சரிவில் ஒரு சிகரம்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

பசுபதி


கச்சிதமாய் மிருதங்கம் பிச்சுதறும் என்னைக்
. ‘கணக்கு ‘பல போட்டொருநாள் கழுத்தறுத்தார் வித்வான்;
கச்சேரி உச்சத்தில் (கட்டாலே போக!)
. ‘காலிடத்து ‘ப் பல்லவியில் ‘தனி ‘எனக்கு விட்டார். (1)

‘நந்தி ‘படம் வணங்காமல் நானெழுந்த வேளை;
. நான்தொட்ட கோர்வையெல்லாம் சத்யநாசம் ஆச்சு!
அன்றெனக்கோ அபிமன்யுக் கானதுபோல் ஆச்சு!
. அஞ்சுமூன்றில் பின்னமிட்டேன்; ‘அம்போ ‘ன்னு போச்சு! (2)

குருசொல்வார்: ‘நிச்சயமாய்க் கூட்டத்தில் இருப்பான்
. கூர்மதியன்; அவன்மகிழக் கோணாமல் வாசி ‘.
இரண்டுமுறை சுற்றிவந்தேன்; ‘இடம் ‘வரவே இல்லை.
. இனியுமொரு முறைமுயல எனக்குமனம் வரலை . (3)

மங்குசனி என் ‘தனி ‘யில் மண்ணள்ளிப் போட்டான்!
. வழக்கமான கையொலியும் வாயடைச்சுப் போச்சு!
சங்கீத வித்வானும் சலித்துரைத்தார் காதில்,
. ‘சமாளிக்கத் தெரியாத சன்மம்நீ சீ!சீ! ‘ (4)

‘பக்காவாய்ப் பக்கவாத்யம் இல்லை ‘என்ற பேச்சு;
. படுகுழியில் தன்மானம் சரிந்தோடிப் போச்சு. .
துக்கமுற்ற என்றன்முன் ஓர்பெரியார் வந்தார்;
. துணைவந்த பேரனென்கால் தொட்டபின் சொன்னார். (5)

‘அவமானம் என்பதுமோர் அனுபவம்தான் தம்பி!
. அணுகுமுறை சரியென்றால் தலைகுனிவும் ஏது ?
தவறுகள்தான் அவனியிலே தவறாமல் நடக்கும்!
. சரிவொன்றின் பின்பார்த்தால் சிகரமன்றோ தெரியும் ? ‘ (6)

‘வெற்றிகளை விடத்தோல்வி நற்பாடம் உணர்த்தும் ;
. மிருதங்க வாசிப்பில் காண்பித்தீர் நேர்மை ;
பெற்றுவிட்டார் பிறருக்குக் குருவாகும் தகுதி ;
. பேரனிவன்; சீடனாக ஏற்றிடுவீர் ‘ என்றார் . (7)

மலைச்சரிவில் விரைபாறை லேசாகிப் போயோர்
. மகத்தான கோபுரம்மேல் மகுடமான உணர்வு!
விலையற்ற உபதேசம் குருசொன்ன தன்று ;
. விலையற்ற குருபீடம் வந்துநின்ற தின்று. (8)

மனச்சரிவு! மகிழ்வுச்சி! மல்கினவென் கண்கள் ;
. மனதுக்குள் குருபாதம் வணங்கியே நெகிழ்ந்தேன்.
எனக்குமொரு சீடன்வரும் வாய்ப்பெண்ணிச் சிலிர்த்தேன் .
. இமயத்தை வென்றதுபோல் இதயத்தில் நிமிர்ந்தேன் . (9)

~*~o0O0o~*~

pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி