளர்களான, இலக்கிய வாசிப்பு கொண்டவர்களான, லட்சியவாதிகளான பல தோழர்களும் நண்பர்களானார்கள். ஒருசேர அவ்வளவு நண்பர்களையும் இழக்க நேர்ந்தது தாங்க முடியாத தத்தளிப்பை ஏற்படுத்திற்று.

வே. வெ : ஏன் அவர்களை இழக்க நேர்ந்தது ?

சு. ரா : ஸ்டாலினின் எதேச்சாதிகாரம் என் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. சோவியத், அமெரிக்கா ஆகிய இரு மாறுபட்ட கோணங்களைச் சார்ந்த புத்தகங்களையும் நான் படித்து வந்ததால் முடிவான உண்மையைக் கண்டுகொள்ள இயலாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன். 1956-ல் சோவியத் யூனியன் ஹங்கேரியாவை ஆக்கிரமித்தபொழுது சோவியத் அரசை ஒரு சோஸலிஸ்ட் அரசாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் நிலையை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன். என் சந்தேகங்கள் வெளியே பரவ ஆரம்பித்ததுமே எனக்கும் தோழர்களுக்குமான உறவில் இடைவெளிகள் தோன்றத் தொடங்கி விட்டன. குரூட்சேயின் ரகசிய அறிக்கை வெளியானதும் எனக்கும் நண்பர்களுக்கும் இனி கொள்கை ரீதியான உறவு எதுவும் இல்லை என்பதைத் தெரியப்படுத்தினேன். அப்போது எல்லோருமே என்னைவிட்டு விலகியதை நான் உணர முடிந்தது. அந்தக் காலம் மிகவும் சங்கடமானது.

வே. வெ : கொள்கையில் முரண்பாடு தோன்றியது என்பதற்காக நட்பில் எதற்காக இடைவெளி தோன்ற வேண்டும் ?

சு. ரா : இப்படித்தான் காலம்காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இங்கும் சரி மேற்கத்திய நாடுகளிலும் சரி, கொள்கை வேற்றுமை ஏற்படும்போது உறவும் முறிந்துதான் போகிறது. சார்த்தருக்கும் காம்யுவுக்கும் இடையே இருந்த நட்பையும் அதன்பின் நேர்ந்த விலகலையும், கோபதாபங்களையும்கூட யோசித்துப் பாருங்கள்.

வே. வெ : அதுசரி, தனிநபர் (ஸ்டாலின்) மீதான வெறுப்பு (கம்யூனிஸ) இயக்கத்தையே துறக்கும்படி உங்களை ஏன் தள்ளவேண்டும் ?

சு. ரா : தத்துவ ரீதியாக நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான். எனக்குத் தெளிவாகச் சிந்திக்கத் தெரியும் வயதல்ல அப்போது. தத்துவத்தையும் தனிநபர் செயல்பாடுகளையும் பிரித்துப் பார்க்கக்கூடிய ஆற்றல் அப்போது இல்லை. என் ஈடுபாடே உணர்ச்சி வசப்பட்டது. லட்சியவாதிகளின் லட்சியவாதம் தெரிந்த அளவுக்குப் பிற மனிதரைப் போலவோ – ஒருக்கால் அதைவிட அதிகமாகவோ – அவர்களிடம் இருந்த கரும்புள்ளிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மேலும் ஸ்டாலினை நான் ஒரு தனிநபராக மட்டும் பார்க்கவில்லை. ஒரு மோசமான மனிதனாலோ எதேச்சாதிகாரியாலோ கொலைகாரனாலோ பிறருடைய உதவியின்றி ஒரு தேசத்தை அழிக்க முடியாது. சோவியத் அமைப்பு சிறுகச் சிறுகச் சீரழிக்கப்பட்ட நிலைமையில்தான் ஆட்சியாளர்களின் மொத்த சுயநலம் ஒரு தேசத்தின் அடிப்படை நம்பிக்கைகளையே குலைத்து விடுகிறது.

என் நண்பர்களாக இருந்த தோழர்கள் எல்லோருக்குமே இந்தச் சீரழிவு தெரிந்துதான் இருந்தது. முற்றும் முடிவுமாக தெரியாத நேரத்தில்கூட மனத்தளவில் ஆழ்ந்த சந்தேகங்கள் இருந்தன. அவர்கள் அதை வெளிப்படுத்தவில்லை. காரணம் இயக்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூட ஒருவனுக்கு இயக்கம் பற்றி சந்தேகமற்ற பற்றுதல் இருக்க வேண்டும். அவனுக்காகப் பிற தோழர்கள் எந்தத் தியாகத்தையும் செய்வார்கள். ஆனால் சிறிய அளவில் சந்தேகம் ஏற்பட்டு கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டால் அன்று முதல் அவன் தோழர்களின் எதிரியாகி விடுவான். அவனைக் கொள்கைத் தளத்தில் நசுக்குவதே அதன் பின் அவர்களுடைய வேலையாக இருக்கும். இந்து மதத்தை விமர்சிப்பதற்கு அன்று ஒரு இந்துவுக்கு எவ்வளவு சுதந்திரம் இருந்ததோ அதில் நூறில் ஒரு பங்குகூட இயக்கத்தை விமர்சிப்பதற்குத் தோழர்களுக்குச் சுதந்திரம் இருக்கவில்லை. இந்நிலையில் மார்க்சீயத்தில் அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வதைவிட பக்திக்கும் மேலான ஒன்றைக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இங்கு நீங்கள் கண்முன் பார்க்கும் ஒவ்வொரு தோழரும் பக்தி ஆவேசத்துக்கு ஆட்பட்டு அதற்கு ஏற்ப இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும்போது மார்க்சின் மூலதத்துவத்தில் இதுபோன்ற பலகீனங்களுக்கு இடமில்லை என்று சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை. இந்தக் கோணத்தில்தான் நான் ஜே.ஜே. சில குறிப்புகளும் எழுதினேன். அந்நாவலில் நான் மார்க்சீயத்தின் முழுமை பற்றியோ குறை பற்றியோ வாயே திறக்கவில்லை. அந்தத் தத்துவம் பற்றி எனக்கு நிறைவாகத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். அதிலிருந்து அதிகாரம், அதை உருவாக்கும் செயல்பாடு என்பவற்றில் நான் மிகுந்த அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்தேன்.

வே. வெ : இது தொடர்பாக எனக்கு மற்றுமொரு கேள்வி தோன்றுகிறது. இயக்கத்தைப் பற்றிப் பேசும்போது மத சிந்தனைகளையும் தொட்டுப் பேசினீர்கள். இந்த இடத்தில் என்னுடைய புரிதலின்படி பிற மதத் தத்துவங்கள் எல்லாம் மேலிருந்து போதிக்கப்பட்டு – உதாரணமாக யேசு அல்லது நபிநாயகம் – கீழிறங்கி வந்தன. இந்து மதத் தத்துவங்கள் எல்லாம் ஒரு பரந்துபட்ட தளத்திலிருந்து, கீழிருந்து மேலெழுந்தவை என்று அறியப்படுகின்றன. இந்த அடிப்படை வித்தியாசம் இந்துத்தத்துவத்திற்கு ஒரு உயர்வையோ, அல்லது பிற மதங்களிலிருந்து மாறுபாட்டையோ அளிப்பதாக நம்புகிறீர்களா ?

சு. ரா : இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம், பெளத்த மதம் எல்லாமே கீழிருந்து மேலே சென்றவை என்றுதான் கருதுகிறேன். சிறு சிறு பிராந்தியங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அகவுலகப் புறவுலக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக அந்த மக்களையும் பிரச்சனைகளையும் அறிந்த ஒருவரோ அல்லது பலரோ கூறிய சொற்களின் தொகுப்புத்தான் சமய நூல்களின் அடிப்படை. மனிதனின் ஆதாரமானச் சிந்தனைகள் உலகம் முழுவதும் பெரிதும் ஒன்றாகவே இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால்தான் சமய மூலவர்களின் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல ஒற்றுமைகளும் காணக் கிடைக்கின்றன. ஆனால் அதிகாரம் எப்போதும் வேற்றுமைக்கே அழுத்தம் தருகிறது. சமயங்கள் நிறுவனமயமான பின்பு அவற்றின் தத்துவங்களும் இறுக்கமாகி விடுகின்றன. இந்து மதத்தில் உயர்வாகப் போற்றக்கூடிய ஒரு ஒற்றை நூலோ கடவுளாகவோ தீர்க்கதரிசியாகவோ கருதக்கூடிய ஒற்றைக் குரலோ இல்லை என்பதால் அம்மதத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் விமர்சிக்கப்படுபவர்களுக்கும் நிராகரிக்கிறவர்களுக்கும் சுதந்திரத்தின் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ வெளி ஒன்று கிடைக்கிறது.

வே. வெ : இது எளிய வாசர்களுக்கு ஏற்படும் ஒரு சந்தேகம். இன்று படைப்புகளை பல வடிவங்களில் நிகழ்த்துகிறோம். சிறுகதை, நாவல், புதுக்கவிதை, யாப்புக் கவிதை எனப்பல. ஒரு ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு முன்னர்கூட படைப்புக்கு நமக்கேயான ஒரு வடிவம் இருந்தது; இரவல் வாங்கப்படாத ஒரு வடிவம். அந்த வடிவத்திற்கு இன்றைய இலக்கியச் சங்கப்பலகையின் ஒரு மூலையில்கூட இடமில்லை. நமக்கேயான வடிவங்களை இழந்து படைப்பும் துய்ப்பும் ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

சு. ரா : புதிய வடிவங்கள் தோன்றியது நம் மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகள் எல்லாவற்றிலுமே நிகழ்ந்த ஒரு மாற்றமாகும். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், சற்று முன்போ பின்போ மிகப்பெரிய மாற்றம் ஒன்று நிகழும்போது அந்த மாற்றத்தைத் தூண்டிய காரணிகள் என்ன என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு புது வடிவங்கள் தோன்றியதை நான் இழப்பாகக் கருதவில்லை. கால மாற்றத்தால்தான் எல்லா சமூகங்களிலும் பல வடிவங்கள் நிகழ்ந்தன. நவீன அறிவியல் வளர்ச்சி உலகப் பரப்பை உணரும்படி செய்து புதிய அனுபவங்களையும் உருவாக்கின. காலம் அளித்த புதிய சவால்களை பழைய கவிதைகளால் எதிர்கொள்ள முடியவில்லை. கவிதையின் இயக்கமே மென்மையானதும் சாவகாசமானதும் ஆகும். எந்திர உலகில் விரைவாகச் செய்திகளையும் அறிவுகளையும் அனுபவங்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி விட்டது. பின்னால் தோன்றிய சகல உருவங்களையும் கவிதைக்கும் உரைநடைக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக நிகழ்ந்தவை என்று சொல்லலாம். கவிதையின் பழமை உருவம் பின்னகர்ந்ததே ஒழிய கவித்துவம் பின்னகர்ந்துவிட வில்லை. புதிய கவிதைகளும், சிறு கதைகளும், நாடகங்களும் கவித்துவ ஆற்றலை அடிப்படையாகக் கொண்டவைதான். நாவல் கவிதையோடு உறவு கொள்ளாத ஒரு உருவம் என்ற தோற்றத்தை அளிக்கிறது என்றாலும், ஏதோ ஒரு புள்ளியில் அவை விலகிச் சென்றாலும் மீண்டும் மற்றொரு புள்ளியில் அவை சந்தித்துக் கொள்ளவும் செய்கின்றன. அப்படிப் பார்க்கும்போது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் ஆதாரமாக நிற்பது இன்றும் கவித்துவ ஆற்றல்தான்.

வே. வெ : உங்கள் பதில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நாம் உலகத் தரத்துக்கு ஈடான சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்திருக்கிறோம். அதே சமயத்தில் அறிவியல் புனை கதைகள் (Science fiction)அதீதக் கற்பனைக் கதைகள் (Fantasy) போன்றவற்றிற்கு நம் இலக்கிய வட்டாரங்களில் ஒருவிதப் புறக்கணிப்பு இருப்பதை உணர்கிறீர்களா ? அவற்றின் மீதான இலக்கிய ஆய்வுக்கு blanket ban இருக்கிறது. நம் இலக்கியப் படைப்பாளர்களிடமும், விமர்சகர்களிடமும் ஏன் இந்தப் பாரபட்சம் ?

சு. ரா : அறிவியல் சார்ந்த அக்கறையை ஆழமான சிந்தனைகளிலிருந்து பிரிக்க முடியாது. அறிவியலுக்கு அடிப்படை திட்டவட்டமான நிரூபணம். இந்த மொழியே இன்னும் தமிழில் உருவாகவில்லை. நவீன காலத்துக்கு முற்பட்ட கவித்துவ மொழியே இன்னும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அறிவியல் உண்மைகள் உலகம் பற்றிய நம் கற்பனைகளை சுக்கு நூறாக உடைத்துக்கொண்டு போகின்றன. நாமோ அதிகம் உடையாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ளவே முயன்று வருகிறோம். எல்லாம் உடைபெற்றால் எதுவும் மிஞ்சாமல் போய்விடும் என்ற பயம் நமக்கு இருக்கிறது.

அறிவியல் சூழலிலிருந்து அறிவியல் புனை கதைகளைப் பிரிக்க முடியாது. அறிவியல் சார்ந்த சாதனைகள், அவற்றால் நிகழ்ந்திருக்கும் அதிசயங்கள், இனி நிகழவிருக்கும் அதிசயங்கள், அறிவியல் சார்ந்த எதிர்காலம், மனித வாழ்க்கையை அது பாதிக்கும் முறை இவைபற்றிய ஆர்வங்களெல்லாம் மேற்கத்திய சூழல்களிலிருந்து பிரிக்க முடியாதவை. மேற்கத்திய வாழ்வுக்கே அடிப்படையாக இருப்பவை. நாம் இவர்களுடைய உலகத்திலேயே வாழவில்லை. அறிவியல் விளைவுகளை அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே செய்கிறோம். பொதுவாகச் சொன்னால் அறிவியலை பெரிய அளவில் நாம் படைப்பவர்களே அல்ல; அதன் அனுகூலங்களை பெரிய அளவில் நுகர்பவர்கள் மட்டுமே. ஆகவே அறிவியல் புனைகதைகள் என்பது இன்று நம் சமூகத்தில் ஒரு செயற்கையான உருவமே. அதுபற்றி நமக்கு நம் மண்ணைச் சார்ந்து சொல்ல எதுவுமில்லை.

யதார்த்தம் உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு தீவிர முயற்சிதான். யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கான அறிவியல் முயற்சியுடன் இலக்கிய யதார்த்தத்தால் போட்டி போட முடியவில்லை. மேற்கில் புறவுலகம் / அகவுலகம் சார்ந்து இல்லாத ஒரு மயக்கம் இன்னும் நம் சமூகத்தில் இருக்கிறது. அதீத கற்பனைவாதம் சார்ந்த மயக்கம் இது. இங்கு பொதுவுடைமைவாதிகள்கூட அதிகமும் அதீத கற்பனை வாதிகள்தான். யதார்த்தப் படைப்புகள் இந்த மயக்கத்தை ஊடுருவ முயல்கின்றன. மேற்கத்திய பல்துறை அறிவுகள் மூலம் நம் சமூகத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டிருக்கின்றன. கலைப்பாங்கற்ற யதார்த்தம் அளிக்கும் சலிப்புக்கு எதிராக மீண்டும் அர்த்தபூர்வமான ஊடுருவல்களை நிகழ்த்தும் கலைப்பார்வையின் தேவை இன்று நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு நிலை சுமார் நூறு வருடங்களுக்கு முன்னரேயே மேற்கில் ஏற்பட்டு விட்டது. அந்நிலையை எதிர்கொள்ள எவ்வளவோ புதுவகையான இலக்கியப் படைப்புகள் தேவைப்பட்டன. கற்பனை கதைகள் (Fantasy) அதில் ஒன்று.

