சிதைந்த கனவுகள்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சுஜாதா சோமசுந்தரம்


அன்று ஞாயிற்று கிழமை. சரியாக ஏழு மணி. சிராங்கூன் சாலையில் விரல் விட்டு விரல் எடுக்க முடியாத அளவுக்கு கூட்டம். புதிதாக பார்ப்பவர்களை அடேங்கப்பா என்று கூற வைப்பதை போல இந்தியா,இலங்கை,பங்களாதேஸ்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பொருளீட்டுவதற்காக இறக்குமதியாகிய முகங்கள்.

வாரத்திற்கு ஒருமுறை நண்ர்கள்,உறவினர்களை சந்தித்து குசலம் விசாரிக்கும் பொழுது கஸ்டங்களை மறந்த முகங்களின் பூரிப்பை வார்த்தைக்குள் அடக்க முடியவிலலை.ஆங்காங்கே ட்ராபிக் போலிஸ் நின்றுக்கொண்டு வழிக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.தோசை,இட்லிக்காக சாப்பாட்டு கடைகள் நிரம்பி வழிந்தன.சிங்கப்பூரியர்கள் சிலர் ஷனத்திரளை கண்டு முகத்தை சுளித்தும், திட்டிக்கொண்டும் சாமான்களை வாங்கிச்சென்றனர்.பிரிவின் வேதனையை உணர்ந்தவர்களுக்கும்,அன்பின் அர்த்தத்தை அறிந்தவர்களுக்கும் கூடியிருந்தவர்களின் கசமுசா சத்தங்கள் கூட இசையாகத்தான் கேட்கும்.பொது தொலைபேசிகள் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன.

அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவருமே பிரிவு துன்பத்தை ஒரு வகையில் அனுபவிப்பவர்கள். ஒருபுறம் தான் படித்த அறிவை வெளிநாடுகளில் பயன்படுத்திக் கொண்டவர்கள் பார்க்க லட்சணமாகவும் ,பகட்டாக, மேலை நாட்டுபாணியில் தங்களை மாற்றிக்கொண்டு பணத்தின் செழுமை உடலில் மின்ன கம்பீரமாக நின்றனர்.மற்றொரு புறம் ஓரளவு படித்தும் உழைப்பை மட்டுமே தாரக மந்திரமாக உச்சரித்தப்படி ஒவ்வொரு நாளும் வியர்வையை லிட்டர் கணக்கில் சிந்திக்கொண்டிருக்கும் வர்க்கம்.இந்த இருவருக்கும் இடையில் நின்றது பரிதாபத்திற்குரிய ஒரு வர்க்கம்.

ஆமாம்.வாலிப இதயத்தில் கனவுகளை சுமக்க முடியாத அளவுக்கு சுமந்துக்கொண்டு உலவ வேண்டிய வயதில், பொய் வேசம் போட்டு ஏமாற்றும் ஏஷெண்டுகளை நம்பி எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு எண்ணெய் படியாத வறண்ட முடியுடன்,துவைத்து போட்டு வேறு உடுப்பு வாங்கி உடுத்த முடியாத நிலையில் அழுக்கு சட்டையும்,முழுகாற்சட்டையுமாக சாப்பாட்டுக்கு கூட வழித்தெரியாமல் தண்ணிரால் வயிற்றை நிரப்பிகொண்டு யாராவது வேலைக்கு அழைத்து செல்லமாட்டார்களா ?.குறிப்பிட்ட உயரத்தில் பறக்க தகுதியிருந்தும்,மேலும் உயர பறக்கும் ஆசையினால் பிறந்தகத்தை விட்டு வந்தவர்கள்.

கலைந்த தலையுடன் ஆடை குலைந்து பைத்தியக்காரனைப் போல எலும்பும் தோலுமாக அவ்வளவு கூட்டங்களுக்கிடையில் நின்றபடி தெரிந்தவர்களிடம் எல்லாம் அண்ணா வேலையிருக்குமா ? மாமா வேலையிருக்குமா ? பிச்சைக்காரனை போல கேட்டுக்கொண்டிருந்தான் அகத்தியன்.அகத்தியன் மாயையைக் கண்டு மயங்கி மோசம் போனவர்களின் பட்டியலில் ஒருவன்.

ஏண்டா அகத்தி பரமீட்ல வந்துட்டு சட்டவிரோதமா நங்கியிருக்கிற என்கிட்ட வேலை கேட்டு கிண்டல் பண்றீயா ?வெடுக்கென்று கேட்டான் முத்து.

எங்கிட்ட பர்மீட்டே இல்ல அண்ணன் அழாத குறையாக பதிலளித்தான்.தன் கஸ்டத்தை யாராவது புரிந்துக்கொண்டு ஆறுதல் கூறமாட்டார்களா மனது ஏங்கி தவித்தது.

