குருவிகள்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

செல்வநாயகி.


****
தென்னைமட்டைப் பந்தலின்
சின்ன ஓட்டைகள் வழியே
வெளிச்ச வடாம்
பிழிந்துகொண்டிருக்கும்
வாசலில் முன்மதியவெயில்

தூக்கம் கெடுக்கின்றன
இரைச்சல்போட்டு என்று
ஊன்றும் கைத்தடியை
தூணில் அடிக்கும் பெரியபாட்டியை
சொட்டும் மதிக்காது
கசமுசவெனப் பேசிக்கொண்டிருக்கும்
சின்னக் குருவிகள்
பந்தல்மேல் உட்கார்ந்து

அரிசிகொண்டுவந்து இறைக்க
சற்றுநேரம் இருந்தாலும்
கழுத்து நீட்டிநீட்டி
எட்டிப்பார்க்கும் அவை
எந்தலை தென்படுகிறதாவென

ஒவ்வொரு தானிய
கொறித்தலின் முடிவிலும்
தலைசாய்த்து நோக்கும்
குருவிகளின் நட்பில்
குறைந்துவிடும் இம்மியளவேனும்
உடன்பிறப்புகள் யாருமற்று
ஒற்றையாய்ப் பிறந்ததின் ஏக்கம்

பெண்பார்க்க வந்த அன்றும்
குருவிகளுக்கு உணவிட்டுக்கொண்டிருந்ததற்கு
முணுமுணுத்தபடியிருந்தாள் அம்மா
மகள் திருமணத்திற்கு
பந்தல் இருந்த இடத்தை
ஆஸ்பெஸ்டாஸ் ஆக்கிவிட்டார் அப்பா

‘பந்தலுமில்லை நீயுமில்லை
குருவிகளுமிப்போது வருவதில்லை ‘
தொலைபேசி வழி
செய்திப்பரிமாற்றங்களுக்கிடையே
அம்மாதான் சொல்கிறாள்

திசையறிந்து வழியறிந்து
தேடிவரும் அந்தக்குருவிகள்
இக்காங்கிரீட்வனப் புழுக்கத்திலும்
அவற்றிற்கென சிலநெல்மணிகளை
அவிந்துவிடாது காப்பாற்றிவரும்
என்சினேகம் பிடித்து இழுக்க

—-
snayaki@yahoo.com

Series Navigation

செல்வநாயகி.

செல்வநாயகி.

குருவிகள்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

அருண்பிரசாத்


தர இயலா செய்திகளை
தாங்கிக் கவிழ்ந்திருக்கும்
தொலைபேசி
நன்கு பழக்கப்பட்ட
இரவுகளின் காலடியில்.

மீண்டும் ஒலிக்கத்
துவங்குகிறது
தேடி அலைந்த சில
குருவிகளின் சோகம்.

இறுக்கம் குறைக்கும்
சின்னதாய்
இணக்கம் உருவாக்கும்
அதிகாலைகள்
சற்றே இனிமையானவை.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்