வே. வெ : அறிவியல் புனை கதைகளுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டா ? இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

சு. ரா : மொத்தமாக இலக்கிய அந்தஸ்து அளித்து அறிவியல் புனைகதைகளைச் சேர்த்துக் கொள்ளவோ அல்லது தள்ளவோ முடியாது. இரண்டு வகையான அறிவியல் கதைகள் இருக்கின்றன. அறிவியலை அறிந்துகொள்ள விரும்பும் வாசகனின் கவனத்தை புதிய விஷயங்களை நோக்கியும் புதிய கேள்விகளை நோக்கியும் திருப்புபவை. அறிவியல் அடிப்படைக்கு மேலே கற்பனை சார்ந்த ஒரு கட்டிடத்தை எழுப்பிக்கொண்டு போகிறவை. இவை அறிவியல் கேள்விகளற்ற கற்பனையாகும். உண்மையில் கற்பனை அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல. அறிவியல் சார்ந்த பெரும் கேள்விகளும் வரம்பற்ற கற்பனைகளும் கொண்டவர்களே உலக வரலாற்றின் வரைபடத்தை மாற்றிய விஞ்ஞான உண்மைகளை கண்டு பிடித்தவர்கள். ஜூல்ஸ் வெர்னே ஹெச்.ஜி. வெல்ஸ், ஆர்தர் கிளார்க், ஐசக் அஸிமோ போன்றவர்கள் மிகச்சிறந்த அறிவியல் புனைகதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு எதிர்நிலையில் எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லாமல், விடை கண்டுபிடிக்காது எஞ்சி நிற்கும் அறிவியல் கேள்விகளின் வேதனை எதுவும் அறியாதவர்கள் மனித பலகீனங்களுக்குத் தீனி போடுவதற்காக அறிவியல் புனைகதைகளையும் படைத்திருக்கிறார்கள். இவற்றிற்கு எந்த இலக்கிய மதிப்பும் கிடையாது.

வே. வெ : உங்கள் பார்வை இன்றைய தமிழ் இலக்கியவாதிகளின் பார்வையிலிருந்து மாறுபடுவதாக நான் நினைக்கிறேன். இணையத்தில் நடைபெற்ற சில விவாதங்களில், பிரபஞ்சத்தினூடாக மானிடத்தின் இருப்பினை ஆராயும் பிரபஞ்சத் தோற்றம் (cosmogeny), சிந்தனை எல்லையியல் (epistemology) என்பனவற்றின் மீது புனைவை முன்னிருத்தும் தத்துவப்பார்வை கொண்ட நல்ல அறிவியல் புனைகதைகள் உட்பட எவற்றுக்குமே இலக்கிய அந்தஸ்து இல்லை எனப் பலர் வாதிட்டனர்.

அறிவியல் புனை கதைகளிலிருந்து நேரடியாக அறிவியலுக்கே செல்லலாம். உங்களுக்கு அறிவியல் குறித்த ஆழ்ந்த அக்கறையோ சிந்தனையோ உண்டா ?

சு. ரா : எனக்கு முறையான பள்ளிப் படிப்பு இல்லை. எனக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாம் சுயவாசிப்பில் இருந்துதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். அறிவுத்துறையில் என் பயணம் மிகுந்த தத்தளிப்புக் கொண்டது. ஆனால் பல்துறை அறிவுகள் மீது எனக்கு ஆசை உண்டு. என் உழைப்பு மட்டானது என்றும் சொல்ல முடியாது. தன் பல்துறைத் தேர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவன் அறிஞன் அல்ல என்று நினைக்கிறேன். அது நினைவாற்றல் சம்பந்தப்பட்ட ஒரு திறன். அறிவின் சேமிப்பு என்னென்ன புதிய கண்ணோட்டங்களை ஒரு மனிதனிடம் உருவாக்குகின்றன ? இவைதான் வெளிப்படுத்தத் தகுந்தவை. அந்த ஆற்றல் இன்னும் எனக்குக் கூடி வரவில்லை.

சிறிது காலத்துக்கு முன் டெட்ராய்ட் போயிருந்தேன். என் மகள் ஒரு புராதன புத்தகக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றாள். மிகப் பழமையான கட்டிடம். மர ஏணிகள். நான்கு மாடிகள். புத்தகங்கள் லட்சக்கணக்கில் இருக்கும் என்று தோன்றிற்று. ஆனால் அற்புதமாக வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். வரவேற்பறையில் ஐசக் அஸிமோவின் புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டேன். நான்காவது மாடியில் ஏழாவது அலமாரியில் மூன்றாவது தட்டிலிருந்து வரிசையாக நூற்றிமூன்று புத்தகங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். அங்கு போய் பார்த்தபோது அறிவியல் பற்றிய பழைய புத்தகங்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று தோன்றிற்று. அதன்பின் பலமுறை அங்கு போயிருக்கிறேன். புத்தகங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு போகும்போது கழுத்துவலி வந்துவிடுகிறது. இல்லையென்றால் காலையில் போய் மாலை வரை அங்கு இருக்கலாம். உணவும் ஓய்வெடுத்துக்கொள்ள வசதியும் பிற வசதிகளும் இருக்கின்றன. எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் நாம் அதை உட்கார்ந்து புரட்டிப் பார்த்து விட்டு அந்த இடத்திலேயே வைத்து விட்டு வந்து விடலாம்.