அப்புறம் எப்படிடா வேலைக்கு கூட்டிட்டு போறது.ஒண்ணு செய். ஒரு இருநூறு வெள்ளியை நம்ப ராசுக்கிட்ட கொடு,அவன் இரண்டு நாள்ல பர்மீட் கார்ட் வாங்கி தருவான்.அதை வைத்து வேலைக்கு அழைச்சிட்டு போகலாமான்னு பார்க்கிறேன்.இன்னும் கொஞ்சம் நேரம் நின்றால் செலவுக்கு ஏதாவது காசு கேட்பானோ பயந்தபடி நழுவிய முத்துவை நிறுத்தினான்.

ஏண்ணா….இங்கேயும் போன்கார்ட் மாதிரி பர்மீட் கார்ட்டும் விக்கிறாங்களா ?அவனையும் அறியாமல் கேட்டே விட்டான்.

அடப்பாவி…வாழ வழிக்காட்ட நனைச்சா எங்களையே கம்பி எண்ண வைச்சிடுவே போலிருக்கு.வெளியூறு எல்லாம் போயி என்னத்தை படிச்சி கிழிச்சியோ.வாத்தியார் பிள்ளை மக்குங்கறதை நிருபீச்சிட்டே.வரறேன்டாப்பா….உங்கூட நிற்கிற ஒவ்வொரு நிமிசமும் ஆபத்துதான் நண்பர்களுடன் ஏதோ சொல்லி சிரித்தபடி கூட்டத்தோடு கலந்து மறைந்தான்.

அகத்தியன் சிங்கப்பூர் வந்து முழுமையாக இரண்டு வாரங்களே ஆகியிருந்ததால் நிலவரம் சரியாக புரியவில்லை.சாங்கி ஏர்போட்ல ஏஷெண்ட் என்று சொல்லி வந்தவன் நூறு வெள்ளியை கொடுத்து தேக்காவில் வீடு பார்த்துக்கொள் .நாளை தேக்காவில் உள்ள பெருமாள் கோயில்கிட்ட சந்திப்போம் நல்லவன் போல் தட்டிக்கொடுத்துட்டு பாஸ்போட்டோடு போனவன் போனவன்தான்.திரும்பவேயில்லை.இளமை என்ற தேகத்தில் ஏற்றி வைத்த பொறுப்புகள் அவனை அழக்கூட தெம்பில்லாதவனாக ஆக்கியது.திக்கற்று நின்றவனின் புஷத்தில் கை விழவும் திடுக்கிட்டு திரும்பினான்.

டேய் ரவி….பேச நா எழாமல் அவன் தோளில் சாய்ந்து அழுதான்.

அகத்தியனை நிமிர்த்திய ரவி,நீ முத்துக்கிட்ட பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.நீ ஏண்டா சிங்கப்பூர் வந்தே..நீ ஊருல வேலை பார்க்கிறா சொன்னாங்களே ?

ஆமாண்டா.ஆசை யாரை விட்டது சொல்லு.அப்பா இறந்த பிறகு வீட்டு பொறுப்புகள் எல்லாம் என் தலையில விழுந்துட்டு.குடும்பத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம புத்தகமும் கையுமாக இருந்த எனக்கு வாழ்க்கையே மாறிப்போன மாதிரி இருந்தது.நான் வேலைக்கு போகனுங்கிற கட்டாய சூழ்நிலை உருவான போது மேற்படிப்பை நிறுத்துற நிர்பந்தம் உருவானது.ஊர்ல கிடைக்கிற இரண்டாயிரம் சம்பளத்தை வைத்து எப்படி பொறியியல் கல்லூரியில இரண்டாம் ஆண்டு படிக்கிற என் தம்பியை தொடர்ந்து படிக்க வைக்க முடியும்.கல்யாண நாளை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற தங்கையை எப்படி கரைசேர்க்கிறது.அதனாலதான் இங்கே வந்தேன்.அப்பா தங்கச்சி கல்யாணத்துக்காக சேர்த்து வைச்சிருந்த மொத்த பணத்தையும் கொட்டி கொடுத்துட்டு வந்திருக்கேன்.

அகத்தி நீ வந்ததன் நோக்கம் நியாமானதுதான்.நீ வர்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் இல்ல என்ற ரவியும் அகத்தியும் சிறுவயதிலிருந்து பள்ளி தோழர்கள்.ரவி ஆறாம் வகுப்புக்கு மேல் போகவில்லை.பதினெட்டிலிருந்தே சிங்கப்பூர் வந்து சம்பாதிக்கிறான்.படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவு கைகொடுத்து உதவியது.

இருவரும் கூட்டத்திலிருந்து விலகி சாப்பாட்டு கடைக்கு சென்றனர்.அகத்தியை அமர வைத்துவிட்டு ரவி இரண்டு தோசைக்கும்,காபிக்கும் ஆர்டர் செய்துவிட்டு நண்பனின் அருகில் அமர்ந்தான்.

அகத்தி…. அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கே ?

அது தெரிஞ்சா நாலு பேர் நக்கலா பேசுற அளவுக்கு பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருப்பேனா..என்னை நாலுபேர் அடிச்சி போட்டுட்டு பணத்தை பிடுங்கிட்டு போயிருந்தா கூட நான் இப்படி கவலைபட்டிருக்க மாட்டேன்.என்கிட்ட நல்லவன் மாதிரி பேசி நடிச்சி….ச்சே…மனிதபறவியில இப்படியும் கேடுக்கெட்ட ஷென்மங்களா ?என் பணம் போனதைப்பற்றி வருத்தம்தான்.ஆனாலும் என்னால சம்மாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை இருக்கு.

என்னோட கவலையெல்லாம் அறிமுகம் இல்லாத நாட்டுல எல்லோர் முன்னிலையிலும் தலைகுனிந்து கூனி குறுகி நின்னதை பற்றிதான்.

நீ யார்கிட்ட பணம் கட்டி வந்தே ?தோசையை விழுங்கியபடி கேட்டான் ரவி.

நம்ப ஊர் புது பணக்காரன் வேலுச்சாமி மகன் துரைக்கிட்டதான்.இங்கே வந்த பிறகுதான் தெரியுது அவன் என்னை மாதிரி உள்ளவங்ககிட்ட ஏமாற்றி பணத்தை பிடுங்கி போட்டுதான் புது பணக்காரனா திரிஞ்சிட்டு இருக்காங்கிற விசயம்.

ரவி…பரமீட் கார்ட் இங்கே எப்படிடா விற்கும் ?என்றான் அப்பாவியாக.

பணம் மொடை வர்றப்ப பர்மீட்ல இருக்கிற பசங்க பர்மீட் கார்ட்டை சட்ட விரோதமா இருக்கிறவங்ககிட்ட வித்துட்டு காணா போய்ட்டதா கம்பெனில சொல்லி வேற கார்ட் வாங்கிப்பாங்க.

ரவி….எனக்கு ஒண்ணு வாங்கி தந்து வேலைக்கு கூட்டிட்டு போடா.தொலைச்ச பணத்தை தேடிக்கிட்டு ஊருக்கு போய்றேன்.

அகத்தி…உனக்கு அட்டை வாங்கி தர்றதிதோ வேலைக்கு கூட்டிட்டு போறதோ எனக்கு பெரிய விசயமே கிடையாது.

தயங்கயவனை அப்புறம் என்னடா ?….என்றான் அகத்தி.

இங்கே உள்ள சட்ட திட்டங்கள் ரொம்ப கடுமையானது.சட்ட விரோதமா தங்கியிருக்கவுங்கல காவலர்கள் பிடிச்சிட்டா ரோத்தான் அடியும்,சிறை தண்டனையும் கிடைக்கும்.அதான் யோசிக்கிறேன்.

மனசுல விழுந்த அடியையே தாங்கிட்டேன்.உடம்புல வாங்க போற அடிக்காக இப்ப ஏன் கவலைப்படனும்.என் என் குடும்ப சந்தோசத்துக்காக எதையும் இழக்க தயாராயிருக்கேன்.

சரி துரையை என்ன பண்ண போறே ?என்றபடி கடையிலிருந்து வெளியே வந்தான் ரவி.

நான் ஊருக்கு போறவரை கடவுள் ஏதும் செய்யாமல் விட்டு வைச்சிருந்நா,அவனோட சொத்துக்கு நான்தான் எமன்.படிச்சவன்கிட்டயே அவன் பாமர புத்தியை காட்டினததுக்கு சரியான பாடம் கத்துக்கொடுக்காம விடமாட்டன் என்றவனை தன்னோடு சேர்த்து தன்னோட அழைத்துச் சென்றான் ரவி.

இரண்டு நாள்கள் கழித்து ரவி அகத்தியனை வேலைக்கு நண்பர்களோடு அனுப்பி வைத்தான்.தன் ஒட்டு மொத்த கனவுகளையும் சிதறடித்து திருடனைப்போல தலைமறைவாகி பயந்து பயந்து சிமெண்ட் குலைத்த போது உயிரே நின்று விடும் போலிருந்தது.தன் தந்தை பிள்ளைகளுக்கா சேர்த்து வைத்த ஓரே சொத்து கல்விச்செல்வம்தான்.அதைக்கூடமுறையாக பயன்படுத்த முடியாத தன் தலைவிதியை நினைத்தபோது இருதயமே எகிறியது.தான் இளநிலை இயற்பியலில் கோல்ட் மெடல் வாங்கிய போது,என் பிள்ளை வருங்காலத்துல பெரிய ஆளா வருவான்னு அம்மாகிட்ட சொல்லி அடைந்த ஆனந்தத்தை நினைத்தபோது வழிந்த கண்ணீர் கலவையோடு கரைந்து.

முற்றும்.

சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர்.

—-

s_sujathaa@yahoo.com.sg

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்