நிறையப் புத்தகங்கள் வாங்கினேன். என்னைப் பார்க்கிலும் அறிவியலை ஆழ்ந்து கற்றவர்கள் பலர் தமிழகத்தில் இருப்பார்கள். என்னை வியப்பில் ஆழ்த்திய சில புத்தகங்களின் ஆசிரியர்கள் பெயர்களை மட்டுமே சொல்கிறேன். Steven Weinberg, Natalie Angier, Paul Davies, Michio Kaku, Issac Asimov, Stephen Hawkings, Timothy Ferris, Stephen Jay Gould (இவர்கள் பெயர்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.) பல புத்தகங்கள் படிக்க மிகச் சிரமமாக இருக்கின்றன. அப்போது ஒன்றைக் கற்றுக் கொண்டேன். புரியவில்லை என்பதற்காக வாசிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது. தொடர்ந்து படித்துக்கொண்டே போனால் அதிகம் புரியத் தொடங்கிவிடும். அடிப்படைகள் பற்றி மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ள ஐசக் அஸிமோவின் புத்தகங்களை எந்தளவுக்குப் படிக்கிறோமோ அந்தளவுக்குப் பிற புத்தகங்களின் வாசல்கள் திறக்கத் தொடங்கும்.

ஐசக் அஸிமோ என்ற பெயரில் அறிவியல் பற்றி ஒரு புல்லட்டின் தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் அதன் ஆசிரியராக இருக்க எனக்குத் தகுதியில்லை. ஐசக் அஸிமோ ஒரு குறியீடு. அவருடைய துறை வேதியியல். பிற அறிவியல் துறைகள் பலவற்றையும் கற்றுக்கொண்டு எல்லாவற்றைப் பற்றியும் எழுதினார். ஷேக்ஸ்பியரைப் பற்றிக்கூட ஒரு நூல் எழுதியிருக்கிறார். எழுதப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை சுமார் நானூறுக்கும் மேல். அறிவியலின் வளர்ச்சிக்கு அவசியமானது அறிவியல் பற்றிய சமூக அறிவு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர். அஸிமோ அறிவியலுக்கு என்ன பங்கை ஆற்றினாரோ அந்தப் பங்கைத்தான் பெர்ட்ரான்ட் ரஸல் ஃபிலாஸஃபிக்கு அளித்தார். நாம் வீட்டில் இருந்து கொண்டே இவர்களை ஆசிரியர்களாக பெற்று விடுகிறோம். இந்த வாய்ப்பை நினைத்துப் பாருங்கள்.

இப்போது அறிவியலை வெளிப்படுத்த நம் மொழிக்கு ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையில் – என்னை நம்பி அல்ல-உலகெங்கிலும் வாழ்பவர்களில் யார் யார் அறிவியலைப் பற்றித் தமிழில் எழுதக்கூடும் என்ற செய்தியைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.

வே. வெ : நீங்கள் கூறும் செய்திகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவை குறித்து நீங்கள் வேறு எங்கும் பதிவு செய்ததாக தெரியவில்லை

சு. ரா : பல காரியங்கள் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும்போதே ஒரு சில நடக்காமல் போய்விடலாம். இதற்கான சாத்தியம்தான் வெளியே சொல்லக் கூச்சத்தைத் தருகிறது. செயல்தான் முக்கியம். செயலைப் பற்றிய பேச்சல்ல.

வே. வெ : அண்மைக் காலங்களில் மேற்கத்திய எழுத்துக்களை வரிப்பதாகக் காட்டிக்கொள்ளும் சிலர் பாலுணர்வு குறித்த ஆழ்மன விவகாரங்களை அப்பட்டமாகவும், கதைக்குச் சம்பந்தமில்லாமலும் கையாண்டு வருகிறார்கள். இத்தகைய போக்கு தவிர்க்க இயலாததா ? முற்றிலுமாக அந்த வர்ணனைகளை ஒதுக்கினாலும் அந்தப் புதினங்களைப் படிக்க முடியும். சொல்லப் போனால் அதன் தரம் மேலும் உயரும். இப்படியிருக்க வலிந்து அத்தகைய வக்ரங்களை எழுத்தில் கொண்டுவர காரணம் என்ன ?

சு. ரா : பாலுறவைப் பற்றி நாம் யோசிப்பதும் அதுபற்றி வெளிப்படையாகப் பேசுவதும் அவ்வுறவில் இருக்கும் பிரச்சனைகளை சமூகத்தின் முன் வைப்பதும் மிக உயர்வான விஷயங்கள் என்றே நான் நினைக்கிறேன். நம் மரபில் நாம் பாலுறவு சார்ந்த அறிவை ஒடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். மிக மோசமான வன்முறைகளில் ஒடுக்கப்பட்ட காமத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது. காமம் என்ற சொல்லுக்கே ஒரு இழிவான பொருள் தந்திருக்கிறோம். காமம் இல்லை என்றால் காதல் இல்லை என்று சொல்லக் கூச்சப்படுகிறோம்.

எனக்குப் பாலுறவு சிந்தனைகள் பற்றி மனித மனங்களின் ஆரோக்கியத்தை முன் வைத்து எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் திருக்குறளும் தொல்காப்பியமும் போல் உயர்ந்த படைப்புகள் என்ற எண்ணம்தான். எடுத்துக் கொண்டிருக்கும் விஷயம் பாலுறவு என்பதாலேயே அது கீழானதாக இருக்கவேண்டும் என்பதில்லை.

இரண்டாவது விஷயம், மனிதனுக்குத் தெரியவேண்டியவை, தெரியக்கூடாதவை என்ற பிரிவு அறிவு சார்ந்து இல்லை. சகல மனிதர்களுக்கும் சகல அறிவுகளும் போய்ச்சேரும் சமூகத்தைப் பார்த்துத்தான் நாம் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

சிலர் பாலுறவைப் பற்றி எழுதும்போது எனக்கு மிகுந்த எரிச்சல் ஏற்படுகிறது. அவர்கள் மனிதனுக்குப் பாலுறவு சார்ந்து இருக்கும் பலவீனத்தைச் சுரண்டுகிறார்கள். கீழான செயல்பாடுகள் எல்லாமே மேலான சிந்தனைகளை முகமூடியாக வைத்துக் கொள்ளும். தமிழில் ‘ஹெல்த்’ சார்ந்த சஞ்சிகைகளைப் பார்த்தால் – முக்கியமாக கேள்வி பதில்களில் – அவை பாலுணர்வைத் தூண்டும் வகையில் அமைக்கப்படுகின்றன. தமிழ்ப் பெண்கள் பாலுறவுப் பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச இன்னும் ஐம்பது வருடங்களாவது ஆகலாம்.

வே. வெ : அதிகமாக இழப்புக்களையும் இதன் முறையான விஷயங்களைப் பற்றியுமே கேட்டு வருகிறேன். இதைவிடுத்து நம்பிக்கைகளைப் பற்றி சில கேள்விகள். எனக்குத் தெரிந்த வகையில் இருண்மை கோலம் பூண்ட வேளைகளிலும் நம்பிக்கை ஊற்றுகளை தன்னகத்தே அடக்கியது உங்கள் எழுத்துக்கள். உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் எங்களுக்கு பல நம்பிக்கைகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை என ஒவ்வொரு தொகுதியிலும் தென்படும் நம்பிக்கை நட்சத்திரம் என்று யார் யாரைக் குறிப்பிடுவீர்கள் ?

சு. ரா : இப்போது கடந்த பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பெயர்களை மட்டுமே சொல்கிறேன்.

நாவல்: ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் ஆகியவை மிக முக்கியமான நாவல்கள்: இமயத்தின் ‘கோவேறு கழுதைகளும்’, யூமா. வாசுகியின் ‘ரத்த உறவும்’, மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. பாமாவின் ‘கருக்கு’ வித்தியாசமான நாவல். எம்.ஜி. சுரேஷின் ‘அட்லாண்டிஸ் மனிதன்’, ‘அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்’ வாசகர்கள் கவனத்திற்கு வர வேண்டிய இரு அபூர்வமான நாவல்கள். உருவத்தைக் கலைத்துப் போடும்போதே ஈர்ப்புடன் நாவல்களைப் படிக்கும்படி செய்து விடுகிறார் இவர். இவரது தமிழும் நாவலை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்துக் கொள்ளும் பண்பு கொண்டது.

சிறுகதைகள்: கோணங்கி (ஆரம்பகாலச் சிறுகதைகள்). சிறுகதையை அடுத்த படிக்கு நகர்த்தும் முயற்சியில் பல நிறைவுகள் இவருக்குக் கூடியிருக்கின்றன. தலித் படைப்பாளிகளில் அழகிய பெரியவன் மிகுந்த நம்பிக்கைத் தரும்படி எழுதிக் கொண்டிருக்கிறார்.

அம்பை, பிரபஞ்சன் (முதல் இரண்டு தொகுதிகளும் பின்னர் எழுதிய ஒரு சில கதைகளும்), அசோகமித்திரனின் சிறந்த கதைகள் ஆகியவையும் தேர்வு செய்யப்பட்டு புத்தக வடிவம் பெறுமென்றால் சிறுகதையில் தமிழின் இன்றையச் சாதனைக்கு உதாரணமாக அமையும்.

விமர்சனங்கள்: ராஜ்கெளதமன், தலித் பார்வை சார்ந்து இறுக்கமற்ற விமர்சனத்தைத் தெளிவாக முன் வைப்பவர். அ. ராஜமார்த்தாண்டன் விருப்பு வெறுப்பின்றி, வாதங்களை முன்னிறுத்தி தான் நன்கு அறிந்த விஷயங்களைப் பற்றி மட்டும் எழுத முற்படுகிறவர். டாக்டர் வேதசகாயகுமார் ஒரு இடைவெளிக்குப் பின் மிகுந்த ஊக்கத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறார். இம்மூவரும் புதுமைப்பித்தனை மதிப்பிட்டு விமர்சன நூல்கள் எழுதியிருக்கிறார்கள். சமூக விமர்சனங்கள் எழுதுவதில் முன்னணியில் இருப்பவர் அ. மார்க்ஸ். ரவிக்குமாரின் எழுத்துகள் சமூக மதிப்பீடு சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் கூரிய பார்வை கொண்டவை.

கவிதைகள் : யுவன் சந்திரசேகர், யூமா. வாசுகி, சங்கர ராம சுப்பிரமணியன், குட்டி ரேவதி, பா. வெங்கடேசன், மனுஷ்யபுத்திரன், சல்மா போன்ற பலரும் சிறப்பாக எழுதுகிறார்கள். இவர்களது கவிதைகள் கவிதை சார்ந்த தேக்கத்தை உடைக்க முயல்கின்றன.

வே. வெ : கவிஞர் ‘பசுவய்யாவை’ ஏன் இப்போதெல்லாம் காணவில்லை ?

சு. ரா : முதலில் நான்தான் கவிஞர் பசுவய்யா என்பதை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் இருக்கிறார்; சற்று மறைவாக வாழவேண்டிய காலம் இப்போது அவருக்கு.

கவிதை பெருமளவுக்குத் தேங்கிப் போய்விட்டது. கவிதை எழுதவேண்டும் என்பதற்காக எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. புதிதாக எதுவும் சொல்ல இல்லாதவரை மெளனம் சாதிப்பதே அழகு. முன்னால் எழுதிய கவிதைகளின் வரிசையைத் தொடர்வதென்றால் நாளொன்றுக்கு ஒரு கவிதையேனும் எழுத முடியும். மற்றப்படி கவிதை சம்பந்தமான அக்கறை குறைந்து போய்விடவில்லை.

வே. வெ : படைப்புலகிற்கு எப்போதும் சாத்தியப்படாதவை இப்போது இணையத்தின் மூலம் உருவாகியிருக்கின்றன. மின் பதிப்பு, வாசகர்களுடன் இணையத்தின் மூலம் ஊடாடல் எனப் பல்வேறு புதிய வழிகள் தோன்றி விட்டன. இவை படைப்பாளியின் நோக்கிலும் போக்கிலும் மாற்றங்களை விளைவிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

சு. ரா : தமிழகத்தில் சில எழுத்தாளர்கள் இந்த நவீன வசதிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கையால் எழுதுவதற்குப் பதில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதோ, கடிதம் எழுதுவதற்குப் பதில் ஈமெயிலை அனுப்புவதோ வளர்ச்சி என்று நான் கருதவில்லை. செளகரியம் என்றே கருதுகிறேன். கம்ப்யூட்டர் எதிர்காலத்தில் என்னென்ன கோலங்கள் கொள்ளப்போகின்றன என்பது பற்றி விஞ்ஞானிகளின் நம்பிக்கைகள் எனக்கு சந்தேகம் கலந்த பயத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நூற்றாண்டில் அது செய்ய இருக்கும் காரியங்களைப் பற்றிய அறிவியல் கட்டுரைகளைப் படிக்கும்போது மலைப்பாகவும் இருக்கிறது. ஆனால் படைப்பு ரீதியாக அதற்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. மனித மூளைக்கு இணையான ஒரு செயற்கை மூளையை உருவாக்குவது சாத்தியமா என்பது பற்றி விவேகிகளான அறிவியல் வாதிகளுக்கு மிகுந்த சந்தேகம் இருக்கிறது. கையால் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக ஈமெயில் கடிதங்கள் உருவாகியிருப்பது மனித உறவு சார்ந்த நெருக்கத்தைப் பலவீனப்படுத்தும் என்றே நினைக்கிறேன். கடிதங்கள் எப்போதும் மனித முகங்களை நினைவில் தூண்டுகின்றன. அத்துடன் கடிதங்கள் பயன்பாடு மட்டும் சார்ந்து (Clinical) உருவாக்கப்படும்போது இரண்டு உள்ளங்கள் கலக்கும் ஈரம் அதில் இல்லாமல் போகிறது. இதன் மூலம் அறிந்தவர்கள் அதிகமாகவும் நண்பர்கள் குறைவாகவும் போய்விடலாம். விரைவில் செயல்படக்கூடிய ஆற்றலைவிட முக்கியமானவை மனித உறவுகள். சந்தேகங்களைக் கேட்பதற்கோ பிற உதவிகளுக்கோ சக மனிதனை கணக்கிலெடுத்துக் கொள்ளும் காலம் முடிந்து அனைத்திற்கும் கம்ப்யூட்டரை நம்பும் உலகம் தோன்றுவது அச்சத்தையே தருகிறது. அறிவின் சூட்சுமங்களைப் பரிமாற ஒரு முகம் தேவை என்றுதான் இப்போது நினைக்கிறேன். பல சூட்சுமங்கள் மொழிக்குக் கட்டுப்படாமல் மனித மனத்தைச் சார்ந்து நிற்கின்றன.

வே. வெ : ஒரு காலத்தில் நம் இலக்கியத்தில் தேக்க நிலையைப் போக்குவதில் சிற்றிதழ்கள் பெரும் பங்கு வகுத்திருக்கின்றன. இப்போது இணையத்தின் வளர்ச்சி அதைப்போல் சாதகமாகப் பயன்படும் என்று நினைக்கிறீர்களா ?

சு. ரா : அச்சு உலகத்திற்குப் பதிலாக இணையத்தை என்னால் கருதமுடியவில்லை. தஸ்தாயேவஸ்கியின் ‘கரமஸோவ் சகோதரர்கள்’ நாவலை இணையத்தில் படிக்க யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நான் அச்சு உலகத்தில்தான் அதிக நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். இணையத்தின் வீச்சைப்பற்றி தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். உலகம் முழுக்க உறவு கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இணையத்தை கவ்விப் பிடித்துக்கொள்வது என் வேலை அல்ல என்றே கருதுகிறேன். கணினித் தேர்ச்சியாளர்களுக்கு என் படைப்பில் விருப்பம் இருந்தால் என் எழுத்தைப் பரப்ப அவர்கள் ஏதேனும் செய்யத்தான் செய்வார்கள். இவர்கள் செயல்பாட்டில் நம்பிக்கை வைப்பதுதான் எனக்கு நல்லது.

வே. வெ : இறுதியாக ஒரு ஆதங்கம் நிறைந்த கேள்வி. சிறந்த அச்சு அமைப்புக் கொண்ட ஒரு சிற்றிதழ் பத்து ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாய்க்குள் கிடைத்து விடுகிறது. அளவில் அதைவிடச் சிறிய நாவல்களும் சிறுகதை தொகுப்புகளும் நூறு ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. படைப்புகள் பரவலாகச் சென்றடையத் துணை நிற்கும் தொழில் நுட்பங்கள் நடைமுறைக்கு வந்து விடுகின்றன. நீங்கள் சொன்னதுபோல் ‘ஐந்து டாலர் விலையில் ஐசக் அஸிமோ’ போன்று ஒரு எழுத்தாளரின் படைப்புகளை நாம் கொண்டுவர முடியாதா ? மற்றுமொரு குறை. விற்றுத் தீர்ந்துவிட்ட சிறந்த புத்தகங்களுக்கு ஏன் மறுமதிப்பு வருவதில்லை ? ஆர்வமுடன் நண்பர்களால் பரிந்துரைக்கப்படும் நூல்களில் அநேகம் புத்தகச் சந்தையில் கிடைப்பதில்லை. ஏன் ?

சு. ரா : உலகமெங்கும் சுமார் ஏழுகோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் வாசகர்கள் ? தமிழர்களின் எண்ணிக்கையைவிட பத்தில் ஒரு பங்கு ஜனத்தொகை கொண்ட தேசங்களில் நம்மைவிட பத்து மடங்கு அதிகம் புத்தகங்கள் விற்கின்றன. எல்லா தேசங்களிலும் வாசகர்களை நம்பித்தான் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. தமிழில் நூல் நிலையங்களை நம்பி புத்தகங்களைத் தயாரித்து வருகிறோம். புத்தகம் என்பது பல வெளியீட்டாளர்களுக்கும் சந்தைச் சரக்கு (Commodity) ஆயிரம் பிரதிகள் அச்சேற்றி நேர்வழியிலோ அல்லது குறுக்கு வழியிலோ அதில் முக்கால் பங்கையேனும் நூல் நிலையத்திற்குள் தள்ளி விட்டுவிட்டால் மீதி கால் பங்கை ஒன்றிரண்டு வருடங்களில் வாசகப் பெருமக்களிடம் விற்று விடலாம் என்பதுதான் தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களின் கணக்கு. புத்தகத் தயாரிப்பு கலைப்பாங்காக இருந்தால்தான் நவீன வாசகர்கள் அதை வாங்க ஆசைப்படுவார்கள். பிற நாடுகளில் ஒரே புத்தகத்தின் மலிவுப் பதிப்பும் நூல் நிலையப் பதிப்பும் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. நம் நூல்கள் எல்லாமே ‘பேப்பர் பாக்’தான். சிற்றிதழ்களில் வருமானம் வராது என்பதும் நஷ்டம் உறுதி என்பதும் முன்கூட்டியே தெரிந்த நிலையில்தான் அவை தொடங்கப்படுகின்றன. புத்தக வெளியீடு அதன் முதலீடு சார்ந்து வணிகக் கூறுகளும் கொண்டவை. சஞ்சிகைகள் போல் புத்தகங்கள் மலிவாக வரமுடியாது. புத்தகங்கள் காலத்தைத் தாக்குப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதனால் அதன் தயாரிப்பு முறையே வேறு.

நிலமையில் மாற்றம் அடைய வேண்டுமென்றால் வாசகர்கள் எண்ணிக்கை பெருக வேண்டும். ஏழுகோடி தமிழர்களில் பத்தாயிரத்துக்கு ஒருவர் ஒரு புத்தகம் வாங்கினால்கூட ஏழாயிரம் பிரதிகள் விற்றுவிடும். ஒரு புத்தகத்தின் லட்சம் பிரதிகள் விற்கக்கூடிய காலம் இந்த நூற்றாண்டின் இறுதியில் உருவாகக் கூடாது என்பதும் இல்லை. புத்தக வாசிப்பில் எறும்புகள் ஊர்வதுபோல் நாமும் முன்னேறிக்கொண்டுதானே இருக்கிறோம்.

வே. வெ : என் கேள்விகளுக்கெல்லாம் விரிவாகவும் பொறுமையாகவும் பதில் கூறிய உங்களுக்கு என் சார்பிலும் என் நண்பர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மாலை நீங்கள் பெறவிருக்கும் இயல் விருதுக்கு முன்கூட்டி என் வாழ்த்துக்கள்.

சு. ரா: உங்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நம் உறவு என்றும் நீடிக்க வேண்டும்.

(டொரண்டோ (கனடா)வில் ஹாலிடே இன் (Holiday Inn) தங்கும் விடுதியின் வரவேற்புக் கூடத்தில் 25 மே 2001 காலையில் எடுக்கப்பட்ட பேட்டி. பல்வேறு காரணங்களால் தாமதமாக வெளிவருகின்றது)

***

வே. வெங்கடரமணன் பற்றி

வே. வெங்கடரமணன் தொழில்முறையில் லேஸர் இயற்பியலாளர் . தற்போது கனடாவில் டோரண்டோவில், போடானிக்ஸ் ரிஸர்ச் ஒன்டாரியொவில் மூத்த அறிவியலாளராக பணியாற்றிவருகிறார். பழந்தமிழ் இலக்கியத்திலும் தற்கால தமிழிலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். யாப்பிலக்கியம் சொல்லித்தர இணையத்தில் ஒரு பக்கம் நடத்திவருபவர். பல சிறுகதைகளும், கட்டுரைகளும், அறிவியல் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இவர் எழுதி திண்ணையில் வெளிவந்த ‘ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது ‘ தொடர் அறிவியல் கட்டுரை பலரின் பாராட்டுதல்களைப் பெற்றது. இவர் தமிழ் லினக்ஸ் ஆராய்ச்சி, முன்னேற்றங்களை http://tamil.homelinux.org. வழியாக முன்னெடுத்துச் செல்கிறார்

***

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com